கிறிஸ்துவத் தமிழ்: மீட்பதிகாரம்!

கிறிஸ்துவத் தமிழ்: மீட்பதிகாரம்!
Published on

வேறுபடும் சமயங்கள் அனைத்திலும் உள் நுழைந்து பார்த்தால் கூறு பரம்பொருள் ஒன்றே என்பார் தாயுமானவர், ‘ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள், உலகு இன்பக்கேணி' என்பார் பாரதியார், கிறித்தவ இலக்கியம் விவிலியத் திருநூலை அடிப்படையாகக் கொண்டு காலம் தோறும் ஞாலம் வியக்கும் வண்ணம் வளர்ந்து வருகிறது. ‘தேவ அருள் வேத புராணம்' (1725) முதல் “மீட்பதிகாரம்'(2016) வரை முப்பத்தெட்டு கிறித்தவத் தமிழ்க் காப்பியங்கள் வெளிவந்துள்ளன.

நம்பிக்கையின் மறைபொருள்: இறைவன் மூவொரு கடவுளாய்த் திகழ்கிறார். தந்தை, மகன், தூய ஆவி என்று மூவராய்க் காட்சி தந்தாலும் அவர் ஒருவரே, இறைவன் மனிதரை மீட்பதற்காக மானிட உருவெடுத்தார். யூதேயா நாட்டுப் பெத்லகேமைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயது வளனாருக்கும் கலிலேயா நாட்டு நாசரேத்தைச் சார்ந்த பதினான்கு வயது மரியாளுக்கும் மகனாகத் தோன்றியவர் இயேசு பெருமான். மூவுலகிலும் முக்காலமும் கன்னியாய் விளங்கிய மரியாள் கடவுளின் மைந்தனாகிய இயேசுவை முச்சுடர்களிலும் மேவான ஒளி வீசும் அளவில் ஈன்று புறம் தந்தாள் என்கிறார் இத்தாலியத் தமிழ் ஏந்தல் வீரமாமுனிவர்:

‘உலகம் மூன்றினும் உவமை நீக்கிய, இலயை மூன்றினும் இழிவில் கன்னியாய் அலகில் மூன்றினும் நடுவ மைந்தனை, நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள்' (தேம்பாவணி, 10:135)

இலயை என்னும் காலம் மூன்றிலும் அளவிட முடியாத மூவொரு கடவுளுள் நடுவில் தோன்றும் இயேசு பெருமான் என்பது குறிப்பிடத்தக்க சிறப்புமிக்க செய்தியாகும்.

இயேசு பெருமான் தச்சுத் தொழிலாளியான வளனாருடன் தச்சனாகவே முப்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; இறுதியில் மேலும் மூன்று ஆண்டுகள் போதகராக விளங்கினார். பன்னிருவரைத் தெரிவு செய்து மாணவராக ஆக்கி, நற்செய்தி பரப்பி வந்தார். பிலாத்துவின் ஆட்சியில் சிலுவையில் அறையப்பட்டு, ‘நசரேயனாகிய இயேசு யூதர்களின் அரசன்' என்று பறைசாற்றப்பட்டார்; மூன்றாம் நாள் தான் கூறியவாறே உயிர்த்தெழுந்தார். திருவழிபாட்டில், நம்பிக்கையின் மறைபொருளாகிய ‘இயேசு மரித்தார், உயிர்த்தார்; மீண்டும் வருவார்' என்னும் முழக்கம் இடம்பெறுகிறது. இறைமகனாகத் தோன்றிய இயேசுவைத் தொடர்ந்து, தூய ஆவியார் வாயிலாக மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெறுகின்றனர். சுத்தானந்த பாரதியார் கூறுவது போன்று,

‘தூய ஞான தேவன் தந்தை பரமன் விட்ட

தூதனாய் துன்பமிக்க உலகினுக்கு அன்புமார்க்க

 போதனாய் நேயமாக மாந்தர் வாழ நெறி கொடுத்த

 ஐயனாம் நித்தம் அந்த இயேசுநாதன் பக்தி செய்து உய்குவாம்‘ என்று அனைத்து மாந்தரும் பாடிப் பரவுகின்றனர்.

இறைமையின் இலக்கணம்;

வீரமாமுனிவர் வானுலகம் முதல் எவ்வுலகும் வணங்கத்தகும் கடவுளின் இறையியல்பை ஆறு கூறுகளாக வீறுடன் விளம்புகிறார், தாமாய் இருத்தல், தொடக்கம் இல்லாதிருத்தல், ஐம்பொறிக்குரிய உருவம் இல்லாது இருத்தல், அனைத்து நலன்களும் உடையவராதல், எங்கும் நிறைந்திருந்தல், ஒருதவியின்றி அனைத்தையும் தாமே படைத்த ஆதிகாரணராதல் ஆகிய ஆறும் இறைவனின் பண்புகள் ஆகும்.

தன்வயத் தாதல், முதலிலன் ஆதல், தகும் பொறி உருவிலன் ஆதல், மன்வயத் தெல்லா நலமுளன் ஆதல், வயின்தொறும் வியாபகன் ஆதல் பின்வயத் தின்றி ஒருங்குடன் அனைத்தும் பிறப்பித்த காரணன் ஆதல் பொன்வயத்து ஒளிவர்வான் முதல் எலா உ பேற்றும்மெய் இறைமையின் நிலை (தேம்பாவணி 27:157)

இறைவனின் செயல்முறைகள்;

இறைவன் படைத்தல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் புரிவதாக அருளாளர் கூறுவர். ‘சீரிய உலகம் மூன்றும் செய்து, அளித்து, அழிப்ப வல்லாய்‘ எனவும் ‘நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள்' எனவும் இறைவனின் செயல்முறைகளை வீரமாமுனிவர் தேம்பாவணியின் முதற் பாடலிலேயே எடுத்து மொழிந்துள்ளார், ஆக்கல் (DEUS CREATOR), போற்றல் (DEUS ELEVATOR), மீட்டல் (DEUS REDEMPTOR), தூய தாக்கல் (DEUS SANCTIFICATOR), நிறை வேற்றல் (DEUS CONSUM) என்னும் ஐந்தொழிலும் இறைவன் செயல் முறைகளாகக் கிறித்தவ இறையியலில் அமைகின்றன. இக்காலத்தே நிலைகுலைத்து தோன்றும் யாவும் மக்கள் செய் பாவமாம் குற்றத்தால் மாறியவையே தவிர, படைக்கப்பட்டபோது வாடிய குறையொன்று இன்றி வனப்புற முடிக்கப்பட்டவை என்று அவர் மேலும் தெளிவுறுத்துகிறார். ‘ஒன்றில்லாது எல்லாம் உளவாக்கினோன்‘‘ (32:48) என்று இறையருளை வளன் வாழ்த்தி, வழுத்துகிறான். ‘இருவகைக் காரணம் இன்றியும் இயைவினை இன்றியும் நாளின்றியும் வருவகை காட்டும் மாத்திரை இன்றியும் வரும் பொருள் எண்ணளவின்றி இறைவன் அனைத்தையும் படைத்தார் ‘(27:163) என்று தேம்பாவணி எடுத்தோதுகின்றது. மீட்புப் பணி இறைவனின் தனிச் சிறப்பு. எனவேதான் இயேசுவை “மீட்பராகிய இயேசு' என்று போற்றுகின்றனர். “ஞாலம் நற்றகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான்' (தேம்பாவணி, 9:75) என்று வீரமாமுனிவர் விளம்புகிறார். அருளல் என்பது இயேசுவின் வாயிலாக இறைவனின் வாழ்வில் எல்லா மக்களையும் பங்கேற்கச் செய்வது என்பார். இறைவன் எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் அருட்பெருக்கை வளன் பாராட்டுகிறான். “விஞ்சு அருள் கொண்டோன்'(32:50) என்பது காப்பியத் தலைவன் வளன் வாய்மொழி ஆகும். “அழிப்பதற்கன்று, நிறைவேற்றுவதற்கே வந்தேன்'என்னும் இறைமகன் இயேசு, செல்லும் இடம் எல்லாம் மக்களின் உடல் நலமும் வாழ்வு வளமும் கருதிச் செயலாற்றுகின்றனர். வளனது வரலாறு விளம்பும் தேம்பாவணியில் வீரமாமுனிவர் இறைவனின் அற்புதச் செயல்களையும் புதுமைகள் அனைத்தையும் அறிவித்துள்ளார்.

‘கண் தரும் கரம் தரும் செல்லக் கால்தரும் உண் தரும் களிதரும் உயிர்த ரும் தரும் கண்டு அரும் துயர்கள் நோய் பலவை தீர்வரும் மண்டு அருந் தயைநலம் வழங்கத் தந்துளான்' (35:14)

படைப்புக் கோட்பாடு:

‘பார் ஆழி உரை கொண்டே படைத்தாய்'(8:8) என்று இறைவனின் படைப்பாற்றலை வளன் வாயிலாக வீரமாமுனிவர் விளம்புகிறார். வானவன் காபிரியேலும் இச்செய்தியை விரித்துரைக்கிறான், சிறந்த வானகமும் முச்சுடரும் நெருங்கிய நீருலகும் கடற்பவளமும் முத்தும் அழகிய பூவுலகும் ஐவகைத் திணைக்குரிய நிலங்களும் பிறவும் இறைவனால் படைக்கப்பட்டன (14: 93) பல்வேறு உயினங்களையும் உருவாக்கிய இறைவன் மானிடரை மேன்மை மிக்கவராகப் படைத்தான், மனிதனது உடலாகிய மதிலினுள் உயரிய பொருளாகிய ஆன்மா இடம் பெற்றுள்ளது. மறுமணச் சோலையில் ஒளி மணி மலைபோன்ற ஆதாமையும் திருமணிக் கொடி ஒத்த ஏவாளையும் உருவாக்கினார். விலக்கப்பட்ட கனியினை விழுங்கியதால் ஆதாமும் ஏவாளும் தேவகட்டளையினை மீறியவர் ஆயினர். நச்சு உணவு உடலுறுப்புகள் அனைத்தையும் அழிப்பது போன்று, இருவர் செய்த பாவவினை மாந்தர் அனைவரையும். வருத்துகின்றது. அவர்கள் படைக்கப்பட்ட காலம் மனுக்குலத்தின் முதற்பிறப்பு ஆதலால் கற்றோர் முற்பிறப்பு என்றனர். அவர்கள் செய்த குற்றத்தால் வந்த வினை பழைய வினை ஆகையால் ஊழ்வினை என்றனர், இந்த வினையல்லாது தலையெழுத்தோ வேறு ஊழ்வினையோ கிடையாது என்று காப்பியத்துலைவன் வளன் வாயிலாகத் தெளிவுறுத்துகிறார் வீரமாமுனிவர் (27:105---&-122)

வீரமாமுனிவரின் தேம்பாவணி கால வெள்ளத்தைக் கடத்து நிற்கும் எனவும் பாராட்டி மகிழ்கிறார் பேராசிரியர் கா.மீனாட்சி சுந்தரம்.

நிறைவுரை: சீனயி மாமலையில் இறைவன் மோயீசனுக்கு வழங்கிய பத்துக் கட்டளைகளுள் முதல் மூன்றும் இறையன்பு சார்த்தவை; ஏனைய ஏழும் பிறரன்பு சார்த்தவை. ஆன்மாவும் உடலுமாய் அமைந்தவன் மனிதன்; இறைவனும் மனிதனுமாய் அமைத்தவர் இறைமகன் இயேசு. (9:76). மரியாள் இயேசுவை ஈன்ற செய்தியை “அம்புயச் சந்த நேரிய கன்னி நேர்கையில் தாம நேரிய முத்து” ; (10:124) என்றுதொடர் தெளிவுறுத்துகிறது. சிலுவையே

மீட்பின் கருவியாகத் திகழ்கிறது என்று வீரமாமுனிவர் புகழ்த்துரைக்கிறார் (30:119), தேவ அருள் பொழி நீராடல், திரு நெய்ப் பூசல், அத்தர் விளைவு, தூய்நெய் பூசல், திருவிருந்து மன்றல், குருத்துவம் ஆகிய ஏழு அருட்கொடைகளைப் பெற்று மகிழத்தூண்டுகிறது திரு அவை. (32: 43 - 45), அருள் வாழ்வை மேற்கொள்ளத் துணைபுரியும் பாங்கு குறிப்பிடத்தக்க சிறப்பு மிக்கது. குழந்தை இயேசுவைக் கண்டு தொழுவந்த அழிவுடைய மூவரசர் தம் காணிக்கையப் பொருட்களால் இயேசு மனிதனாகவும், மன்னனாகவும் இறைவனாகவும் திகழ்வதைப் புலப்படுத்தினர், வீரமாமுனிவர். தேம்பாவணி கால வெள்ளத்தைக் கடத்து நிற்கும் எனவும் பாராட்டி மகிழ்கிறார் பேராசிரியர் கா.மீனாட்சி சுந்தரம்.

பின்னிணைப்புகள் -3

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்கள் முப்பத்தெட்டு

வ.எண் காப்பியம் ஆசிரியர் ஆண்டு கட்டமைப்பு

1. தேவஅருள்வேதபுராணம் – சாங்கோபாங்கர் -1725 - இரு காண்டங்கள்-கொன்சால்வசு

2. தேம்பாவணி - வீரமாமுனிவர்- 1726- 36 படலங்கள்

3. திருச்செல்வர்காவியம் - பூலோகசிங்க- 1741-24 படலங்கள்

அருளப்ப நாவலர்

4. யோசேப்புப் புராணம் - கூழங்கைத் தம்பிரான்- 1785- 1203 விருத்தங்கள்

5. கிறித்தாயணம்- சான்பால்மர்- 1865- 4 காண்டங்கள்

6. திருவாக்குப் புராணம்- கனகசபை- 1866- 3 காண்டங்கள்

7. ஆதிநந்தவனப் பிரளயம்-வேதக்கண்-1868-6 சருக்கங்கள்

8. ஆதிநந்தவன மீட்சி-வேதக்கண்-1868- 4 காண்டங்கள்

9. ஞானானந்த புராணம்- தோம்பிலிப்பு நாவலர்- 1874-3 காண்டங்கள்

10. ஞானாதிக்க ராயர் காப்பியம்-சாமிநாதர்- 1876-30 படலங்கள்

11. புனித சவேரியாரின் காவியம்-அந்தோனிமுத்து-1882-

12. பூங்காவனப் பிரளயம்-சாமுவேல் வேதநாயகம்-1887 -2 காண்டங்கள்

13. இரட்சணிய யாத்திரிகம்-எ.ஆ.கிருட்டிணன்-1894-14 படலங்கள்

14. கிறித்து மான்மியம்- சுதோச ஐயர்-1891-39 சருக்கங்கள்

15. சுவர்க்க நீக்கம் -வெ.ப.சுப்பிரமணியன்-1895-241 பக்கங்கள்

16. சுவிசேடப் புராணம்-சுகாத்தியர்-1896-5 காண்டங்கள்

17. பரவர் புராணம்-த.அருளப்பர்-1909-9 இலம்பகங்கள்

18. திருஅவதாரம்-மாணிக்கவாசகம் ஆசீர்வாதம்- 1944-4 காண்டங்கள்

19. சுடர்மணி -ஆரோக்கியசாமி-1976 -47 படலங்கள்

20. கிறித்து வெண்பா-கி.மு.ம. மரிய அந்தோனி-1979 -1006 பக்கங்கள்

21. இயேசு காவியம் - பாவலர் கண்ணதாசன்-1981 -150 பிரிவுகள்

22. அருளவதாரம்-பேராசிரியர் வி.மரிய அந்தோனி 1983-8 காண்டங்கள்

23. அறநெறி பாடிய வீரகாவியம்-திலகவதி பால்-1986-

24. எசுதர் காவியம் - இராபின்சன் குருசோ 1986-7 பாகங்கள்

25. மோட்சப் பயணக் காவியம் - எ.த.சோதிநாயகம் - 1991 - 3 காண்டங்கள்

26. அன்னை தெரேசா காவியம்-துரை.மாலிறையன் - 1996 - 3 காண்டங்கள்

27. அருள்நிறை மரியம்மை காவியம்- துரை.மாலிறையன் - 1998-3 காண்டங்கள்

28. புவியில் ஒரு புனித மலர் - துரை.மாலிறையன் - 1998 -402 பாக்கள்

29. அருட்காவியம்- பா.மதலைமுத்து - 1999 -3 காண்டங்கள்

30. நற்செய்திக்காவியம் - இரா.ச.அருளானந்தம்- 2000 -43 பகுதிகள்

31. இயேசு மாகாவியம் - நிருமலா சுரேசு - 2001 - 144 கவிதைகள்

32. இதோ மானுடம் - புலவர் ம.அருள்சாமி - 2001 -மாபெரும்பிரிவுகள்

33. புதிய சாசனம்- வின்சென்று சின்னதுரை 2002-123 கவிதைகள்

34. பவுலடியார் பாவியம் - புலவர் ம.யோவேல் 2003- 4 காண்டங்கள்

35. உலகசோதி - இறையரசன் - 2005 - 3 காண்டங்கள்

36. திருத்தொண்டர் காப்பியம் - பேராசிரியர் சூ. இன்னாசி-2007-4 காண்டங்கள்

37. ஆதியாகம் காவியம் -பேராசிரியர் ச.சாமிமுத்து-2009-33 படலங்கள்

38. மீட்பதிகாரம் - பேராசிரியர் மு.பவுல் இராமகிருட்டிணன்-2016-7 காண்டங்கள்

2. தேம்பாவணிப் பதிப்புகள் பன்னிரண்டு

1. முதற்பதிப்பு: துப்புயி அடிகளார் (பதி) தேம்பாவணி, பாண்டிச்சேரி

முதற்காண்டம் (1851) - 16+486 பக்கங்கள்

இரண்டாம் காண்டம் (1852)- 12 +375 பக்கங்கள்

மூன்றாம் காண்டம் (1853) - 14+367 பக்கங்கள்

2. இரண்டாம் பதிப்பு : துப்புயி அடிகளார் (பதி) தேம்பாவணி.

பாண்டிச்சேரி

மூன்று காண்டங்கள் (1891)

3. மூன்றாம் பதிப்பு: துப்புயி அடிகளார் (பதி) பாண்டிச்சேரி மாதா கோவில் அச்சுக்கூடம்.

பாண்டிச்சேரி

முதற் காண்டம் (1926), 416 பக்கங்கள்

இரண்டாம் காண்டம் (1927) 299 பக்கங்கள்

மூன்றாம் காண்டம் (1928) 440 பக்கங்கள்

4.நான்காவது பதிப்பு: துப்புயி அடிகளார். (பதி) தேம்பாவணி, மிசன்

அச்சகம், பாண்டிச்சேரி

தற் காண்டம் (1956) 416 பக்கங்கள்

இரண்டாம் காண்டம் (1957), 299 பக்கங்கள்

மூன்றாம் காண்டம் (1958), 440 பக்கங்கள்

5. ஐந்தாவது பதிப்பு : புலவர் இரா.லே. ஆரோக்கியம் (பதி).

தேம்பாவணி. தமிழ் இலக்கியக் கழகம், தூத்துக்குடி

முதற் காண்டம் (1961) 16+42+325 பக்கங்கள்

இரண்டாம் காண்டம் (1964) திசம்பர் 6+40+310 பக்கங்கள்

6. ஆறாவது பதிப்பு : புலவர் இரா.லே.ஆரோக்கியம், (பதி)

தேம்பாவணி. தமிழ் இலக்கியக் கழகம், திருச்சிராப்பள்ளி

முதற் காண்டம் (1982) 42+324 பக்கங்கள்

இரண்டாம் காண்டம் (1980) 18+228 பக்கங்கள்

மூன்றாம் காண்டம் (1981) 46+309 பக்கங்கள்

7. ஏழாவது பதிப்பு : பேராசிரியர் வி.மரிய அந்தோனி (பதி) தேம்பாவணி மூலமும்

விரிவுரையும், வீரமாமனிவர் ஆய்வுக்கழகம். பாளையங்கோட்டை.

முதற்காண்டம் (1982) 16+775 பக்கங்கள்

இரண்டாம் காண்டம் (1983) 2+600 பக்கங்கள்

மூன்றாம் காண்டம் (1985) 2+906 பக்கங்கள்

8. எட்டாவது பதிப்பு: பேராசிரியர் மு.அடைக்கலசாமி. தேம்பாவணி மூலமும் உரையும் (3

தொகுதிகள்) வருத்தமானன் பதிப்பகம். சென்னை-17 (1992)

9. ஒன்பதாவது பதிப்பு : புலவர் சே.சுந்தரராசன், தேம்பாவணி மூலமும் உரையும். பாரி

நிலையம், சென்னை 108.

முதற் காண்டம் (2010) 552 பக்கங்கள்

இரண்டாம் காண்டம் (2010) 456 பக்கங்கள்

மூன்றாம் காண்டம் (2013) 624 பக்கங்கள்

10. பத்தாவது பதிப்பு: முனைவர் மார்கரெட்டு பாசுடின், தேம்பாவணி மூலமும் உரையும், கலைக்காவிரி,

திருச்சிராப்பள்ளி 620001 பக். 1280 (திசம்பர் 2014)

11. பதினொன்றாவது பதிப்பு: பேராசிரியர் ந.ம.மரிய அருட்பிரகாசம்,

தேம்பாவணி மூலமும் உரையும், திருவிவிலிய மேற்கோள்களுடன், மதுரைப் பேராயம்,

நொபிலி வளாகம், மதுரை-7. (2013)

முதற் பாகம் - 22+688 பக்கங்கள்

இரண்டாம் பாகம் 25+ 690 பக்கங்கள்

மூன்றாம் பாகம் - 28+1028 பக்கங்கள்

12. பன்னிரண்டாவது பதிப்பு: தேம்பாவணி மூலமும் உரையும். சாரதா பதிப்பகம், சென்னை-

5, (2014)

16+1384=1400 பக்கங்கள்

முதற் காண்டம் 1224 பாக்கள்

இரண்டாம் காண்டம் 970 பாக்கள்

மூன்றாம் காண்டம் 1421 பாக்கள்

3. தேம்பாவணி பற்றிய பல்கலைக்கழக ஆய்வேடுகள் பன்னிரண்டு

1. முனைவர் பா.வளன் அரசு

தேம்பாவணித் திறன்

மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை -21 (1985)

2. முனைவர் சோசப்பின் தோரத்தி

தேம்பாவணியும் இரட்சணிய யாத்திரிகமும் சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை- 5

3. முனைவர் ரீத்தா

தேம்பாவணியும் சீறாப்புராணமும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-21

4.முனைவர் அ.லூர்துசாமி தேம்பாவணியில் மேல்நாட்டு இலக்கியத் தாக்கம்

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை-5

5.முனைவர் மு.தே.செபசுதியான்

தேம்பாவணிப் பதிப்புகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி -

6.இளமுனைவர் அ.சே.சேக்சிந்தா தேம்பாவணியில் உயிரினங்களும் பயிரினங்களும்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21

7. முனைவர் அ.சே.சேக்சிந்தா

தேம்பாவணியில் அறிவியல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை- 21

8.இளமுனைவர் செமி பிரியா திருக்குறளும் தேம்பாவணியும்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21

9.இளமுனைவர் சே.சான்சி புட்பராணி

திருவிவிலியமும் தேம்பாவணியும்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி -(2014)

10.முனைவர் இலயனல் சோசப்பு

தேம்பாவணியில் சொல்லணிக் கலை

தமிழ்ப் பல்கலைக் கழகம். தஞ்சாவூர் -5 (2015)

11. முனைவர் பி.வெ. செமிப்பிரியா

தேம்பாவணியில் திருக்குறள் வாழ்வியல் அறநெறிகள், ம.சு.ப (2020)

12. முனைவர் சே.சான்சி புட்பராணி

தேம்பாவணியும் தமிழ் சந்தங்களும், ம.சு.ப. (2022)

(பேராசிரியர் முதுமுனைவர் பால்வளன்அரசு, தலைவர், உலகத் திருக்குறள் தகவல் மையம்)

ஜூன், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com