மூன்றாண்டுகள் முன்பு, ‘‘அப்பா... எனக்கு அந்த பைக்தான் வேணும்!'' என்று அடம்பிடித்தான் கல்லூரி செல்லும் மகன். அது ஒரு கேடிஎம் பைக். விலை இரண்டு லட்சம். கையில் பணமில்லை. டியூவில் வாங்கிக் கொடுத்துவிட்டேன்.
இரண்டாண்டுகள் முன்பு... புதிதாக ஒன்றரை லட்சம் கிரெடிட் லிமிட்டில் புதிய கிரெடிட் கார்டு வந்தது. அடுத்த வாரமே மனைவியின் பிறந்த நாள். லலிதாவுக்குச் சென்று 80 ஆயிரத்தைத் தேய்த்துவிட்டேன். அடுத்த சில வாரங்களில் ஒன்றே கால் லட்சத்தைத் தாண்டிவிட்டேன். இப்படிதான் நான்.
பண நிர்வாகம் அற்றவனாக, பணத்தின் மதிப்பு புரியாதவனாக ஆரம்ப நாளிலிருந்தே சுற்றிக் கொண்டிருந்தேன். தேவையோ இல்லையோ எது கண்ணில் பட்டாலும் வாங்கிக் குவிக்கும் ஒரு கன்ஸ்யூமர் இயந்திரமாக உலவிக் கொண்டிருந்தேன். ஆறு மாதத்துக்கு ஒரு மொபைல் என்று மாற்றிக் கொண்டிருந்தேன்.
சம்பாதிக்கிறோம். கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்-கைதான் அப்போதைய உளவியல் பலம். கடன் என்பது நாளைய உழைப்பின் ஊதியத்தை இன்றே செலவு செய்யும் அயோக்கியத்-தனம் என்பார் என் குமுதம் சீனியர் இளங்கோவன். அவர் சொல்வதைக் கேட்டுச் சிரித்து நகர்ந்துவிடுவேன். ஆனால்...
கொரோனாவுக்குப் பிறகு அனைத்தும் தலைகீழானது. கடந்த வருடம் ஜூலையில் கொரோனா காரணமாய் என் வேலை பறிபோனது. அதன்பிறகு, சிறகுகளாய் இருந்த மனம் சிறைக்களமாய் சுருங்கிப் போனது. ஊரடங்கின்போது, கையில் பணமிருந்தது. ஆனால், செலவு செய்ய கடைகள் இல்லை. ஊரடங்கு தளர்ந்த பின்னோ கடைகள் இருந்தன. கையில் பணம்தான் இல்லை. என்ன ஒரு முரண். ஹா... ஹா... ஹா...
வருமானம் குறையும்போது அதற்கேற்ப செலவைக் குறைத்துக் கொள்ளலாம். வருமானமே இல்லை என்றான பின்? மனதில் அப்போதுதான் ஒரு தெளிவு பிறந்தது. வாங்கிக் குவிப்பதல்ல வாழ்க்கை. அது ஒரு மனநோய். பணத்திமிர். ஊதாரித்தனம்.
பணம் உள்ளவன், இல்லாதவன் இரண்டு பேரையுமே ஒரே தராசுத் தட்டில் நிறுத்தி அழகு பார்த்தது அந்தத் தீநுண்மி. ஊரடங்கு பொதுவுடைமையின் இன்னொரு வடிவம் என்றே தோன்றுகிறது.
நண்பர்களே, இப்போது வருவாய் இல்லை என்ற வருத்தமில்லை எனக்கு. என் கடந்த கால ஊதாரித்தனங்களால் கையிருப்பும் இல்லை. கொரோனா பறித்தது பெருவாழ்வு. அதேநேரம் அது கொடுத்தது பெரும் ஞானோதயம். ஒவ்வொரு ரூபாயும் முக்கியம் என்பதை அது உணர வைத்து விட்டது. சேமிப்பை விட முக்கியம் சிக்கனம்.
சிக்கனம் இருந்தால் சேமிப்பின் நிலை எப்போதும் டாப்பில்தான் இருக்கும்.
நான் இதில் இரண்டு நிலைகளைப் பார்க்கிறேன். கொரோனாவிற்குப் பிறகு குறைந்த வருமானம் உள்ளவர் சேமிப்பைக் கை கொள்கிறார். அது முடியாவிட்டாலும் முன்பிருந்த செலவுகளை சுருக்கிக் கொள்ளவாவது செய்கிறார்.
இன்னொருபுறம், கஞ்ச மகாப்பிரபுவாய் இருந்துசேமிப்பே வாழ்நாள் லட்சியம் என்று நினைத்து ஒவ்வொரு பைசாவையும் கணக்கிட்டுச் செலவழித்தவர்கள். இன்று டிஜிட்டல் டிவி, மைக்ரோ வேவ் ஓவன் என்று அதிரி புதிரி செலவு செய்து வீட்டு உறுப்பினர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன். கொரோனா நிலையற்ற வாழ்க்கையை அவர்களுக்கு உணர்த்திவிட்டது போலும்.
இவை இரண்டுமே தேவையில்லை. தேவைக்கு மட்டுமே செலவு செய்து வாழ்வை மகிழ்ச்சியுடன் செலுத்தினால் நலம் விளையும் என்பதே கண்ணுக்குப் புலப்படாத அந்தக் கிருமி எனக்குக் கொடுத்த ஞானக்கண். ஆம் நண்பர்களே... நாம் நுகர்ந்துகொண்டே இருக்கும் இயந்திரங்கள் அல்ல!
ஜூலை, 2021