கே.பூபதி ஆட்டோ ஓட்டுநர்
சென்னையில் கடந்த பதினான்கு வருடமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். இதில் வருகின்ற வருமானம் சாப்பாடு, வீட்டுவாடகை, பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கே சரியாக இருக்கிறது. மிச்சம் மீதி கையில் எதாவது இருப்பு இருந்தால் தானே, அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் ஒரு சில நேரங்களில் பிள்ளைகளுடைய ஸ்கூல் ஃபீஸை வட்டிக்கு கடன் வாங்கித்தான் கட்ட வேண்டியுள்ளது. ஓலா, ஊபர் வந்ததால் சரியான வருமானம் இல்லை. தற்போதைய சூழலில் ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிப்பதே பெரிய விஷயமாக இருக்கின்ற நிலையில், வாங்கிய கடன்களை எப்படி அடைக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை.
ஊரடங்கால் கடுமையான மன உளைச்சல் அடைந்தது தான் மிச்சம். சென்ற ஆண்டு குடும்ப செலவுகளுக்கு மட்டும் மூன்று மாதத்திற்கு மட்டும் ரூ.24 ஆயிரம் கடன் வாங்கியுள்ளேன். அந்தக் கடனை அடைக்க முடியாத நிலையிலேயே, இந்த வருடமும் ஊரடங்கு போட்டுவிட்டார்கள். இதனால் இன்னும் நிலைமை மோசமாகிவிட்டது. தினமும் வருகின்ற வருமானத்தை வைத்து சாப்பிடுகிறவர்களுக்கு, வருமானம் இல்லை என்றால் என்ன செய்வார்கள்?. எங்களைப் போன்ற தினக்கூலிகளுக்கு அரசாங்கம் எதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
வேலை போனதே
ஸ்வேதா, திருநங்கை சமூக சேவகர்
திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக ‘சாதிக்கப் பிறந்தவர்களின் சமூக அமைப்பு' என்கிற அமைப்பை பலருடைய உதவியாலும், நிதி திரட்டலாலும் கடந்த எட்டு வருடமாக நடத்திக் கொண்டிருக்கிறேன். அதில், டெய்லரிங், டிடிபி சென்டர், கம்யுனிட்டி கிச்சன் போன்றவையும் உள்ளது.
அதேபோல், மும்பை டாடா இன்ஸ்டிடியூட்டில் ட்ரெயினிங் ஆபீசராக வேலை செய்து கொண்டிருந்தேன். நான் ஒரு எழுத்தாளரும் கூட. இந்த வருடம் அந்த வேலையும் இல்லாமல் போய்விட்டது. ஒரு திருநங்கையாக இருந்து கொண்டு ஒரு அமைப்பை நடத்துவதற்கும், சொந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அமைப்பை நடத்துவதற்காக வருடத்திற்கு இரண்டு முறை விருது விழா நடத்தி அதன் மூலம் நிதி திரட்டுவோம். அதில் கிடைக்கின்ற பணத்தை வைத்து வாடகை காட்டுவேன். என்னுடைய சம்பளத்தை வைத்து உணவு, கரண்ட் பில், அலுவலக பராமரிப்பு போன்றவற்றை செய்வேன். கொரோனாவாலும், என்னுடைய வேலை இழப்பாலும் இந்த வருடமும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறேன். வருமானமே இல்லாத சூழலில் வாடகை கூட கட்டமுடியவில்லை. அமைப்பை எப்படி அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது என்றே தெரியவில்லை.
தனிப்பட்ட முறையில் வாழ்க்கையை நடத்துவதற்காக நகைக் கடன், லோன் வாங்கியுள்ளேன். மற்றவர்களை விடவும், நாங்கள் அதிக அளவில் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு எங்கள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.
எப்படி வாழ்வது?
அபுரூபம், பூ வியாபாரம் செய்வர்
கடந்த முப்பது வருடமாக பூ வியாபாரம் செய்து வருகிறேன். கணவர் ரோட்டு ஓரமாகப் பழக்கடை வைத்துக் கொண்டிருக்கிறார். வருகின்ற வருமானத்தில் சாப்பிடுவது, வீட்டு வாடகை கட்டுவது, பிள்ளைகளுடைய படிப்பு செலவைப் பார்க்கத்தான் சரியாக இருக்கும். சொந்த பந்தத்தில் எதாவது நல்லது கெட்டது நடக்கிறது என்றால் கடன் வாங்கி தான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் சேர்த்து வைக்கவோ, நிலம் வாங்கவோ எப்படி முடியும். கஷ்டம் இல்லாமல் வாழ்ந்தால் போதும் என்று தான் நினைக்கிறோம்.
கடந்த வருடம் ஊரடங்கு கையிலிருந்த சேமிப்பைத் தீர்த்துவிட்டது. இந்த வருட ஊரடங்கு தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கடன் கொடுப்பவர்கள் கூட இப்போது யோசிக்கிறார்கள். வேலை இல்லை... வருமானம் இல்லை... இவர்களால் எப்படிப் பணத்தை கட்டமுடியும் என வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் யோசிக்கிறார்கள். இந்த ஊரடங்கில் அரசாங்கம் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயும், ரேஷன் பொருட்களும் தான் பெரும் உதவியாக இருந்தது.
கடந்த ஒருவாரமாக மீண்டும் வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறோம். ஒருநாளைக்கு 50 ரூபாய் வருமானம் வருவதே பெரிய விஷயமாக இருக்கிறது. கையில் வருமானமும் இல்லை, விலைவாசியும் ஒருபக்கம் அதிகமாகியிருக்கிறது. எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை.
கடினமான நாட்கள்
சுசீலா ஆனந்த், இடதுசாரி செயற்பாட்டாளர்
எங்கள் குடும்பத்தில், ஏழு பேரின் முழு செலவு தொகையை நானும் என்னுடைய கணவரும் பார்க்க வேண்டியுள்ளது. இருவரும் வேலைக்கு சென்று வருகிறோம். சேமிப்புகள் அற்ற ஒரு குடும்பத்தின் சூழல், மாத வருமானத்தை நம்பி எப்படி நகருமோ அத்தகைய நகர்த்துதல் தான் எங்களுடையதும்.
வீடு வாடகை, உணவு தேவை, மருத்துவ செலவு, பள்ளி கட்டணம் - இவற்றுக்கு மட்டும் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக செலவு செய்து வந்துள்ளோம். சாதாரண நாட்களில் பள்ளி கட்டணம் தான் பிற செலவுகளை விட கூடுதலாக இருக்கும். இந்த முறை நீரிழிவு பிரச்சினை உள்ள குடும்ப உறுப்பினர்கள் அதிகம் என்பதால் அவற்றுக்கான மருந்து மற்றும் மருத்துவ செலவு அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் எனது பெற்றோருக்கு மருத்துவ வசதி இருந்தும் கடினமாக நாட்களாகத்தான் இவை கடந்து கொண்டிருக்கிறது.
கீழ்தள வாடகை வீடு எங்களுடையது. சென்ற முதல் அலையின் போதே மழை நாட்களில் வீட்டுக்குள் மழை நீர் வரலாம் என்ற சூழல் இருந்தது. வேறு வீடு மாற்றிக் கொண்டு போகுமளவுக்கு உடனடியாக முன்பணம் தயார் செய்யும் நிலை இல்லாததால் இரண்டு குழந்தைகளும் நாங்களும் மழை நீரை பாத்திரங்களில் எடுத்து ஊற்றி சமாளித்தோம். வீட்டிலிருந்தே வேலைப் பார்ப்பதால், பிள்ளைகள் சீருடைகள் வாங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் தினம் உடுத்தும் துணிகள் தினசரி பயன்பாட்டில் தேயும் தானே. ஒட்டுமொத்தத்தில் பொருளாதாரத்தை நிர்வகித்தோம் என்பதை விட சமாளித்து ஒட்டினோம் என்பது தான் சரியாக இருக்க முடியும். நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை நினைவில் வைத்து, அதை பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்து எங்களால் காலத்தைக் கடத்த முடிந்தது அவ்வளவே.
ஜூலை, 2021