கிச்சுகிச்சு பேய்கள்

சிரிப்புப் பேய்!
கிச்சுகிச்சு பேய்கள்
கிச்சுகிச்சு பேய்கள்
Published on

பேய்ப்படங்கள் ஓடும் தியேட்டர்கள் எப்போதுமே காதலர்களுக்குக் கொண்டாட்டமான இடம். முக்கியமாய் காதலன்களுக்கு. 

காரணம் அவள் பேய் வரும் காட்சிக்கு பயந்து போயோ? அல்லது பேய்க்கு பயந்தது போல நடிக்கும் போதோ அவன் தோளில் சாய, இதான் சாக்கு என காதலன்கள் தங்கள் பேய் வேலையைக் காட்ட துவங்க ஏதுவான இடம் பேய் படம் ஓடும் இடம் தான். ஆனால் சில வருடங்களாய் பேய்கள் காமெடி செய்ய ஆரம்பித்ததனால் அந்த பயம் போய் இடைவேளையில் அவள் வாங்கித் தின்னப் போகும் பெரும் தீனியை நினைத்து பேயாய் நடுங்கிக் கொண்டிருக்கும் காதலன்கள் தான் அதிகமாகிப் போனார்கள்.

பேய்ப் படமென்றால் ராத்திரி ஷோவுக்கு போய்விட்டு, தனியாக வருவதே கெத்து என்றிருந்ததை, யாருமிருக்க பயமேன், இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களைப் பார்த்துவிட்டு, கோலாகலமாய் சிரித்துக் கொண்டாடி வரும் காலமாகிவிட்டது. மஹா டெரர் படங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்ட சில ஹாரர் படங்கள் காமெடிப் படங்களாய் மாறிய தருணங்கள் அதிகம் உண்டென்றாலும், ஹாலிவுட்காரர்கள் அந்த காலத்துலேயே பேயை வைத்து காமெடி செய்திருக்கிறார்கள். குறிப்பாய் பிரபலமாய் ஹிட்டடித்த படங்களை ஸ்பூப் செய்யும் வகைப் படங்கள் அதிகம். அதே நிலைதான் தமிழ் காமெடி பேய் படங்களுக்கும். சின்ன பட்ஜெட்டில் எத்தையாவது செய்து சிரிக்க வைத்தால் படம் பெரிய ஹிட். பெரும்பாலான பேய் காமெடிப் படங்களில்  படத்தில் நடிக்கும் நடிகர்கள் பயந்து நடுங்குவதையோ, அல்லது அவர்கள் எதிரில் பேய் இருப்பது தெரியாமல் பேய் அவர்களை பயமுறுத்துவது, கூடவே கிளு கிளு செக்ஸ் காட்சிகள்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற ஆரம்பித்த பிறகு, பயப்படுவதற்காக பேய்ப் படம் பார்த்தவர்கள் இன்றைக்கு காமெடியாய் பேய் இல்லைன்னா பார்க்க விரும்பவில்லை என்பது அப்படங்களின் வசூல் தெரிவிக்கிறது.

அது மட்டுமல்லாமல் கொஞ்மாவது கதை என்ற வஸ்து இல்லாவிட்டால் சீரியஸ் பேய்ப்படங்கள் வேலைக்காகாது. சமீபத்தில் வெளியான சீரியஸ் ஹிட் பேய்ப்படம் அவள். முதுகுத்தண்டு சில்லிட்ட வைத்துவிட்டது. பயந்து உச்சா போய்விட்டேன் என்றெல்லாம் பேஸ்புக்கில் விமர்சனம் வந்தது. ஆனால் அதன் ஒரிஜினல் படமான எக்ஸார்ஸிஸ்ட், பார்த்தவர்கள் அது
கொடுத்த இம்பாக்டில் பாதி கூட இல்லை என்று
சொன்னார்கள்.

கிச்சுகிச்சு பேய்கள்
கிச்சுகிச்சு பேய்கள்

ஆனால் அதே நேரத்தில் பேயை வைத்து காமெடி செய்ய எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது தமிழ் காமெடி பேய்ப்படங்களின் நிலை. சமீபத்தில் வெளியான காமெடி பேய் பட ட்ரைலரில் இது வரைக்கும் வந்த பல ஹிட் பேய் படங்களை ஸ்பூப் செய்தது மட்டுமல்லாமல் பேய் படங்கள் என்றாலே மொட்டை ராஜேந்திரன் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் வந்துவிட்ட நிலையில், இதில் ராஜேந்திரனுக்கு ‘ஆய்' அலம்பி விடுகிறது ஒரு பேயின் கை. எழுதும் போதும், சொல்லும் போதும், ஒரு மாதிரி முகம் சுளிக்க வைத்தாலும், டீசர் பார்த்த போது குபுக்கென சிரிப்பு வராமல் இல்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் காமெடி அவ்வளவு சீரியசான வியாபாரம். அதிலும் பேய்க்காமெடி என்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. இருக்குற பேய் படங்களை எல்லாம் பார்க்கணும். அத்தனை படங்களையும் ஒரு சேர ஸ்பூப் செய்ய கண்டெண்ட் ரெடி செய்ய வேண்டும்.  அதை சரியான நடிகர்களை தெரிவு செய்து நடிக்க வைப்பதன் மூலம் மக்களிடையே சென்று சேர வேலை செய்ய வேண்டும். இத்தனை வேலை செய்து மக்கள் சிரிக்காமல் போன பல பேய்ப்படங்களும் உண்டு. அதே நேரத்தில் சுந்தர். சி போன்ற இயக்குநர்கள் காமெடி, சீரீஸ், மாயாஜாலம், மாந்திரீகம் என கலந்துகட்டி அரண்மனை 1&2 என மாஸ் வசூல் செய்து அள்ளியும் இருக்கிறார்கள்.

நண்பர் ஒருவர் பேய் என்று ஒரு படத்தைப் போட்டு விளம்பரம் வந்துவிட்டால் உடனே படம் பார்க்கத் தயாராகிவிடுவார். அப்படி என்னாங்க இருக்கு? ஒரு மாதிரி ரொட்டீன் தானே? எப்படி எல்லா பேய் படத்தையும் பாக்குறீங்க? என்று ஆர்வமாய் கேட்டேன்.  அதே கதை, எம்.ஜி.ஆர். காலத்துலேர்ந்து. வேற வேற ஆர்டிஸ்ட் அதே ஹீரோ ஒர்ஷிப் கதைகளை நடிக்கலை. நாமளும் பாக்கலை? அது போலத்தான் பேய் படமும், என்றார் அவர்.
தியேட்டரில் பயமுறுத்தும் காட்சிகள் வரும் போது கத்துவது ‘நான் பயப்படல'எனும் பய
கத்தல்கள்தான். அதையே பட நாயகர்கள் திரையில் செய்தால் காமெடிப் பேய் படங்களாகிறது. காஞ்சனா 1,2,3 போன்ற படங்கள் யாரையும் பயமுறுத்தி பார்த்ததில்லை. ஆனால் அதில் வரும் இரட்டை அர்த்த காமெடிகள் ஒர்க்கவுட் ஆகி கல்லாக்கட்டி விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளரும் சிரித்தார்கள்.

விநியோகஸ்தர்களிடம் கேட்டால் காமெடி பேய்ப்படங்கள் தான் மினிமம் கேரண்டி என்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கும் அதே நிலைதான் ரெண்டு சண்டை. நாலு ஹாரர் எஃபெக்ட். ஏழெட்டு காமெடி காட்சிகள் இது போதும் ஹிந்தி ரைட்ஸ் விக்க என்கிறார்கள். தற்போதை புதிய ட்ரெண்டு எதாச்சும் நாய், பூனை, கிளி போன்றவை கட்டாயம் இருக்க வேண்டியிருக்கிறது. வடநாட்டவர்கள் நடிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ இவைகள் இருந்தால் நிச்சயம் பார்க்கிறார்கள். இதை அவர்கள் கொடுக்கும் விலையும், சேனலுக்கு கிடைக்கும் டி.ஆர்.பியும் நிருபிப்பதால் கொலைக்குத்து.

இதை நினைத்து காமெடியாய் சிரிப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும் நிதிப் பிரச்சனையில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு கைக் கொடுக்கும் ஒரே விஷயம் காமெடி - மிருக-பேய்ப்படங்கள். இனி வரும் சில வருடங்களுக்கு இந்த வகை படங்கள் மட்டும் சுமார் நூறாவது வரும் என தோன்றுகிறது. இது நமக்கு பெரும் துக்க காமெடியாய் கூட மாற வாய்ப்பிருக்கிறது.

(கட்டுரையாளர் விரைவில் ஒரு பேய்ப் படம் இயக்க உள்ளாராம்)

பிப்ரவரி, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com