குமரிஅனந்தன் மதுரையில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தபோது மதுரை கீழமாசி வீதியில் நடந்த காமராசர் பங்கேற்கும் கூட்டத்தில் அவரைப் பேச அழைத்திருந்தார்கள். ‘பெருந்தலைவர் காமராசர் வரும் வரை பேசிக்கொண்டிருக்க வேண்டும். அவர் வந்ததும் பேச்சை நீங்கள் நிறுத்திவிடவேண்டும்' என்று குமரி அனந்தனிடம் சொல்லப்பட்டிருந்தது. காமராசர் வந்ததும் பேச்சை நிறுத்தினார். மேடையேறிய பெருந்தலைவர் ‘பேசுன்னேன்' என்று அனந்தன் முதுகில் தட்டிக் கூறினார். மேலும் ஒரு சில நிமிடங்கள் பேசிவிட்டுக் கீழிறங்கினார் அனந்தன். சில நாட்களில் அவருக்குச் சென்னைக்கு வருமாறு காமராசரிடமிருந்து அழைப்பு வந்தது. காமராசரைச் சந்தித்தார்.
‘மேடைகளில் சிறப்பாகப் பேசுகிறாய். காங்கிரசில் தீவிரமாக ஈடுபட உனக்கு ரொம்ப ஆசைன்னு கட்சிக்காரங்க சொல்லக் கேட்டேன். உன் மாமனார் சங்கு கணேசன் கட்டிய பங்களாவை நான்தான் திறந்து வைச்சேன். அவரை அழைச்சிட்டு வா. உன் குடும்பத்தை அவர் பார்த்துக்கிடுவார்ன்னு எங்கிட்டச் சொல்லச் சொல்லு. அப்படிச் சொன்னால் காங்கிரசில் உன்னைச் சேர்த்துப் பொறுப்பும் போட்டுத்தாரேன். ஆனால் காங்கிரசில் பணம், கிணம், சம்பளம் ஏதும் கிடையாது' என்றார் காமராசர்.
குமரி அனந்தன் அவரது மாமனாரைக் காமராசரிடம் அழைத்துச் சென்றார். அவரும் காமராசரிடம் ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர் 1965 டிசம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பொறுப்பு குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. இப்படித்தான் காங்கிரஸ் கட்சியின் முழுநேர பணியாளராகி, பொறுப்புக்கு வந்து அரசியலில் வேகமெடுத்தார் அனந்தன்.
தனது பேச்சால் மக்களை வசீகரித்த குமரி அனந்தன், தன் நடைப்பயணங்கள் மூலம் தன்பக்கம் மக்களின் பார்வையை ஈர்த்தார். 1967ஆம் ஆண்டு காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி 98 இளைஞர்களோடு குமரியிலிருந்து புறப்பட்டு நேரு பிறந்த-நாளான நவம்பர் 14இல் சென்னையைச்
சென்றடைந்தார். காந்திஜியின் 98ஆவது வயதினை நிறைவுறும் வகையில் இந்த நடைப்-பயணத்தை மேற்கொண்டார். ‘புனிதன் பாதை நடப்போம். புதிய பாரதம் படைப்போம்' என்ற கோஷத்தை முன்வைத்து இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர் மேற்கொண்ட நடைப்பயணங்களின் எண்ணிக்கை 17 ஆகும்.
பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குப் பின், 1977 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காமராசர் கடைசியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இது. ஸ்தாபன காங்கிரஸ், எதிர்க்கட்சி அணியில் இடம்பெற்று 1977இல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. பின்னர், இக்கட்சிகள் ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழிகாட்டுதலில், இணைந்து ஜனதா கட்சியாக உருமாறியது. மத்தியில் ஆட்சியைப் பிடித்தது.
அந்த ஜனதா கட்சி அமைச்சரவையில், தமிழ்நாடு சார்பில் பா.ராமச்சந்திரன் மத்திய அமைச்சரானார். ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக வரவேண்டும் என்று விருப்பம் குமரி அனந்தனுக்கு இருந்தது. ஆனால் அரசியலில் அவருக்கு ஜூனியர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டதில் அவருக்கு உடன்பாடில்லை. இந்த சூழலில் ஜனதா
கட்சியை விட்டு வெளியேறி காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியை 1978ஆம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் பிரமாண்டமான மாநாடு நடத்தி துவங்கினார் குமரி அனந்தன். பெருந்திரளான கூட்டம். ஜனதா கட்சியினருக்கு அதிர்ச்சி. அவரை மீண்டும் ஜனதாவுக்குக் கொண்டு வர முயற்சிகள் நடந்தன.
1977 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார் எம்ஜிஆர். 1982வரை ஆட்சியிலிருந்திருக்க வேண்டும். ஆனால், 1980 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ், திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றது. பிரதமராகப் பதவியேற்ற இந்திரா தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சிகளைக் கலைத்தார். 1977இல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது இதேபோல 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது. 1980ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
இத்தேர்தலில் அ.தி.மு.க.வானது சி.பி.எம்., சி.பி.ஐ., காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், ஃபார்வர்ட் பிளாக், அர்ஸ் காங்கிரஸ், மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் லீக், கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி, இந்தியக் குடியரசுக் கட்சி (கவாய்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளுக்கு தலா 16 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கா.கா.தே.காவுக்கு 12 இடங்களும் காமராஜ் காங்கிரசிற்கு 7 இடங்களும் வழங்கப்பட்டன. மீதமுள்ள இடங்களில் அதி.மு.க. போட்டியிட்டது. அ.தி.மு.கவின்
சின்னத்தில் சிறிய கட்சிகள் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் கா.கா.தே.கா. 6 இடங்களில் வெற்றி பெற்றது. பெற்ற ஓட்டுச் சதவிகிதம் 1.7. குமரி அனந்தன், திருவொற்றியூரில் நின்று வெற்றி பெற்றார். இது போல 1984 ஆம் நடைபெற்ற
சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமராக இருந்த சந்திரசேகர், இரா. செழியன், சோ போன்றோரின் வேண்டுகோளினை ஏற்று மீண்டும் திருச்சியில் மாநாடு நடத்தி ஜனதா கட்சியில் இணைந்தார் குமரி அனந்தன். ஆனால், அங்கு அவரால் தொடர்ந்து இருக்க இயலவில்லை. மாநில நலனுக்காக குரலை உயர்த்துவது என்றால் கூட டில்லியில் கேட்கவேண்யிருந்தது. அதே ஆண்டு சுதந்திர தினவிழாவையொட்டி கன்னியாகுமரியில் நீர் பாசன மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் மீண்டும் கா.கா.தே.கா. உயிர்ப்பிக்கப்பட்டது.
‘கங்கை இங்கே வரவேண்டும்.. காவிரியுடன் கலக்க வேண்டும்' என்ற கோஷத்தை முன்னிறுத்தி நதிகள் இணைப்பினை வலியுறுத்தினார். கங்கை நீரையும், காவிரி நீரையும் பாத்திரத்தில் எடுத்துச் சென்று டில்லியில் பார்லிமென்ட் முன்பு அவற்றைக் கலந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன், பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியிடம் குமரி அனந்தன் குறித்து கூறினார். மேலும், அவர் காங்கிரசில் இருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் வலுபெறும் என உறுதியளித்தார். இதையடுத்து காங்கிரசை வலுப்படுத்த குமரி அனந்தனுக்கு அழைப்பு விடப்பட்டது. இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் கா.கா.தே.கா.வை காங்கிரசில் இணைத்தார். தேச நலன், அதன் தொடர்ச்சியான மாநில நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.
2001இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை அலட்சியம் செய்ததாலேயே இந்த முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்தார். பின்னர் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
செப்டம்பர், 2022