ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு வயசானவங்களையே பிடிக்காது. ஒரு நாள் எல்லா வயசானவங்களையும் மலையில் இருந்து கீழே தள்ளிவிட்டுக் கொல்லணும் என்று உத்தரவு போட்டான். ஊர்மக்கள் எல்லாம் தங்கள் வீட்டில் இருந்த தாத்தா பாட்டிகளை அவன் சொன்னமாதிரி பயந்துகிட்டே செஞ்சிட்டாங்க. ஒரு சின்ன பையன் இருந்தான். அவனுக்கு ஒரு தாத்தா. அவரை மலையில் இருந்து எறிவதற்காக சாக்குப்பையில் கட்டி தூக்கிட்டுப்போனான். வழியில் தாத்தா கேட்டார். “ஏம்பா பேராண்டி எம்மேலே பாசம் இல்லையா? உன்னை சின்னவயசுல இருந்து நான் தானே வளர்த்தேன்”“இருக்குது. ஆனா ராஜா கொன்னுபோடுவானே” என்றான் பேரன் கண்ணீருடன்.
“என்னைக் கொண்டுபோய் வீட்டில் நிலவறையில் ஒளித்துவை. ஒரு வேளை சாப்பாடு மட்டும் கொடு. யாருக்கும் தெரியாது” என்றார் தாத்தா. பேரனும் அப்படியே செய்தான்.
சிலநாள்களில் ஊரில் ஒரு பண்டிகை. போட்டிகள் வைத்து ராஜா ஆயிரம் வராகன் பரிசு அறிவித்தான். முதல்போட்டி, இரண்டு துண்டு பனைமரங்கள் இருந்தன. இதில் அடிமரம் எது, முனை மரம் எது என்று சொல்லவேண்டும். இரண்டும் ஒரே மாதிரி இருந்ததால் யாருக்கும் தெரியவில்லை. பேரன் தாத்தாவிடம் போய் ஆலோசனை கேட்டான். ரெண்டு மரத்துண்டையும் தண்ணீரில் போடு. அடிமரம் தண்ணீரில் மூழ்கிவிடும் என்றார். பேரன் அப்படியே செய்து போட்டியில் வென்றான்.
மறுநாள் இன்னொரு போட்டி. மனிதன் வாசிக்காமலே சப்தம் வரும் மிருதங்கம் கொண்டுவரவேண்டும். பேரனிடம் தாத்தா சொன்னார். “மிருதங்கத்தின் ஒரு பக்கத்தைப் பிரித்து அதற்குள் தேனீக்களை விட்டு மூடிவிடு. மிருதங்கத்தில் இருந்து சப்தம் வரும்”
பேரன் அப்படியே செய்து எடுத்துக்கொண்டுபோனான். மிருதங்கத்தை உயர்த்தினால் தேனீக்கள் உள்ளிருந்து இருபக்கமும் கொட்டி சப்தம் எழுந்தது. மீண்டும் பரிசு கிடைத்தது.
அடுத்தபோட்டி சாம்பலில் இருந்து கயிறு திரிக்கவேண்டும். மக்கள் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தார்கள். தாத்தா தண்ணீர் இறைக்கும் கயிற்றை சுருட்டி, விளக்கெண்ணையில் ஊற வைத்து ஒரு முனையில் இருந்து பற்ற வைத்து எரிந்தபின்னர் சாம்பல் கயிறு வடிவிலேயே இருக்கும். அதை எடுத்துக்கொண்டு போய் காட்டுமாறு கூறினார். பேரனின் வித்தையைக் கண்டதும் ராஜா ஆச்சரியப்பட்டுபோனான்.
இவ்வளவு சின்னப்பையனுக்கு இப்படியொரு மூளையா என்று நினைத்து அவனைக் கூப்பிட்டு விவரம் கேட்டான். பையன் பயந்துகொண்டு ராஜா காலில் சடாரென விழுந்து தாத்தாவை நிலவறையில் வைத்திருக்கும் விஷயம் கூறினான். அப்போதுதான் ராஜாவுக்கு வயதான பெரியவர்கள் என்றால் அனுபவத்தால் அறிவு மிக்கவர்கள். விலைமதிக்கமுடியாத மாணிக்கக்கற்கள் போன்றவர்கள் என்பதை உணர முடிந்தது.
இந்த கதையைச் சொன்னவர் எழுத்தாளர் கி.ரா. இந்த கதையில் வரும் பெரியவரும் கி.ரா. தான் என்று சொன்னால் மிகையில்லை.
நான் முதன்முதலில் படித்த கி.ரா.வின் நூல் கோபல்ல கிராமம். நாயகனோ நாயகியோ இல்லாத நாவல் என்கிற விஷயமே என்னை ஆச்சரியப்படவைத்தது. கம்மா நாயுடுகளின் வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. ஆந்திர பகுதியில் இஸ்லாமிய அரசன் ஆண்டபோது, இவர்கள் குடும்பத்தின் அழகான பெண்ணொருத்தியை கண்டு மோகம் கொள்கிறான்.அவனுக்கு அஞ்சி ஊரைக் காலி செய்து, தெற்கே வந்து செட்டில் ஆனவர்கள். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வந்து காடும் கரையும் திருத்தி கரிசல் மண்ணில் எப்படி வாழ்ந்தார்கள் என்று சொல்லும் நாவல். கோபல்ல கிராமத்து மக்கள் என்று அடுத்த நாவலை எழுதினார்கள். அந்த ஊர்களின் பழக்க வழக்கங்களை சொல்லும் நாவல். என்னுடைய ராஜபாட்டை அல்ல தொடர் ஜுனியர் விகடனில் முடிந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கரிசல்காட்டுக் கடுதாசி அவர் எழுதிய தொடர். கரிசல் வட்டார வழக்கு அகராதி என்ற அகராதியையும் அவர் உருவாக்கினார். கண்ணெதிரே எதைப்பார்த்தாலும் அதற்கு குட்டியாக ஒரு கதை வடிவம் கொடுத்துவிடும் கதை ஊற்று அவர். இத்தனைக்கும் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போகாதவர்.
நான் சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவன். கி.ரா.வையும் அவர்தம் துணைவியார் கணவதி அம்மையாரையும் என் பெற்றோராக தத்து எடுத்துக்கொண்டேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அப்படியொரு உறவு. அவர்கள் என்மீது மிகுந்த பாசமாக இருப்பவர்கள். இரண்டுமாதங்களுக்கு முன்புகூட அவர்களைச் சந்தித்துவந்தேன்.
பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத அவரை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்ற அழைத்தார்கள். அங்கும் மரத்தடியில் உட்காரவைத்துத்தான் ஆய்வுமாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். இப்போது சொந்த ஊரில் யாரும் இல்லையென்பதால் பாண்டிச்சேரியிலேயே வசித்து வருகிறார். பாசமான ஒரு மனிதர் கூட்டம் அவரைச் சுற்றி எப்போதும் இருக்கும்! நம் மொழியின் ஆகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அவரைத் தரிசித்து ஆராதிக்கும் நட்புக்கூட்டம் அது!
ஜனவரி, 2018.