குழந்தைப் பேற்றிலிருந்து விடுதலை!

குழந்தைப் பேற்றிலிருந்து விடுதலை!
Published on

திராவிடர்  விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்களிடம்  பெண் விடுதலை, குழந்தைப்பேறு, வாரிசு உரிமை ஆகியவை குறித்து பெரியாரியப் பார்வையை அறிந்துகொள்ள உரையாடினோம்.

‘குடும்பம் என்ற அமைப்பு உருவான காலத்திலிருந்து தனக்கொரு சந்ததி தேவை என்கிற போக்கும் உருவாகி விட்டது.  ஆனால் மனித வரலாற்றில் ஆதிகாலத்திலிருந்து பார்த்தால் பெண்கள்தான் வழிநடத்தினர்; விரும்பியமுறையில் உறவுகள் கொண்டனர். வேட்டையாடுதல், விவசாயம் என்ற வளர்ச்சிக்கட்டத்துக்கு வருகையில் ஆண்கள் வெளியே செல்ல, பெண்கள் வீட்டைக் கவனித்துகொள்கிறார்கள்.

சொத்துடைமை தோன்றி, தந்தைவழி சமூகம் உருவாகிறது. அப்போது ஆண் தன்னுடைய சொத்து, ஆடுமாடு ஆகியவை தனக்குப் பின் தன் வாரிசுக்கு வரவேண்டுமென விரும்பினான். இந்த சொத்துடைமையுடன் வாரிசு உரிமையும் வருகிறது. இதனுடன் மத சடங்குகள் இணைகின்றன. மரணத்துக்குப் பின் வாரிசுதான் கொள்ளி வைத்து மோட்சத்துக்கு அனுப்பவேண்டும் என்பது வருகிறது.

திருமணம் என்பதே ஆண் பெண் சேர்ந்து வாழ்வதற்கான ஓர் ஏற்பாடு. அது பிறகு சந்ததிகளை உருவாக்குவதற்கான ஏற்பாடு மட்டுமே என்று மாறிவிட்டது. அதைத் தொடர்ந்து ஏழெட்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டிருப்பது வழக்கமானது. பொருளாதார நெருக்கடிகள் வரும்போது, குடும்பக்கட்டுப்பாடு தோன்றுகிறது. கல்வி பெருகப்பெருக, அதுவும் குழந்தைகள் எண்ணிக்கையை குறைக்க உதவிற்று. இரண்டு குழந்தைகள் பெறுவது, ஒரு குழந்தையானது. சீனத்தில் இருந்த கட்டுப்பாடு, இப்போதுதான் விலக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில்தான் குழந்தைப்பேறு என்பது ஒரு சமூகப் பெருமையான அடையாளம் ஆகிறது. குழந்தைப் பேறு இல்லையெனில் அதைச் சுற்றி ஒரு சமூக அவமானம்  உருவாகிறது. இந்த சமூக அவமானம் வரக்கூடாது என்பதற்காக தம்பதிகள் படாதபாடு படுகிறார்கள். தத்தம் ஆண்மையும் பெண்மையும் நிரூபிக்கப்படுவதே குழந்தைப்பேற்றில்தான் என்று ஆனபின்னால் இது ஒரு சுமையாக, அதுவும் குறிப்பாக,  பெண்கள் தலைமேல் ஏற்றப்பட்டுவிட்டது!  திருமணமே குழந்தைப்பேறுக்காக நடப்பதும், திருமணத்துக்குப் பின் குழந்தைகளுக்காகவே, பிடிக்காத திருமண பந்தத்தை, கணவன் கொடுமையை ஏற்று வாழ்வது என்கிற நிலையும் உருவானது.

இதில் கற்பு என்பதும் பெண்களுக்கு மட்டுமே உரியது என்கிற கருத்தாடலும் திணிக்கப்பட்டிருப்பது இன்னொரு விஷயம்.

இப்போது உலகம் முழுக்க பெண்களின் சுதந்தரத்துக்கு திருமணம் என்பதும் குழந்தைப்பேறு என்பது ஒரு தடையாக மாறி இருக்கிறது என்ற சிந்தனையும் ஆகவே எங்களுக்கு திருமணம் வேண்டாம் என்ற சிந்தனையும் அல்லது இந்த பந்தம் இல்லாமல் ஆண்பெண் சேர்ந்து வாழ்கிறோம் என்பதும் உருவாகி உள்ளது. இதற்கிடையில் ஓரின திருமணங்கள், சேர்ந்து வாழல் போன்றவைக்கான சட்ட த் தடைகள் நீக்கப்பட்டு அங்கீகாரங்கள் வழங்கப்படுவதையும் பார்க்கிறோம்.

குழந்தைப் பேறு என்கிற சுமை பெண்மீது சுமத்தப்படுவதால் அவர்கள் சுதந்தரம் பறிக்கப்படுகிறது. ஆகவே இதிலிருந்து பெண்கள் எப்போது விடுபடுகிறார்களோ அப்போதுதான் அவர்களுக்கு உண்மையான சுதந்தரம் கிடைக்கும் என்பது தந்தை பெரியாரின் பார்வை. ‘உனக்கு சந்ததி வளர்ச்சி அடைந்தால் என்ன வளர்ச்சி அடையாவிட்டால் என்ன? இதில் உனக்கு என்ன கவலை? உன்னுடைய சுதந்தர வாழ்க்கையைப் பற்றி நீ கவலைப்படு' என்றெல்லாம் அவர் சொன்னார்.

இன்று தமிழ்நாட்டில் பல பெண்ணியவாதிகள், பெரியாரியவாதிகள் குழந்தை வேண்டாம் என்ற ஒப்பந்ததுடன் திருமணம் செய்துகொள்ளும் போக்கு உருவாகிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எங்கள் திவிக அமைப்பிலும் நிறையபேர் இப்போது குழந்தை வேண்டாம் என்ற வாழ்க்கை ஒப்பந்தத்துக்கு வருவதைக் காண்கிறேன்.

ஆண் பெண் உறவில் குழந்தைப் பேறு இல்லாத நிலையில் அறிவியல் வளர்ச்சியால் அதை சாத்தியமாக்கும் சிகிச்சைகளை பெரியார் அறிவியல் வளர்ச்சியாகவே கருதினார். இனிவரும் உலகம் என்ற தலைப்பில் அவர் இது பற்றியெல்லாம் பேசி இருக்கிறார்.

அறிவியல் வளர்ச்சியால் விந்து வங்கிகள் உருவாகி இருக்கும் நிலையில், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த விந்து வேண்டும் என்று கேட்கும் நிலையும் மும்பை போன்ற நகரங்களில் இருப்பதாகப் படித்துள்ளேன். சாதிக்கொரு விலை உண்டாம்! பெண் சிசுக்கொலை இருந்த நிலை குறைந்து, ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என தேர்வு செய்து பெற்றுக்கொள்வதும், நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் நான் பெரியாரிய களத்தில் விடுதலை பத்திரிகையில் பணிபுரிந்தேன். எனக்கு திருமணம் செய்துகொள்ளும் முடிவே இல்லை. அத்துடன் வீட்டுக்கு வாடகை கொடுத்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து வாழும் திருமண வாழ்க்கைக்கான பொருளாதார சூழ்நிலையிலும் நான் இல்லை. எனவே இந்த திருமணம் என்னும் நிறுவனத்தில் நுழைய விருப்பம் இல்லாமல் இருந்தேன். பெண்ணுரிமைக் களத்தில் நின்ற என் துணைவியாரும் கூட இந்த முடிவில்தான் இருந்திருக்கிறார். நாங்கள் இருவரும் சந்தித்தபோது, இருவருமே திருமணம் வேண்டாம் என்ற ஒரே கருத்தில் இருப்பதை அறிந்து, நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்!(சிரிப்பு)

இதன் அர்த்தம் திருமணம் என்கிற வழமையான கட்டமைப்புக்குள் நாம் பயணம் செய்யவேண்டாம் என்பதே. நாம் நாமாகவே இருந்துகொண்டு சுதந்தர வெளியில் பயணிப்போம் என்ற புரிதல்தான் அடிப்படை. இது எனக்கு ஒரு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை. இயல்பாக இருந்தது. குழந்தைகள் பெற்று, அவர்களுக்காக வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிலை எனக்கு இல்லை. என் துணைவியார் கல்லூரி பேராசிரியையாக இருந்து சம்பாதித்தார்; அது எனக்கு ஒரு நிதிப்பாதுகாப்பையும் அளித்தது.

என் துணைவியாருக்கு என்னை விட கூடுதல் படிப்பு, கூடுதல் சம்பளம், கூடுதல் பதவி, இன்னும் சொல்லப்போனால் என்னை விட கூடுதல்  சாதி.(சிரிக்கிறார்) அவர்கள் சைவம். நானோ அசைவம். இவ்வளவெல்லாம் இருந்தும் எங்களுக்குள் முரண்பாடுகளாக அவை தோன்றவில்லை. ஏனெனில் பொதுவாழ்க்கைக்காக  ஈடுபட்டதும், பிறருக்காக நாங்கள் கொண்டிருந்த கவலையும் இவை எல்லாவற்றையும் விட பெரிய இணைப்பு சக்தியாக எங்களை ஒருங்கிணைத்தது.

எனக்கெல்லாம் குழந்தை இல்லை என்பது பற்றி ஒரு நாளும் ஒரு நொடி  கூட நான் சிந்தித்ததே இல்லை. எனக்குக் கிடைக்கும் ஆதரவும் எனக்காக வந்து நிற்பவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அளவு. என்மீது அக்கறை காட்ட, அன்பு செலுத்த ஓடிவந்து உதவ அளப்பரிய பேர் உள்ளனர். சமூகத்தின் மீது அக்கறையுடன் செயல்படுகிறோம் என்கிறபோது சமூகம் அதை  மதிக்கிறது.'

சந்திப்பு: முத்துமாறன்

மார்ச், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com