கிழக்காசியா: செந்நீரும் ரப்பர்பாலும்

கிழக்காசியா: செந்நீரும் ரப்பர்பாலும்
Published on

இரு நூறாண்டுக்கால இந்தியவிடுதலைப் போராட்டத்தின் வேர்களில் உயிரிழைகளாய் பல்வேறு இயக்கங்கள் பரவி நின்றன. இந்தியாவிற்குப் பரிபூரண விடுதலையைப் பெற்றுத் தருவதற்காகப் பெரும் தியாக வரலாறு  கொண்ட அம்மகத்தான இயக்கங்களின் மகத்தானது  இந்திய தேசிய இராணுவம் (INA - Indian National Army).  

ஐ.என்.ஏ. குறித்த பார்வை இந்தியாவிலும் சர்வத்தேசத் திலும் எப்போதும் ஒன்று போல இருந்ததில்லை என்பதே உண்மை.  ஐ.என்.ஏ. ஒரு தீவிரவாத இயக்கம் என்று ஒரே வீச்சில் புறந்தள்ளுபவர்கள் உண்டு. ஜெர்மனி-இத்தாலி-ஜப்பான் ஆகிய நாடுகளின் நிழலில் தழைத்த இயக்கம் என  அடையாளப் படுத்துபவர்களும் உண்டு. இந்தியாவின் பெருமைமிக்கத் தேசியத்தலைவர்களுள் தனிப்பெரும் இடம் வகிக்கும் நேதாஜியின்  இயக்கமாகப் போற்றி வணங்குபவர்களும் உண்டு. இவ்வாறு வெவ்வேறு கோணத்தினை அவரவரின் பார்வைக்கு ஏற்பத் தரும் ஐ.என்.ஏ தோன்றி வளர்ந்து, அது சந்தித்த நிகழ்வுகள் என்பதே தனி வரலாறு தான்.

ஜப்பானில் வாழ்ந்த விடுதலைப்போராளி ராஷ் பிகாரி போஸிடம் இருந்து பெற்ற இயக்கம் என்றாலும், அதை முழுமையான இயக்கமாக-இராணுவமாக-அரசாங் கமாகக் கட்டமைத்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

முதல் சுதந்திர இந்திய அரசாங்கமாகச் செயல்பட்ட ஐ.என்.ஏ பற்றி ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்வது அவசியமாகும். ‘ஆசாத் ஹிந்த் பௌஜ்’ என்றழைக்கப்பட்ட நேதாஜியின் இந்திய சுதந்திர அரசாங்கத்தின் வரலாற்றை வாசித்தால் தான், அது எத்தகைய மாண்புகளின் மீது கட்டப்பட்ட ஒப்பற்ற அரசாகத் திகழ்ந்தது என்று அறியமுடியும்.

முதலாவதாக, தன் சுதந்திர இந்திய அரசாங்கத்தின் செலவினங்களுக்காக நேதாஜி, ஜெர்மனியையோ, இத்தாலியையோ சார்ந்திருக்கவில்லை. அவர் ஐ.என்.ஏ பொறுப்பை ஏற்று நடத்தியது, அச்சுநாடுகளின் ஆதரவை நம்பி அன்று; மாறாக, கிழக்காசியா முழுக்க வாழ்ந்த இலட்சக்கணக்கான இந்தியர்களின் ஆதரவையும் நேசத்தையும் கருத்தில் கொண்டே அவர் தன் இயக்கத்தை வழிநடத்தினார். சிங்கப்பூரிலும் மலாயாவிலும் வாழ்ந்த இந்தியர்கள், (குறிப்பாகத் தமிழர்கள்) நேதாஜியிடம் தங்கள் உடல்-பொருள்-ஆவி ஆகிய மூன்றையும் தானமாகத் தந்தனர்.

இரண்டாவதாக, ஐ.என்.ஏ. இராணுவத்தின் ஒவ்வொரு அசைவையும் நேதாஜி சுதந்திரமாகத் தானே தீர்மானித்தார். இந்தியத் தேசிய இராணுவத்தின் வடிவமைப்பிலும், படைப்பிரிவுகளை வகுப்பதிலும் அவர் எவருடைய நிபந்தனையையும் ஏற்கவில்லை. இதனால் ஜப்பானிய இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளிடம் அவர் அடிக்கடி முரண்பட நேரிட்டது. குறிப்பாக, பெண்களை இராணுவத்தில் இணைத்து ஜான்சிராணி ரெஜிமெண்ட் என்ற தனிப்பிரிவை நேதாஜி ஏற்படுத்தியதை ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் நேதாஜி அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஜான்சி ராணி படைப்பிரிவை அமைத்தார். உலகிலேயே பெண்களை முதன்முதலாகக் கொண்ட இராணுவ அமைப்பு என்ற பெருமை ஐ. என்.ஏ-வையே சாரும்.     

மூன்றாவதாக, தங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நிதியுதவி செய்வதை நேதாஜியின் சுதந்தர இந்திய அரசாங்கம் வழக்கமாகக் கொண்டிருந்தது. விடுதலையைத் தேடி ஓடும் எந்த ஒரு இயக்கமும் தனக்குக் கிடைக்கும் நிதியைச் சொந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதைத் தான் அது வரை வரலாறு கண்டிருக்கின்றது. ஐ.என்.ஏ-வின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்காக 1944 மார்ச் மாதத்தில் தாய்லாந்து அரசிற்கு நேதாஜி 1,00,000 பாக்ட்டுகள் (தாய்லாந்து பணம்) பணத்தினை அவர்கள் கேட்காமலேயே செலுத்தினார்.  

ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டுப் போரில் சரணடைந்த செய்தி வந்த போது, இந்திய-பர்மிய எல்லையில் ஐ.என்.ஏ-வும், ஜப்பானிய இராணுவமும் இணைந்து பிரிட்டிஷ் படைகளுடன் உக்கிரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் ஜப்பானின் சரணாகதியினால் படைகள் பின்வாங்கும் சூழ்நிலை ஏற்பட்ட போது, நேதாஜி ஐ.என்.ஏ-வை நிர்க்கதியாக விட்டு மாயமாகி விடவில்லை. மாறாக, ஜான்சிராணி படையிலிருந்த பெண்கள் மற்றும் வீரர்களை அழைத்துக் கொண்டு பர்மா முதல் பாங்காக் வரை ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் ஊண், உறக்கமின்றி அவர் செய்த நடைப்பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

ஐ.என்.ஏ படைப்பிரிவைப் பற்றி பெரிய நம்பிக்கையோ ஈர்ப்போ ஜப்பானியர்களுக்குத் தொடக்ககாலத்தில் இல்லை. ஏனென்றால் ஐ.என்.ஏ வீரர்களில் அதிகமானவர்கள் சாதாரண மக்களாவர். அன்றாடக்கூலிப் பணி செய்யும் பலர் அதில் அங்கம் வகித்தனர். ரப்பர்க்காட்டில் பால் வடிக்கும் தொழிலாளர்களும்,பெண்களும் அப்படையில் வீரர்களாகப் பங்கேற்றிருந்தனர்.

ஜப்பானியர்கள் பெருமுழக்கம் இடுவதை விட, பன்மடங்கு வலிமையோடு ‘ஜெய்ஹிந்த்’ என்று வீரமுழக்கம் இட்டபடி பிரிட்டிஷ் படைகளை நாசம் செய்த ஐ.என்.ஏ படைவீரர்களின் துணிச்சல் ஜப்பானியர்களுக்குப் பெருவியப்பினை ஊட்டியது. வயிற்றில் கோரமான பசியை வைத்துக் கொண்டு தாய்நாட்டின் விடுதலைக்காகப் போரிடும் அம்மறவர்கள், இந்தியர்கள் குறித்த ஒட்டுமொத்தக் கருத்தையும் மாற்றியமைத்தனர். தாயகவிடுதலைக்காகத் தங்களின் கருங்கூந்தலை வெட்டியெறிந்து விட்டுப் போர்க்களத்தில் சுழன்ற மாதரசிகளை அதற்கு முன் எவருமே கேள்வியுற்றதில்லை. பால்மணம் மாறாப் பச்சிளம் சிறுவர்கள், ‘வந்தேமாதரம்’ என சங்கநாதமிட்டுத் தெருக்களில் அணிவகுத்ததை (பாலசேனா) எவரும் கண்டதில்லை. எல்லாச் சாதனைகளின் தொடக்கமும், ஐ.என்.ஏ தான்.

தங்களின் உயிரைக்கொண்டு ஐ.என்.ஏவில் பங்கு வகித்த கிழக்காசிய இந்தியர்கள் (குறிப்பாகத் தமிழர்கள்) எழுதிய இந்த வீரவரலாற்றுக்குப் பிரதிபலனாக எதையுமே இந்தியாவிடமிருந்து திரும்பப் பெற்றதில்லை. அந்த மெய்யான தேசபக்தர்களில் பலர், தங்களின் மூதாதையர்களின் தாய்நாட்டு விடுதலையில் ஒரு துளியாகப் பங்கேற்று மறைந்தனர். எஞ்சியவர்கள் தங்களின் ரப்பர்த்தோட்டங்களுக்குத் திரும்பினர், மலைமுகடுகளில் செந்நீர் வடித்த அம்மக்கள் மீண்டும் தொடங்கினர், பால் வடிக்க!

ஆகஸ்ட், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com