குடும்பத்துக்காக வாழ்ந்தவர்! - சிவகுமார்

குடும்பத்துக்காக வாழ்ந்தவர்! - சிவகுமார்
Published on

விருதுநகரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். ஐயாயிரம் திருமணங்களுக்கு மேல் நடத்தி வைத்தவராம்.  அவர் மேடையில் ஏறினார். ‘வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு ரொம்ப சிம்ப்ளாக ஒரு விஷயம் சொல்றேன். நீ வந்து மோடி மாதிரி பெரிய பிரதமரா இருக்கலாம். நாட்டுக்கே பெரிய தலைவரா இருக்கலாம். உலகமே கொண்டாடலாம். ஆனால் உனக்கு அறிவே இல்லை.. சரியான வாத்துமடையன்னு மனைவி சொன்னால்.. ஆமா அப்டித்தான்னு ஒத்துக்கணும்' என்று சொன்னார். பலத்த கைத்தட்டல் விழுந்தது.

 இதுபோல கி.ஆ.பெ, விசுவநாதன் அவர்களுக்கு ஒரு இளைஞன் கடிதம் எழுதினான். ‘அய்யா, நான் திருமணம் செய்துகொண்டேன். என் மனைவியை எப்படி நடத்தவேண்டும்?‘ எனக்கேட்டு. கி.ஆ.பெ, எப்பவும் நீளமாக எழுதமாட்டார். அவனுக்கு ‘அடக்கிப்பார்‘ என்று எழுதி பதில் அனுப்பினார். ஒரு மாதம் மனைவியை தம் கட்டி அடக்கப்பார்த்தான் அந்த இளைஞன். ஒண்ணும் நடக்கல.. ‘ அய்யா.. ஒண்ணுமே முடியல.. ஒரே சண்டை வம்பா இருக்குய்யான்னு' கடிதம் போட்டான். அங்கேர்ந்து பதில் வந்தது: ‘அடங்கிப்போ!‘

என் துணைவியார் நான் திருக்குறள், மகாபாரதம் என என்ன படித்து உரை நிகழ்த்தினாலும் கண்டுக்கவே மாட்டார். கருத்தும் சொல்லமாட்டார். அதே சமயம் நான் சமையலறைக்குச் சென்று காய்கறி நறுக்க முனைந்தாலோ சாப்பிட்ட தட்டை வைக்க முயன்றாலோ, வேலையைப் பார்த்துக்கொண்டு வெளியே போங்க.. இங்கே வராதீங்க என்று

சொல்லிவிடுவார். அது அவங்க ஏரியா. நடிப்பு, திருக்குறள், மேடைப்பேச்சு என்பது என்னுடைய ஏரியா. நான் பதினைந்து வயதில் சென்னைக்கு வந்ததில் இருந்து இன்றுவரை எல்லா முடிவுகளையும் நான் தான் எடுக்கிறேன். இந்த விநாடி வரை நான் நினைப்பதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். துணைவியாரைக் கேட்டது இல்லை. அவரும் ஏன் எனக் கேட்டது இல்லை. 

சிவகுமார் தனியாளாக இருந்திருந்தால், இந்நேரம் திருவண்ணா-மலையில் தாடி வளர்த்துக்கொண்டு சாமியாராக இருந்திருப்பேன். இன்று மனைவி, குழந்தைகள், பேரன் பேத்திகள் வீடு வாசல் புகழ் எல்லாம் இருக்கிறது என்றால் இவை அனைத்தும் என் துணைவியாரால் வந்தவை. இதில் பாத்தியதை கொண்டாட எனக்கு உரிமையே கிடையாது.

 இன்றும் என் பிள்ளைகளிடம் சொல்வேன், அப்பா பரதேசியாகப் போனாலும் பரவாயில்லை. உங்க அம்மாவை நல்லா வெச்சுக்கங்கன்னு.. ஏனெனில் அந்தப் பெண்மணி இன்றுவரை குடும்பத்துக்காக வாழ்ந்தவர். இதை கொட்டை எழுத்தில் போடுங்க: சிவகுமார் மனைவி குடும்பத்துக்காக வாழ்ந்தவர்; சிவகுமார் தனக்காகவே வாழ்ந்தவர்! நாங்கள் ஒருவர் விருப்பத்தை மற்றவர் மதித்தோம்!

ஆகஸ்ட், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com