கொங்கு படைப்புலகம்

கொங்கு படைப்புலகம்
Published on

அப்பன் சமணம் அம்மா பவுத்தம்

மகனோ சைவன் மகள் வைணவமாம்

தகுந்த மாமனோ சமயம் இலாதான்

எனினும் அனைவரும் இதயம் ஒன்றினீர்

மனித வாழ்வின் மாண்புகள் பேணினர் (801)

-  சிற்பி ('ஆதிரை'  கவிதை நாடகம்)

‘மல்லீப்பூ மொளம் பத்து ருவா'

சிறுகையால் சரமளந்து

கொஞ்சம் கொசுறும் விட்டுக் காண்பித்த

பூக்காரக் குழந்தையிடம் சொன்னார்:

‘இந்த முழத்துக்கா பத்து ரூபாய்?'

சரத்தை வாங்கி நெடுங்கையால் துல்லியமாக அளந்து காட்டி முறித்து வாங்கினார்,

நெடிய முழத்துக்கும் சின்ன முழத்துக்கும்

இடையிலான துண்டுச்சரத்தில்மட்டும்

மல்லிகைகள்

வாடியிருந்தன சோகம் தாளாமல்.

 -சுகுமாரன்

கொங்கு வட்டாரத்தில் படைப்புகளை அதிகமாக யாரும் கொண்டாடுவதுதில்லை என்கிற அங்கலாய்ப்பு இங்கு பலருக்கு உண்டு.

இன்னும் சிலர் எந்தெந்த பகுதிகள் கொங்கு வட்டாரத்தில் அடங்கும் என்று கூட கேட்பதுண்டு. கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளும் 6 இணைநாடுகளும் இருந்ததாக  தெரிகிறது.

அவை :அண்ட நாடு, அரையன் நாடு, ஆறை நாடு, ஆனைமலை நாடு, இராசிபுர நாடு, ஒருவங்க நாடு, காங்கேய நாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்கன் நாடு, கிழங்கு நாடு, குறும்பு நாடு, தட்டையன் நாடு, தலையன் நாடு, திருவாவினன்குடி நாடு, தென்கரை நாடு, நல்லுருக்கன் நாடு, பூந்துறை நாடு, பூவாணிய நாடு, பொன்களூர் நாடு, மணல் நாடு, வடகரை நாடு, வாரக்கன் நாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு, இணைநாடுகள் : இடைப்பிச்சான் நாடு,  ஏழூர் நாடு,  சேல நாடு, தூசூர் நாடு, பருத்திப்பள்ளி நாடு, விமலை நாடு.

இன்றைய பிரிவு படி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களும் திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் கொங்கு நாட்டிற்கு உட்பட்டதாகும்.

பெருந்தலை சாத்தனார், அந்தி கீரனார், கருவூர் கொசனார் போன்ற சங்க எழுத்தாளர்கள், கருவூர் சித்தர், கஞ்சமலை சித்தர் ,போகர், கொங்கண சித்தர், பாம்பாட்டி சித்தர், ஆரிய திவ்ய தேச யாத்திரை எழுதிய எஸ்.பி.நரசிம்மலு நாயுடு, குழந்தைகள் இலக்கியம் படைத்த  பெரியசாமி தூரன் மற்றும் பூவண்ணன்,கொங்கு நாட்டு வரலாறு எழுதிய சி.எம்.ராமச்சந்திரன் செட்டியார் தொடங்கி  மரபின் மைந்தன் முத்தையா என்று நீளும் நெடிய பட்டியலில் என்.ஸ்ரீராம் வரை

வாசிக்க பல்வேறு வகையான எழுத்துகள் நமக்கு கிடைக்கிறது.

கொங்கு சிறப்பு பக்கங்களில் கடலை கலயத்திற்குள் அடைக்க முயற்சித்திருக்கிறோம்.

கொங்கு எழுத்தைப் புதிதாகப் படிக்க விரும்பும் எவருக்கும் வரும் சிறப்புப்பக்கங்கள் கைப்பிடித்து வழிகாட்டும்.

செப்டெம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com