குழந்தைகளின் இனிப்பு உலகம்!

குழந்தைகளின் இனிப்பு உலகம்!

Published on

உ லகமே உடல்பருத்தவர்களின் உலகமாகிக் கொண்டிருக்கிறது. 2015 -ல் உலக சுகாதார நிறுவனம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் குண்டாக இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது. இதில் 60கோடிப்பேர் மருத்துவரீதியில் 'உடல்பருமன்' என உறுதி செய்யப்பட்டவர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

குண்டு என்பதன் அர்த்தம் சராசரிக்கும் அதிகமான எடை கொண்டவர்கள். உடல் பருமன் என்பதற்கு ரொம்ப குண்டு; ஆபத்தான அளவுக்கு உடல் எடை கொண்டவர்கள் என பொருள் கொள்ளலாம்.

இந்த தலைமுறையில்  உடல் பருமன் கொண்டவர்கள் எண்ணிக்கை இரண்டுமடங்காக அதிகரித்து இருக்கிறது என்பதுதான் இதில் உள்ள அபாயம்! இந்த உடல் எடை அதிகரிப்புக்குக் காரணியாக சொல்லப்படும் காரணம்: சர்க்கரை! அதிகப்படியாக உட்கொள்ளப்படும் சர்க்கரை. அதிகம் உடலுழைப்பு இல்லாத மகளிர் தினமும் ஐந்து தேக்கரண்டி சர்க்கரையும் அதேபோல் ஆண்கள் ஒன்பது தேக்கரண்டி சர்க்கரையும் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது! ஆனால் உண்மையில் அனைவரும் சராசரியாக 22 தேக்கரண்டி சர்க்கரை தினமும் எடுத்துக்கொள்கிறோம்! அப்புறம் உடம்பு ஏறாமல் என்ன செய்யும்?

அமெரிக்க இதயக் கழகம்,'' உணவில் சர்க்கரை அதிகரிப்பதால் உடல்பருமன் அதிகரிப்பது உலகளாவிய அளவிலான பிரச்னையாக மாறி வருகிறது. இதயநோய்க்கான காரணியாகவும் இது உள்ளது'' என்று அறிவித்திருக்கிறது.

எங்கிருந்து இந்த சர்க்கரை வருகிறது?  நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்படுத்த உணவுகள், பல்வேறுவிதமான பானங்கள், ஏன் மருந்தாக நாம் எடுத்துக்கொள்ளும் திரவங்களிலும் சர்க்கரை சேர்க்கப்பட்டு உடலில் சேர்ந்துகொண்டே இருக்கிறது.

குண்டாக இருப்பதில் என்ன பிரச்னை? இருந்துவிட்டுப் போகட்டுமே என விடமுடியாது. அதில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு அமெரிக்காவில் 1923 - ல் கட்டப்பட்ட ஒரு விளையாட்டரங்கத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக புதுப்பித்துக் கட்டினார்கள். முன்பு இருந்ததை விட 4000 இருக்கைகள் குறைவாகவே அமைக்க முடிந்தது. ஆட்கள் பருமன் அதிகரித்துவிட்டதால் இருக்கைகளின் அகலங்களையும் கூட்டியே அமைக்கவேண்டி இருந்தது.

விமானங்களின் இருக்கைகளில் இருந்து சவப்பெட்டி அளவு வரைக்கும் மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது. இதற்காக ஆகும் செலவு பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அமெரிக்காவில் மூன்று பேரில் ஒருவர் உடல் பருமன் கொண்டவராக இருக்கிறார். இதெல்லாம் கடந்த பத்தாண்டுகளில் வெளியான கணக்கீடுகள். 1970 - ல் இருந்து 2010 வரை கணக்கிட்டால் மனிதர்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு மிக அதிகரித்துவிட்டது. அதாவது 25 சதவீதம் அதிகரித்துள்ளதாம். ஒரு வேளை உணவு கூடுதலாகச் சாப்பிடுவதற்குச் சமம். இப்படி அதிகமாக உணவில் கலோரிகள் சேரச்சேர அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் உடல் பருமனால் அலறுகின்றன. மெக்ஸிகோ, ''உலகின் குண்டான குழந்தைகள் இங்குதான் இருக்கின்றன'' என்று அறிவித்திருக்கிறது. உலகின் குண்டு மனிதன் என்று பிரிட்டனை செல்லமாக அழைக்கிறார்கள். குண்டாக இருப்பது அங்கு
சாதாரண நிலை ஆகிவிட்டது என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை.

சராசரியாக தினமும் ஆறுமணி நேரம் அங்கே மக்கள் சும்மா டிவி, கணினி, செல்பேசி முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். தலைமுறை மாற மாற மனிதனின் உடல் செயல்பாடுகள் குறைகின்றன. சுவையான உணவுக்கு அதாவது சர்க்கரை சார்ந்த உணவுக்கு அவன் அடிமையாகிக்கொண்டே போகிறான். இதனால் பெருக்கும் உடலுக்குக்கும் டைப்2 நீரிழிவு நோய்க்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது.

குறைந்த வருவாய் உடைய மக்கள் பிரிவிலும் கூட குழந்தைகளுக்கு உடல்பருமன் இந்த காலகட்டத்தில் அதிகரித்திருக்கிறது. சத்தான உணவுகளுக்குப் பதிலாக மலிவாகக் கிடைக்கும் சர்க்கரை சார்ந்த, எண்ணெய், ஸ்டார்ச் சார்ந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் ஏற்பட்ட நிலை அது.

உலகெங்கும் 1990 -ல் இருந்ததை விட அறுபது சதவீதம் குழந்தைகளுக்கு உடல்பருமன் அதிகரித்துள்ளது. ஏன் குழந்தைகள்?

காரணம், உணவுப்பழக்கம் என்பது சிறுவயதில் உருவாகி வயதான பிறகும் நீடிப்பது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை தயாரித்து விற்கும் நிறுவனங்கள் சிறுவர்களைக் குறிவைக்கின்றன. தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்கள் அவர்களையே குறிவைத்து தந்திரமாக செயல்படுகின்றன. பிஸ்கட்டுகள், இனிப்புகள், வறுவல்கள், ஜாம்கள், கேக்குகள், காலை உணவுப் பண்டங்கள், ஐஸ்கிரீம், இனிப்பு சாஸ்கள், கெட்சப், தேன்& அனைத்து விளம்பரங்களும் குழந்தைகளைக் குறிவைக்கின்றன. எந்த வைட்டமினும் தாதுக்களும் இல்லாத இந்த பொருட்களை நாமும் குழந்தைகள் கேட்கிறார்களே என்று தொல்லை பொறுக்காமல் வாங்கித் தருகிறோம். அங்கே இருக்கிறது இந்த உணவுப் பொருள் நிறுவனங்களின் வெற்றி. அத்துடன் சந்தையில் மிகப்பெரிய அளவில் பணத்தை அவை கொட்டி உள்ளன. இந்தியாவில் செய்யப்பட்டுள்ள அந்நியநாட்டு முதலீட்டில் 75 சதவீதம் இந்த பதப்படுத்திய உணவுகளின் துறையில்தான் என்பது கவனிக்கவேண்டியதாகும். குழந்தைகளின் பல்
சிதைவு சாக்லேட் போன்ற இனிப்புகளால் பெருமளவு உருவாகிறது என்று நாம் அறிவோம். ஆனால் அவர்கள் அதைச் சாப்பிடுவதை நம்மால் தடுக்க இயலுமா? 

டிசம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com