கே.வி.மகாதேவன் - இன்றொரு நாள் போதுமா?

கே.வி.மகாதேவன் - இன்றொரு நாள் போதுமா?
Published on

இது ஒரு மீள்பார்வை கட்டுரை என்பதால் நாம் இன்றைய காலக்கட்டத்திலிருந்து மகாதேவனை அணுகுவோம். அவர் வாங்கிய பரிசுகள், அவருக்கு அன்று இருந்த புகழை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர் இசை நமக்கு என்ன சொல்கிறது, அது அவரை எப்படி ஒரு மஹா கலைஞனாக ஆக்குகிறது என்பதை பார்ப்போம்.

மகாதேவன் பாடல்களில் என்ன உயர்ந்த அம்சங் கள் உள்ளன என்று ஆராய்ந்தால் எனக்குப் படுவது இவை: கவிதைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம், மனதை தொடும் மெட்டுக்கள், ஆர்ப்பாட்டமில்லாத இசைக்கோர்வை மற்றும் கர்நாடக சங்கீதத்தை அவர் கையாண்ட விதம்.

மகாதேவன் எப்பொழுதும் பாடலை எழுதச் சொல்லி விட்டு தான் மெட்டமைப்பார். அவர் கையில் பாடல் வரிகள் வந்தால் தான் மெட்டு வரும். வரிகள் கையில் வந்தவுடன் அந்த வரிகளுக்கு அவர் இசையால் ஒரு புது வடிவத்தை கொடுப்பார். “மலர்கள் நனைந்தன பனியாலே” என்று ‘இதய கமலம்’ என்ற படத்தில் வரும் பாடலை கேளுங்கள். கண்ணதாசன் அருமையான வரிகளை எழுதியிருப்பார். மகாதேவனின் மெட்டு காலைப்பனியின் மென்மையை நம் காதுகளுக்கு கொடுக்கும். “பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி”  என்ற குறும்பு வரிகளுக்கு வாத்தியங்களை நிறுத்திவிட்டு வெறும் குரலை மட்டும் ஒலிக்க செய்து அந்த வரிகளை நாம் உன்னிப்பாக கவனிக்க வழிவகுத்திருப்பார். கவிஞரை அங்கு முன்னிருத்தியிருப்பார். இப்படி பல பாடல்களில் அவர் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இதே படத்தில் வரும், ‘உன்னைக் காணாத கண்ணும்’, ‘ஆயிரம் நிலவே வா’ (அடிமைப்பெண்), ‘எண்ணிரண்டு பதினாறு வயது’,‘மடிமேலே தலை வைத்து’ (அன்னை இல்லம்), ‘மயக்கம் எனது தாயகம்’ (குங்குமம்) என்று சொல்லிக்கொண்டே போகலாம். பல பாடல்கள் கவிதையைப் படிப்பது போல் ஒரு உணர்வை தரும். ஆனால் அதனுடன் இசை இரண்டற கலந்திருக்கும். அந்த காலகட்டத்தில் வந்த எல்லா பாடல்களிலும் வரிகள் துல்லியமாக கேட்ட போதிலும், மகாதேவன் இசையமைத்த விதம் வரிகளை இன்னும் ஜொலிக்க வைத்தது. மொழி மேல் பற்றுக்கொண்ட எந்த ஒருவரும் மகாதேவனை வணங்காமல் இருக்க முடியாது (வார்த்தைகளை சரியாக உச்சரித்து பாடிய அன்றைய எல்லா பாடகர்களையும் வணங்கவேண்டும்).

மகாதேவன்  இசையமைத்த பல சிறந்த பாடல்களில் ஒரு பேரமைதி இருக்கும். ‘ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்’ என்ற ‘சாரதா’ படத்தில் வரும் பாடலை கேளுங்கள். என்ன ஒரு பேரமைதி... இரவு நேரம் மொட்டை மாடியில் நாம் படுத்திருக்க, மெல்லிய காற்று வீச, இந்த பாடல் காற்றலைகளில் தவழ்ந்து வந்தால் அது போல் ஒரு ஆனந்தம் இருக்க முடியாது. அமைதி மட்டும் அல்ல, இந்த பாடல் நம் மனதையும் தொடுகிறது. இப்படி ஒரு காதல் பாடலை நம் மனதை தொடுவதை போல் மெட்டமைத்த மகாதேவன் சோகப் பாடலை விட்டு வைப்பாரா? ‘உன்னைச்  சொல்லி குற்றமில்லை’ என்று ‘குலமகள் ராதா’ வில் வரும் பாட்டை கேளுங்கள் இல்லை ‘வசந்த மாளிகை’யில் வரும் ‘இரண்டு மனம் வேண்டும்’ பாட்டை கேளுங்கள். அதில் இழையோடும் சோகம் நம் மனதில் எளிதில் படிந்துவிடும்.

மிக குறைவான வாத்தியங்கள் பாடல்களில் பயன்படுத்துவதையே மகாதேவன் விரும்பினார். துள்ளலான பாட்டாக இருக்கட்டும், சோகமான பாடலாக இருக்கட்டும், இசை வார்த்தைகளையும் மெட்டையும் விழுங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ‘குலமகள் ராதை’ படத்தில் வரும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பாடல் கேளுங்கள். அதிகம் இசைக்கருவிகள் இல்லாமலேயே மகாதேவன் அந்த கதாநாயகியின் மனநிலையை அருமையாக பிரதிபலித்துவிடுவார். இன்னும் ஒரு புகழ் பெற்ற உதாரணம் வேண்டும் என்றால் ‘பாலக்காட்டு பக்கத்துல’ (வியட்னாம் வீடு) பாட்டைக் கேளுங்கள். பட்டி தொட்டி எல்லாம் முழங்கிய பாடல். ஆனால் கூர்ந்து கேட்டால் கூட இசைக்கும் வாத்தியங்கள் அதிகம் இல்லை. இருந்தாலும் இந்த பாடலுக்கு ஒரு அதீதமான துள்ளலை மகாதேவனின் மெட்டு கொடுத்து விடும். அதே போல் தான் ‘மாட்டுக்காரன் வேலன்’ படத்தில் வரும் ‘பட்டிக் காடா பட்டணம்’ பாடலும். வாத்தியங்களை நம்பாமல் வெறும் மெட்டின் பலத்தின் மேல் புகழ் பெற்ற பாடல்.

கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த மகாதேவன் பல ராகங்களில் பாடல்களை அமைத்திருக்கிறார்.  ‘பாட்டும் நானே’ (திருவிளையாடல் - கௌரி மனோஹரி ராகம்), ‘மன்னவன் வந்தானடி’ (திருவருட்செல்வர் - கல்யாணி ராகம்), ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ (தில்லானா மோகனம்பாள் - ஷண்முகப்ரியா ராகம்) போன்ற பாடல்கள் அந்தந்த ராகத்தில் அமைந்த மிக பிரபலமான பாடலாக ஆயிற்று. ஏ.பி.நாகராஜன் எடுத்த பல படங்களுக்கு மகாதேவன் இசை. எல்லா படங்களிலும் கர்நாடக இசை சார்ந்த பாடல்கள் இருந்தன. அவை எல்லாமே வெகுவாக மக்கள் ஆதரவை பெற்றன.

காலத்திற்கு ஏற்ப தன் இசையையும் மாற்றிக்கொண்டார் ஆனால் அவர் முத்திரை மாறவில்லை. அதே எளிமை, பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம், இம்சிக்காத இசை கருவிகள் என்று அவர் பாணி அப்படியே இருந்தது. ஆனால் மெட்டுக்கள் புது பொலிவுடன் மலர்ந்தன. ‘ஏரிக்கரையின் மேல’ கேட்டுவிட்டு ‘பாலக்காட்டு பக்கத்திலே’ கேட்டால் எவ்வளவு தூரம் மகாதேவன் பயணித்திருக்கிறார் என்பது தெரியும்.

நான் ஹைதராபாத் விட்டு சென்னைக்கு வந்திருந்த சமயம். ஒரு உறவினர் வீட்டிற்கு சென்றேன். அங்கு தொலைக்காட்சியில் ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ என்ற ‘குங்குமம்’ பட பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ஹைதராபாதிலிருந்து வந்திருப்பதால் எனக்கு தமிழ் பாடல்கள் அறிமுகம் இருக்காது என்று நினைத்த அந்த பெரியவர், “என்ன அருமையான பாடல் பாருங்கள். இதை இசை அமைத்தவர் யார் என்று கேட்டால் உடனே ‘விஸ்வநாதன்-ராமமூர்த்தி’ என்று பதில் சொல்லி விடுங்கள்” என்றார். “இசை மகாதேவன் அல்லவா?” என்றேன். “அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டார். விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பேராளுமைகளினால் பலருக்கு இந்த நிலை வந்திருக்கிறது. சுதர்சனம், கோவர்த்தனம், மகாதேவன், வி.குமார் என்று பலர் பாடல்களும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெட்டியுள் அடங்கிவிடுகின்றன. அதனால் மகாதேவன் பாடல்களை அறிந்திருந்தாலும் மகாதேவனை அறியாமல் பலர் இருக்கிறார்கள். ‘எண்ணிரண்டு பதினாறு வயது’, ‘ஒருத்தி ஒருவனை’, ‘பூந்த்தேனில் கலந்து’, ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல’, ‘வண்ண தமிழ் பெண் ஒருத்தி வந்தாள்’, ‘அழகு சிரிக்கின்றது’, ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’ போன்ற பல பாடல்கள் பலருக்கு நினைவிருந்தாலும் அவை மகாதேவன் இசைஅமைத்தவை என்று துரதிர்ஷ்டவசமாக பலருக்கு தெரியாமல் இருக்கிறது.

இதற்கு ஒரு விதிவிலக்கு மகாதேவன் இசையமைத்த புராணப் படங்கள். இங்கு நிலைமை தலைகீழாக மாறி, குன்னக்குடி இசையமைத்த படங்கள் பலவும் (அகத்தியர், தெய்வம்) மகாதேவன் இசை அமைத்ததாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்!! பக்தி படங்கள் மீது மகாதேவனின் தாக்கம் அது போன்றது. தமிழ் அளவிற்கோ அல்லது அதை விட அதிகமாகவோ தெலுங்கில் பணியாற்றியிருக்கிறார் மகாதேவன்.

இளைஞர்கள் மகாதேவனின் பாடல்களை தேடி பிடித்து கேட்டால் பரவசம் அடைவார்கள்.ஏனெனில் இப்பொழுது வரும் பல பாடல்களுக்கு எதிர்மாறான பாடல்கள் மகாதேவனுடையது. இரைச்சலுக்கு பதிலாக அமைதியும், வார்த்தைகளை விழுங்கி விடும் இசைக்கு எதிராக வரிகளை உயர்த்தி பிடிக்கும் மெட்டும், கர்நாடக ராகங்களை அப்படியே கையாளாமல் தன் கற்பனா சக்தியினால் புதிதாக்கும் முறையும் இப்பொழுது உள்ள ‘trend’க்கு எதிர்மறையாகவே உள்ளன.

(கட்டுரையாளர் சுரேஷ், பெங்களூருவில் கணினித் துறையில் பணியாற்றும் இசை, இலக்கிய ஆர்வலர்)

ஜனவரி, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com