எக்சார்ஸிஸ்ட் என்ற கறுப்பு வெள்ளைப்படம்தான் நான் முதல்முதலில் பார்த்த பேய்ப்படம். அது ஒரு ஐம்பது ஆண்டுகள் இருக்கும். மிரட்டலாக இருந்தது. அதன் பின்னர் விட்டலாச் சார்யா எடுத்த பேய்ப்படங்களைப் பார்த்துள்ளேன்.
நானும் ஒரு பேய்ப்படம் எடுத்திருக்கிறேன். அதில் சில புதிய நடைமுறைகளைப் புகுத்தினேன். புதிய தோரணங்கள் என்பது அதன் பெயர். 1979-ல் எடுத்த படம். ஒரு கிராமத்தில் அம்மாவும் மகளும் இருப்பார்கள். மகளாக நடிகை மாதவி. அவருக்கு முதல் படம் அதுதான். அவள் ராணி என்ற பெயரில் ஒரு குதிரை வளர்ப்பாள். அந்த குதிரையை வைத்துத்தான் அவள் குடும்பம் பிழைக்கும். அந்த ஊருக்கும் பக்கத்துக்கு ஊருக்கும் இடையே பகை. ஓர் ஆறு குறுக்கே ஓடும். அடுத்த ஊரைச் சேர்ந்த சரத்பாபுவுக்கும் மாதவிக்கும் காதல் உருவாகி, ஊர் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்துகொள்ளப் போகும்போது, இவள் ஊரைச் சேர்ந்த வில்லன், இவளைக் கற்பழிக்க விரட்ட, ஊர் மக்கள் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள். அவள் மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்துவிடுகிறாள். அதன் பின்னர் அவள் பேயாக மாறி அந்த குதிரை மீது புகுந்துகொண்டு அந்த ஊரையே பழி வாங்குவாள். ஊரில் மங்கல காரியத்துக்கு மேளம் கொட்டினால், ஒரு மரம் அசையும். குதிரை சிலிர்த்து ஓடிவந்து எல்லாவற்றையும் அழித்துவிடும். யாராலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது.
இதற்கிடையில் சில சென்டிமெண்ட் காட்சிகளையும் புகுத்தி விட்டேன். வில்லன் தவறான உறவில் பெற்ற குழந்தையை ஒரு பெண் அவனிடம் சேர்க்க வருவாள். நீயே வைத்துக்கொள் என்று கொடுக்க, அவனோ எனக்கென்ன என்று செல்ல, குழந்தையின் அழுகுரல் ஒலிக்கும். அப்போது அந்த குதிரை ஓடிவந்து குழந்தையை எடுத்துச்
சென்று ஒரு குகையில் வைக்கும். குழந்தைக்குப் பால்வேண்டுமே? அந்த ஆவி ஒரு ஆட்டின் மீது புகுந்துகொள்ள, அந்த ஆடு ஓடிவந்து குழந்தைக்குப் பால் கொடுக்கும்.
இதுமட்டுமல்ல, சரத்பாபு, மாதவியின் மரணத்துக்குப் பின் துன்பத்துடன் இருப்பதைக் காணச்சகியாத மாதவியின் ஆவி, தன் தோழியின் உடலில்புகுந்து அவளை சரத்பாபுவுக்கு கல்யாணம் செய்துவைத்துவிடும். முதலிரவில் மட்டும் அவளை விட்டு விலகிச் செல்லும், அப்போதுதான் தனக்குத் திருமணம் ஆனதே தோழிக்குத் தெரியும்.
படத்தின் கடைசியில் குதிரையை கோவிலுக்குள் கட்டிவிடுவார் சரத்பாபு. ஆவி கோவிலுக்குள் வரமுடியாது. அன்று ஒரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள். ஆவி வந்து பார்த்துவிட்டு, தன் பலத்தைக் காட்ட முடிவு செய்யும். ஒரு சிற்பி அய்யனார் கோவில் குதிரை ஒன்றைச் செய்துகொண்டிருப்பார். அதில் ஆவி புக, குதிரை பறக்கும். அதை சரத்பாபு அடக்கி, ஒரு வழியாக ஆவியுடன் பேசி, சமாதானப்படுத்தி படம் முடியும்.
இந்த காட்சிகளைக் கண்ட மக்கள் ரசித்தார்கள். ஏ சென்டர்களை விட பி, சி சென்டர்களில் நன்றாக ஓடியது. 25 ஆண்டுகள் ஓடி சவுண்ட் ட்ராக் தேய்ந்துவிட்டது. அதைச் சரிசெய்ய மூன்று லட்சரூபாய் ஆகும் என்பதால் விட்டுவிட்டோம். இதை உமையாம்பிகை சுப்பிரமணியம்
செட்டியாருக்கு எடுத்துக் கொடுத்தேன். எப்போது பணம் தேவையோ அப்போதெல்லாம் புதியதோரணங்களைத் திரையிட்டால் மக்கள் வந்துப் பார்த்துச் செல்வார்கள் என்ற அளவில் அப்படம் வரவேற்பைப் பெற்றிருந்தது. பெரிய படங்கள் செய்யாத வசூலைச் செய்தபடம் அது. எனக்கு அந்தப் படத்துக்குப் பின்னால் பேய்க்கதைகளில் ஈடுபாடு இல்லை. நான் வேறுமாதிரி கதைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்.
எந்தக் கதையை எடுத்தாலும் ஓடும். ஆனால் ஜனங்க நம்பறது மாதிரி எடுக்கணும் என்று தேவர்
சொல்வார். அதுதான் உண்மை. காதல், சஸ்பென்ஸ், சோகம், வீரம், நகைச்சுவை என்கிற ஐந்து சுவைகளை ரசிக்கக்கூடிய ரசிகர்கள்தான் தமிழ்நாட்டில் இருக்காங்க. இதில் ஒரு பிரிவு ரசிகர்களைத் திருப்திப் படுத்துவதுபோல் கதை இருந்துவிட்டால்போதும் படம் ஓடிவிடும் என்பார் அவர்.
இப்போது அதே படத்தை மீண்டும் எடுக்கலாம் என்ற பேச்சு வந்தது. ஜிகர்தண்டா தயாரிப்பாளர் கதிரேசன் செய்யலாம் என்றிருக்கிறார். பார்க்கலாம்.
பிப்ரவரி, 2019.