காற்றில் ஆடும் கனி

காற்றில் ஆடும் கனி
Published on

எல்லாக் கட்சியுமே சனியன்தான். இதில் எந்த சனியன் தேவலாம் என்றால் எப்படி பதில் சொல்வது? இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில், புத்தியுள்ள மக்கள் ஓட்டுச் சாவடிக்குப் போகமாட்டார்கள். - இதுதான் தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் டாக்டர் ராமதாஸின் முழக்கம். ஆனால் கால வெள்ளத்தில் அவரது வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாகப் பரிணமித்து, தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தது.

பாமக சந்தித்த முதல் பொதுத்தேர்தல் 1989 மக்களவைத் தேர்தல். வடமாவட்டங்களில் காத்திரமான எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்று தன்னுடைய செல்வாக்கை வெளிப்படுத்திய அந்தக் கட்சி 1991 பொதுத்தேர்தலில் முஸ்லீம் லீக் (அப்துஸ் சமது), குடியரசு கட்சி (பிரகாஷ் அம்பேத்கர்), தமிழர் தேசிய இயக்கம் (பழ. நெடுமாறன்), தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. ராஜீவ் அனுதாப அலை வீசியதால் பண்ருட்டியில் போட்டியிட்ட ராமச்சந்திரனைத் தவிர அனைத்து பாமகவினரும் தோல்வியடைந்தனர். அதன்பிறகு மெல்ல மெல்ல திமுகவை நெருங்கத் தொடங்கியது பாமக.

திமுக ஆட்சியில் வன்னியர் உள்ளிட்ட சாதியினருக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதியை “ராஜா நாற்காலியில்” அமரவைத்துப் பாராட்டினார் ராமதாஸ். அநேகமாக 1996ல் திமுக, பாமக உள்ளிட்ட ஏழு கட்சிக் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென மூப்பனாரின் தமாகா உருவானதைத் தொடர்ந்து திமுக அணியில் பாமக முக்கியத்துவம் இழந்தது.

“அவர்களாக வந்து பேசினால்தான் உறவு. இனி நாங்களாகப் போய் பேசமாட்டோம்” என்றார் ராமதாஸ். “நண்பர்களாக இருந்த நாங்கள் நண்பர்களாகவே பிரிகிறோம்” என்று கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கருணாநிதி. ஆகவே, மதிமுக, பாமக, சிபிஎம், ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகியன இடம்பெறும் புதிய அணியை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ். “கருணாநிதி பெரிய அண்ணன் என்றால் கோபாலசாமி பெரிய அண்ணனுக்கே பெரிய அண்ணன்” என்று விமரிசித்தார்.

விளைவு, கூட்டணி முயற்சிகள் தோல்வியடைந்தன. பாமக தலைமையில் தனி அணி உருவாகியது. வாழப்பாடியாரின் திவாரி காங்கிரஸ், கோவை செழியனின் தமிழ்த் தேசியக் கட்சி, பூவை மூர்த்தியின் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 12 கட்சிகளைக் கொண்ட ஊழல் ஒழிப்பு - சமூகநீதி முன்னணி உருவானது. 1996 தேர்தலில் வீசிய அதிமுக எதிர்ப்பு அலை திமுக - தமாகா கூட்டணியை வெற்றிபெறச் செய்தது. அந்தத் தேர்தலில் பாமகவுக்கு நான்கு எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர்.

1998 மக்களவைத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் உதவியுடன் அதிமுக அணியில் இணைந்த பாமகவுக்கு 5 தொகுதிகள் தரப்பட்டன. அப்போது மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக அணியில் இடம்பெறவே, நான்கு இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்து, மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது பாமக. அன்று தொடங்கி பல ஆண்டுகள் வரை தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறும் கட்சியாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது பாமக. 

வெறும் 13 மாதங்களில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதிமுக - பாஜக உறவு முறிந்தது. அதிமுகவின் இடத்துக்கு திமுக வந்துசேர்ந்தது. ஆனால் பாமக அதே அணியிலேயே நீடித்தது. அந்தத் தேர்தலில் பாமகவுக்கு ஐந்து தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. அன்று தொடங்கி பாமக இடம்பெறும் அணியே தமிழகத்தில் வெற்றி அணி என்று சொல்லத் தொடங்கினார் ராமதாஸ்.

2001 சட்டமன்றத் தேர்தலின்போது டாக்டர் ராமதாஸ் உதிர்த்த வாசகம் இன்றளவும் பிரபலமானது. “கருணாநிதி பெரிய அண்ணன் தோரணையுடன் நடந்துகொண்டு, எங்களை அழிக்கப் பார்க்கிறார். ஆனால் அன்பு சகோதரியோ எங்கள் மீது நட்பு பாராட்ட விரும்புகிறார்” என்றார். அப்போது அதிமுக - பாமக இடையே விநோத உடன்பாடு ஏற்பட்டிருந்தது. தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்குத் தரப்பட்டன. மேலும், அதிமுக - பாமக கூட்டணி புதுச்சேரியில் வென்றால், அதிமுகவும் பாமகவும் தலா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று உடன்பாடானது.

ஆனால் தேர்தலின் முடிவில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது. ஆனால் புதுச்சேரியில் படுதோல்வி. விளைவு, அதிமுக - பாமக அணியில் விரிசல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான், இனி அதிமுகவோடு உறவு வைப்பது குறித்து வாசிப்பதற்கே கூச்சத்தைக் கொடுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி அதிர்வுகளைக் கிளப்பினார் டாக்டர் ராமதாஸ். அது இன்னமும் அரசியல் களத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

பின்னர் 2004 மக்களவைத் தேர்தல் வந்தபோது மீண்டும் ஒருமுறை அணிமாற்றத்துக்குத் தயாரானது பாமக. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி வலுவடைந்துவந்த சமயத்தில் பாஜக அணியிலிருந்து விலகி, காங்கிரஸ் இடம்பெற்ற அணியில் சேர்ந்துகொண்டது பாமக. அந்தத் தேர்தலில் பாமக போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு பாமக மத்திய அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. பாமகவுக்கு வாக்களித்திருந்தபடி அன்புமணி எம்.பியாக ஆதரவளித்தது திமுக.தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் ஒரே கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, 2006 சட்டமன்றத் தேர்தலில் அணி மாறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக அணியிலேயே தொடர்ந்தது. 31 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 தொகுதிகள் கிடைத்தன.

பரபரப்பான மூன்றாண்டுகள் கழிந்ததும் 2009 மக்களவைத் தேர்தல் வந்தது. கடந்த காலக் கசப்புகளை எல்லாம் மறந்துவிட்டு, அதிமுக அணிக்குச் சென்றது பாமக. ஏழு மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் தரப்பட்டன. அந்தத் தேர்தலில் பாமக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. எங்கள் கட்சி இடம்பெறும் அணியே வெற்றிக்கூட்டணி என்ற ராமதாஸின் வாசகம் முற்றிலும் பொய்த்துப்போனது அப்போதுதான். தவிரவும், பாமகவின் வாக்குவங்கி லேசாகச் சரியத் தொடங்கியிருந்தது. உபயம்: விஜயகாந்தின் தேமுதிக. அது 2011 சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் இருக்கும் என்று கணித்த ராமதாஸ், அதுநாள்வரை நடத்திவந்த திமுக எதிர்ப்பு அரசியலை ஒரே நாளில் கைவிட்டார். தன் வீட்டுத் திருமணம் ஒன்றுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற அவர், அன்றைய தினமே திமுக தலைவர் கருணாநிதியுடன் கூட்டணி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். 31 தொகுதிகள் தரப்பட்டன.

ஆனால் பாமக இடம்பெற்ற திமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றிபெற்றது. இந்தத் தோல்வி பாமகவை உரத்த சிந்தனையில் ஆழ்த்தியது. பின்னர் பல சிறுகட்சிகளைக் கொண்ட சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கிய பாமக, தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகளுடன் இனி தேர்தல் கூட்டணி அமைக்கமாட்டோம் என்றது. பின்னர் தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கமாட்டோம், பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என்றது. தன்னுடைய அணியில் சார்பில் பத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துப் பிரசாரத்தையும் தொடங்கியது.

ஆனால் 2014 தேர்தல் நெருக்கத்தில் பாஜக உருவாக்கும் அணியில் இணைய விரும்பினார் டாக்டர் அன்புமணி. அதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் மதிமுக, பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இடம்பெற்ற அணியில் பாமக இடம்பிடித்தது. எட்டு தொகுதிகள் தரப்பட்டன. தேர்தலின் முடிவில் தர்மபுரியில் டாக்டர் அன்புமணி மட்டுமே வெற்றிபெற்றார்.

தேர்தல் எல்லாம் முடிந்து, இயல்பு அரசியலுக்குத் திரும்பிவிட்ட நிலையில், “அதிமுக, திமுகவுடன் கடந்த காலங்களில் கூட்டணி வைத்தது தவறு. அதற்காக மன்னிப்பு கோருகிறோம். 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமையும். முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணியை ஏற்கும் அதிமுக, திமுக தவிர்த்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்” என்று அறிவித்திருக்கிறது பாமக.  பார்க்கலாம்!

ஜூன், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com