கிளைகளில் அமரும் பெருங்கால் பறவை

முதல் புத்தகம்
கிளைகளில் அமரும் பெருங்கால் பறவை
Published on

மீட்சி சிற்றிதழில்தான் என்னுடைய ஆரம்பகால கதைகள் வெளிவந்தன.  மீட்சி இதழ் பெரும் கலை இலக்கிய இயக்கமாக விசைகொண்டு இயங்கிய காலத்தில் பிரம்மராஜன் என் முதல் தொகுதியில் வெளியான பல கதைகளை வெளியிட்டார். அந்த சமயத்தில் முனியாண்டியின் கதைகள் வருகின்றன. பாதசாரியின் படைப்புகளும் நாகார்ஜுனனின் கட்டுரைகள் வருகின்றன. சுகுமாரனின் கோடைகால குறிப்புகள் வருகிறது. மார்க்சிய அழகியல் விமர்சனத்துக்கான ஒரு முன்னுரை என்கிற மலையாளக்கவிஞர் சச்சிதானந்தனின் கட்டுரை மொழிபெயர்ப்பாகி மீட்சியில் வருகிறது.  ஆர்.சிவகுமார் தொகுத்த லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் வருகிறது. இப்பத்திரிகை தமிழ்ச் சிறுகதையின் போக்கை எதார்த்தவாதத்தில் இருந்து மாய எதார்த்தவெளிக்கும் அஎதார்த்தவெளிக்கும் கொண்டு சென்றது. அதிலிருந்தே உருவானவர்கள் நாங்கள். இப்போது காலதூரத்தில் படைப்பாளிகளுக்குள் சில வேறுபாடுகள் உருவாகியிருந்தாலும் வெவ்வேறு முனைகளில் இருந்தாலும் மீட்சி காலகட்டத்தின் உயிர்ப்போக்கையும் சுழற்சியையும் புதிய வெளியைச் சுட்டும் சாளரத்தை திறப்பதற்கான விசைகளை மீட்சியும் பிரம்மராஜனும் செய்தார்கள் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மீட்சி இதழ் குழு ஊட்டியில் இயங்கியது. அங்கு வெவ்வேறு துருவங்களில் இருந்து பலபறவைகள் வருவதும் போவதுமாக இருந்தன. அந்த காலகட்டத்தில் ஆத்மாநாமுடன் பிரம்மராஜன் நடத்திய உரையாடல் நூல் வடிவில் வந்திருக்கிறது. அதில் ஆதிமூலம் வரைந்த ஆத்மாநாம் ஓவியம் இன்று ஞாபகத்தில் தெரிகிறது. கவிஞர்களோடு ஊட்டியில் நடந்த உரையாடல்களோடு பனிப்படலத்தில் மறைந்திருக்கும் சீன  உணவகத்தில் முள்கரண்டிகளின் ஒலிகளோடு விவாதம் மும்முரமடைந்திருக்கும்.. குன்னூர் ரோட்டில் இருந்த அவரது ‘பரண்வியூ’ இல்லத்தில் உலகின் அத்தனை இசைத்தட்டுகளை  ஒளித்துவைத்திருந்தது பிரம்மராஜனின் நூலகம். நான் போன இரவில் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனி கருப்பு இசைத் தட்டை உயர்த்திக்காட்டி தானியங்கி பிளேயரில் ஓடவிட்டார்.  அங்கிருந்தே பீத்தோவனின் கிரைசர் சொனாட்டா, டால்ஸ்டாயின் குறுநாவலாக இருப்பதையும் புரிந்துகொண்டேன். 

சட்டையின் உள்பாக்கெட்டிலிருந்து கார்லோஸ் புயண்டசின் Burnt water நூலை  எடுத்துக்காட்டி  ஔரா கதையை வாசித்துக்காட்டினார். உலகின் சிறந்த  ஒயின் வகைகளை சடங்காக அருந்துவதையும் உரையாடலாகவும் அவரிடமிருந்துதான் கற்றேன். அவருக்கு அடுத்து விக்கிரமாதித்தன்  நகுலனைப் பார்க்க திருவனந்தபுரம் கூட்டிச் சென்றார். ‘நகுலன் இறந்துவிட்டபின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது’ சிறுகதையில் இப்போதும் பிஜாய்சை ருசித்து அருந்திக்கொண்டுதான் இருக்கிறார்.

நீலகிரியின் பல பள்ளத்தாக்குகளில் இன்று மறைந்துபோன பல ஓடைகளில் ஏதோ ஒன்றில் நானும் பிரம்மராஜனும் அமர்ந்து அதன்  ஒலியைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம். நூற்றுக்கு மேற்பட்ட நீரோடைகள் உலர்ந்துவிட்டதாக கவிஞர் நக்கீரன் சமீபத்தில் பேசியதாக ஞாபகம். இசை கேட்பது, கவிதை பற்றி உரையாடுவது, சிறுபத்திரிகை நடத்துவது என நிகழ்ந்த ஓர் இயக்கம் மீட்சி. அதுபோல் ஒன்று அந்த அளவுக்கு இன்று கிடையாது என்றாலும் சிலேட், புதுஎழுத்து, கல்குதிரை, கொம்பு, மணல்வீடு, அடவி, படிகம் வரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழிலக்கியத்தில் நாம் காத்திருக்கவேண்டிய ஓர் அபூர்வமான பொற்காலமாக மீட்சியின் காலத்தைச் சொல்லலாம். அதிலிருந்துதான் மதினிமார்கள் அந்த மலைகளிலிருந்து காடுகளிலிருந்து இறங்கிவருகிறார்கள், மாயாண்டிக்கொத்தனின் ரசமட்டம், ஈஸ்வரியக்காளின் பாட்டு, மிச்சமிருக்கும் விஸ்கியோடு பாடிக்கொண்டிரு, கழுதை வியாபாரிகள் கதை  ஆகியவை மீட்சியில் பிரசுரம் ஆகின. அதில் ஏதோ யதார்த்தம் தாண்டிய கூறுகள் இருப்பதை பிரம்மராஜன் அன்றே தொலைநோக்காக முன்னுணர்ந்து கண்டுபிடித்ததன்  வரலாற்று உள்ளுமைதான் நான் நாகார்ஜுனனை கண்டதும், நகுலனை நோக்கி திரும்பியதும். இதற்கு கலாப்ரியாவும் பிரம்மராஜனும் இணைந்து நடத்திய குற்றாலம் கவிதைப் பட்டறைகள் தொடக்கமாக அமைந்தன. அதேவேளையில் கணையாழி, விழிகள், நிகழ், செம்மலர், தாமரை போன்றவற்றிலும் முதல் சிறுகதைத்தொகுப்புக்கான கதைகள் வெளிவந்தன. நாகார்ஜுனன் மொழிபெயர்த்த சக்மூல் என்ற கார்லோஸ் புயண்டசின் கதை மிக முக்கியமானது.

எரிமலையில் இருந்து கிளர்ந்த, எரிந்த தண்ணீரின் சாம்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அஸ்டெக்ஸ் கடவுளான சக்மூலின் சிலை என்னை சுழற்றித் தூக்கி எறிந்தது. அந்த சக்மூலின் கதையிலிருந்துதான் நான் உருவானேன். மார்க்வெசைவிட போர்ஹேவைவிட கார்லோஸ் புயண்டசின் இந்த சிறுகதையும் ஔரா குறுநாவலும் என்னை வியாபித்து உருமாற்றத்துக்கு உள்ளாக்கின. ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்த கெமிலோ டாரஸ் ரோசாவின் ‘நதியின் மூன்றாவது கரை’யும் மிக முக்கியமானது. பிரம்மராஜன் மொழிபெயர்த்த மார்க்வெசின் “மூன்று உறக்க நடையாளர்கள்” பூ.வ மணிக்கண்ணன் மொழிபெயர்த்த “பல்த்தசாரின் அற்புதப் பிற்பகல்  நேரம்” ஆகியவையும் அப்படியே ஞாபகத்தில் ஆதார சுருதியாக இருக்கின்றன. புதுமைப்பித்தன்,  மௌனி கதைகள் எஸ்.சம்பத்தின் ‘உதிர்ந்த நட்சத்திரம்’, வண்ணநிலவனின் எஸ்தர், மிருகம், காரைவீடு கதைகள் போல. வண்ணநிலவனில் இருந்து மார்க்வெஸுக்கு ரகசிய ரேகை போகிறது. இராசேந்திரசோழனின் கதைகளுக்கும் ஜூலியோ கொர்த்தசரின் கதைகளுக்கும் ஓர் வேரோட்டம் இருக்கிறது. அவரது இச்சை, பரிணாமச் சுவடுகள், புற்றில் உறையும் பாம்புகள், தனபாக்கியத்தோட ரவநேரம், தற்செயல், வானம் வெளிவாங்கி போன்ற கதைகள் அன்றே புனைவுத் தன்மையை அடைந்துள்ளன.

யதார்த்தத்தை பெரிய அழுத்தத்தில் எழுதி அதைக் கனவுப்புனைவாக மாற்றுகிற தன்மை இச்சை கதையில் அபூர்வமாக சிருஷ்டிகரமாகி இருக்கிறது. அந்த கதைமூலமாகவும் நான் உருவானேன். அவர் செஞ்சியில் வேலை பார்த்தபோது அங்கிருக்கும் அரக்குநிற பாறைவெளியில் ஓடும் நாய்களின் பிலாக்கணப் புத்தகத்தைத் திறந்து உள்ளே சிறுகதைக்கான வடிவத்தை எடுத்தது முக்கியமான சங்கதி. வண்ணநிலவனுக்கு சமமாக ஆர். இராசேந்திரசோழனிடமிருந்தும் நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பூமணியின் பிறகு நாவலும், கருரீதி, வயிறுகள் சிறுகதைகளும் கி.ராவின் பேதை என்ற சிறுகதையும்கூட எனக்குள் மாயங்களை உருவாக்கின. பா.செயப்பிரகாசத்தின் தாலியில் பூச்சூடியவர்கள் கதை. கரிசல் நிலப்பரப்பின் விரிவில் இருந்து பூச்சூடுகிறவர்களின் கதையில் மரபும் யதார்த்த மீறலும் கலந்து இருக்கின்றன. ந.முத்துசாமியின் நீர்மை, வண்டி ஆகிய கதைகள். சுயம்புலிங்கத்தின் மூளிமாடுகள், மானாவாரி மனிதன், ஊர்க்கூட்டம் போன்ற கதைகள். இவர்களைத் தவிர்த்துவிட முடியாது என்னால். என்னுடைய தலைமுறை  சிறுகதை வடிவத்தை அடுத்த பரிமாணத்தில் தூக்கி நிறுத்துவதற்கு இந்த மூதாதையரின் கதைகள்தான் காரணம். என் புனைவின் சுழலும் சக்கரமாக மாறுவதற்கான ஆரங்களை இவர்களிடம் இருந்துதான் பெற்றேன்.

கி.ரா. என் சிறுகதைத் தொகுப்பை ஸ்டேட் வங்கி மேலாளரான செண்பகவல்லி நாவலாசிரியர் பாவாடை ராமமூர்த்தி மூலமாக கடன்வாங்கி கொண்டுவரலாம் என்று ஒரு  முயற்சிசெய்தார். பின்னர் மீராவிடம் கேட்கலாம் என்று கி.ராவே கூறினார்.  ஆனால் அதற்கு முன்பே மீட்சியில் வந்த கதைகளைப் படித்திருந்த மீரா, கி.ராவின் மணிவிழா சமயத்தில் என்னுடைய கதைகளைக் கேட்டுப்பெற்றார்.   சிவகங்கையில் ஒரு பழைமையான, தூர்ந்து கொண்டிருக்கும் சுவர்கள் கொண்ட, வேலுநாச்சியார் தூங்கும் மயக்கத்தில், காலம் அமர்ந்திருக்கும்  சிவன் கோவில் மேற்குத்தெருவில் உள்ள ஒரு பழைய பெரிய வீட்டில் நடந்த அச்சகத்தில் மதினிமார்கள் கதை அச்சானது. முன்னுரை தேடல் ஆசிரியர் சா.ஜோதிவிநாயகம்; ஓவியர் மாரீஸ் அதற்கான அட்டையை சென்னைக்குச் சென்று அச்சிட்டுவந்து கொடுத்தார். முதல் தொகுதி எட்டு ரூபாய் விலை. பத்துநாள் ப்ரஸில் தங்கி இருந்து ப்ரூப் பார்த்தேன்.

பக்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து வரும் மீன் வருவலை ருசித்து சப்பிட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

 குழந்தை பிறந்தவுடன் யார் மாதிரி இருக்கு என்று பார்ப்பதுபோல் அந்த தொகுதி வண்ணநிலவனுடைய எஸ்தர் மாதிரி இருக்கு என்று பலரும் சொன்னார்கள்.  வண்ணநிலவனின் கதைசொல்லும் முறைக்கு எதிர்விதியாக கதை சொல்ல முயற்சித்தவன் நான். எஸ்தர் கதையில் கண் தெரியாத பாட்டியின் குரல்வளையை கடை இருளில் குரலொடுக்கி சுடரை தணிய வைப்பதுபோல் மறைமுகமாக ஓர் இருட்டுப் பிரதியை வாசித்து அவள் முகத்தில் என் கண்ணீர் ஒடிந்தது. ஆனால் நான் அந்த பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருப்பவன். என் கதைகளுக்குள் பாட்டியின் குரல்வளை நீண்டு இருக்கிறது. இதை மார்க்வேஸிடம் இருந்து கற்றுக்கொண்டேன். மீட்சி இதழில் மதினிமார்களின் கதை வந்தபோது அதே இதழில் மார்க்வெஸின் செவ்வாய்க்கிழமை பகல்தூக்கம் கதையும் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது. நிலத்தின் மீது ஓடும் உப்பு ஓடைபோல் மீட்சி இதழின் நினைவுகள் கரைந்துகொண்டு இருக்கும்.

ஜூன், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com