அதே வேட்டிசட்டை, ஒரு தோள்பை.. குனிந்தநடை.. நம் தோளில் கைபோடும் வாஞ்சை.. உங்கள் மனம் நினைக்கும் அதேஉருவம்தான் நம் தமிழ் சினிமா காட்டும் தமிழ் ஆசிரியரின் தோற்றம்.. இதை யாரும் மறுக்கமாட்டார்கள். இதேசாயலில் தமிழ் ஆசிரியர் கீழடி பாலசுப்பிரமணியம் நம்மை வரவேற்றார். கீழடி என்ற ஊர் பெயரைக் கேட்டதும் பொறி தட்டுகிறதா? ஆமாம் வைகை நதியின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பழந்தமிழர் நகரம் இந்த கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பின் கீழ்தான் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ்ஆசிரியரான பாலசுப்ரமணியன் தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டுபாடப்பிரிவிலும் முதுகலைப் பட்டம்பெற்றவர். இன்றைக்கு கீழடி நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டதன் தொடக்கப்புள்ளி இந்த தமிழாசிரியர்தான்.
சமீபத்தில் பேராசிரியர் தொ.பரமசிவன் வீட்டில் அமர்ந்திருந்தேன். அவரைக் காண நான் மேற்சொன்ன தோற்றத்தில் வந்தார் தமிழாசிரியர். வாங்க.. வாங்க என்று மகிழ்வு பொங்க வரவேற்ற தொ.ப. கீழடி ஆய்வுக்கே இவர்தானே காரணம் என்று மகிழ்வுடன் சொன்னார். எனக்கு அப்போது புரியவில்லை. தமிழாசிரியர் சென்றபிறகு தொ.ப.விடம் கேட்டபோது பாலசுப்ரமணியனின் பங்களிப்பு பற்றிக் கூறினார். அதன் பின்னர் பாலசுப்ரமணியனை அந்திமழைக்காக சந்தித்தேன்.
“எங்கு வேலை செய்தாலும் மாணவர்களுக்கு வட்டாரச்சொற்கள், நாட்டுப்புறப்பாடல்கள் சொற்களின் வரலாறு போன்றவைகளையும் அடையாளப்படுத்தி பாடம் எடுப்பது என் வழக்கம். இதுமட்டுமின்றி மாணவர்களிடம் உங்கள் ஊரில் ஏதாவது சிலைகள், கல்வெட்டுகள், சிதைந்த கோயில்கள், பெரியசெங்கல்கள் போன்றவைகள் எங்கேயாவதுபார்த்தால் உடனே சொல்லுங்கள் என்று ஒவ்வொரு பணிமாறுதலின் போதும் பள்ளிமாணவர்களுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருப்பேன்.
இந்நிலையில் 1973-ல் கீழடி கிராமத்தில் பணியில் இருந்தபோது ஒரு மாணவன் உடைந்த ஓட்டைக் கொண்டுவந்துகொடுத்தான். அதைப் பார்த்த மாத்திரத்தில் அது கிடைத்த இடத்திற்குச் சென்றேன்;. அங்கே கிணறுவெட்டுவதற்காக குழி தோண்டியிருந்தனர். அதன் அருகிலேயே உடைந்த ஓடுகள், பெரிய சுட்ட செங்கல்கள், முதுமக்கள்தாழி, மண்ணால் செய்யப்பட்ட சுட்டசிலைகள் போன்றவை அங்கே சிதறிகிடந்தன. அதைபள்ளிக்குக் கொண்டுவந்து அதை மாணவர்களின் பார்வைக்கு வைத்து காட்சிப்படுத்தி விளக்கினேன். அப்போது அவை தொல்லியல் பொருட்கள் என்று தெரிந்திருந்தாலும் அதன் காலப்பெருமை பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை. பின்னாளில் நாங்கள் கண்டெடுத்த பொருள்களில் ஒன்றான செங்கற்களின் அமைப்பை வைத்து தொல்லியல் துறையினர் ஆய்வுசெய்தபோது நம் அனைவராலும் திராவிடநாகரிகமாககருதப்படும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையானது நமதுதமிழ் சமூக நாகரீகம் என்பது வெளிப்பட்டிருப்பது பெரும் வரலாற்று பாய்ச்சலே.
சில ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடந்த பயிற்சிவகுப்பு பற்றி கேள்விப் பட்டு அப்பயிற்சியில் சேர்ந்தேன். அவ்வகுப்பில் தமிழ்நாட்டின் முக்கியமானஆளுமைகள் அப்போது பயின்றனர். அவர்களில் வரலாற்றுஆய்வாளர் தொ.பரமசிவன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் மற்றும் விமர்சகர் அ.ராமசாமி, பேராசிரியர் குணசேகரன், தமிழ்அறிஞர் தமிழண்ணல் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். அப்பயிற்சி வகுப்பில் நான் கண்டெடுத்த தொல்லியல் பொருட்களைக் காட்சிப்படுத்தினேன். எல்லோரும் ஆர்வமுடன் கண்டனர். அப்போது இருந்தே எனக்கு கீழடி பாலசுப்பிரமணியம் என்றே பெயர் வந்துவிட்டது” என்று தமிழாசிரியர் மென்மையான குரலில் பேசினார்.
இவர் தன் ஆர்வத்தின் காரணமாக மேலும் பல கல்வெட்டுகள் மற்றும் கோயில் கற்சிலைகள் போன்றவைகளைக் கண்டெடுத்தார் .முக்கியமாக கீழடி அருகில் உள்ள கொந்தகை என்ற ஊரின் பழையபெயர் குந்திதேவி சதுர்வேதமங்கலம் என்பதை கண்டறிந்தார். அங்குள்ள சிவன்கோவிலில் உள்ள கல்வெட்டில் இதைக் கண்டறிந்தார்.
தொடர்ந்து 1978-ல்திருப்புவனம் அருகே பொதுப்பணித்துறையினர் ஒருவேலைக்காகத் தோண்டும் போது வரலாற்று அறியாமையினால் கைவிடப்பட்ட 5 அடி புத்தர் சிலையைப் பற்றி அவருடைய மாணவர் ஒருவர் மூலம் அறிந்தார். உடனே தொல்லியல் துறையுடன் இணைந்து புத்தர் சிலையை மீட்டு மதுரை நாயக்கர் மகாலில் ஒப்படைத்தார்.
அதேபோல் சுமார் மூன்று அடிக்கு மேல் உயரம் உள்ள சமணதீர்த்தங்கரர் சிலை அகரம் மாறநாடு மற்றும் மல்லாக்கோட்டைபோன்ற கிராமங்களில் உள்ளதைக் கண்டறிந்தார். ஆனால் அப்பகுதிமக்கள் அச்சிலையை முனியாண்டி சாமியாக வழிப்பட்டுவந்தனர். சமணதீர்த்தங்கரர் சிலைக்கான அடையாளமாக சிலையின்பின் கழுத்துப்பகுதியில் பாண்டியன் முத்திரை (செண்டு) பொறிக்கப்பட்டு இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் முனியாண்டியாக வழிபடும்
சிலைகள் அனைத்துமே சமணர்கள்தான் என்பது அவரது அபிப்பிராயம்.
தொடர்ச்சியாக மல்லல் என்ற கிராமத்தில் நடுகல் ஒன்றையும் தனது தொல்லியல் துறை நண்பர் சந்திரமூர்த்தியுடன் இணைந்து கண்டெடுத்தார். இந்நடுகல் ஒருவன் தன் கழுத்தில் தானே வாளை வைத்து வெட்டுவது போன்ற தோற்றத்தைஉடையது.
37 ஆண்டு ஆசிரியப் பணியிலிருந்து ஒய்வுபெற்றாலும் ஓய்வுக்கு பின்னான 25 ஆண்டுகால இடைவெளியில் தொல்லியல் துறைக்கும் இவருக்குமான தொடர்பு வெறும் கடிதங்கள் மட்டுமே. கீழடி பற்றி தொடர்ந்து பேசிவந்தார்.
இதன் பின்னணியில் கடந்த 2014ல் மத்திய தொல்லியல் துறையில் வைகை கரை நாகரீகம் என்ற ஆய்வுத்திட்டம் ஒன்று உருவானது. இத்திட்டம் வருசநாடு முதல் அழகன்குளம் ஆற்றங்கரைவரை ஆய்வு செய்வதாக இருந்தது. இத்திட்டத்தில் இந்தியதொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் தலைமைவகித்தார். அப்போது தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒய்வுபெற்ற அதிகாரி வேதாசலம் என்பவர் அவரிடம் கீழடிபாலசுப்பிரமணியம் பற்றி கூறியிருக்கிறார். அதில் குறிப்பாக கீழடியில் 1973ல் கண்டெடுக்கப்பட்டதொல்லியல் பொருட்களை பொதுமக்கள் மத்தியில் தமிழாசிரியர் காட்சிப்படுத்தியதைப் பற்றி எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொல்லியல் பொருள்களை பார்வையிட்ட கண்காணிப்பாளர் குறிப்பாக செங்கற்களின் அமைப்பைப் பார்த்தவுடன் அவைகள் கி.மு.3ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறியதும் பிறகு நடந்திருப்பதும் நாம் அறிந்ததே.
அகழாய்வுசெய்யப்பட்ட இடங்களிலிருந்து தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு நிறங்களிலான சுட்டமண் ஓடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மண்ஓடுகளில் திசன், ஆதன், உதிரன், இறவாதவன் போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ஏராளமான அரிய பொருட்கள் கிடைத்தன. தொட்டிகள், கழிவுநீர்க் குழாய்கள் - வாய்க்கால் போன்றவைகள் கிடைத்திருக்கின்றன.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தமிழாசிரியரின் சொந்த ஆர்வத்தால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலன் இது. தமிழரின் வரலாற்றுப் பெருமைக்கான ஆதாரமாக கண்முன்னே எழுந்து நிற்கிறது ஒரு நகரம்.
செப்டெம்பர், 2016.