காலக்கண்ணாடி மட்டுமே!

காலக்கண்ணாடி மட்டுமே!
Published on

ஒரு பத்திரிகைக்கு ஆசிரியரே முதலாளியாகவும், அந்த ஆசிரியர் பெரும் இலக்கிய ரசிகராகவும், மக்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ளும் உறுதி உள்ளவராகவும் இருந்தால் திறமைமிக்க எவரையும் தனது நிறுவனத்தை விட்டு வெளியேற விட மாட்டார்.  அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமிழ் பத்திரிகை உலகம் வளர்ந்து வந்தது.

ஒரு நிகழ்ச்சி!

கல்கியின் பேனாவன்மை ஆனந்த விகடனை வளர்த்தது போல, மாலியின் கைவண்ணமும் விகடனை வளர்த்தது. மாலியின் ஓவியங்கள் காலத்தை கடந்து நிற்பவை. இப்போதும் பிரமிப்பூட்டும். மாலிக்கு தனது ஓவியங்கள் அச்சு அசலாக அப்படியே இதழில் அச்சாக வேண்டும். துளியும் பிசிறு அடிக்க கூடாது. தீபாவளி மலர்களில் அவரது வண்ண ஓவியங்கள் மிக நுணுக்கமாக  ‘பிளாக்' செய்யப்படும்.  பிளாக் செய்வது என்பது இன்று கிடையாது. இது ஆப்செட் காலம்!  அன்று அது ஒரு தனி பிரிவாகவே இயங்கும்.  மாலியை திருப்திப் படுத்துவது எளிதல்ல.  அவருக்கு திருப்தி இல்லை என்றால் ‘பிளாக்கை' தூக்கி எறிந்து விடுவார்!

பத்திரிகை அச்சாகி வந்த பிறகு தனது ஓவியத்தை பார்த்து மாலி முகம் சுழித்துக் கொண்டால், அவ்வளவுதான். ‘‘ நான் இங்கே வேலை செய்வதில் பிரயோஜனம் இல்லை!'' என்று கத்திவிட்டு விடுவிடுவென்று ஆசிரியர் எஸ்.எஸ். வாசன் அறைக்குச் சென்று ராஜினாமா கடிதம் கொடுத்து விடுவார். வாசன் ஒன்றும் பேசாமல் ராஜினாமாவை ஏற்று கணக்கு பார்த்து உடனே செட்டில் பண்ணி விடுவார்!

மாயவரம் அருகே திருவிசைநல்லூரில் மாலி வீடு.  கார்த்திகை மாத அமாவாசை அன்று ஸ்ரீதர ஐயாவாள் என்கிற மகான் வீட்டுக் கிணற்றில் கங்கை பொங்கி வரும்! அந்த மகானின் வீட்டுக்கு எதிர்வீடு மாலி உடையது. வாசலில் இருந்து பார்த்தால் முற்றத்தில் ஊஞ்சல் தெரியும். அதில் மாலி அமர்ந்திருப்பார். ஒரு மாதம் ஓடி இருக்கும்!  திருவிசைநல்லூரில் அந்த வீட்டின் முன் ஒரு கார் நிற்கும். ‘மாலி' என்று உரத்த அன்பு கலந்த குரல் ஒலிக்கும்! வாசன்தான்!  காத்திருந்தது போல, ஊஞ்சலில் அமர்ந்திருந்த மாலி ஒரு பையுடன் காரில் மறுபேச்சின்றி ஏறுவார். கார் தஞ்சாவூர் போய் ஆனந்தா லாட்ஜ் ஹோட்டலில் ஆனந்தமான டிபன் சாப்பிட்டுவிட்டு சென்னைக்கு போகும்! மறுபடியும் விகடனில் மாலி.

மாலி அடிக்கடி விலகுவதும் சேருவதும் நடந்தது!

எஸ். எஸ்.வாசன் அவர்களுக்கு பிறகு ஆசிரியர் பொறுப்பை ஏற்ற எஸ் பாலசுப்பிரமணியன் தந்தை மீது பக்தி உடையவர் அவரிடம் ஒரு வழக்கம் இருந்தது தன் அப்பா காலில் அணிந்து பயன்படுத்திய செருப்பை சற்று சரி செய்து அதையே தொடர்ந்து அவர் பயன்படுத்தினார். ‘Stepping into the fathers shoes' என்பார்கள்!  உண்மையிலேயே அவர் தந்தையின் செருப்பை அணிந்தார்!

வாசன் அவரை நேரடியாக நிர்வாக பகுதிக்கு அனுப்பவில்லை. ஆசிரியர் குழுவில் ஒரு தனி அறையில் அமரச் செய்தார். ஓராண்டு இதழில் வரும் எல்லாவற்றையும் படிக்கும்படி செய்தார்! எழுத்தை ரசிக்கும் பயிற்சி. அதோடு பொறுமை பயிற்சி!  சமகால பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்க வைத்தார்!

நிர்வாகத்தை கற்றுக் கொள்வது எளிதானது! வாசகர்களை புரிந்துகொள்வது, காலத்தை அறிவது என்பது பத்திரிகையின் நீடித்த வெற்றிக்கானது! ஆசிரியர் பாலசுப்பிரமணியத்தின் பொறுமை எல்லை கடந்தது!  ஞாநி இருந்தால் அதை சொல்லி இருப்பார்!  முதன்முதலாக ஜூனியர் விகடனில் ஞாநி சேர்ந்தபோது நிர்வாக மேலிடம், ‘‘அவர் தொழிற்சங்கவாதி வழக்கெல்லாம் போடுவார்'' என்று ஒரு தகவலை அவரிடம் தெரிவித்தார்கள். ஞாநியின் தெளிவும் கம்பீரமும் கலந்த எழுத்து நடையில் அவரது உயர்ந்த குணத்தையும் ஆசிரியர் புரிந்துகொண்டார். ஞாநியை முழு மனதுடன் வரவேற்று ஏற்றார்.  பலசமயம் ஞாநி விலகினாலும் அவருக்கு கதவை திறந்து வைத்திருந்தார்!

நாளிதழ்களில் பணிபுரிந்து விட்டுத்தான் விகடனில் சேர்ந்தேன். வயது 22. நாளிதழில் பணிபுரிந்தபோதே, அன்றைய பத்திரிகையாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம். மெயில் ராமநாதன், மெயில் சுப்பையா,  ஞாநியின் தந்தை வேம்புசாமி, சக்கரவர்த்தி ஐயங்கார்,  சர்மா இப்படி பலரிடம் கற்றவை பலப்பல!

‘‘ வாசகர்களிடம் எதையும் மறைக்கக்கூடாது; செய்திகளில் புனிதமானது புனிதம் இல்லாதது என்று எதுவும் இல்லை! நிகழ்ச்சிகளை செய்திகளை அப்படியே தரவேண்டும் கருத்து கூடாது'' என்கிற அடிப்படை அஸ்திவார பாடம் மனதில் பதிய வைத்தார்கள். ஜூ.வியின் வெற்றிக்கு இதுவே துணை நின்றது!  உண்மையில் எஸ்.எஸ். வாசன் விகடனுக்கு அமைத்துக் கொடுத்த மேடையும் அதுதான்!

விகடன் காங்கிரசை ஆதரித்த இதழ்! காங்கிரசை ஆதரித்ததே தவிர காங்கிரஸ் கட்சி இதழாக அது இல்லை! மற்ற கட்சி தலைவர்களை தமிழ் உணர்வு உள்ளவர்களை பெரிதும் மதித்தது! ‘‘நான் விகடனுடன் மாறுபட்ட நேரம் நிறைய. ஆனால் விரோதமே மனதில் வந்தது இல்லை,''என்று கலைஞர் ஒரு பேட்டியில் கூறியது உண்டு!

பத்திரிகைக்கும் அதில் பணிபுரிவோர்க்கும் இதுதான் இலக்கணமாக அமையவேண்டும்!

சட்டசபை மேலவை நிகழ்ச்சியில் அன்றைய நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம், மேரி கிளப் வாலா ஜாதவ் என்ற புகழ்பெற்ற சமூக சேவை பெண்மணிக்கும் இடையே நடந்த கேள்வி பதில் நகைச்சுவையைப் பெட்டி செய்தியாக எழுதியது பலர் பாராட்டை பெற்றது! மெயில் ராமநாதன், ‘‘ நிறைய புரிந்து வேலை செய்கிறாய்!  உனக்கு பத்திரிகையாளருக்கான திறமை நிறைவாகத் தான் இருக்கிறது! ரொம்ப விருப்பத்தோடு வேலை செய்வாய், நிறைய ஏமாற்றங்கள் எதிர்ப்புகள் வரும். சட்டைப் பையில் எப்போதும் ராஜினாமா கடிதம் வைத்திரு!'' என்றார்.  அடுத்து இருந்த வேம்புசாமி,

‘‘ நல்ல உபதேசம்'' என்றார். ‘‘மனசாட்சிப்படி வேலை செய். மனசாட்சி வழிகாட்டும்,'' என்றார் அவர்.

நான் சட்டைப்பையில் ராஜினாமா கடிதம் எப்போதுமே வைத்திருந்தேன்; பயன்படுத்த எடுப்பேன். ஆனால் அவசியம் இல்லாமல் போய்விடும். காரணம் ஆசிரியர் என்னை போன்றவர்களை முழுவதுமாக புரிந்து வைத்திருந்தார். ஆசிரியருடன் ஒரு சமயம் கருத்து மாறுபட, அவருக்கு என் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. மாதக்கணக்கில் பேசாமல் இருந்தார்.  தவறு என் மீது என்று முடிவுக்கு வந்து சில வாரம் கழித்து மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினேன். ஒட்டி தான்! அதை ராஜினாமா கடிதம் என நினைத்து பிரிக்காமல் ஆசிரியர் திருப்பி அனுப்பிவிட்டார்!

அதை நான் பார்த்த அன்று விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில். சிகிச்சை முடிந்து விழித்தபோது, ஆசிரியர் டாக்டருடன் பேசிக்கொண்டிருந்தார்!

என்னைப்பற்றி சில சமயம் கட்சி பத்திரிகைகளில் அவதூறும் சிலர் எழுதி இருக்கிறார்கள்! எங்களை நன்றாக புரிந்து கொண்டவர் ஆசிரியர். ஒரு வார்த்தை அது பற்றி பேசமாட்டார்! வெளியிலிருந்து எந்த கட்டாயமும் அவரிடம் செல்லாது என்பது மட்டுமல்ல; நாங்கள் எந்த கலர் கண்ணாடியையும் அணியாதவர்கள்; மக்களுக்கு தகவல் சொல்லும் காலக்கண்ணாடி மட்டுமே  என்பது ஆசிரியருக்கு தெரியும். எங்களுக்கு அன்று கிடைத்த பயிற்சி அப்படிப்பட்டது!

என் சட்டைப்பையில் ராஜினாமா கடிதம் 35 ஆண்டுகள் அப்படியே இருந்தது!

செப்டெம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com