குடியேறிய இடங்கள்!

Published on

மற்றவர்களுக்கெல்லாம் ஒரு வீடு என்றால்... 2004 க்குப் பிற்பாடு எங்களுக்கு மூன்று வீடு. அந்த மூன்றும் வெவ்வேறு ரகம்.

அம்மாவிற்கான வீடு.

மாமியாரும் மருமகளும் சேர்ந்திருந்தால் மூன்றாம் உலகப்போர் வந்துவிடுமே என்கிற பொதுநல நோக்கில் மனைவிக்கான வீடு.

நண்பர்கள் கூடுவதற்கும்... சமூகப் பணிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் தோழர்களுக்கே தோழர்களுக்கான பிரத்யேகமானதொரு தனி வீடு.

ஆக... மூன்றுக்கும் வீடு தேடிப் போகையில் வெவ்வேறு வேஷங்கள் போடவேண்டி இருக்கும். கடந்த நான்கு மாதம் முன்புகூட இரண்டாவது வீட்டுக்காக மகனும் நானும் கோவை மாநகரையே சல்லடை போட்டுச் சலித்தாலும் வீடு கிடைத்த பாடில்லை. போதாக்குறைக்கு இருவரும் தாடி வேறு. சிலர் எங்கள் தோற்றத்தைக் கண்டவுடனேயே ‘‘இப்பதாங்க இன்னொருத்தருக்கு பேசி முடிச்சு அட்வான்ஸ் வாங்கினோம்...'' என்று பச்சைப் பொய் சொன்னார்கள்.

ஒரு இடத்தில்  ‘‘நீங்க பாயா?'' என்றார்கள்.

இதிலென்னங்க சந்தேகம்... நான் Boy ஆ இருந்ததுனாலதான இந்த Boy எனக்குப் பொறந்தான்... என்றேன்.

வேறொரு இடத்திலோ.. ‘‘நீங்க தமிழா...?'' என்றார்கள். அதற்காக தமிழகம் முழுக்கத் தமிழ்த் தேசியம் பூத்துக் குலுங்கி கிளை பரப்பி நிற்கிறது என்றெல்லாம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு விடாதீர்கள்.

அவர்கள் கேணத்தனமாக அப்படிக் கேட்டது நாங்கள் இசுலாமியரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். என்னமோ இங்குள்ள இசுலாமியர்களெல்லாம் அரேபிய ஷேக்கோட சித்தப்பா பசங்க மாதிரியும்... இவர்கள்தான் அய்யன் திருவள்ளுவனின் அடுத்த வாரிசுகள் என்றும் நினைத்து விட்டார்கள் போலும். எங்கும் வாய் திறக்கவில்லை நாங்கள். தாடியும் எடுக்கவில்லை. எதையும் கேட்காமல் நம்பிக் கொடுப்பவன் கொடுக்கட்டும் என்கிற எரிச்சல்தான் எங்களுள்ளே எழுந்தது. கடைசியில் ஒரு புண்ணியவான் உங்க ஆதார் கார்டு ஜெராக்ஸ் மட்டும் குடுங்க என்று சொல்லியபடி வீட்டை வாடகைக்குத் தந்தார்.

கோவையின் தேவாங்கப் பேட்டையிலுள்ள சின்னவேடம்பட்டி சந்துக்குள் அப்பாவும் அம்மாவும் குடியிருந்தபோது பகவான் அவதரிக்கவில்லை இப்பூமியில்.

அம்மா அது சொந்த வீடென்று சொல்லிக் கொண்டாலும் கிடைத்த செப்பேடுகளும் கல்வெட்டுகளும் வேறு விதமான ஆய்வுகளைச் சொல்கின்றன. எங்க தாத்தா பாட்டிக்கு அந்த சந்துக்குள் பல வீடுகள் சொந்தமென்றாலும் வேறு நல்ல குடித்தனக்காரர் வாடகைக்கு வரவில்லை என்கிற காரணத்தால் கூட அதனை தங்கள் மகளுக்குக் குடியிருக்கக் கொடுத்திருக்கலாம். (லாம் என்ன லாம்... அதேதான் காரணம்.) அந்த பத்துக்குப்  பத்து  வீட்டில்  இந்த  இளம்  தம்பதியரோடு  எனது அப்பாரும் (அப்பாவின் அப்பா ) வாசம் புரிந்திருக்கிறார்.

எட்டு மாதத்து குழந்தையாய் என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு குடிபோனது பால் மார்கெட் பக்கமிருந்த வேறொரு வீடு. அந்த வீட்டம்மா தண்ணீர்க்  குழாயைக்காட்டி வீட்டை வாடகைக்கு விட்டாலும் குடிநீர் கனெக்‌ஷனுக்கு மனு கூடப் போடவில்லை என்கிற ரகசியம் குடிபோன பின்புதான் தெரிந்திருக்கிறது. வாசலில் என்னை உட்கார வைத்துவிட்டு குடிநீர் பிடிக்கப் போகுமாம் அம்மா.

எனக்கு நினைவு தெரிந்து குடியேறிய வீடென்பது அக்ரி காலேஜ் குவார்ட்டர்ஸ்தான். நான் இயற்கையோடு கை கோர்த்துக் கழித்த காலங்கள் அவை.

வயல்வெளிகளுக்குள் புகுந்து சோளக் கதிர்களையும் பால் ஒழுகும் மக்காச் சோளங்களையும் தின்று திரிந்தது மங்கலாக இன்னும் நினைவில். வீட்டிலிருந்து அரைக் கிலோமீட்டர் தூரத்திலிருந்த அந்த இலந்தைப் பழ மரத்தின் நிழலடி எப்போதும் பிடிக்கும் எனக்கு. அந்த மரத்துக்குத்தான் பொன் வண்டுகள் ரீங்காரமிட்டு வரும். மெல்லிய இலைகளை வைத்தால் சத்தமில்லாமல் இரண்டாக வெட்டும் அதனது பச்சை வண்ணக் கழுத்துப்பகுதி. அதைவிடவும் அப்பொன் வண்டுகள் இடும் வண்ண வண்ண முட்டைகள் வெகு அழகாக இருக்கும்.

எட்டாம் தேதி ஆகியும் ஏன் வாடகை குடுக்கலை ? உங்கூட்ல ஏன் கறி சமைக்கறீங்க?ன்னு கேட்டு எந்த வீட்டுக்காரனும் வந்து நின்றதில்லை. காரணம் : அது அரசு குடியிருப்பு.

அப்போது அந்த வீட்டில் எங்களோடு எங்கள் அப்பாரும்  இருந்தார். வீட்டின் நீளமான முன் அறையின் மூலையில் தேமேன்னு தரையில் குத்த வெச்சு உட்கார்ந்திருப்பார். நானோ நீளமான தடியினை சர்ர்ர்ர்ர்ர்ரென்று தரையில் தேய்த்துக் கொண்டு போய் அவர் பட்டக்சைப் பதம் பார்ப்பேன். இது மட்டும் முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால் அவருக்கு புத்திர பாக்கியமே இல்லாது போயிருந்திருக்கும். போதாக்குறைக்கு மருமகளின் ‘பாசப்பிணைப்பு' வேறு.

அவராக இந்தப் பூமியை விட்டுக் கிளம்பினாரா? அல்லது கிளப்பப்பட்டாரா? என்கிற சந்தேகம் இன்றைக்கும் உண்டு எனக்கு. அம்மாவுக்கு அவர் போனதிலிருந்து பிடித்துக் கொண்டது  கிலி. அம்மாவுக்கு கடவுளை விடவும் பேய் பிசாசுகள் மீது நம்பிக்கை அதிகம். இறந்து போன அப்பாரு ஆவியாய் அலையக்கூடும் என்கிற பீதியில் அம்மா பேதியாக... நாங்கள் அடுத்துக் குடியேறிய இடம் தான் 131 மெக்ரிகர் சாலை.

அது கோவையிலுள்ள பூ மார்கெட் பக்கமிருந்தது. அந்த வீட்டில்தான் அம்மா தேங்காய்களை தன் தாய் வீட்டு சீதனமாய் எடுத்து வந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு விற்று உண்டியலில் போட்டு வைக்கும். ஆனால் அந்த உண்டியல் என்றும் நிரம்பியதேயில்லை. அப்பா சிகரெட் வாங்குவதற்காக உண்டியலை தலைகீழாய்க் கவிழ்த்தி ஒரு ஆட்டு ஆட்டுவார். அவர் நகர்ந்த பிற்பாடு எனது முறை. அது மிட்டாய் வாங்குவதற்காக.

அந்த வீட்டுக்காரர் எந்தத் தொந்தரவும் தந்ததில்லை. ஆனால் போக்கியப் பணத்தை திருப்பித் தந்துவிட்டபடியால் எதிரில் இருந்த ஓட்டுவீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். இந்த வீட்டிற்குக் கண்டம் எனது வடிவில் வந்தது. பக்கத்து வீட்டுப் பெண்ணை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி எதிர்வீட்டு மகேந்திரனுக்கும் எனக்கும். பொறுப்பாக குரூப் ஸ்டடி செய்து கொண்டிருக்கிறார்கள் இருவரும் என எங்கள் வீட்டார் நினைத்தால்... நாங்களோ, 

‘மணமகன் மகேந்திரன் / மணமகள் சந்திரலேகா' என்று அவனும், ‘மணமகன்  எழில் / மணமகள் சந்திரலேகா'  என்று நானும் மாற்றி மாற்றி எழுதி கடுப்பேத்திக் கொண்டோம். இத்தனைக்கும் நாங்க ஏழாம் கிளாஸ்தான். நாமதான் கில்லாடியாயிற்றே... நோட்டுல என்னடா எழுதறது? பத்திரிக்கையாவே டைப் அடிச்சு கொண்டு வர்றேன் பார் என்று வேறு நண்பனிடம் எழுதிக் கொடுத்து அனுப்பினால் அவனோ அதை வைத்து பிளாக் மெயில் பண்ண ஆரம்பித்துவிட்டான்.

‘‘பொடி மசுரு.... உனக்கு அதுக் குள்ள கல்யாணப் பத்திரிக்கை கேக்குதோ?'' என்று எனது அம்மா வெளுவெளு என்று வெளுத்தது. இது யாருக்காவது தெரிந்தால் பிரச்சனையாகி விடுமே என்ற பயத்தில் வேறு வீடு மாறினோம். அதுதான் 586 திவான் பகதூர் சாலை.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அங்குதான் குடியிருந்தோம். நான் சிறுவனாக இருந்து இளைஞனானது... ‘‘பொறுப்பான'' ‘‘குடும்ப''த் ‘‘தலைவ''னானது...  தந்தையானது...  நேசமிகு தந்தையை இழந்தது... எல்லாமே இந்த வீட்டில்தான். கல்லூரி கலாட்டாக்களில் இருந்து ஈழ விடுதலைப் போராளிகள் உரிமையோடு வந்து தங்கிச் சென்றது வரை எல்லாமே நிகழ்ந்தது இந்த 586 திவான் பகதூர் சாலையில்தான்.

அந்த 586 திவான் பகதூர் சாலை வீட்டின் முன்புறமோ ஒரு தண்ணீர்த் தொட்டி இருக்கும். அதைச் சுற்றி சேர்களைப் போட்டு அமர்ந்திருப்போம். சில நண்பர்கள் தொட்டிக்கு மேல் இருக்கும் காம்பவுண்ட் சுவர் மீது அமர்ந்து இருப்பார்கள். கை தட்டினால் எதிரில் உள்ள டீக்கடையில் இருந்து டீ வரும்.  டீயும் சிகரெட்டுமாய் கழியும் எங்கள் மாலைப் பொழுதுகள்.

அந்த வீட்டின் உரிமையாளனுக்கு எங்களைப் போன்ற பராரிகளையெல்லாம் துரத்திவிட்டு அந்த இடத்தில் ஒரு காம்ப்ளக்ஸ் கட்ட வேண்டும் என ஆசை வர... ஆரம்பித்தது காலி செய்யச் சொல்லி நெருக்கும் படலம்.

‘‘முப்பது வருசத்துக்கு மேல குடியிருந்திருக்கீங்க. அஞ்சு லட்சமோ பத்து லட்சமோ கேளுங்க... குடுக்கலீன்னா கேசைப் போட்டர்லாம்...'' என்றார்கள் சில பேர்.

இந்தச் செய்தி வீட்டு உரிமையாளனுக்கு எப்படியோ எட்ட... திடீரென பாசப்பிணைப்போடு வந்தார் அவரது மகன். ‘‘அண்ணா உங்குளுக்கு என்ன வேணும் சொல்லுங்கண்ணா... நான் பார்த்துப் பண்றேன்...'' என்றார் அந்த இளைஞன். அவன் கண்களில் காம்ப்ளக்ஸ் கனவில் மண் விழுந்துவிடுமோ என்கிற பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. எனக்கு சிரிப்பு வந்தது.

ஒரு சின்ன கேசைத் தட்டிவிட்டால் முப்பதென்ன அறுபது வருடமானாலும் காலி செய்ய வைக்க முடியாது என்கிற எதார்த்தம் தெரியும் எனக்கு.

ஆனால் நான் சிறுவனாக இந்த வீட்டில் நுழைந்து இன்று என் மகன் வாலிபனாக வந்து நிற்கும் இத்தனை ஆண்டுகளில் எத்தனை நினைவு களைச் சுமந்திருக்கும் இந்த வீடு? அதை எத்தனை கோடி கொடுத் தால்தான் தீர்த்துவிட முடியும் அந்தப் பணக்காரனால்?

அப்பாவின் நண்பர்கள்... எனது பள்ளி கல்லூரி நண்பர்கள்... இயக்கங்களின் தோழர்கள்... ஈழத்தின் நேசமிகு போராளிகள்... மகனது விளையாட்டுத் தோழர்கள்... ஊடக நண்பர்கள் என எண்ணற்றோர் வந்து சென்ற அந்த வீட்டுக்கு ஈடாக எத்தனையெத்தனை கொடுத்துத்தான் தீர்க்க முடியும்? நியாயமாகப் பார்த்தால் நாங்களல்லவா அந்த மனிதனுக்கு ஏதாவது கொடுத்துவிட்டு வரவேண்டும்.

வேண்டாத பொருட்களையெல்லாம் காம்பவுண்ட் சுவருக்கு வெளியே போட்டு எரித்துவிட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்த நினைவுகளைச் சேகரித்து மனதின் அடுக்குகளில் பத்திரமாய் வைத்தபடி பொருட்களை ஏற்றியிருந்த லாரியில் ஏறினோம் தோழர்களும் நானும். 

டிரைவர் வண்டியைக் கிளப்ப... ‘‘பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை... மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை..'' என்கிற பாடல் ஒலிக்கத் துவங்கியது லாரியில்.

மே, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com