காட்சி 1
என் தோழியின் பணி நேரத்தின்போது, கர்ப்பிணிப் பெண் ஒருவர் எட்டுமாதத்திலேயே பிரசவவலி எடுத்து விட்டதால் அழைத்து வரப்படுகிறார். குறித்த தேதிக்கு முன்பாக குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தால் அதற்கு நுரையீரல் வளர்ச்சி போதுமான அளவு இருக்காது; பிறந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும் என்பதால் நுரையீரலின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கக்கூடிய ஒரு ஊசியான ‘டெக்ஸாமீதசோன்' செலுத்துவார்கள். அந்தப் பெண்ணுக்கு சீக்கிரம் பிரசவம் ஆகும் வாய்ப்பு இருந்ததால் செவிலியரிடம் ‘டெக்ஸாமீதசோன்' போடுங்கள்' என்று கூறியிருக்கிறார் என் தோழி. செவிலியர் அந்த மருந்தை சிரிஞ்சில் எடுப்பதற்குள்ளாகவே அந்த கர்ப்பிணிப் பெண், ‘டாக்டர்! எனக்கு அலர்ஜி எதுவும் இல்லையே.. அப்புறம் ஏன் அலர்ஜி ஊசி போடச் சொல்றீங்க?' என்று கேட்டிருக்கிறாள். ‘அது அலர்ஜி ஊசின்னு உங்களுக்கு யார் சொன்னது?‘ என்று தோழி கேட்க, கூகுள்ல பார்த்தேன் என்ற பதில் வந்திருக்கிறது.
‘அதே ஊசிக்கு வேற என்னென்ன பலன்கள் எல்லாம் இருக்கு.. நுரையீரல் வளர்ச்சியை துரிதப்படுத்துவதில், ண்தணூஞூச்ஞிtச்ணt பெருக்கத்தில் அதுக்கு என்ன பங்கு இருக்கு... எல்லாம் கூகுள்ல படிங்க... பத்து நிமிஷம் டைம். அதுக்கப்புறம் நான் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னீங்கன்னா தான் உங்களுக்கு ட்ரீட்மெண்ட்' என்றிருக்கிறார் தோழி. அந்தப் பெண்ணும் இவள் கூறியதை சிரமேற்கொண்டு மீண்டும் கூகுள் செய்திருக்கிறாள். அதனிடையே வலி அடுத்தடுத்து வர ஆரம்பிக்க, ‘இதுல என்ன போட்டிருக்குன்னு புரியல டாக்டர்.. ஊசியைப் போட்டு விடுங்க' என்று விட்டுக் கொடுத்திருக்கிறாள்.
காட்சி 2
ஓரிரு வருடங்களுக்கு முன் என்னிடம் வந்த நோயாளி ஒருவர், ‘டாக்டர் எனக்குத் தலைக்கு ஸ்கேன் எழுதித் தாங்களேன்' என்றார். ‘என்ன தொந்தரவு.. எதுக்காக ஸ்கேன்‘ என்று நான் கேட்க, ‘எனக்கு மூளை
வளர்ச்சிக் குறைபாடு இருக்கு' என்றார். நிச்சயம் அந்த நபருக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும். பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவே இருந்தார். நாற்பது வயதில் மூளைவளர்ச்சிக் குறைபாடா? நான் சரியாகத் தான் கேட்டேனா என்று என் காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டேன். ‘ஆமா டாக்டர்! இன்னொரு டாக்டர்கிட்ட காட்ட போனேன் அவங்க ஓபி சீட்ல ஓரமா MRனு எழுதி இருக்காங்க.. MRனா என்னன்னு கூகுள்ல போய்ப் பார்த்தேன்.. மென்டல் ரிடார்டேஷன்னு போட்டிருந்துச்சு.. அப்படின்னா மூளை வளர்ச்சி குறைபாடு தானே?‘ என்றார். 'MRங்குறதுக்கு வேற பல விரிவாக்கங்கள் இருக்கு அதைச் சொல்லி இருப்பாங்க நீங்க சொல்ற குறைபாடு
சின்ன வயசுல வர்றது.. அது இருந்தா நீங்க இப்படி பேசிட்டு இருக்க மாட்டீங்க..' என்று போராடிப் புரிய வைத்தேன். ‘சரி என்ன வேலை பாக்குறீங்க?' என்றதற்கு ‘Medical represntative' என்றார். ‘அட அதாங்க MR!' என்றேன்.
காட்சி 3
அயல்நாட்டில் வசிக்கும் ஓர் இளம்பெண்ணுக்கு ஆசனவாயில் வலியும் அவ்வப்போது ரத்தக்கசிவும் இருந்திருக்கிறது. அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு பவுந்திரம் என்ற சிறிய பிரச்னை தான் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். பெருங்குடலில் ஏதுவும் பிரச்னை இருக்கிறதா என்று பார்ப்பதற்காக ஸ்கேன் எடுக்க அனுப்பியதால், அந்த ரிப்போர்ட்டின் ஆரம்பத்தில் Clinical history:? Carcinoma colo என்று கேள்விக்குறி போட்டு எழுதியிருக்கிறார்கள். ரிப்போர்ட்டின் இறுதியில் அப்படி எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். அந்தப் பெண் இந்தியாவில் உள்ள தன் பெற்றோரைத் தொலைபேசியில் அழைத்து, எனக்கு ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டியதிருக்கு... இங்கே பண்றதுக்கு வசதி இல்லை, நான் கிளம்பி வர்றேன். நீங்க நல்ல ஹாஸ்பிடல்ல விசாரிச்சு ஏற்பாடு பண்ணுங்க' என்று கூறியிருக்கிறாள். ரிப்போர்ட்டை வாசித்த பெற்றோர் முதலில் இருந்த வார்த்தையை கூகுள் செய்து பார்த்துவிட்டு, அவளுக்குப் பெருங்குடலில் புற்றுநோய் என்று நினைத்துக் கொண்டு அதன் பக்க விளைவுகளையும் கூகுள் செய்து, ‘ஐயையோ எங்க பொண்ணு மூணு மாசத்துல இறந்துடுவா' என்ற ரீதியில் ஊர் முழுக்கப் பரப்பி வைத்திருக்கிறார்கள். அது அவளுடைய தோழிக்குத் தெரிந்து இவள் மனதுடைந்து போகும் அளவிற்கு ஆகிவிட்டாள். பெருங்குடல் புற்றுநோய் வல்லுனர்களை தொடர்புகொண்டு அவர்களிடமும் ரிப்போர்ட்டைக் காட்டாமலே விவாதித்து,பெரியஅறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்கையில் நோயாளி வெளிநாட்டிலிருந்து ஜம்மென்று வந்து சேர்ந்திருக்கிறாள். அதன் பின் நடந்ததைப் புரிந்து கொண்டு அவள் விளக்க, இங்கு சோகத்தில் மூழ்கியிருந்த அவளது கிராமமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டது.
காட்சி 4
‘சுட்டான் - செத்தான்- ரிப்பீட்டு!' என்பதைப்போல கடந்த இரண்டு வருடங்களாக இந்தக் காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்த்தோம். இப்போதுதான் கொஞ்சம் ப்ரேக் கிடைத்திருக்கிறது. ‘கொரோனாவுக்கு கூகுளாண்டவர் சொன்ன அசித்ரோமைசின், விட்டமின் - சி, ஸின்க், கபசுரக் குடிநீர் எல்லாம் எடுத்துக்கிட்டேன். மணிக்கு ஒரு தடவை ஆவிபிடிச்சேன் டாக்டர்‘ என்று 60சதவீத, 70 சதவீத, 80சதவீத நுரையீரல் பாதிப்புடன் வந்து மூச்சிரைக்கச் சொன்னவர்கள் ஏராளம் ஏராளம்.
இது போன்ற காட்சிகள் எதுவும் காணக் கிடைக்காத காலம் ஒன்று இருந்தது. இதோ வெகு அருகில், ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னால் தான் அந்தக் காலம் இருந்தது. ஸ்மார்ட்போன் இல்லாத காலம் தான் அது. அந்தக் காலத்தில் மருத்துவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வார்கள். ஒரு வியாதிக்கான தீர்வைச் சொன்னால் நம்பாத பாவனை முகத்தில் வராது. ‘தமிழன் என்ன முட்டாளா, இந்த பாரம்பரிய முறையை பயன்படுத்துங்கள், ஆங்கில மருத்துவம் எடுக்காதீர்கள்' போன்ற வாட்ஸ்அப் செய்திகளை வாசித்துக் கொண்டு அமர்ந்திருக்க மாட்டார்கள். மாரடைப்புக்கு ஸ்டென்ட் வைக்கச் சொன்னால் உடனே அட்மிட் ஆவார்கள். பூண்டையும், இஞ்சியையும், வினீகரையும் கலந்து அருந்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.
அந்தக் காலம் கடந்து போய் விட்டது. இன்று என்ன அறிகுறி தோன்றினாலும் இணையத்தைத் தான் கேட்கிறார்கள். தலைவலிக்குக் காரணம் என்ன என்று இணையத்தைத் தேடினால் மூளைப் புற்றுநோய் தான் முதலில் தென்படுகிறது. இதனாலேயே ஜலதோஷம் பிடித்து தலைவலி வந்தவர்கள் கூட தனக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பீதியடைகின்றனர். உயிர்க்கொல்லி நோய்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தும் உயிர்காக்கும் மருந்துகளின் பெயருக்குக் கீழ், எப்போதாவது நிகழும் சில அரிதான பக்கவிளைவுகளைத் தந்திருப்பார்கள். அதைப் பார்த்துவிட்டு அந்த மருந்தை நிறுத்திவிட்டு உயிரை விடுபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அச்சு ஊடகத்தை விடவும் கூட, இணையம் கூறும் தகவல்களுக்கு மக்கள் மத்தியில் அதிக மதிப்பு இருப்பதாய்த் தோன்றுகிறது.
இனிவரும் காலங்களில் மருத்துவர்களின் தலைவலிக்கு முக்கியக் காரணம் என்னவென்று தேடினால் 'கூகுள்' என்று வரக்கூடும்!
ஏப்ரல், 2022