கிசுகிசுவின் உளவியல்!

கிசுகிசுவின் உளவியல்!
Published on

மனிதன் பேசத்தொடங்கிய காலத்தில் இருந்தே அவன் புரளி பேச ஆரம்பித்து இருப்பான். பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரம் வருடங்களாக மனிதன் செய்து கொண்டிருப்பதுதான். இதை எதற்காகச் செய்கிறான்? இதன் பின்னால் என்ன உளவியல் இருக்கிறது?

இல்லாத ஒரு நபரைப் பற்றி இரண்டு பேர் பேசிக் கொள்ளுவது தான் புரளி (Gossip). மனிதன் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் அவனால் நிச்சயமற்றதன்மையை (Uncertainty) தாங்கமுடியாது. அவனுக்குத் தகவல்கள் தெரிந்திருக்கவேண்டும். உதாரணத்திற்கு ஆதிகாலத்தில் மக்கள் இனக்குழுவாக இருந்தபோதே, பக்கத் திலுள்ள இன்னொரு இனக்குழுவோ அல்லது கூட்டமோ தாக்குதல் நடத்தப் போகிறார்களா? இல்லையா என்று தெரிந்துக்கொள்ளுவது மிக மிக முக்கியம்.

 தகவல் தான் ஒரு மனிதனுக்கு  (Information is power) வலிமையைக் கொடுக்கிறது. அப்படி இருக்கும்பொழுது அந்த பக்கத்து இனக்குழுவிலே என்ன நடக்கிறது? என்பதை அவன் கேட்பது, அறிந்துக்கொள்ளுவதுதான்  அந்த இனக்குழுவுக்கு உயிர்வாழுவதற்கான (survival advantage) வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இப்படித்தான் அவன் முதன்முதலில் புரளி பேசுவதாக ஆரம்பித்திருப்பான். அதுதான் ஒட்டு கேட்பது. அதாவது உளவு பார்ப்பது போன்ற விசயங்கள். இதில் இருந்துதான் தொடங்குகின்றன.

அதுபோல் நீங்கள் பள்ளி மாணவன், உங்களால் ஒரு தவறு நடந்துவிட்டது. உங்களைப் பற்றி பள்ளி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் என்ன செய்யலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். அப்போது நமக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள்  என்பதை நாம் தெரிந்துக்கொள்ள முயலுவோம். இந்த மனநிலைதான் புரளி பேசுவதற்கு பின்னால் இருக்கிறது. ஆனால் தெரிந்துகொள்ள முடியாமல் போவதை நிச்சயமற்ற தன்மை என்கிறோம். இதை மனிதனால் தாங்கிக்கொள்ளமுடியாது.

அடுத்தவர்களைப்  பற்றி பேசுவதே மற்றவர்களிடத்தில் நாம் மதிப்பாக பார்ப்பதற்காகதான்..  குறிப்பாக. ஒரு பிரபலத்தைப் பறறி மற்றவர்களுக்கு தெரியாத தகவல்களை நாம் சொன்னால் நமக்கு கிடைக்கும் மதிப்பும் ஒருவகையான போதைதான். அது புரளி பேசுவதாக கிசுகிசு பேசுவதாக வடிவம் பெறுகிறது. 

யூடியூப் சேனலில் பிரபலங்களைப்பற்றி புதிய தகவல்களை யாரும் அறியாத தகவல்களை நாம் சொல்லும்போது ஒரு மதிப்பு உயர்கிறது அல்லவா? இதுவும் ஒருவகையில் புரளிபேசும் மனநிலைதான்.

ஒருவர் புரளி பேசுகிறார் என்றால் அவருக்கு நிறைய தகவல்கள் தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். அவரை நாம் மதிக்கிறோம். அவருடைய மதிப்பு உயர்கிறது இதனாலேயே விசயங்கள் தெரியாவிட்டால்கூட மக்கள் மற்றவர்களைப்பற்றி புரளி பேசுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆகவே தகவல்களை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. தகவல்கள் சொல்லுபவர்களுக்கு  மதிப்பு அதிகரிப்பதால் அடுத்தவர் களைப்பற்றி புரளி பேசுவதும் அதிகமாகிறது.

புரளி பேசுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால் பொதுவாக ‘பணக்காரர்கள் தூங்கமாட்டார்கள்' என்று சொல்லுவோம். அது தன்னைதானே ஏமாற்றிக்கொள்ளும் விசயம்தான். ‘நம்மிடம் பணம் இல்லை அவரிடம் பணம் இருக்கிறது'. ஆக, அவன் தூங்கமாட்டான்' என்று சொல்லி நமக்கு நாமே ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறோம். அதுபோல அந்த பணக்காரருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது அவரால் எதையும் சாப்பிட முடியாது என்றெல்லாம் பேசி, அவர் வீட்டில் பயங்கர பிரச்னை; அவர் மகள் அவர் பேச்சை கேட்பது கிடையாது... இந்தமாதிரியெல்லாம் கற்பனை செய்து பேசி நம்முடைய ஆற்றாமைகளுக்கு ஒரு வடிகாலாகவும்,, ஆறுதலாகவும் இந்த புரளியைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

மனிதன் சமூக விலங்கு. இந்த சமூக விலங்காக இருக்கும்வரை புரளி பேசுவது இருக்கும். இதன் நவீன வடிவங்களாக முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் 80 சதவீத தகவல்கள் புரளிதான். அந்த தகவல்களுக்கு நிறைய விருப்ப குறியீடுகள் (Likes) கிடைக்கிறது என்பதே மதிப்பு உயர்வதுதான். உண்மையோ பொய்யோ அந்தநேரத்தில் கவனத்தை ஈர்க்கிறார்கள். இந்த கவன ஈர்ப்பும் புரளி பேசுவதற்கு முக்கியமான விசயம்தான். ஆக மனிதன் சமூக கூட்டத்தில் இருக்கும்வரை புரளி பேசும் மனப்பான்மை அதிகமாகதான் செய்யும். சிலர் இதை அதிகமாக செய்வார்கள்  நேரடியாக ஒரு பிரச்னையை சமாளிக்கமுடியாதவர்கள்  இதுபோன்ற மறைமுகமாகத் தாக்குதல்களை நடத்துவார்கள். இந்த ஆளுமை குணம் உள்ளவர்கள் புரளி பேசுவதில் அதிகமாக ஈடுபடுவார்கள்.

உண்மையை நேருக்கு நேராக சந்திக்கவேண்டும். உண்மையை எதிர் கொள்ளவேண்டும். இந்த மனப்பான்மை இருந்தால் புரளி பேசுவது தானாக குறைந்துவிடும். நமக்கு ஒரு தகவல் வரும்போது நாம் பகுத்தறிவோடு கேள்வி கேட்கவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என இணையத்தில் உலாவுவதுபோல் நம்பாமல் கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் சிந்தித்தால் இதுபோன்ற வதந்திகள் மற்றும் புரளிகள் பரவுவதை நாம் தடுக்கமுடியும்.

மருத்துவர் ராமானுஜம், மனநல மருத்துவர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி

சந்திப்பு: மா.கண்ணன்

ஜூன், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com