காலத்தின் சாட்சியம்

காலத்தின் சாட்சியம்
Published on

பென்ஹர் திரைப்படத்தின் புகழ் பெற்ற சாரியட் பந்தயத்தின்போது, திடீரென்று ஒரு சிவப்பு நிற கார் திரையின் ஒரு மூலையில் தெரிந்ததாகவும், எங்கோ ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்ததாகவும் நிறைய கதைகளை படித்திருக்கின்றேன்.  ஹாலிவுட் திரைப்படங்களிலும் பிற பிரம்மாண்ட படைப்புக்களிலும் பீரியட் படங்களுக்கு தனி கவனம் எடுத்து அந்த கால நடைமுறைக்கேற்ற உடை அலங்காரம்  மற்றும் அரங்க நிர்மாணம், மொழிநடை சரியான முறையில் வெளிப்படுத்தியதுண்டு. இந்திய திரைப்படங்களை பொறுத்தவரை சமூக படங்கள் என்று சொல்லப்படும் Contemporary திரைப்படங்கள், இங்கு திரைப்படங்களின் அறிமுக காலத்திற்கு  நீண்ட காலத்திற்கு பிறகே தயாரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இங்கு புராணப்படங்கள்தான் தயாரிக்கப்பட்டன. இதற்கான அரங்க அமைப்புக்கும் உடை அலங்காரத்திற்கும் ரவி வர்மாவின் ஓவியங்களே ஆதாரமாக இருந்தன.  அவருடைய  புகழ் பெற்ற பல ஓவியங்களில் அரண்மனை உட்புறங்கள், நெடிதுயர்ந்த தூண்கள், திரைச்சீலைகள், ஆர்ச்சுகள், ஆடை வடிவமைப்புக்கள் என்று இருந்த பலவும் இன்றும் நம்முடைய பீரியட் படங்களின் மூலபொருட்களாக இருக்கின்றன. நம் நாட்டின் முதல் படமாகிய தாதா சாகிப் பால்கேயின்  அரிச்சந்திராவின் காட்சியமைப்புக்கள் அனைத்துமே ரவி வர்மாவின் ஓவியங்களிலிருந்து எடுத்தாளப் பட்டவையே! மீசையுள்ள சிவனை , திருவிளையாடல் போன்ற படங்களில் நாம் பார்த்தது அவருடைய கிருபையால்தான்.

பீரியட் வகைகளுக்கு  சரித்திர படங்களே பிரதானமாக இருந்தாலும், சில சமூகப்படங்களையும் கணக்கில் கொள்ளலாம். ஒரு புதினமாக வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’  திரைப்படமாக வெளிவந்தபோது அந்த கால கட்டத்துக்குரிய நாடக மேடைகள், ரயில் வண்டிகள், சமஸ்தானங்கள் , இசை மற்றும் நாட்டிய கலைஞர்களுக்கே இருந்த கர்வம் போன்ற விஷயங்களை அந்த காலச்சூழலில் வெளிப்படுத்த முயன்றார் இயக்குனர். வண்ணங்கள் தோய்த்த அரங்கங்கள், தமிழக சூழலுக்கு  சிறிதும் சம்பந்தமில்லாத ஜெய்ப்பூர் அரண்மனை சுற்றுப்புரங்கள், குதிரைப்படைகள் , பளபளக்கும் ஆடை அணிகலன்கள் என்று வீரபாண்டிய கட்டபொம்மன் வந்த காலகட்டத்திலேயே வெளிவந்த ‘சிவகங்கை சீமை’ சிறிது வித்தியாசத்தை காட்டியது. கட்டபொம்மனின் ஆர்ப்பாட்ட அலங்காரங்களுக்கு முன் கருப்பு வெள்ளை மருதுபாண்டியர் இயல்பாக தோற்றமளித்தனர். வீரப்பா மிக இயல்பாக, வெற்றுடம்புடன் ஒரு தார்பாய்ச்சி வேட்டி மட்டும் கட்டி தோன்றினார். அரங்கங்களும் அதிக ஆடம்பரமில்லாமல் இருந்தன.

பீரியட் படங்களுக்கு மெனக்கெடுவதில் பல சிரமங்கள் நம் இந்திய சூழலில் இருக்கின்றன. ஆராய்ச்சியில்  யாருக்கும் அக்கறை இல்லை. தத்ரூபமான  அரங்கங்கள் நிர்மாணிப்பது  செலவை இழுக்கும். அரங்கங்கள் இயல்பாக இருப்பதை விட ஆர்ப்பாட்டமாக இருப்பதையே விரும்புகின்றனர். பழியோ ரசிகர்கள் தலைமீது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் அரண்மனைக்கு மைசூர் போகவேண்டிய நிர்ப்பந்தம். ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் இன்றும் இருக்கிறது. அவன் வாழ்ந்த அரண்மனை எப்படி இருந்தது என்று நம் யாருக்கும் தெரியாது. அரசர்கள் தங்கள் வாழ்விடங்களை தாங்கள் கட்டிய ஆலயங்களைப்போல உறுதியாக அமைக்கவில்லை என்று தோன்றுகிறது. ‘ராஜ ராஜ சோழன்’ படம் பார்த்து  இப்படி ஒரு வண்ணக் களேபரமான மாளிகையில்தான் அவன் வசித்தான் என்று நம்ப வேண்டியிருக்கிறது. அந்த காலத்தில் மிக சிரத்தை எடுத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘பார்த்திபன் கனவு’. இதற்கும்  ‘சிவகாமியின் சபதம்’ தொடர்கதைக்கும் ஓவியங்கள் வரைய மணியம் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கல்கியுடன் அவர் அஜந்தா எல்லோரா குகைகளுக்கு பயணித்து அந்த ஓவியங்களை தன் ஸ்கெட்ச் புக்கில் நகலெடுத்து அதே பாணியில் சித்திரங்கள் தீட்டினார். தலை அலங்காரங்கள், உடை பாணிகள், பின்னணி காட்சிகள், படை வீரர்கள் என  அனைத்தும் அந்த குகை ஓவியங்களை ஆதாரமாக வைத்து உருவாக்கியவை. பார்த்திபன் கனவு திரைப்படமானபோது மணியம் அதன் அரங்க வடிவமைப்பாளராகவும் உடையலங்கார வடிவமைப்பாளராகவும் பணி புரிந்தார். வைஜயந்திமாலா அந்த காலகட்டத்தை பிரதிபலித்தாரோ இல்லையோ, ஒரு அழகிய அஜந்தா அழகியாக காட்சியளித்தார். ஆறு வருடங்களுக்கு பிறகு இதே வைஜயந்திமாலா நடித்த ‘ அம்ரபாலி’ இந்திபடத்திற்கு உடைகள் வடிவமைக்க பானு அத்தையா அதே அஜந்தாவுக்கு குறிப்புகள் எடுக்க சென்றார் என்பது ஒரு கூடுதல் தகவல்.

நாம் வாழ்ந்த நூற்றாண்டிலேயே, ஆனால் நம் காலத்திற்கு முந்திய காலகட்டத்தில் நிகழ்ந்த திரைப்படங்களின் காட்சியமைப்புக்களும்  நிகழ்வுகளும் அமைக்க சுலபமானவைதான். மலையூர் மம்பட்டியானில் சேலம் பக்கத்து வாசம் இருந்தாலும், ஜெயமாலினி வந்து கதையை கெடுத்தார், அதாவது அவரது உடையலங்காரம் வெகு மிகையாக, எண்பதுகளின் கவர்ச்சிக்கன்னி தோற்றத்திலேயே அமைக்கப்பட்டது. ஞான ராஜசேகரனின் பாரதி, பெரியார் திரைப்படங்கள் பீரியட் பட வரிசையில் குறிப்பிடத்தகுந்தவை. கப்பலோட்டிய தமிழனில் காண்பிக்கப்பட்டதைவிட பாரதி இதில் விரிவாக காட்சியளித்தார். சுதந்திர போராட்ட காலத்திய கதாபாத்திரங்களும் அரங்கங்களும் சிரத்தை எடுத்து அமைக்கப்பட்டன. தலைப்பாகை இல்லாத பாரதியை பல காட்சிகளில் பார்த்தோம். பாரதியின் பத்திரிகை அலுவலக காட்சிகளும் அதை சார்ந்த பொருட்களும் அந்த குறிப்பிட்ட காலத்தை கொண்டு வருவதில் ஒரு நல்ல பங்கு வகித்தன.  மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு வெற்றிகரமாக ஓடிய பாரதிக்கு பிறகு வந்த பெரியார் , அந்த அளவுக்கு ரசிக்கப்படாவிட்டாலும் ஒரு நல்ல முயற்சியாகவே பேசப்பட்டது....

பாரதிராஜாவின் நாடோடித்தென்றல் வெள்ளையர்  ஆட்சியை பின்புலமாக வைத்த கதை. அந்த காலகட்டத்துக்கு கொஞ்சமும் பொருந்தாமல் இருந்தன பொற்கொல்லர் கார்த்திக்கின் சிகையலங்காரமும், மார்வாடி ஜாக்கெட்டும். பின்னர் வந்த மதராசப்பட்டணத்திலும் இதே ஜாக்கெட்டின் இன்னொரு திருத்தப்பட்ட பிரதியை அணிந்து வந்தார் சலவைத்தொழிலாளி ஆர்யா! பிரியதர்சனின்  காஞ்சிபுரம் தமிழில் அபூர்வமாக வந்த இன்னொரு பீரியட் படம். ஒளிப்பதிவின் தன்மையை கொண்டு காலச்சூழலை கொண்டு வர முயன்றார் இயக்குனர்.

இயக்குனர் மணிரத்னம் ‘இருவர்’ என்ற படத்தை கொடுத்தார். எம்ஜியார் கலைஞர் இருவருக்கும் உள்ள நட்பையும் அவர்களின் அரசியல் வாழ்க்கையையும் ஒரு கற்பனைச்  சித்திரமாய்  அளித்தார். அற்புதமாக வந்திருக்கவேண்டிய பின்புலங்கள் மதுரை நாயக்கர் மகாலில் வீணடிக்கப்பட்டன. நாயகனில் ‘ நீ சிரித்தாள் தீபாவளி’ தந்த கால நினைவுகள் இருவர் படப்பாடல்களில் இல்லாமல் போனது. நிறைய காட்சிகளில் ஷியாம் பெனகல் இயக்கிய பீரியட் படமான  ‘பூமிகாவின் ’ பாதிப்பு தெரிந்தது .

தமிழில் நல்ல பீரியட் திரைப்படங்கள் தயாரிப்பது இன்றுள்ள சூழலில் கடினமானதொன்றுமில்லை. நவீன கணினி உத்திகள் திரையில் ஒரு தஞ்சை பெரியகோவிலையோ தாஜ்மகாலையோ  நிர்மாணித்துவிடும். பெரிய பட்ஜெட் படங்களில் முக்கால் பங்கு முக்கிய நடிகருக்கே சென்று விடுவதால், படைப்பாளிகள் தயங்குகின்றனர். திரைப்படங்கள் திரைப்படங்களாக மட்டும் வெளி வரும் காலங்களில் நிச்சயமாக இது நடக்கும்.!

பிப்ரவரி, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com