கிளியே உன் குறுநகை போதுமடி!

கிளியே உன் குறுநகை போதுமடி!
Published on

சில விஷயங்களை நாம் தினம் தினம் பார்க்கிற போதும், கேள்விப் படுகிற போதும் இது நமக்கும் நடக்கக்கூடும் என்று நாம் நினைப்பதேயில்லை.

அத்தகைய விஷயங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அவை நமக்கே நடக்கிறபோதுதான் உறைக்கிறது. எனக்குத் திருமணமானது எனது 44ஆம் வயதில். எனது மனைவியின் வயது 39. எனது திருமணம் ஏன் அவ்வளவு தாமதமானது என்பதை விவரிக்க இங்கு இடமில்லை. நான் தமிழ், எனது மனைவி பஞ்சாபி. எங்கள் திருமணம் காதல் மணமல்ல. எங்களுக்கு ஒருவரையொருவர் மிகவும் பிடித்துப்போனதால் இரு வீடுகளிலும் அவ்வளவு உற்சாகம் இல்லாதபோதிலும் எங்கள் திருமணம் உற்சாகமாக நடந்தது. திருமணத்திற்கு முன்னரே ஒரு முக்கியமான விஷயத்தை எனது வருங்காலத் துணைவியிடம் தெளிவுபடுத்திவிட்டேன். குழந்தை விஷயத்தை தள்ளிப்போடக்கூடாது என்பதுதான் அது. இருவருக்குமே காலங்கடந்த திருமணம் என்பதால் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதுதான் நல்லது என்பதை எனது மனைவியும் ஒப்புக்கொண்டார். அவர் நுண்ணுரியியலில் முனைவர் பட்டம் பெற்று ஏழு ஆண்டுகளாக கல்லூரியில் துணைப் பேராசிரியையாக பணிபுரிந்தவர். குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் குழந்தைப்பேறுக்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது என்பதை நன்கு அறிந்தவர். 2012 அக்டோபரில் பட்டியாலா நகரில் எங்கள் திருமணம் நடந்தபோது ஏறக்குறைய அடுத்த ஆண்டு இதே நேரம் எங்கள் கைகளில் ஒரு குழந்தை தவழ்ந்துகொண்டிக்கும் என்பதில் எனக்கு அணுவளவு சந்தேகமும் இருக்கவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டங்களில் சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியிருந்தும் குழந்தைப்பேறு இல்லாமல் ஐவிஎஃப் மருத்துவமனைகளை நாடுவதை அறிந்திருந்தபோதிலும் அத்தகைய நிலை எனக்கும் ஏற்படக்கூடும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

ஓராண்டிற்குப் பின்னரும் மனைவி கருவுறவில்லை என்ற நிலையில் முதன்முறையாக பட்டியாலா நகரிலிருந்த சிறந்த மகப்பேறு மருத்துர் ஒருவரை அணுகினோம். என் மனைவிக்கு AMH (Anti - Mullerian Hormone) பரிசோதனையை செய்யச் சொன்னார். கருவுறும் ஆற்றலைப் பெற்ற கருமுட்டைகளை உருவாக்கும் சக்தி ஒரு பெண்ணுக்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்கான

சோதனை அது. எனது மனைவியின் வயதிற்கு அது சிறப்பாகவே இருந்தது. அடுத்ததாக Follicle எந்த அளவிற்கு வளர்கிறது என்பதையும் பரிசோதித்தார். ஒருவர் கருவுறுவதற்கு அவரது Follicle-ன் விட்டம் 18 முதல் 20 மிமீ வரை வளர்ந்திருக்க வேண்டும். அதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்ததாக என்னை விந்து பரிசோதனை செய்துகொள்ளும்படி சொன்னார். எனது ‘'ஆண்மையின் வீரியத்தில்'' எனக்கு ஒருபோதும் சந்தேகமே இருந்ததில்லை. அடுத்த நாள் டெல்லிக்கு செல்ல வேண்டியிருந்ததால் டெல்லியின் ஆகச் சிறந்த நோயியல் ஆய்வத்தில் விந்து பரிசோதனை செய்து கொண்டேன்.

பரிசோதனையின் முடிவுகளை படிக்கையில் எனது கைகள் லேசான நடுங்கின. அது போல் நடுங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தன்னைப் பற்றி மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருக்கிற ஒருவனுக்கு தானொன்றும் அப்படியல்ல என்று தெரிகிறபோது அது பெரும் பதற்றத்தை உருவாக்கும். வழக்கமாக ஒருவருக்கு இருக்க வேண்டிய விந்துக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இயங்கும் ஆற்றல் என் விஷயத்தில் இல்லை என்பது மட்டுமல்ல கணிசமாக குறைவாக இருந்தது. மிகுந்த வேதனையுடன் இதை மனைவிக்கு அலைபேசியில் தெரிவித்தப்போது அவர் துளியும் பதற்றமடையாமல் எண்ணிக்கை மற்றும் இயங்கும் ஆற்றலை அதிகரிக்க பல வழிகள் இருக்கும் கவலைப்பட வேண்டாமென்றார். இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். திருமணமான அடுத்த ஆறு மாதங்களிலேயே ஒரு நாள் எனக்கு கடுமையான வலி தொடையில் ஏற்பட்டது. உடனே எலும்பியல் மருத்துவரை அணுகினோம். அப்போதுதான் எனது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பது (எச்பிஏ1சி 8.9) தெரியவந்தது. உடனே அதற்கான மருந்துகளை எழுதித்தந்தார். ஆனால் எனது மனைவியோ மருந்துகள் வேண்டாம். உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலமாக இதை குறைத்துவிடலாம் என்றார். அதே போல அடுத்த ஐந்து மாதங்களில் எச்பிஏ1சி 6 என்ற அளவிற்கு குறைந்தது. இன்று வரை அந்த நிலை தொடர்கிறது. ஆகவே மனைவியின் வார்த்தைகள் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தன.

அடுத்த சில மாதங்களில் விந்து எண்ணிக்கையிலும் அவற்றின் இயங்கும் ஆற்றலிலும் கணிசமான முன்னேற்றமிருந்தது. எங்களது மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதே மருத்துவனையில் இருந்த சிறுநீரக மருத்துவரை அணுகியபோது அவர் உங்களுக்கு வெரிகோசில் பிரச்னையிருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்கள் விந்துக்களின் இயங்கும் ஆற்றல் இன்னும் அதிகரிக்கும் என்றார். அது ஒரு கார்ப்போரேட் மருத்துவமனை என்பதால் அவரை நம்பாமல் எனது சொந்த ஊரான வேலூரில் சி.எம்சி. மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவரை அணுகியபோது அவர் உங்களுக்கு அந்த அறுவை சிகிச்சை அறவே தேவையில்லை. நீங்கள் தந்தையாக இப்போதுள்ள உங்களது விந்துக்களின் எண்ணிக்கையும் அவற்றின் தரமும் நிச்சயம் போதுமானது என்றார். ஐவிஎஃப் மருத்துவத்தை நாடாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பட்டியாலாவிலேயே சில மகப்பேறு மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டதுடன் அங்கிருந்த புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலிருந்த மருத்துவர்களின் ஆலோசனையில் பேரில் சில ஆயுர்வேத மருந்துகளை உண்டோம். ஆனாலும் பலனில்லை. ஐவிஎஃப் சிகிச்சை இல்லாமல் குழந்தை பெற வேண்டும் என்பதில் எங்களுக்கிருந்த உறுதி தளரத் தொடங்கியது. பெண்களுக்கு குழந்தைப்பேற்றிற்கான வாய்ப்புகள் 40 வயதிற்குப் பிறகு பெருமளவு குறையும் என்ற அறிவியல் உண்மை எங்களை ஐவிஎஃப் சிகிச்சையை நோக்கித் தள்ளியது. எல்லோரையும் போலவே நாங்களும் ஐவிஎஃப் குறித்து கூகுளில் தேடி சுமார் நூறு கட்டுரைகளை படித்தோம். பட்டியாலா அல்லது சண்டிகரை விட சென்னையே ஐவிஎஃப் சிகிச்சைக் கான சிறந்த இடம் என்பதால் 2016 செபடம்பரில் சென்னைக்கு குடிபெயர்ந்தோம். சிகிச்சை வெற்றி பெற ஓராண்டாகுமா,இரண்டாண்டாகுமா என்பது தெரியாத நிலையில் புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகத்தில் தான் செய்துவந்த வேலையை என் மனைவி ராஜினாமா செய்ய வேண்டிவந்தது.

மகப்பேறு மருத்துவராக இருக்கும் உறவினர் ஒருவர் பரிந்துரைத்த மருத்துவமனையில், நண்பர் பரிந்துரைந்த மகப்பேறு மருத்துவர் பணிபுரிந்துவந்த காரணத்தால் எங்கு சிகிச்சை பெறுவது என்பதில் குழப்பம் ஏதுமில்லை. அந்த புகழ்பெற்ற மருத்துவமனைக்கு அருகிலேயே நல்ல வசதியான குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு குடியேறினோம். உதவிக்கு எனது அம்மா எங்களுடன் தங்கினார். முதல் நாளே மருத்துவமனையில் எங்களுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருந்தன. சிகிச்சைக்காக வந்திருந்த தம்பதிகளிலேயே நாங்கள்தான் அதிக வயதானவர்கள். பெரும்பாலான தம்பதிகள் 20களின் இறுதியில் அல்லது 30களின் தொடக்கத்தில் இருந்தார்கள். மருத்துவமனைக்கு போனோமா டாக்டரை பார்த்தோமா ஒரு மணி நேரத்தில் திரும்பினோமா என்பது போல் அல்ல இது. பெரும்பாலான சமயங்களில் மூன்று, நான்கு மணி நேரங்கள் செலவிட வேண்டியிருந்தது. இதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பின்னர் கூறுகிறேன். முதன் முறையாக எங்களது மருத்துவரை பார்த்தபோது எங்களுக்குள் இன்னமும் விடாது ஒட்டிக்கொண்டிருந்த அந்த ஆசையை பற்றி கேட்டோம். அதாவது ஐவிஎஃப் அல்லாமல் இயல்பான முறையில் ஓரிரு முறை முயற்சிக்கிறோம், அதற்கான சிக்கிச்சையை நீங்கள் எங்களுக்கு அளியுங்கள் என்றோம். அவரும் ஒப்புக்கொண்டார். எங்கள் இருவருக்கும் முதற்கட்டப் பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டன. இதில் எச்ஐவி பரிசோதனையும் அடக்கம். இதற்கே சுமார் முப்பதாயிரம் செலவானது. ஐவிஎஃப் சிகிச்சைக்கான செலவு அதிகம் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். அடுத்த கட்டமாக, அவர் அளித்த மருந்துகளால் இந்த முறை எனது மனைவிக்கு மூன்று Follicle உருவாயின. அவை முறையாக வளர்வதற்கும் பிளவுறுவதற்கும் மருந்துகளை அளித்தார். நாங்களும் இயல்பான முறையில் முயற்சித்தோம். பலனில்லை. அடுத்த முறை போன போது அந்தத் துறையின் தலைமை மருத்துவரை சந்திக்கும்படி எங்களுக்குச் சொல்லப்பட்டது. கேரளப் பெண்ணான அவருக்கு வயது 75க்கும் அதிகம். குழத்தைப்பேறுக்கான மருத்துவத்தில் மேற்படிப்பை அமெரிக்க பல்கலைக்கழகத்தில் முடித்தவர், சுமார் ஐம்பது ஆண்டுகள் இந்தத் துறையில் அனுபவம் கொண்டவர். அவரது அறை மிகவும் குளிரூட்டப்பட்டிருந்தது. எனக்கும் எனது மனைவிக்கும் உடல் நடுங்கியது. ஆனால் அவரோ மெல்லிய புடவையும் மெல்லிய ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். அவருக்கு எப்படி குளிராமல் இருக்க முடியும் என்பது எங்களுக்குப் புரியவில்லை. அல்லது இந்த அளவிற்கு குளிர் எனக்குத் தேவை என்று காட்டுவதன் மூலம் அவர் சொல்ல வருவது என்பதும் எங்களுக்குப் புரியவில்லை.

 எங்கள் பரிசோதனை அறிக்கைகளை படித்த பிறகு அவர் சொன்ன விஷயம் உண்மையிலேயே என் மண்டையில் இடியாக இறங்கியது. ஐவிஎஃப் மூலம் குழந்தை பெறுவதற்கு உங்களுக்கு 30% வாய்ப்பிருக்கிறது என்றார். அது வரை ஐவிஎஃப் குறித்து நூறு கட்டுரைகளுக்கு மேலாக படித்திருந்தும் ஐவிஎஃப் ஒன்றும் நூற்றுக்கு நூறு உறுதியான வழிமுறை அல்ல என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இதிலும் பல முயற்சிகளுக்குப் பிறகும் சிலருக்கு தோல்வி ஏற்படுகிறது, நமக்கும் அப்படி ஆக கூடும் என்பது உறைத்த போது அடுத்து இயல்பாக நான் கேட்க விரும்பிய கேள்வியைக் கூட கேட்கவில்லை. முதல் முயற்சியிலேயே கருத்தரிக்க 30% வாய்ப்பிருப்பதாக சொல்லுகிறீர்களா அல்லது எத்தனை முறை முயன்றாலும் 30%தான் என்கிறீர்களா என்பதுதான் நான் கேட்க நினைத்த கேள்வி. ஆனால், எத்தனை முறை முயன்றாலும் 30%தான் என்று அவர் சொல்லி விட்டால்? அந்த நேரத்தில் அப்படியொரு பதிலை என் மனம் கேட்க விரும்பாததால் அந்தக் கேள்வியை கேட்காமலேயே அவரிடமிருந்து விடைபெற்றோம்.

மீண்டும் கூகுளில் தேடுதல் வேட்டை தொடங்கியது. ஆனால் இந்த முறை ஐவிஎஃப் குறித்து அறிவதற்கு அல்ல. மாறாக, சென்னையில் இருக்கும் ஐவிஎஃப் மருத்துவர்களில் தலைசிறந்தவர்கள் யார் யார் என்பதை அறிவதற்கு. அப்படி நாங்கள் கண்டடைந்தவர்தான் டக்டர் சரத் பட்டினா. அப்பல்லோ மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அண்ணா நகரில் இண்டிகோ விமன்ஸ் செண்டர் என்ற ஐவிஎஃப் மருத்துவனையை தொடங்கியிருந்தார். அவர் குறித்து அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள்

சொன்னவற்றை வைத்தே அவரை அணுகுவது என்று முடிவு செய்தோம். டாக்டர் சரத், அவரது மருத்துவமனை, அங்கிருந்த பணியாளர்கள் என அனைத்தும் எங்களுக்கு திருப்தியாக இருந்தது. எங்களது மருத்துவமனையில் முதல் முயற்சிலேயே கருவுறுவதற்கான வாய்ப்புகள் 50% என்றும், மூன்று அல்லது நான்கு முயற்சிகளில் சுமார் 80% வரை என்றும் அங்கிருந்த இளைய மருத்துவர் ஒருவர் கூறியது மிகுந்த நம்பிக்கையளிப்பதாக இருந்தது. ஏற்கனவே செய்யப்பட்ட அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் இங்கும் செய்யப்பட்டன. ஏறக்குறைய ரூ. 30,000 செலவானது. இங்கும் நாங்கள்தான் அதிக வயதான தம்பதிகள். பிற அனைவரும் 20களில் இறுதியிலும், 30களின் தொடக்கத்திலும் இருந்தார்கள். இங்கும் ஒவ்வொரு முறையும் இரண்டு மூன்று மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது.

தலைமை மருத்துவரை பார்க்கும் முன்னர் முதலில் எடை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை அளவிட்ட பிறகு, நம்முடைய பிரச்னைகள் என்னென்ன என்பதை கேட்டு இளைய மருத்துவர்கள் குறிப்பெடுத்துக் கொள்வார்கள், பின்னர் தலைமை மருத்துவரை சந்தித்த பிறகு அவர் எழுதித் தரும் பரிசோதனைகளை செய்து (Follicleன் எண்ணிக்கை மற்றும் பருமனை அளப்பதற்கான ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோ தனை போன்றவை) அவற்றின் அறிக்கைகளை பெற ஓரிரு மணி நேரமாகும். பின்னர் அவற்றை தலைமை மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும். இதற்கிடையில் பிரசவம் பார்க்க மருத்துவர் சென்றுவிட்டால் கூடுதலாக ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். சென்னையின் சில புகழ்பெற்ற ஐவிஎஃப் மருத்துவமனைகளில் நள்ளிரவு 12 வரை தம்பதிகள் காத்திருப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். மூத்த செவிலியராக அரசாங்க மருத்துமனையில் பணியாற்றி வந்த எனது உறவினர் புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் ஐவிஎஃப் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இரவு 12 மணிக்கு தூக்கக்கலக்கத்துடன் எனது பிரச்சனைகளை கேட்டு டாக்டர் மருந்து எழுதித்தருவார். சரியான மருந்துகளைத்தான் எழுதித் தருகிறாரா என்று எனக்கு அச்சமாக இருக்கும் என்று அந்த உறவினர் கூறினார். தாங்கள் பிரபலமாக இருக்கும் வரைதான் சம்பாதிக்க முடியுமென்பதால் இவர்கள் நாளொன்றுக்கு 18 மணி நேரம் பணிபுரிகிறார்கள் என்று அவர்களது மருத்துமனை பணியாளர்களே கூறினார்கள். அந்த விஷயத்தில் இண்டிகோ மருத்துவமனை வித்தியாசமாக இருந்தது. பொதுவாக காலை 9 மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரைதான் மருத்துவமனை இயங்கும். ஒரு மருத்துவமனையின் தரத்தை அறிய அதன் கழிவறைகளைத்தான் முதலில் பார்வையிட வேண்டும். இண்டிகோ பல வகையிலும் உலகத் தரமான மருத்துவமனையாக இருந்தது.

இங்கும் சில தோல்விக் கதைகளை கேட்க நேர்ந்தது. 30களின் தொடக்கத்திலிருந்த ஒரு பெண் இங்கு பத்து முறை சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் ஆனால் இது வரை பலனில்லை என்றார். அப்படியானால் ஏன் வேறு மருத்துவரை நீங்கள் ஆலோசிக்கவில்லை என்று என் மனைவி கேட்டபோது பிரச்னை என்னிடம் இருக்கிறது, மருத்துவரின் திறனில் குறை இல்லை என்பது எனக்கு புரிந்திருப்பதால் நான் வேறு எங்கும் போகவில்லை என்றார். நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்த ஒருவரை அங்கு சந்தித்தேன். அவர் மும்பையிலும் சென்னையிலும் தலைசிறந்த மருத்துவர்கள் பலரிடமும் அவரது மனைவி சிகிச்சை பெற்றதாவும், சிகிச்சைகாக கடந்த பத்தாண்டுகளில் சுமார் 50 லட்சம் செலவிட்டிருப்பதாகவும் ஆனால் பலனில்லை என்று கூறிய போது மருத்துவ அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருந்த போதிலும் அது எல்லோருக்கு அது தீர்வு அளிப்பதில்லை என்பது மனதில் வலியையும் அச்சத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியது. இரண்டு முறை சிகிச்சை பெற்றும் வெற்றி பெறாத ஒரு பெண். அவருக்கு வயது 27. அவர் கூறிய கதை எனக்கு புன்னகையை வரவைத்தது. அவரது சித்தப்பாவிற்கு வயது 52, திருமணமே வேண்டாமென்று இருந்த அவர் தனக்கு குழந்தை இல்லாவிட்டாலும் இறுதிக் காலத்தில் வாழ்க்கைத் துணை ஒன்று தேவை எனக் கருதி 45 வயது வரை திருமணமாகமலிருந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அடுத்த பத்தாவது மாதம் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது!

நமது உடல் நலனை தீர்மானிப்பதில் நமது மரபணுக்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதையே இது காட்டுகிறது.

இந்த மருத்துவமனை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகியிருந்தும் குழந்தை இல்லாதிருந்த எனது நண்பருக்குப் பரிந்துரை செய்தேன். ஏற்கனவே அவரும் அவரது மனைவியும் சென்னையில் புகழ்பெற்ற இரண்டு மருத்துவமனைகளில் நான்கு முறை சிகிச்சை பெற்றவர்கள். மூன்று நாட்கள் இடைவெளியில் நாங்கள் இரு தம்பதிகளும் அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டோம். முதலில் அவர்கள். சிகிச்சை எடுத்துக்கொண்டவர் கருவுற்றிருக்கிறாரா என்பதை அறிய 15 நாட்கள் கழித்து ரத்தப் பரிசோ தனை செய்யப்படும். அவர்களது அறிக்கை எதிர்மறையாக வந்தபோது எங்களுக்கு வேதனையுடன் அச்சமும் ஏற்பட்டது. அவர்கள் எங்களை விட எட்டு ஆண்டு இளையவர்கள். மூன்று நாட்கள் கழித்து ரத்தப் பரிசோதனைக்காக நாங்கள்

சென்றபோது எனக்கேற்பட்ட பதற்றத்தின் காரணமாக என்னால் மருத்துவமனைக்குள் அமர்ந்திருக்கவே முடியவில்லை. கால்போன போக்கில் அண்ணா நகருக்குள் நடந்து கொண்டிருந்தேன். மனைவியிடமிருந்து அலைபேசி வந்தபோது கை நடுக்கம் ஏற்பட்டது. எனக்கென்று ஒரு குழந்தை வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகவே திருமணம் செய்துகொண்டவன் நான். இல்லாவிட்டால் திருமணம் பற்றி

யோசித்திருக்கவே மாட்டேன். அலைபேசியில் நான் பேசத் தொடங்கும் முன்னரே எனது மனைவி சக்சஸ், ரிசல்ட் இஸ் பாஸிட்டிவ் என்று சொன்னபோது ஒரு பெரும் நிம்மதியை உணர்ந்தேன். 20களில் திருமணம் செய்து ஓரிரு ஆண்டுகள் கழித்து மனைவி உண்டாகியிருக்கிறேன் என்று சொல்லியிருந்தால் மகிழ்ச்சி உணர்வு பொங்கியிருக்கும். ஆனால் இப்போதோ முதலில் ஏற்பட்டது நிம்மதி உணர்வுதான். சில நிமிடங்கள் கழித்துதான் என்னுள் மகிழ்ச்சி முகிழ்த்து, கிளைக்கத் தொடங்கியது. அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனையில் எனது மனைவியின் கைகளை பற்றிக்கொண்டு அமைதியாக இருந்த அந்தத் தருணம் மறக்க முடியாதது. உங்கள் நண்பரின் விஷயமும் வெற்றிகரமாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று என் மனைவி சொன்ன போது அவ்வளவு மகிழ்ச்சியிலும் ஒரு புறம் வேதனை. அடுத்த மூன்று முயற்சிகளிலும் அந்த நண்பருக்கு பலன் கிட்டவில்லை என்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

சில வாரங்கள் கழித்து மனைவிக்கு ரத்தக்

கசிவு ஏற்பட்டபோது கரு கலைந்துவிட்டது என்று நடுங்கிப்போனோம். உடனே மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் எல்லாம் நல்லபடியாக இருப்பது தெரியவந்தது. குழந்தையின் இதயத் துடிப்பை எனக்கு கேட்கும்படி செய்தார்கள். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு ஈடு ஏதுமில்லை.

கடந்த 20, 25 ஆண்டுகளில் தாய்மையடைவது என்பது பலருக்கும் பெரும் பிரச்னையாக உருவாகியிருக்கிறது. நவீன மருத்துவம் பெரிதும் வளர்ந்திருக்கிறது, பலருக்கு தீர்வளிக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கையின் ஓயாத பதற்றமும், மன உளைச்சலும், மோசமான உணவுப் பழக்கங்களும் மனிதர்களுக்கு இனப்பெருக்கத்தை பெரும் சவாலாக ஆக்கியிருக்கின்றன.

எங்கள் அனுபவத்தில் நான் அறிந்த ஒரு முக்கியமான உண்மையை சொல்லியாக வேண்டும். ஐவிஎஃப் மற்றும் ஐயுஐ மருத்துவத்தில் ஹார்மோன் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் பெண்களின் உடல்நலம் கணிசமாக பாதிக்கப்படுகிறது. இதைப் பற்றி மருத்துவர்கள் தங்களிடம் வரும் தம்பதிகளிடம் பேசுவதேயில்லை. அடுத்ததாக, ஐவிஎஃப்

சிகிச்சையில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் கணிசமானவர்களுக்கு 33 அல்லது 34 வாரங்களிலேயே பிரசவம் நடந்துவிடுகிறது, 39, 40 வாரங்களைத் தொடுபவர்கள் மிகக் குறைவு. இந்தக் குறைப்பிரசவ பிரச்னை குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. மருத்துவர்களும் இது பற்றி எந்த எச்சரிக்கையையும் தருவதில்லை. இன்னும் ஏழு வாரங்கள் இருக்கின்றன என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாள் மாலை 5 மணிக்கு என் மனைவிக்கு பனிக்குடம் உடைந்து அம்னோடிக் திரவம் வெளியேறத் தொடங்கியது. வலி ஏதுமில்லை. ஒரு நாள் முன்னர்தான் மருத்துவமனை ஸ்கேன் எடுத்தபோது எல்லாம் நன்றாக இருக்கிறது. அடுத்த வாரம் இதே நாள் செக்கப்பிற்கு வாருங்கள் என்று

சொல்லியிருந்தார்கள். உடனே மருத்துவமனைக்கு சென்றோம். இரவு 10.20க்கு மகள் பிறந்தாள். குறைப்பிரசவம் என்பதால் Neonatal Intensive Care Unit (என்ஐசியு) இருக்கக்கூடிய கிளவ்ட் நைன் மருத்துவமனையிலிருந்து மருத்துவர் சந்தர் குமார் வந்திருந்தார். குழந்தையை எடுத்துச் செல்லும்போது அதன் அழுகுரலைக் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் குழந்தை இவ்வளவு வீரியமாக அழுவதைப் பார்த்தால் அது பெண் குழந்தையாகத்தான் இருக்கும் என்றார். ஒரேயொரு குழந்தைதான் பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்பதால் அது பெண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் இருவருமே மிகவும் ஆசைப்பட்டோம். குழந்தையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு விஷயம் உறைத்தது. குழந்தை கண்ணிமைக்கவில்லை.

பிறந்த குழந்தைகள் கண்ணிமைப்பது மிகக் குறைவு என்றார் செவிலியர்.

அடுத்த நான்கு, ஐந்து மாதங்கள்தான் என் வாழ்க்கையின் கொடுமையான மாதங்கள். குழந்தையின் முகத்தைப் பார்ப்பதற்கு முன்னர் குழந்தை தன்னிடமிருந்து பிரிக்கப்பட்டது என மனைவிக்கு வேதனையை ஏற்படுத்தியதென்றால் நான் செய்த ஒரு முட்டாள்தானமான செயல் அவரது வேதனையை இன்னும் அதிகப்படுத்திவிட்டது. என்ஐசியு-வில் குழந்தைக்கு ஆக்சிஜன் குழாய் பொருத்தியிருந்துடன் வேறு சில கருவிகளையும் இன்குபேட்டருடன் இணைத்திருந்தார்கள். அதை செல்பேசியில் படம்பிடித்து மனைவிக்கு அனுப்பியதுதான் அந்த முட்டாள்தனமான செயல். இரண்டு நாட்கள் கழித்து அவரையும் கிளவுட் நைன் மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கு 10 நாட்கள் இருந்தோம். குழந்தைக்கு எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டு குழந்தை முழு நலத்துடன் இருக்கிறாள் என்று டாக்டர் சந்தர் குமார் கூறினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் குழந்தையுடன் வீட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் ப்ரீமெச்சூர் பேபி (குறைப்பிரசவக் குழந்தை) குறித்து நாங்கள் கூகுளில் தேடித் தேடி படிக்க ஆரம்பித்திருந்தோம். வினையே அங்குதான் தொடங்கியது. ஏற்கனவே வேதனையில் இருந்த என் மனைவிக்கு கூகுளில் படித்த விஷயங்கள் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்திவிட்டது. அடுத்த நான்கு ஐந்து மாதங்களுக்கு Postpartum Depression. குறைப்பிரசவக் குழந்தைகளின் விஷயத்தில் அறிவுக்கூர்மை (IQ) மற்றும் உணர்வு சார்ந்த பிரச்னைகளுக்கான வாய்ப்புகளின் சதவீதம் அதிகம் என்று படித்ததன் விளைவாக மனைவிக்கு கடுமையான மனச்சோர்வு.

அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவர் எப்போது, எதற்கு, யார் மீது கோபப்படுவார், அல்லது அழுவார் என்பதற்கு எந்த வரைமுறையும் இல்லை. எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தும், ஆறுதல் சொல்லியும் துளியும் பலனில்லை. சென்னையின் தலை சிறந்த மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்றும் பலனில்லை.

ஆண் குழந்தையாக இருந்தால் பகத் என்றும் (பகத் சிங்கின் நினைவாக) பெண் குழந்தையாக இருந்தால் ரோஸா என்றும் (ரோஸா லக்ஸம்பர்க் நினைவாக) பெயர் வைப்பது என்று முடிவு செய்திருந்தேன். அதன்படி ரோஸா என்று பெயரிட்டோம். ரோஸா இரவு ஒரு நொடி கூட தூங்குவது கிடையாது. பகல் முழுவதும் தூங்குவாள். குறைப்பிரசவக் குழந்தை என்பதால் அவளைப் பார்த்துக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டியிருந்தது. குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. இப்போது ரோஸாவிற்கு நான்கு வயது. அவளது சிரிப்பை பார்க்கிறபோது இன்னும் பல மடங்கு சிரமங்களைக் கூடப் பொறுத்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

மாடு மனை போனால் என்ன, மக்கள் சுற்றம் போனால் என்ன, கோடி செம்பொன் போனால் என்ன, கிளியே உன் குறுநகை போதுமடி

மார்ச், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com