கடவுள் வாழ்த்துக்கு அடுத்து நம் கல்வியின் மனப்பாடச் செய்யுளாக இருந்தது திருக்குறள். தமிழைப் பாடமாகப் பயின்ற ஒவ்வொருவரும் எல்லா வகுப்புத் தமிழ்ப்பாடத்திலும் திருக்குறளைப் பயின்று மனப்பாடம் செய்து வந்திருக்கிறோம். நவீன கவிதைத்தளத்தில் கடந்த கால்நூற்றாண்டாகச் செயல்படுகின்ற எனக்கு இவ்விலக்கியவாதிகள் தமிழ் மரபுச் செய்யுள்கள்மீது காட்டிய ஆர்வமின்மை அதிர்ச்சியாகவே இருந்தது. இன்றும்கூட தமிழில் எழுதுகின்றவர்கள் பலர்க்குப் பழந்தமிழ் இலக்கியங்கள்குறித்த மேலோட்டமான அறிவுகூட இல்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்று தெரியார்.
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் அறியார். இவர்கள் எதைப் பயின்று தமிழ் கற்றார்கள் என்று வியப்பாக இருக்கிறது.
மரபிலக்கியப் பயிற்சி பெற்றோர் இத்திரளில் இன்று தனித்துவமாய்த் தோன்றுகின்றனர். காலம் செல்லச் செல்ல இலக்கணம் அறிந்து எழுதுகின்றவர்களைக் காண்பது அரிதாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. குருட்டுப்பூனை விட்டத்தில் தாவியதைப்போன்ற மொழியில் பலர் எழுதிகொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
இத்தகைய சூழ்நிலையில்தான் திருக்குறள் போன்ற நீதிநூல்களைப்பற்றி மீண்டும் பேசுவது முக்கியமாகிறது. திருக்குறளைப் பழுதறக் கற்றதும் ஒருவர் தேர்ந்த தமிழறிஞர் ஆகிறார். தமிழின் அத்தனை மர்மங்களும் வியப்புகளும் ஒவ்வொரு குறட்பாக்களிலும் பொதிந்துள்ளன.
நாம் பொதுவாக அவனுக்கு, இவனுக்கு, ஒருவனுக்கு என்று எழுதிக்கொண்டுள்ளோம். அவன்+கு என்பது சேரும்போது என்னவாகிறது? அவனுக்கு என்று ஆகிறது. இது நம் நம்பிக்கை. எல்லாரும் அப்படித்தான் எழுதுகிறார்கள். அவன்+கு சேரும்போது அவன்+உக்கு என்று எப்படித் திரிந்தது? ஆம் திரிந்திருக்கிறது. அப்படியானால் ‘அவனுக்கு’ என்பது ஏதோ பிறழ்ந்த வழக்கு, கொச்சை வழக்கு என்பது புலனாகிறது.
அவன்+கு = அவற்கு என்றே ஆகும். திருக்குறளில் மகன்+கு = மகற்கு என்றிருக்கிறது. மகனுக்கு என்றெழுதாமல் மகற்கு என்று எழுதுகிறார் வள்ளுவர். ஒருவன்+கு என்பதை ஒருவனுக்கு என்று வள்ளுவர் எழுதவேயில்லை. ஒருவற்கு என்று எழுதுகிறார். அதாவது ன் என்று முடியும் சொல்லோடு கு சேர்த்தால் ன்+கு = ற்கு என்றே புணரும். ஆனால், இடைக்காலத்தில் தோன்றிய ஏதோ ஒரு கொச்சைத்தன்மை அவனுக்கு, இவனுக்கு, மகனுக்கு, ஒருவனுக்கு என்று எழுதும்படி திரிந்துவிட்டது.
ஆனால் திருக்குறளில் வள்ளுவர் எவ்வாறு புணர்த்தி எழுதினாரோ அவ்வழக்கு இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ளாமலேயே, நாம் எல்லாரும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். என்ன வழக்கு அது ? அதனுக்கு, இதனுக்கு, எதனுக்கு என நாம் எங்காவது எழுதுகிறோமா ? இல்லை. அதன்+கு = அதற்கு, இதன்+கு = இதற்கு, எதன்+கு = எதற்கு என்றே எழுதிக்கொண்டிருக்கிறோம். பேசிக்கொண்டிருக்கிறோம். ஆக, வள்ளுவர் பயன்படுத்திப் புணர்த்திய வழக்கு இன்றுவரையில் மாறாமல் தொடர்ந்து வருகிறது. திருக்குறள் உள்ளிட்ட நம் பழந்தமிழ் இலக்கியங்களின் மொழி இன்றுவரை நம்மோடு கொண்டுள்ள தொல்பழந்தொடர்பில் எந்தக் கண்ணியும் எங்கும் அறவில்லை என்பதே உண்மையாகும்.
திருக்குறளோடு தொடர்புடைய இயல் அதற்கு எழுதப்பட்ட உரைகளாகும். பரிமேலழகர் தொடங்கி தற்காலத் தமிழாசிரியர்கள்வரை குறள்களுக்கு எழுதப்பட்ட உரைகள் ஒவ்வொன்றும் வள்ளுவத்திற்குச் சிறப்புச் செய்தவையே. பிற்காலத்தில் செய்யப்பட்ட உரைகள் குறள்வழங்கிய கருத்துகளோடு முதன்மையாக ஒன்றிப்போகாமல் தற்குறிப்பேற்ற கருத்துகளைக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. உதாரணத்திற்கு குறளுக்கு எழுதப்பட்ட சன்மார்க்க உரையில் முதற்குறளுக்கு ‘எழுத்துகள் அகரத்தை முதலாகக் கொண்டதுபோல இவ்வுலகம் ஆதியெனும் அருட்பெருஞ்ஜோதியை முதலாகக் கொண்டது’ என்று காணப்படும். குறளுக்கு உரைவகுக்கும் நாத்திகச் சார்புடையர் வள்ளுவத்தின் தவக்கருத்துகளை வேறுவகை முனைப்பாகக் கருதி உரைகூற முற்படுவார் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
திருக்குறளின் முப்பாலும் ஒன்றுக்கொன்று தன்னிகரற்று விளங்குபவை. ‘ஈ என்று இரக்கும் எனக்கே உயிர் இற்று விழுகிறதே... அந்த இரப்பை எதிர்கொண்டும் ஈயேன் என்று செல்பவனின் உயிர் என்னவாகிறதோ...’ என்னும் பொருளில் ஒரு குறள் உண்டு. அதற்கு உரையெழுதிய கையோடு என்னால் அமர முடியவில்லை. அப்படியே எழுந்து ‘விடுவிடு’ என்று நெடுஞ்சாலையில் நடக்கத் தொடங்கினேன். என் கண்களில் கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது. இரப்பின் துயரத்தையும் ஈயாமையின் குரூரத்தையும் ஒருசேரச் சொன்ன அக்குறள் என் மனத்தில் பேரலைபோல் ஓங்கியெழுந்து ஒலித்தது. அவ்வமயம் என் எதிரே இடுப்பில் பச்சைக்குழந்தை துவள பிச்சைப்பெண் ஒருத்தி ‘பிள்ளைக்குப் பால் வாங்கனும் சாமி...’ என்று கையேந்தினாள். என்னால் பொறமுடியவில்லை. தன்னுணர்வேயில்லாமல் என் சட்டைக்குள் கைவிட்டு அகப்பட்ட நூறு ரூபாய்த்தாள்களை எல்லாம் அவளுக்குக் கொடுத்தேன். அதன்பின்புதான் ஏதோ ஓர் ஆறுதலை உணர்ந்தேன். திருக்குறளை உணர்வுபூர்வமாய் உயிர்கலக்கவிட்டால் நம் கீழ்மைகள் அனைத்தையும் அகற்றி முற்றிலும் புதிதாக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் உதாரணம்.
திருக்குறளுக்குக் காலந்தோறும் புதுமைக்குப் புதுமையாய் முன்னைப் பழைமைக்கும் பழைமையாய் உரையாத்துச் செல்ல வேண்டும். வள்ளுவர் வழங்கும் கருத்துகளின் அடியொற்றியபடி சென்று, நவீனமான தமிழுரைநடையில் திருக்குறள்களுக்கு உரையெழுதவேண்டும் என்னும் ஆசை என்னைப் பற்றியது. குறள்நிகர்த்த தமிழில் அதன் உரையும் துலங்கவேண்டும், உரையை மட்டுமே தனியாய்ப் படிக்க விரும்பினாலும் அதன் செம்மாந்த தன்மையோடு திகழ வேண்டும் என்னும் கனவுகளோடு திருக்குறளுக்கு உரையெழுதி முடித்தேன். தமிழறிஞருள் குறளறிஞராயிருத்தலின் அருமையை முழுமையாக உணர்கிறேன்.
ஜனவரி, 2015.