கூட்டணி வச்சுக்கலாம்.. புடிச்சா தொடரலாம்

கூட்டணி- புதுச்சேரி
கூட்டணி வச்சுக்கலாம்.. புடிச்சா தொடரலாம்
Published on

புதுச்சேரி பனை, தென்னை மரங்களும், சவுக்கு மரங்களும் நிறைந்த சேறும், சகதியும் நிறைந்த பகுதி’ - பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் பிரான்சுவா மார்த்தேன், புதுச்சேரியில் காலடி எடுத்து வைத்தபோது தான் கண்ட காட்சியை இவ்வாறுதான் விவரித்தார்.

காலங்கள் மாறின. காட்சிகளும் மாறின. நகர் உருவானது. பின்னாளில் புதுச்சேரி இந்திய அரசில் இணைந்து யூனியன் பிரதேச அந்தஸ்துப் பெற்றது. ஆனால், பிரான்சுவா மார்த்தேன் புதுச்சேரியில் தான் கண்டதாகச் சொன்ன சேறும் சகதியும் மட்டும் நீங்கவில்லை. அவை, அப்படியே புதுச்சேரி அரசியலில் நீங்கமற நிறைந்துவிட்டது இன்றுவரை.

இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி நடந்தது. புதுச்சேரியில் பிரெஞ்சுக் காரர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. 1947ல் இந்தியாவுக்கு விடுதலை. எட்டு ஆண்டுகள் கழித்து அதாவது 1954 நவம்பர் 1ந் தேதிதான் புதுச்சேரிக்கு விடுதலை.

பிறகு, 1955ம் ஆண்டு பிரதிநிதித்துவ சபையின் தேர்தல் நடக்கிறது.  தமிழகத்தில் காங்கிரஸ் கொடி பறந்துக் கொண்டிருந்த காலம் அது. அதனால் புதுச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற வேண்டும் என்று நினைத்தார் காமராஜர். காங்கிரஸ் தனித்து நின்றது. கம்யூனிஸ்டுகள் இதர சக்திகளுடன் இணைந்து மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கினார்கள். மொத்தம் 39 தொகுதிகள். 21 இடங்களில் மக்கள் முன்னணியும், 17 இடங்களில் காங்கிரசும், ஒரு இடத்தை சுயேட்சையும் கைப்பற்றினர். ஆட்சியை யார் அமைக்க வேண்டும். அதிக இடங்களைப் பெற்ற மக்கள் முன்னணி தான் ஆட்சி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

காமராஜர் கிங் மேக்கர் தானே. மக்கள் முன்னணியை ஆட்சி செய்ய அவ்வளவு லேசில் விட்டுவிடுவாரா? அவர் நினைத்தது நடந்தது. மக்கள் முன்னணியில் இருந்து மூன்றுபேர் கட்சித்தாவினர். காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.  இந்தியாவிலேயே முதன்முதலாக  கட்சித்தாவிய நல்லவர்களை ஈன்ற மண்  இது என்ற ‘பெருமை?!’ புதுச்சேரிக்கு அன்றுதான் வந்தது.  1958ல் மீண்டும் தேர்தல். காங்கிரஸ் கட்சியை மீண்டும் வென்றது.

 1963 வரை ஏறத்தாழ 9 ஆண்டுகள் பிரெஞ்சு அரசின் ஒப்பந்தத்தோடு பிரதிநிதிகள் அரசாங்கம் புதுச்சேரியை ஆண்டது. 1963ம் ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டசபை அமைக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய சட்டமன்றம் உருவானது. அதற்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியானது.  இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அணி அபாரமாக வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது. 

ஆனால், காங்கிரசின்  கோஷ்டிபூசல் காரணமாக 1964 முதல் 1968க்குள்  மூன்று முறை ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.  இடையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் புதுச்சேரியையும் ஈர்த்தது.  காங்கிரசின் முன்னாள் முதல்வர் பாரூக் மரைக்காயர் தி.மு.க.,வில் சேர்ந்தார்.  அரசியலில் பரபரப்பு ஏற்பட்ட வேளையில் உள்ளாட்சித் தேர்தல் வந்தது.  பழுத்த அரசியல்வாதியான முன்னாள் முதல்வர் எதுவார் குபேருக்கு புதுச்சேரி நகரவாசிகளிடம் நற்பெயர் இருந்த சமயம் அது. அவர் நகரநலக்கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கினார்.  அந்த கூட்டணியில் காங்கிரசை எதிர்த்து தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகியவை இணைகின்றன. இந்த கூட்டணி எளிதில் வென்றது. எதுவார் குபேர் புதுச்சேரி நகராட்சியின் மேயர் ஆகிறார். காங்கிரஸ் படுதோல்வி அடைகிறது.

இதே கூட்டணி 1969 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. ஒரு சின்னத்திருத்தம். நகரநலக் கூட்டணி தொடங்கிய எதுவார் குபேருக்கு கொஞ்சம் மனவருத்தம்.  இதன்காரணமாக கூட்டணியில் இருந்து விலகுகிறார். நகரநலக்கூட்டணி என்ற பெயரை காங்கிரசுடன் இணைந்து பயன்படுத்துகிறார். ஆனால், தேர்தல் முடிவு தி.மு.க.,கூட்டணிக்கு சாதகமாக அமைகிறது. தி.மு.க., புதுச்சேரியில் ஆட்சி அமைக்கிறது. எம்.ஓ.எச்.பாரூக் முதல்வராகிறார்.

தொடர்ந்து தமிழகத்தை பின்பற்றியே புதுச்சேரியிலும் கூட்டணி குழப்பங்களும், முடிவுகளும் என்ற நிலை உருவானது.

1990ம் ஆண்டு தி.மு.க.,ஜனதாதளம் இணைந்து தேசிய முன்னணி கூட்டணி உருவானது. இந்தக்கூட்டணி புதுச்சேரியில் வென்றது. கூட்டணி ஆட்சி அமைந்தது. தி.மு.க.,வின் டி.ராமச்சந்திரன் முதல்வராக பதவி ஏற்றார். 13 மாதத்தில் ஆட்சி பணால். காரணம் வேறொன்றுமல்ல...அதிக இலாக்காக்கள் யாருக்கு? என்பதில் ஏற்பட்ட போட்டி, ஆட்சி கவிழ்ப்பு வரை வந்தது.

காற்று வீசும்போது கட்சியைத் தொடங்கி அறுவடை செய்யும் கலாச்சாரம் புதுச்சேரிக்கு புதிதல்ல. புதுச்சேரியில் த.மா.கா., வை தொடக்கிய ப.கண்ணன், தி.மு.க., அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக கோலோச்சினார்.  தி.மு.க.,வின் ஆர்.வி.ஜானகிராமன் முதலமைச்சர். இருவருக்கும் ஏழாம் பொருத்தம். கலால்துறையை தனக்கு தரச்சொல்லி வம்படித்துக் கொண்டிருந்த கண்ணன் மூணேமுக்கால் ஆண்டில் ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியை கலைத்தார். தொடர்ந்து காங்கிரசுக்கு ஆதரவு தந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வழிகோலினார்.

2001 தேர்தலில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ், 2006ம் ஆண்டு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என கட்சி கட்சியாக தொடங்கி, கூட்டணி மாறிமாறி தேர்தலை சந்தித்து தற்போது கண்ணன் காங்கிரசில் அதிருப்தியில் இருக்கிறார்.

சின்ன கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. தேர்தலில் இந்த கட்சி வெற்றி பெறும் என்ற ஆருடம் தெரிந்தால் போதும். அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டால் பதவி கிடைக்கும். ஆம். புதுச்சேரி சட்டசபையில் 3 நியமன உறுப்பினர்கள் பதவி இருக்கிறது. அதில் ஒரு பதவி கூட்டணி வைக்கும் சின்ன கட்சிக்கு கிடைக்கலாம்.

காங்கிரஸ் கட்சியில் இரண்டு முறை முதல்வராக பதவி வகித்த ரங்கசாமி, 2011ல் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடக்கி அ.தி.மு.க., வ.கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றிபெற்றார். கூட்டணி கட்சித்தலைவி என்ற முறையில் தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி சொல்லாததால் அ.தி.மு.க., உடனான கூட்டணி முறிந்தது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.,வும் கூட்டணி அமைத்தன.  தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.  ஆனால், பா.ம.க., புதுச்சேரியில் வேட்பாளரை நிறுத்தியது. நாங்கள் தான் ஒரிஜினல் அக்மார்க் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பா.மக. சொன்னது.  மக்கள் குழம்பினாலும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இந்த கூட்டணியை அங்கீகரித்தனர்.  இந்த கூட்டணி வெற்றி பெற்றது. கூட்டணி வைத்ததற்காக  பா.ஜ.க.,வுக்கு ஒரு நியமன எம்.எல்.ஏ.,  பதவியைத்  தானமாகத்  தந்தார்  ரங்கசாமி.

இந்தக்கூட்டணி அடுத்த ஆண்டுவரை காலம்தள்ளும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. ஏனென்றால் புதுச்சேரி ராசி அப்படி.

(பாண்டியன், புதுவையைச் சேர்ந்த எழுத்தாளர்)

ஜூன், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com