கூகுள் இல்லாத உலகு:
டாக்டர் கூகுள்!

கூகுள் இல்லாத உலகு: டாக்டர் கூகுள்!

Published on

சின்னத்திரை பிரபலம் ஒருவர் அவர் ஆசையாக வளர்க்கும் நாயுடன் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். வந்ததும் என்னிடம் என் நாய்க்கு இந்த நோய் இருக்கிறது சிகிச்சை கொடுங்கள் என்றார். அத்துடன் விடாமல் மருந்துகளின் பெயரையும் ஒப்புவித்தார்.

இன்னும் பரிசோதனையே செய்யவில்லை. அதற்குள் நோய் பெயரையே சொல்கிறாரே.. நம்மை விட பெரிய டாக்டரோ என்ற அச்சம் எனக்கு எழுந்தது. மெதுவாக அவர் என்ன படித்துள்ளார் என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் கூகுள்... ( நீ டாக்டர் டூலிட்டில் என்றால் நான் டாக்டர் கூகுள் என்று அவர் மனசுக்குள் நினைத்திருப்பார்)

ஆனால் ஒரு பிரச்னை. அவர் சொன்ன வியாதிக்கும் அந்த நாயின் நோய் அறிகுறிகளுக்கும் தொடர்பே இல்லை! நாயின் ரத்த பரிசோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே சிகிச்சை அளித்தேன்!. அவருக்குப் பிடிக்கவில்லை! அவர் வேறொரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். பின்னர் இன்னொரு மருத்துவர். நாயின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடைசியாக திரும்பவும் எங்களிடமே வந்தார். நாயின் உடல் நிலை மோசமான நிலையிலிருந்தது. அவர் கூகுளில் படித்த நோய்க்கான அறிகுறிகளையும் கலந்து சொல்லி எல்லா மருத்துவர்களையும் குழப்பமடையச் செய்துவிட்டார். இறுதி கட்டத்தில் எவ்வளவு போராடியும் அந்த நாயை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. பல நேரங்களில் கூகுள் என்னைப் போன்ற மருத்துவர்களுக்கு எனிமி நெம்பர் 1.

கூகுள் இல்லாத காலத்தில் தினமும் குறைந்தது இருபது பேராவது மருத்துவமனை எங்கிருக்கிறது? எப்படி வரவேண்டும்? எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை மருத்துவமனை திறந்திருக்கும் என்று டெலிபோனில் கேட்பார்கள்!

இப்போது இப்படிக் கேட்பவர்கள் குறைந்துவிட்டார்கள்! கூகுள் சர்ச் மூலமாக மருத்துவமனையை மேப்பில் அடையாளம் கண்டு நேரே வந்துசேர்ந்துவிடுகிறார்கள்! அதேபோல மருத்துவமனை எந்த நேரத்தில் பிஸியாக இருக்கும், எப்போது கூட்டம் குறைவாக இருப்பார்கள் போன்ற தகவல்களும் கூகுளில் கிடைக்கிறது.

கூகுள் ரிவ்யூ என்பது வாடிக்கையாளர்கள் அவரவர் அனுபவத்திற்கேற்ப ஒரு நிறுவனத்திற்கு மதிப்பெண் அளித்து அவர்களுடைய கருத்தை எழுதும் இடம். ஆனால் அது ஒரு தர நிர்ணயம் அல்ல. கூகுளில் ஐந்து ஸ்டார்கள் வைத்திருக்கும் டாக்டர்கள் தான் நல்ல டாக்டர், மற்றவர்கள் அவர்களைவிட குறைந்தவர்கள் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. பத்திருபது பேர் நினைத்தால் சாதாரண மருத்துவமனையை நகரிலேயே சிறந்த மருத்துவமனை எனவும், சிறந்த மருத்துவமனையை மிக மோசமான மருத்துவமனை என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியும். ஒருவரே பல ஐடிக்களை உருவாக்கியும் இதை செய்ய முடியும். எங்களுடைய மருத்துவமனை கிளை ஒன்றுக்கு வந்த நாய்க்கு அளித்த சிகிச்சையில் அதன் உரிமையாளருக்கு திருப்தியில்லை. அதனால் அவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து பல பொய்யான ஐடிக்களை உருவாக்கி எங்கள் மருத்துவமனையைப் பற்றி அவதூறுகளை வாரி இறைக்கத் தொடங்கினார்கள். இவையெல்லாம் பொய்யான ஐடிகள் எனக் கண்டறிந்து கூகுளில் முறையிட்ட பின்பும் சிலவற்றை மட்டுமே அவர்கள் நீக்கினார்கள்.

எங்கள் மருத்துவமனையின் புதிய கிளைகளைத் திறக்கவும் கூகுள் உதவி இருக்கிறது. நகரின் எந்த பகுதியில் இருந்து அதிகமான பேர் எங்களைத் தேடி வருகிறார்கள் என்பதை கூகுளே சொல்லும். அந்த இடத்தில் கிளை திறந்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

(மருத்துவர் வி.அருண், எஸ்கேஎஸ் செல்லப்பிராணிகள் மருத்துவமனை, சென்னை)

ஏப்ரல், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com