பத்திரிகையாளனாக நான் சேர்ந்து செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தது 1962ல். இருபது வயது இளைஞன், வோட்டு போடும் வயதை எட்டவில்லை! காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் வெற்றி வாய்ப்பை பற்றி எழுத அனுப்பப்பட்டேன். அப்போது இன்னொரு பத்திரிகை சார்பாக மு.நமசிவாயம் வந்திருந்தார். அவர் தான் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவர்.
அறிஞர் அண்ணாவை எதிர்த்து நடேச முதலியார் என்கிற பஸ் அதிபர் நிறுத்தப்பட்டிருந்தார் காங்கிரஸ் கட்சி சார்பில்! அண்ணாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பது காங்கிரஸின் லட்சியமாக இருந்தது. திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிடாத நேரம். அந்த கோரிக்கையை முன் வைத்து நின்றால் தோற்கடித்துக்காட்டுவோம் என்று சட்டசபை யிலேயே சி.எஸ். சவால் விட்டிருந்தார்.
நமசிவாயம் என்னை நன்றாக ‘வேலைவாங்கி’ பயிற்சி கொடுத்தார். தொகுதிகளை சாதி வாரி தெருக்களாக பிரித்து - பல தெருக்களில் மக்களுடன் நைசாகப் பேச்சு கொடுத்து செய்திகளை சேகரிக்க சொல்லிக் கொடுத்தார். நான்கு நாட்களுக்கு மேல் தொகுதியில் சுற்றித் திரிந்தோம். அண்ணா அவர்கள் மேடைப்பேச்சில் சாதாரணமாக ஒரு தேர்தல் கருத்து சொல்லப்போக, ‘நான் சந்தனம் - நடேச முதலியார் சாணி’ என்று பேசியதாக பரப்பப்பட்டது. ‘அரைக்க அரைக்க சந்தனம் போல நான் பயன்படுவேன்..எதிர் வேட்பாளர் அப்படி அல்ல’ என்று சொன்னார் அண்ணா. இவர் பேச்சை நடேச முதலியாருக்கு ஆதரவாக திரும்பும் முயற்சியில் காங்கிரஸ்.
எங்கள் கணக்கெடுப்புப்படி அண்ணா பத்தாயிரம் வோட்டு வித்தியாசத்தில் தோற்கலாம் என்று தெரிந்தது. இந்த செய்தி வெளியான அன்று, தேர்தல் பிரசாரத்திற்கு கடைசி நாள். அண்ணாவுக்கு ஆதரவாக ராஜாஜி, ஏ.ராமசாமி முதலியார் ஆகியோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட கூட்டம் நடந்தது. அதில் ராஜாஜி இந்த ரிப்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு ‘ எச்சரித்து’ இவற்றை சரி செய்யுமாறு பேசினார்.
அப்போது எம்.எல்.ஏ, எம்.பிக்கு சேர்ந்து தேர்தல் நடக்கும். வோட்டு சீட்டில் இரண்டுக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் தனித்தனியாக போடப்பட்ட ஒரே சீட்டு. அதில் ‘அண்ணாதுரை’ என்று இன்னொரு பெயர் எம்.பி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தது. இதை ரிப்போர்ட்டில் சுட்டிக் காட்டியிருந்தோம். ராஜாஜி,‘ஜாக்கிரதை.. இதை மக்களிடம் எடுத்துக்காட்டுங்கள். அந்த அண்ணாதுரை பெயரில் வோட்டு போட்டு விடப்போகிறார்கள்’ என்றார். என்ன நடந்தது? எங்கள் ரிப்போர்ட் படி அண்ணா பத்தாயிரம் வோட்டு வித்தியாசத்தில் தோற்றது, எங்களுக்கே ஆச்சரியம்!.
நான் முதல்முதலில் பணிபுரிந்த இந்த 1962 தேர்தலில் இன்னொரு அனுபவம் ஏற்பட்டது. ஆவடியில் காமராஜர் பேச்சை கவர் செய்ய சென்றேன். கூட்டம் முடிய இரவு 11 மணி ஆகிவிட்டது. ‘இவ்வளவு நேரமாகிவிட்டதே! என்ன பண்ணப் போகிறீர்கள். என் காரில் ஏறுங்கள். வழியில் எங்காவது இறங்கிக் கொள்ளுங்கள்’ என்று காமராஜர் அழைத்தார். என்னுடன் சங்கமேஸ்வரன் என்ற இன்னொரு பத்திரிகையின் சீனியர் நிருபர் வந்திருந்தார். நான் காமராஜ் காரில் ஏற தயங்கினேன். ‘ஏறு சீக்கிரம்’ என்று காமராஜர் அதட்டல் போட்டவுடன், சங்கமேஸ்வரன் என்னையும் இழுத்து காரில் ஏற்றிவிட்டார். அவர் காங்கிரஸ் இதழில் பணிபுரிபவர். காமராஜரிடம் பயபக்தியுடன் பழக அதுவும் ஒரு காரணம். தவிர அவர் தீவிர காங்கிரஸ் பக்தர். டிரைவர் சீட் பக்கம் நாங்கள் ஏறியிருந்தோம். அவர் அருகே நான்.
தென்சென்னையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று காமராஜ் விசாரித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு மும்முனைப் போட்டி இருந்தது. காங்கிரஸ் சார்பில் ராஜம் ராமசாமி நின்றார். தென்சென்னை மக்களுக்கு அறிமுகமானவரே! திமுக சார்பில் நாஞ்சில் மனோகரன். ஈ.வே.கி.சம்பத் தமிழ் தேசிய கட்சி சார்பாக நின்றார். சம்பத் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திமுகவில் இருந்து பிரிந்து வந்தார். நல்ல செல்வாக்கு இருந்தது.
“ திமுக வோட்டு பிரியும் அதனால் காங்கிரஸ் ஜெயிக்கும்” என்றார் சங்கமேஸ்வரன். “அது எப்படி? திமுக வை விட்டு வந்ததால் சம்பத் மீது கட்சி தொண்டர்களுக்கு வெறுப்பாக இருக்குமே? வோட்டு பிரியுமா?” என்றார் காமராஜ்.
“ ஸார்! உண்மையில் உங்கள் வோட்டு தான் பிரியும்! சம்பத்துக்கு படித்த மிடில் கிளாஸ் வோட்டுகள் விழும். அது வழக்கமாக உங்களுக்கு விழும் வோட்டு” என்றேன், நான் குறுக்கிட்டு.
“ஏன் குறுக்க பேசுற? உன்னை யார் கேட்டா? உனக்கு எத்தனை தேர்தல் அனுபவம் உண்டு?” என்று காமராஜர் உரக்க சொன்னார். காமராஜருக்கு குறுக்கிட்டு பேசுவது பிடிக்காது என்பது பிறகு அனுபவத்தில் தெரிந்தது. பயந்தது என்னைவிட சங்கமேஸ்வரன்தான். என் தொடையில் கிள்ளி பேசாமல் இருக்க சொன்னார். “அவன் சொல்றது தப்பு! திமுக வோட்டுதான் பிரியும்” என்றார் சங்கமேஸ்வரன்.
“இந்த பையன் எந்த பத்திரிகை? எங்கே இறங்கணும் அவன்” என்றார் காமராஜர். “இங்கே பக்கத்தில் தான்” என்றார் சங்கமேஸ்வரன்.
“இல்லை நான் நுங்கம்பாக்கம்” என்று முணுமுணுத்தேன்.
“ நீ இங்கே இறங்கிடு” என்றார் சங்கமேஸ்வரன். கார் நிற்க நான் இறங்கும்படி ஆயிற்று. எந்த இடம் என்பது கூட தெரியவில்லை. தலைவருக்கு சங்கமேஸ்வரன் அதிகமாக பயந்ததனால் எனக்கு இப்படி ஒரு விதி! நல்ல இருட்டு. ஒரு டீக்கடை நாயர் கதவை மூடி கொண்டிருந்தார். நீ எங்கே போகணும் என்று கேட்டார் நாயர். “ நுங்கம்பாக்கம்” என்றேன். “சரியாக போச்சு! அதற்கு இங்கிருந்து பகல்லேயே பஸ் கிடையாது! நடு ராத்திரியில் ஏது பஸ். கூட்டிபோக எவனும் வர மாட்டான்” என்றார். எந்த இடம் அது என்றும் சொல்லவில்லை!. பசியாக இருப்பதாக சொன்னேன். நிறைய பட்டர் பிஸ்கட்டுகளை காசு வேண்டாம் என்று கொடுத்தார். இரண்டு நாய்கள் வேறு காத்திருந்தன! சில பிஸ்கட்டுகளை அவற்றுக்கு போட்டேன்! என்ன செய்வது? செய்திகளை சொல்ல எங்கயாவது டெலிபோன் இருக்குமா?
திடீர் என்று வெளிச்சத்தை வாரி வீசியவாறு, போலீஸ் ஜீப் ஒன்று நேராக வந்து திரும்பி என் அருகே நின்றது. “ஸார் வாங்க ஏறிக்கோங்க! ஐயா உங்களை கொண்டு போய் நுங்கம்பாக்கத்தில் விடச்சொன்னார்” என்றார் போலீஸ்காரர்! காமராஜர் பந்தோபஸ்திற்கு வந்த வண்டி.
என் முணுமுணுப்பு காமராஜர் காதில் விழுந்திருக்கிறது! பத்திரமாக வீடு போய் சேர்ந்தேன்!
பிப்ரவரி, 2016.