கெளதம புத்தருக்கு கனவுகள் இல்லை!

கெளதம புத்தருக்கு கனவுகள் இல்லை!
Published on

கனவுகளை உண்மையான அறிவுக்கான ஆதாரமாகக் கொள்ள இயலுமா?

நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கை நிஜமானதா அல்லது இதுவே ஒரு கனவா போன்ற கேள்விகளே தத்துவ விசாரம் கொண்ட கேள்விகள் ஆகும்.இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் கனவுகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன.

கனவுகளில் கடவுள் கட்டளையிட்டதால்தான் நிறைய கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பல மகான்களின் கனவுகளில் இறைவன் தோன்றி இருப்பதாக பதிவுகள் உள்ளன. இறைவன் மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு ஊடகமாக கனவு எங்கும் கருதப்பட்டு வந்திருக்கிறது. இப்படி இந்தக் கனவு என்ற ஊடகத்தின்,அனுபவத்தின் நம்பகத் தன்மையை தத்துவம் ஒரு பக்கம் விசாரிக்கின்றது மறுபுறம் விளக்குகின்றது.

கனவு பற்றி உளவியல் ரீதியான விளக்கங்களை ஃப்ராய்டு, கார்ல் யுங் போன்றவர்கள் விரிவாகவே விளக்கி உள்ளார்கள். ஆனால் அவை தத்துவ பரப்பிலே சுருங்கிய எல்லைகள் கொண்டதாகவே கருதப்படுகின்றன. ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் ஆசைகளின், பிற உணர்வுகளின் உருவ வெளிப்பாடே கனவுகள் என்னும் விளக்கங்கள் தத்துவ  விசாரங்களுக்குப் போதுமானவை அல்ல.

குறிப்பாக இந்திய தத்துவ விசாரங்களுக்கு அது மேலோட்டமானது. இந்திய தத்துவங்கள் மிகவும் ஆழமாக இது பற்றி ஆராய்ந்து உள்ளன. மேற்கத்திய தத்துவ உலகிலும் கனவு குறித்து சாக்ரட்டீஸ் காலம் முதலே விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. டேக்கார்ட்ஸ் என்னும் பிரெஞ்ச் தத்துவ அறிஞர் தனக்கு உண்டான மூன்று கனவுகள்தான் தன்னுடைய தத்துவ உருவாக்கத்தைச் சாத்தியப்படுத்தின என்று கூறுகிறார். இவர் பகுத்தறிவுவாதத்தின் தந்தை எனப் படுபவர். இவரைப்போலவே பல மேற்கத்திய தத்துவ அறிஞர்கள் கனவுகளை வெவ்வேறு நிலைப்பாடுகளில் இருந்து கணித்திருக்கிறார்கள்.

கனவுகள் என்பன பற்றி இந்திய தத்துவப் பள்ளிகள் சில விளக்கங்களை கொடுத்து வந்துள்ளன. அதில் அடிப்படையான தத்துவக் கேள்வி என்பது கனவுகள் வெறும் தோற்றங்களா அல்லது அவற்றில் உண்மைகள் இருக்கின்றனவா என்பதே ஆகும்.

கனவுகள் உணர்வு மட்டத்தில் ஏற்படும் சுழற்சிகளால் உண்டாவது என்று அறிவியல் ஒரு பக்கம் விளக்குகிறது. ஆனால் பல வகை தத்துவங்கள் அதைத் தாண்டியே போகின்றன. பொருள் முதல்வாத கோட்பாட்டின் விளக்கங்கள் கனவுகளை உடல் ரீதியான உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்ற அளவிலே விளக்குவதோடு நின்று விடுகின்றன. உணர்வுகள் பற்றிய அறிவியல் ரீதியான உயர் மட்டப் படிப்புகள் எண்ணிக்கையில் மிக குறைவாகவே காணப்படுகின்றன.

தனி நபர்களின் கனவுகளை ஆராய்ந்து, அவற்றில் வெளிப்படும் குறியீடுகள் உளவியல் பிரச்சனைகளை புரிய வைக்க உதவும் அளவுகோல்களை வழங்குகின்றன என ஃப்ராய்டு கருதினார். அதன் அடிப்படையில் உளவியல் மருத்துவத்திற்கான முறைகளை கூட அவர் அறிமுகப்படுத்தினார். ஃப்ராய்டைப் பொறுத்தவரை ஆழ் மனதில் முடங்கிக் கிடக்கும் நிறைவேறாத ஆசைகளும், அச்சமும்தான் கனவுகளாகத் தோன்றுகின்றன என்ற நிலைப்பாடு கொண்டிருந்தார். ஆனால் தற்கால நவீன மருத்துவ முறைகள் ஃப்ராய்டின் உளவியல் விளக்கங்களையும், சிகிச்சை முறைகளையும் ஏற்பது இல்லை. ஆழ்மனம் என்ற ஒன்று இருப்பதையே கூட அவர்கள் ஏற்பதில்லை. எல்லாமே உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மற்றும் பிற ரசாயன கலவைகளில் விளைவுகளே என்று அவர்கள் கருதுகிறார்கள். இது பொருள் முதல்வாத கோட்பாட்டின் அடிப்படையிலே ஆழ் மனதையும், கனவுகளையும் நோக்குகின்ற முறை ஆகும். ஆனால் நவீன மருத்துவ இயலால் கூட விளக்க முடியாத ஒரு அனுபவமாகத்தான் கனவு அமைகின்றது.

மனதின் தன்மை குறித்த இந்திய தத்துவங்களின் நிலைப்பாட்டை ஒட்டியே அவற்றின் கனவு பற்றிய விளக்கங்களும் அமைகின்றன. மனம் என்பது மூளைக்கு அப்பாற்பட்டது. ஆனால் ஆன்மாவிற்கு கீழானது என்ற புரிதல் பொதுவாக எல்லா ஆஸ்திக இந்திய தத்துவப் பள்ளிகளாலும் முன்வைக்கப்படும் நிலைப்பாடு ஆகும். மனதின் நுணுக்கமான ஒரு விளைவுதான் கனவுகள் என்றும் கருதப்படுகிறது. அதையும் தாண்டிய அனுபவ வெளி பற்றி இந்திய ஆன்மீகம் விளக்குகிறது.

ரிக் வேத சம்ஹிதையில் கனவு பற்றி 40 இடங்களில் சொல்லப்படுகின்றது. இதில் சில சொப்பனம் என்ற சொல் உறக்கம் என்ற பொருளிலிலே பயன்படுத்தப்பட்டுள்ளது. புலன்கள் எல்லாம் உறக்கத்தில் உள்ள போது காணப்படும் கனவுகள், உள்ளே உறங்காமல் இருக்கும் புருஷன் எனும் ஆத்மாவினால்தான் உண்டாக்கப்படுகின்றது. ஆனால் இவை புற உலக பொருட்களோடு ஒப்புமை படுத்தி சோதிக்க முடியாதவை. எனவே அவற்றை சரியான அறிவிற்கான சாதனமாகக் காணமுடியாது என்கின்றது.

அத்வைதம், கனவுகள் வானத்தை போன்று உண்மையானவை அல்ல என்கிறது. பிரம்ம சூத்திரம் வானம் கூட உண்மையானது அல்ல என்கிறது.

பாஸ்கராச்சாரியார் கனவுகள் வெறும் கற்பனையின் வெளிப்பாடுகளே, அவை சரியான அறிவுக்கு உதவாது என்று கூறிவிட்டார்.

இப்படிக் கனவை நிராகரிக்கும் நிலைப்பாடு பல தத்துவப்பள்ளிகளுக்கு இருந்தபோதிலும், அதை வகைப்படுத்தி விளக்கி, அவற்றை ஏற்கும் தத்துவப் பள்ளிகளும் இருக்கின்றன. மனம்தான் எல்லா விளக்கங்களுக்கும் அடிப்படையானது.

மனமே கனவின் விளை நிலம்

மனம் என்னும் போது தன் உணர்வு நிலை என்ற பிரக்ஞையை அது குறிப்பதாக கொள்ளலாம். பொதுவாக சொல்லப்படும் பிரக்ஞை என்பது முழுமையான விழிப்பு நிலையில் இருப்பது இல்லை. அது பொதுவாக மூன்று நிலைகளில் இருப்பதாக மாண்டோக்கிய உபநிடதம் கூறுகிறது. மனதில் அதாவது தன்னுணர்வில் பல படிநிலைகளை உபநிடதங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

சொப்பனம், ஜாக்கிரதை, சுசுப்தி என மூன்று நிலைகள் மனித மனதில் உள்ளன. சொப்பனம் என்பது கனவு நிலை. ஜாக்கிரதை என்பது விழிப்பு நிலை. சுசுப்தி என்பது கனவுகள் அற்ற ஆழ்ந்த உறக்க நிலை.

விழிப்பு நிலை என்று கூறப்படுவது கூட ஒருவகை மயக்க நிலை தான் என்றும் சில தத்துவப் பள்ளிகள் கருதுகின்றன. அதாவது நிஜம் என்று நாம் கருதி கொண்டிருக்கும் இந்த நேரம் கூட வெறும் தோற்றமாக இருக்கலாம் என்று அவை கூறுகின்றன. ஆனால் விழிப்பு நிலையில் நாம் காணும், உணரும் விஷயங்களை,அனுபவங்களை தொகுத்துப் பார்க்கவும்,ஆராய்ந்து பார்க்கவும், நினைவுபடுத்திப் பார்க்கவும் இயலும். கனவு நிலை அப்படிப்பட்டது அல்ல என்று விளங்கிக் கொண்டால், விழிப்பு நிலை மயக்க நிலை அல்ல என்ற முடிவிற்கு வரலாம்.

இந்த மூன்று நிலைகளைக் கடந்த நான்காவது நிலையான துரியம் என்னும் நிலை ஆன்ம விழிப்பு நிலையாகும். இது பிரபஞ்ச ஆன்மாவின் தன்மைகளை உணரும் மற்றும் இயற்கையின் பேராற்றலுடன் தொடர்பு கொள்ளும் நிலை எனவும் விளக்கப்படுகிறது. இதனடிப்படையில் கனவுகள் என்பவை கடலின் மீதான அலைகள் போன்றவை தான்.

மனக்கடலின் மீது ஏற்படும் நினைவு அலைகள் அவை. அவற்றை தோற்றங்கள் மட்டுமே என்று முழுமையாக நிராகரித்து விட முடியாது. அவற்றிலும் பல நிஜங்கள் குறியீடுகளாக வருவது உண்டு. எனவேதான் கனவுகளின் பலன்கள் பற்றி பலர் அறிய ஆர்வம் கொள்ளுகின்றனர்.

சலனம் இல்லாத நிலையில் மனம் இருக்கும் போது,மனதில் முழு அமைதி கிட்டும் என்ற விளக்கம் ஒரு புறம் இருக்கையில் தூய நிலையில் ஆன்ம விழிப்பு பெறும் நிலையில் எவை உண்மையானவை, எவை தோற்றங்கள் என்ற ஞானமும் மனிதர்களுக்கு கிட்டும் என்பதும் கூறப்படுகிறது.

ஆக, கனவுகளை கடந்த தூய நிலையை அடைவது என்பது ஞானக்கதவினை திறப்பது போல் ஆகும். பொதுவாக பகுத்தறிவின் ஊடாகத்தான் எது சரி என்று அறியும் அறிவு கிட்டும் என்ற நிலையை விட்டு விலகி, இவை பிரக்ஞையின் அனுபவம் என்ற மற்றொரு நிலையை முன் வைக்கின்றன. உணர்வுகளின் வெளிப்பாடுகளை புரிந்து கொள்ளுதலின் மூலம், பகுத்தறிவால் சாத்தியப்படாத பல வாழ்க்கை ரகசியங்கள் புரிந்து கொள்ளப்பட இயலும் என்பதே இதன் கருத்து ஆகும். எனவேதான் இந்த நிலையை உண்மையின் தரிசனம் என்று கூறுகின்றனர்.

இந்தியத் தத்துவங்களின் விளக்கங்கள் 

உபநிடங்களில் கனவுகள் பற்றி விளக்கங்கள் காணப்படுகின்றன. எங்கும் பரவியிருக்கும் இறை சக்தியான பிரம்மத்தின் தீண்டலால்தான் கனவுகள் உண்டாகின்றன என்ற நிலைப்பாடும் அவற்றுக்கு உண்டு. அதேபோல கனவுகள் என்பன பூர்வ ஜென்மங்களின் கர்மங்களை சுமந்து வரும் மனதின் வெளிப்பாடு என்ற விளக்கங்களையும் இந்திய ஆஸ்திக தத்துவங்கள் கொடுக்கின்றன.

சரக சம்ஹிதை என்னும் நூல் கனவுகளை ஏழு வகையாக பிரிக்கிறது. கண்டவை, கேட்டவை, விருப்பப்பட்டவை, கற்பனை செய்யப்பட்டவை, எதிர்காலம் பற்றிய கணிப்பு, பிற உணர்வு நிலைகள் போன்ற அம்சங்களை கொண்டவையே இந்த ஏழு வகை கனவுகள். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு தன்மையின் வெளிப்பாடாகவும், சில சமயங்களில் பலவற்றின் கூட்டு வெளிப்பாடாகும் கனவுகள் அமைகின்றன என்கின்றது சரக சம்ஹிதை.

இதேபோன்று பிரசஸ்தபாதர், உதயணர் மற்றும்

சங்கர மிஸ்ரர் போன்றவர்கள் கனவுகளை நான்கு வகைகளாக பிரிக்கின்றனர்.

1. இதுவரை கண்டிராத நிகழ்வுகள் சார்ந்த கனவுகள்.

2. உணர்வுகள் பிறழ்ந்த நிலையில் உண்டாகும் கனவுகள்.

3. ஆழ்மனது பதிவுகளின் வெளிப்பாடாகும் கனவுகள்.

4. கனவுகளுக்குள்ளேயே தோன்றும் கனவுகள்.

என்பனவே அவை.

கனவுகள் உள் மன உறுப்புகளால் மட்டுமின்றி, புறவயத் தூண்டல்களாலும் நிகழ்கின்றன என்கிறார் உதயணர். கனவுகளில் புலன் உறுப்புகள் முற்றிலும் செயல்படாமல் இருப்பது இல்லை. கனவு கண்டு கொண்டிருக்கும்போதே புறத்தில் ஒலிக்கும் ஓசைகள் சில சமயங்களில் காதுகள் மூலம் உள்வாங்கப்பட்டு அவையும் கனவுகளின் பகுதியாக ஆகிவிடுவது உண்டு. அதுபோன்று தொடு உணர்வும் கனவு நிலையில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். கனவு காணும் போது நம்மை யாராவது தொட்டால் அது கூட கனவில் பிரதிபலிக்கும் என்று நியாய வைசேசிகம் சொல்லுகிறது. மேலும் உடலில் உள்ள உஷ்ணம் என்பது நமது ஆழ்மனம் பழைய நினைவுகளை மேல் எழுப்ப உதவுகின்றது என்கிறது நியாய தத்துவம்.

இப்படி ஓர் அனுமானத்தின் அடிப்படையில் தத்துவங்கள் கனவுகள் குறித்து பேசுகையில் இந்திய மருத்துவ மரபு கனவுகளைப் பற்றி விளக்குகின்றது. சிலருக்கு வானத்தில் பறப்பது போன்றும், பூமியில் உலவுவது போன்றும், விலங்குகள் விரட்டி ஓடுவது போலவும் கனவுகள் வருவது உண்டு. இவை உடலில் சுரக்கும் பித்தம் அதிகமாவதால் ஏற்படுகின்றன என்கிறது இந்திய மருத்துவம். அதேபோல பித்தம், சளி, தாதுக்கள் பற்றாக்குறை போன்றவையும் நெருப்பில் நுழைவது, எரியும் கதிர்கள், கடலை கடப்பது, மழை பொழிவது போன்ற கனவுகளை காண வைக்கின்றன என்றும் இந்திய பண்டைய மரபு மருத்துவம் விளக்குகிறது.

கனவுகளில் புறவய அம்சங்களின் பங்கு மறுக்க முடியாததாயினும் அகவய இயக்கமே கனவுகளின் மூல காரணம் ஆகும். ஆழ்மனம் பல தோற்றங்களை உருவாக்க வல்லது. காதல் தோல்வி, எதிரியின் மீது கோபம் போன்ற பல உணர்வுகள் ஆழ்மனதில் மறைந்து கிடக்கும்போது, அவை கனவுகளில் வெவ்வேறு உருவம் கொண்டு தோற்றமளிக்கும் என்பதையும் இந்திய தத்துவங்கள் மறுக்கவில்லை. இதை மனதினால் உருவாக்கப்படும் பிம்பங்கள்.

மதுசூதனர் என்பவர் நிறைவேறாத ஆசைகளை கனவில் மனம் நிறைவேற்றுகிறது. அதுவே மனதின் குணமும் ஆகும். ஆனால் அவை நிஜங்கள் அல்ல மாயத் தோற்றங்களே என்கிறார். இப்படிக் கனவுகளை நிறைவேறாத ஆசைகளின் உருவாக்கம் எனவும், ஆழ்மனதின் அலை கழிப்பால் ஏற்படும் உருவ தோற்றங்களின் தொகுப்பு எனவும், புலன்களின் உந்துதாலும். அக உணர்வுகளின் உந்துதலாலும் ஏற்படுபவை எனக் கூறினாலும் கனவுகளுக்கு ஒரு தெய்வீகத்தன்மை இந்திய பண்பாட்டிலே தரப்பட்டு வருகின்றது.

கனவுகளின் தெய்வீகம்

கனவுகள் ஒருவகை இறை சார்ந்த தரிசனத்தை வழங்குகின்றன என்றும் புலன்களால் அறியப்பட இயலாத ஓர் ஞான வெளிக்கான

சமிக்ஞைகளை அவை தருகின்றன என்றும் சில தத்துவப் பள்ளிகள் விளக்குகின்றன.

ஆன்ம விசாரத்தில் உள்ளவர்களுக்கு இம்மாதிரி கனவுகள் மூலம் ஞானத்திற்கான திறவுகோல்கள் கிடைக்கின்றன. இறை உணர்வில் முங்கி கிடப்பவர்களுக்கு சாதாரண உணர்ச்சி சார்ந்த கனவுகள் இல்லாத தூக்கம் கூட சாத்தியப்படும் என்கிறார்கள். கௌதம புத்தருக்கு கனவுகள் தோன்றுவதில்லை என்றும் கூட நம்பப்படுவது உண்டு.

இறையுணர்வு தளத்தில் கனவுகள் மாயத் தோற்றங்கள் அல்ல. கனவு காண்போருக்கு அவை நிஜங்களே. பலவித உன்னத உணர்வு நிலைகள் இந்நிலையில் சிலருக்கு அமைகின்றன. கனவுகளில் வாசனைகளையும், சுவைகளையும் கூட அவர்கள் அறிய முடிந்து இருக்கிறது. சிலருக்கு ஆன்மீகப் பயணத்திற்கான வழிகாட்டுதல்கள் கனவுகள் மூலம் கிட்டியுள்ளன. இது எப்படி சாத்தியமாகிறது என்பதற்கான விளக்கங்களையும் ஆஸ்திக தத்துவங்கள் விளக்குகின்றன.

புற உலகின் புலனறி அனுபவங்கள் நினைவுகள் வழியாக மூளைக்கு பழக்கப்பட்ட கோர்வையாக அமையாமல், பிம்பங்களாலும், ஒலியாலும் ஒழுங்கின்றி கோர்க்கப்பட்டு வழங்கப்படும் கனவு நிலைகள்  ஒருவகையாக பிரிக்கப்படுகின்றன. அதே சமயம் இறை அழைப்பாகவும், வழிகாட்டுதலாகவும் பிரபஞ்ச இயக்கத்தின் ரகசியங்களை புரிந்து கொள்ள உதவும் கருவியாகவும் அமையும் கனவுகள் மற்றொரு வகை என்று பிரிக்கப்படுகின்றன.

கனவுகளை அறிவுக்கு உரியப் பிரமாணங்களாக இந்திய தத்துவ பள்ளிகள் அழுத்தமாக குறிப்பிடாவிட்டாலும் ஞான அனுபவத்தின் நிலையில் அதன் முக்கியத்துவம் சில சம்பவங்களாலும் விளக்கங்களாலும் உணர்த்தப்படுகின்றது.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை மனித மனம் தான். மனதின் தன்மை பற்றிய ஆய்வே இந்திய தத்துவங்கள் விசாரத்தின் அடிப்படையாகும். மனசு என்பது வேறு, புத்தி என்பது வேறு என்று பிரிக்கும் இந்திய ஞானம் இவற்றுக்கும் அப்பாற்பட்டு ஆன்மாவை நிறுத்துகின்றது. மனம் என்பது பலவகை திரைகளால் மூடப்பட்டு ஒருவர் தான் யார் என்று உண்மையை அறிய முடியா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைகளை அகற்றும் பயிற்சியே தியானமும் யோகமும் ஆகும். இப்பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாழ்க்கை முறைகளும் முன்வைக்கப்படுகின்றன.

ஆன்ம பயிற்சியின் மூலமாக உச்சகட்டமாக மனம் ஆன்மாவின் தன்மையை உணர்கிறது. ஒருவர் தான் யார் என்பதை புரிந்தும் உணர்ந்தும் கொள்ளும் நிலை அது. இதையே கூட ஞானம் என்று  சொல்லுவது உண்டு. இந்த அறிதல் என்பது ஞானவெளியில் புதிய பயணத்திற்கான தொடக்கம் மட்டுமே. அது எல்லையில்லா பயணமாக தொடரும். இந்தப் பயணத்தை மேற்கொண்ட ஆன்மீகவாதிகளுக்கு கனவுகள் தினசரி சம்பவங்களின் கீற்றுகளாகவோ, அடக்கப்பட்ட ஆசைகளின் வெளிப்பாடாகவோ, அல்லது மன அழுத்தங்களின் வடிகாலாகவோ வருவது இல்லை. அவையெல்லாம் சாதாரணர்களுக்கு. இவர்களுக்கு வரும் கனவுகள் இவர்கள் மனதின் உருவாக்கமாக இல்லாமல் மனதுக்கு வழிகாட்டும், செய்தி சொல்லும் தன்மை கொண்டதாக இருக்கும். அதாவது புறத்திலிருந்து அகத்திற்கு செய்தி வரும். ஒரு வகையில் இது ஒரு வழிப்பாதையே. புறம் என்பது கால நேரம் கடந்த ஆன்மீகப்புறம் ஆகும். இந்தப் புற வெளி அறிவியலுக்கு அப்பாற்பட்டவை.

ஆதிசங்கரர் தன்னுடைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களில் கனவுகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அத்வைதம் கனவுகளை மாயத்தோற்றங்களாகவே கருதுகின்றது. இந்த விழிப்பு நிலையைக் கூட அது மாயை எனும் போது கனவை எப்படி ஏற்கும்?

சுவாமி சிவானந்தர் கனவுகளின் தத்துவம் என்ற நூலை எழுதியுள்ளார். அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு கனவும் அர்த்தமுள்ளவை ஆகும். கனவுகள் என்பன அறியாத மொழியில் எழுதப்படும் கடிதம் போன்றவை ஆகும். கனவு மொழியை புரிந்து கொண்டவருக்கு அது எளிதாக புரியும். மேலும் சில கனவுகள் உடனடி ஆபத்துகள் பற்றிய எச்சரிக்கையாகவோ, உதவ வேண்டிய தேவைகள் குறித்தோ கூட இருக்கக்கூடும் என்கிறார் அவர். ஒருபுறம் இயற்கை சக்தியுடனான

உறவுக்கான பாலமாக கனவுகள் அமைந்தாலும் மறுபுறம் ஆழ்மன பிரக்ஞை என்னும் கடலின் ஆழத்தில் கிடக்கும் தகவல்களையும் புரிந்து கொள்ள உதவுவது கனவு என்கிறார்.

தமிழ் பக்தி இலக்கியத் தளத்தில் பல கவிகள் கனவுகள் பற்றி பாடியுள்ளார்கள். சங்க இலக்கியத்தில் பறவைகள் விலங்குகள் காணும் கனவுகள் இடம்பெறுகின்றன. அபிதான சிந்தாமணி கனவுகள் பற்றி விளக்கங்களை கொடுக்கின்றது. ரிக் வேதத்தில் பல கனவுகளின் குறியீடுகள் விளக்கப்படுகின்றன. மனிதனின் இறப்பு பற்றிய முன் எச்சரிக்கை தரும் குறியீடுகளும் கனவுகளில் வரும் என்கிறது ரிக் வேதம்.

ஆண்டாள் விஷ்ணு தன்னை  கைத்தலம் பற்றிய கனவை வாரணமாயிரம் பாடலில் விவரிப்பாள். இதுபோன்று மகான்கள் பலர் பிறப்பதற்கு முன்பு அவர்களை பெற்றெடுத்த தாய்கள் அவர்கள் பிறப்பு குறித்து கனவு கண்டுள்ளார்கள்.

வர்த்தமான மகாவீரர், கௌதம புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற பல ஆன்மீக ஆளுமைகள் பிறக்கும் முன்பே அவர்களின் அன்னையர்கள் அவர்கள் வருகை பற்றி கனவு கண்டனராம். யானை ஒன்று வயிற்றுக்குள் நுழைவது போல அல்லது ஒரு ஒளியானது வயிற்றுக்குள் ஊடுருவது போல கனவு கண்டதாக இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சுவாமி விவேகானந்தரும் தான் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பும் போது ஜீசஸ் குறித்து கண்ட கனவு பற்றி விளக்கி இருக்கிறார்.

இந்திய கணிதவியல் மேதை சீனிவாச ராமானுஜம் கணிதம் பற்றிய பல அறிய தீர்வுகள் கனவுகளின் மூலமாக தான் இறைவி மூலம் பெறப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

உறக்கத்தில் புலன்களும் உறங்கும் போது எப்படி கனவு இயங்கும்? கனவில் ஒளி ஒலி தோன்றுவது எவ்வாறு? நினைவுகளை மூளையிலிருந்து மீட்டெடுத்து அதை மனத்திரையில் ஓட வைப்பது யார்? கனவுகளை இயக்குவது யார்? கனவைக் காண்பது யார்? கண் விழித்தவுடன் கனவுகள் சுருட்டி அடித்துக் கொண்டு மறைவது ஏன்? எப்படி எங்கே மறைகின்றன? போன்ற கேள்விகள் தான் தத்துவ விளக்கங்களை எதிர்நோக்கும் அடிப்படையான கேள்விகளாக இருக்கின்றன. இது அனைத்தையும் செய்வது உள்ளே இருக்கும் ஆன்மாவே அல்லது பிரக்ஞையே என்கிறது கதா உபநிடதம்.

நியாயப் பள்ளியை பொறுத்தவரை கனவுகளில் வரும் நிகழ்வுகள்,பொருட்கள் உண்மையானவையல்ல. கனவில் வரும் யானை உண்மையான யானை அல்ல. அனைத்தும் நினைவுகளால் உருவாக்கப்படுவது தான். ஆனால் இந்த நினைவுகள் பூர்வ ஜென்ம கர்ம வினைகளாலும் கட்டப்பட்டு இருக்கும் என்கின்றது நியாயம்.

கௌடபாதர் மாண்டூக்கிய காரிகையில், மனம் பூர்வ ஜென்ம கர்ம வினைகளின் வெளிப்பாட்டை கனவின் மூலம் நிகழ்த்தும் என்று கூறுகிறார்.

சொப்பன வாழ்வில் வாழும் போது அங்கு ரஜஸ் குணம் ஆக்கிரமிப்பு செய்கிறது. எனவேதான் அதில் நிகழ்வதை நினைவு கூற இயலவில்லை என்றும் என்றும் ஜாக்கிரதை நிலையில் இருக்கும் போது சத்துவ குணம் கோலோச்சுகிறது என்றும் அதனால்தான் அனுபவங்களை நினைவுபடுத்த முடிகிறது என்றும் சிவானந்தர் கூறுகிறார்.

பௌத்தத்தில் யோகசாரம் கனவுகளை அறிவிற்-கானவையாக ஏற்பதில்லை. கனவுகள் புறப்பொருட்களுடன் நேரடியான தொடர்பு இல்லாதவை, எனவே அவை உண்மையல்ல என்பதே இவர்கள் நிலைப்பாடு. நாகர்ஜுனர் மூல மாத்தியம காரிகையில் இதையே கூறுகின்றார். புத்தர் போன்ற நாஸ்திக பள்ளியைச் சேர்ந்த ஞானிகள் இது குறித்து மௌனம் சாதித்தாலும், அவர்கள் ஞானத் தேடலில் கனவுகளின் பதிவுகளும் காணப்படுகின்றன.

ஆனால் சமணத்தின் விளக்கங்கள் வேறு வகையானவை. கனவுகளை இருவகைகளாக பிரிக்கின்றது சமணம். அவை நல்ல உடல் நிலையில் காணப்படும் கனவுகள்,   உடல் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் கனவுகள். தாதுப் பொருட்கள் பற்றாமையால் வரும் உடல் நிலைபாதிப்பு உள்ள நிலையில் தோன்றும் கனவுகள் தோற்ற மயக்கங்களே எனும் சமணம் நல்ல நிலையில் உண்டாகும் கனவுகளில் ஏற்கக்கூடியவை உள்ளன என்கிறது. கனவுகளை உருவாக்க அனுபவம், விழிப்பான கவனம், தொடர் சிந்தனை, கேட்டல், சிறப்பு செயல்பாடுகள், பாவச்செயல்கள் என ஏழு வகை காரணங்கள் உள்ளன எனும் சமணம் ஒன்பது வகைக் கனவுகளை பிரித்து அவற்றில் காணும் பொருட்களின் சகுனங்களையும் விளக்குகின்றது.

யானை, மாலை, நிலவு, சூரியன்,ஜாடி,எருது போன்றவை கனவில் தோன்றினால் என்ன வகை நன்மைகள் உருவாகும் என்றும் விளக்குகின்றது. ஆக சமணத்தைப் பொருத்தவரை உயர்நிலைக் கனவுகளின் அனுபவம் வாழ்க்கை அறிவிற்கானது.

ஒரு சாரரின் விளக்கங்கள் படி அகம் என்பது கனவு நிலையாகவும். புறம் என்பது பகுதி விழிப்பு நிலையாகவும் அவதானிக்கப்படுகிறது. இரு நிலைகளுமே உண்மைகளையும் சுமந்து இருக்கின்றன. ஆனால் இவை இரண்டையும் முழுமையான உண்மைகளாகக் காண முடியாது. மாயத் தோற்றம் என்று விலக்கவும் முடியாது.

உண்மையான அறிவு என்பது முழுமையான உண்மையை அறிந்து கொள்வதே ஆகும். இந்த முழுமையான உண்மையை அறிந்து கொள்ள மனிதன் அகம் புறம் இரண்டின் உதவியையும் பெற வேண்டி உள்ளது. இதில் கனவுகளின் பங்கு கணிசமானது.

தேடல் அதிகமான மனிதருக்கு மொழிகள் மூலமும், உலக அனுபவங்கள் மூலமும் முழுமையான உண்மை என்பது புரிந்து கொள்ள இயலாத நிலையில், வேறு தளத்திலிருந்து, முற்றிலும் வேறு மொழியிலே வழிகாட்டுதல் கிடைப்பதாக இந்திய ஆன்மீகம்கூறுகிறது. ஆழ் மனதையும் தாண்டிய ஒரு அனுபவ வெளிக்கான தயாரிப்பு நிலை அது. இந்த வழிகாட்டுதல் கனவுகள் மூலமாக கை கூடுகிறது. கிட்டுகின்றது

சுயம் அறிதலில் கனவுகளின் பங்கு மகத்தானது என்று ஆஸ்திக இந்திய தத்துவங்கள் பல வலியுறுத்துகின்றன.

மொத்தத்தில் கனவுகள் பற்றி உறுதியாக சொல்லமுடியாத நிலையில், பலர் ஆன்மீக கனவுகள் கண்டதாக பிரகடனப்படுத்தி, கடவுள் கனவில் வந்து போன கதைகளையும் கூறி ஏமாற்றும் நிலை இந்தியா போன்ற இறை நம்பிக்கை அதிகம் கொண்ட பூமியில் நடைபெறுவதை தடுக்கத்தான் வேண்டும். அதற்குக் கனவுகள் பற்றி நம்புபவர்கள், அச்சப்படுபவர்கள், பரிகாரம் தேடுபவர்கள் பொறுமையாக,ஆழமாக கனவுகளின் தன்மையைப் புரிவதோடு, எல்லா கனவுகளும் ஆன்மாவின் குரல் அல்ல என்பதையும், இறை உணர்வின் அழைப்பு அல்ல என்பதையும் உணரவேண்டும். மனதின் சித்து வேலைகள்தான் பெரும்பாலும் சாதரணர்களின் கனவு நிலையாக இருப்பதால் அவை தோற்றப் பிழை கொண்ட மாய பிம்பங்களே என்பதையும் புரிந்து கொள்வது அவசியம்.

அக்டோபர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com