தமிழின் கவிதை உலகம் பெருங்கடல் போல விரிந்து கிடக்கிறது. இதில் சிறந்த நவீன காதல் கவிதைகளைத் தொகுக்கும் இம்முயற்சியில் பெரும் எண்ணிக்கையிலான கவிதைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இட நெருக்கடி காரணமாக நிறைய கவிதைகளை விட வேண்டியதாயிற்று. இந்த தொகுப்பு சுதந்தரமானது. ஆனால் முழுமையானதல்ல. இம்முயற்சி இன்னும் தொடரும். இங்கிருக்கும் கவிதைகளை பல்வேறு கவிதைத் தொகுப்புகளிலிருந்து சேகரித்துப் பயன்படுத்தியிருக்கிறோம். இதில் இடம் பெற்றுள்ள கவிஞர் பெருமக்கள் அனைவருக்கும் அந்திமழையின் நன்றி.
நவயுகக் காதல்
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் -
வாசுதேவ நல்லூர் ...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட,..
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்...
மைத்துனன் மார்கள்.
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
-மீரா
என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!
- கனிமொழி
முத்தம்
என்னை விட்டுவிட்டு
சாமிக்கு மாலைபோட
உனக்கு உரிமை
உண்டென்றால்
உன்னை விட்டுவிட்டு
வேறு ஆசாமிக்கு
மாலைபோட
எனக்கும் உரிமை
உண்டுதான்
-அறிவுமதி
ஒரே நாளில்
அபிதா..
நான் பழுத்திருந்தபோது
பழங்கடிக்க வராமல்
உளுத்துவிட்டதும்
புழுப் பொறுக்க
ஓடி வரும்
மனம் கொத்தி
நீ.
- கல்யாண்ஜி
பாதமலர்
மலரற்ற தார் ரோடில்
பாதங்கள் விழிக்கு மலர்.
கார் அலையும் தெருக்கடலில்
பாதங்கள் மிதக்கும் மலர்.
வெயில் எரிக்கும்
வெறுந்தரையில்
வழியெதிரில்
பாவாடை நிழலுக்குள்
பதுங்கிவரும் வெண்முயல்கள்
மண்ணை மிதித்து
மனதைக் கலைத்தது.
முன்னே நகர்ந்து
மலரைப் பழித்தது
பாதங்கள்
எஸ்.வைதீஸ்வரன்
பிற்பகல்
பாண்டி விளையாட்டின்
முதல் உப்பை நான்
கடவுளுக்குக் கொடுத்தது
கிடையாது.
முதல் பல் விழுந்தபோது
சாணியில் பொதிந்து
சொர்க்கம் நோக்கி
எறிந்தது கிடையாது
ஒரே ஒரு தடவைதான்
விட்டில் பூச்சிகளை
பக்கத்துக்கொன்றாய்
நூலில் கட்டி
பரிதவிக்க விட்டிருக்கிறேன்.
மருத மரநிழல்கள் மீட்டாத
தண்டவாளச் சோகங்களை
எனக்கேன் நிரந்தரித்தாய்
சசி.
கலாப்ரியா
பசுந்தரை
கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும்
ஒருபெயர் நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள் நீ!
என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.
எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில்
மீண்டும் என்
உதிரம் அலைகிறது.
பாலையில் படர்கிறது
பசுந்தரை.
-பிரமிள்
உன் மனது
எத்தனை பெரிய மலர்
உன் மனது
எத்தனை பெரிய அகல்
உன் மனது
எத்தனை பெரிய கோட்டை
உன் மனது
எத்தனை பெரிய வனம்
புதிர் எல்லாம் சொல்கிறது
நீயிடும் மாக்கோலம்!
-மகுடேஸ்வரன்
சுயம்
மயக்கமுற்று எழத்தடுமாறி
உடல்முழுவதும் உன்யோனி ஈரம் கசியக்கிடந்தேன்
கொடும்காற்றின் வெப்பம் இரந்து
நிலக்குழிகளில் ஓங்காரமிடுகிறது
இழந்த பால்மீட்க உன் கல்குலையா முலைகள்
என் உமிழ் நீரைத் துளாவிச் சிலிர்க்கின்றன
என் உதடுகளின் வழியே ஆழ்ந்த முத்தத்தினுள்
பெருகும் ஜீவரசத்தை இடம்மாற்றிக் கொள்கிறாய்
இழைகள் அடர்ந்த உன் கடி தடமோ சீறுகிறது
என் மேனியெங்கும்
அவயங்களின் போதாமையை
தன் உளிநாவால் துவட்டுகிறது
தலைகனத்த என் பித்தம் பற்றிப்பிடுங்குகிறது உன்
பற்தெறிப்பு
குவிதலற்ற என் தட்டை மார்பொன்றை
வற்புறுத்திச் சுணங்குகிறாய்
ஆலிங்கனத்தின் கட்டிறுக்கத்தில்
என் கண்கள் உன் சுரதம் கசியும் துளைகளானதை
வழித்தெறிகிறது என் பதறும் விரல்கள்
மூழ்குகிறேன் உன் பனிக்குடத்தின் அடர்த்தியில்
கடல்மீளத் துடிக்கிறது கற்பிதங்களாலான எனதுயிர்
அரற்றும் குரூரம் மறைந்து நீ துப்பிப்போன
சுக்கிலம் மணத்துக்கிடக்கும் சுயம்.
- யவனிகா ஸ்ரீராம்
தரை தொடாத
மழைத்துளி போல்
நெடுநாள் காயத்தின்
ரத்தப்பிளவில்
உன்
முதல் முத்தத்தின்
ஈரம்
-சேஷையா ரவி
காத்திருப்பு
நீ வந்து சேராத நேரங்களில்
ஒரு சிலுவைப்பாடும் ஒரு
புத்துயிர்ப்பும்
நடந்து முடிந்து,
சினத்தை கருணையாக்கும்
பொறுமையோடு
காத்திருக்கிறேன்
நீண்ட சமவெளியின்
ஒரு புல்லின் மடியில்.
- தேன்மொழி. எஸ்.
முத்தம்
நீ அழகி- நான் கவிஞன்
என்பதால் இல்லை முத்தம்
நீ பெண்- நான் ஆண்
என்பதனால் இல்லை முத்தம்
முத்தத்தில் உண்டோடி
உன்முத்தம் என் முத்தம்
நம் முத்தமும் இல்லை அது-
முத்தம்.
- பாதசாரி
நாரீமணிக்கு
நீண்ட வீதியில்
பூட்டிய கடை ஒன்றின் கதவோரத்தில்
மயங்கிச் சரிந்து கிடப்பவனது
நினைவுகளென
பாலையின் கானல் சலனிக்கிறது
தடயங்களென ஏதுமில்லை
உருகிச் சரிந்த பொழுதுகளின்
மடியெங்கும்
கத்தாழை முட்கள்
சுகந்த நறுமண வியர்வையை
முகர்ந்தபடி
கண்செருகிக் கிடந்த கணங்கள்
சலனமற்ற வரைபடங்களாய்
கருணையினால் நனைந்த ஒரு சொல்லுக்காய்
நெடியடிக்கும் போதையுடன்
காலப்பிரக்ஞையற்று
சாலைகளில் திரிகிறான்
பித்ததில் தடுமாறி யாசிக்கிறான்
வெட்கம் கெட்ட ப்ரியங்களுக்கு
கீழ் என்ன மேல் என்ன
‘அமிர்தா அமிர்தா
என் உயிரைக்கூட உன் உதடுகளால்
உறிஞ்சி எடுத்துக் கொள்ளேன் அமிர்தா‘
‘மாட்டேன்
தினமும் கொஞ்சம் கொஞ்சமாய்‘
‘ஒரே நாளில் எனக்கு மோட்சம்
அருளமாட்டாயா தேவி‘
‘மாட்டேன்‘
சரி
நரகம் அருளிய என் நாரீமணிக்கு
இன்றைய என் விஸ்கி வணக்கம்
கிஸ் நைட்
- ரவிசுப்ரமணியன்
சாத்தியமாகும் அன்பு
நான் உன்னை நேசிக்கிறேன்
ஏற்றுக்கொள்கிறேன்
நான் உன்னைப் புரிந்துகொள்கிறேன்
நான் உன்னை சுதந்திரம் உள்ளவளாக்குகிறேன்
நீ இங்கே
இல்லாதபோது மட்டும்
- மனுஷ்ய புத்திரன்
விஷப் பாம்பொன்று
என் மீதேறி
நிதானமாக
கடந்து போகிறது
புரிதலற்ற - உன்
பார்வைகளைச்
சந்திக்கும் பொழுதெல்லாம்
- அ.வெண்ணிலா
அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன்
அலைகிறது!
தொட மாட்டோம் என்று
தூண்டில்கள்
சொல்லிவிட்ட பிறகும்!
- மு மேத்தா
பழத்தின்
அழகை பாராட்டுவர்
உள்ளிலிருந்து
குடையும் வண்டின்
குடைச்சலை
யாரறிவார்
- அபி
ஸ்தனதாயினி
ஒரு பைத்தியக்காரனைப் போல்
நான் இன்னும்
உன்னைப் பற்றியே
கனவு காண்கிறேன்.
நீயோ பிள்ளை பெற்று
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பகலில் உறங்கப் பழகிவிட்டாய்.
-அரிக்கண்ணன்
உனக்கென்ன
சாமி பூதம்
கோவில் குளம் ஆயிரமாயிரம்
ஜாலியாய் பொழுது போகும்
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன
அடியே -
நாளையேனும் மறக்காமல்
வா.
- பாலகுமாரன்
ஸ்தனதாயினி
இனிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர்தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடது முலை அருந்துகையில்
என் கண்களில் குழந்தமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்தமனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை.
- சுகுமாரன்
பொய் பிடிக்காது என
நீ சொன்ன பெரிய பொய்
இதுவாகத்தானிருக்கும்.
கண்களில் இத்தனைக் காதலை
வைத்துக்கொண்டு
எப்படி முடிகிறது
நண்பன் என்று சொல்ல.
-யாழினி முனிசாமி
எனது பெண்ணைக்
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும், பிருஷ்டங்களுமே
படுகின்றன.
- லட்சுமி மணிவண்ணன்
அன்பின் கையெழுத்து
ஒரு மழை நாளில்
ஓர் குடைகீழ்
நாம் நிற்க
என் கையெழுத்திட்டு
நான் உனக்கு
வழங்கிய புத்தகம்
இதோ இத்தனை
வருடங்கள் கழித்து
ஒரு பழைய
புத்தகக் கடையில்
வாங்கிச் செல்கிறேன்
புத்தகத்தில் அழிந்திருக்கிறது
என் பெயரும்
நம் அன்பும்
- ராஜா சந்திரசேகர்
போதும்
ஒரு துண்டு பூமி
இரண்டு துண்டு வானம்
சிறுகீற்று நிலவு
சில துளிகள் சூரியன்
ஒரு பிடி நட்சத்திரம்
கால் படிக்கடல்
ஒரு கிண்ணம் பகல்
ஒரு கிண்ணிப் பெட்டி இருள்
மரக்கூந்தல் காற்று
நூலளவு பசும் ஓடை
குடையளவு மேகம்
ஒரு கொத்து மழை
குட்டியாய் ஒரு சாத்தான்
குழந்தை மாதிரி கடவுள்
உடல் நிறைய உயிர்
மனம் புதிய காதல்
குருதி நனைய உள்ளொளி
இறவாத முத்தம்
என் உலகளவு எனக்கன்பு...
-ஜெ.பிரான்சிஸ் கிருபா
பிரிவின் சாசனம்
ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.
பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.
-செல்வராஜ் ஜெகதீசன்
போராட்டம்
கைவசமிருந்த காதற்
கடிதங்கள் எரித்தேன் வாசல்
கதவுமுன் குவித்துப் போட்டு
காகிதம் எரிந்து கூந்தல்
சுருளெனக் காற்றில் ஏறி
அறைக்குள்ளே மீளப் பார்க்கக்
கதவினைத் தாழ்ப்பாளிட்டேன்
வெளிப்புறத் தாழ்ப்பாள் முன்னே
கரிச்சுருள் கூட்டம் போட்டுக்
குதித்தது அறைக்குள் போக
காகிதம் கரியானாலும்
வெறுமனே விடுமா காதல்.
-ஞானக்கூத்தன்
அதிகாலை உறக்கம்
எனது மேசை மீது பரந்து விரையும்
நகர வாகனங்களுக்குள்ளிருந்து
எனது பெயர் சொல்லி அழைத்தது நீயா
பூச்சாடி பெருமரமாகிக் கிளைகள் நீள்கின்றன
தொலைபேசியின் கேள் பகுதியிலிருந்து
இறங்கி என் எதிரில் அமர்ந்திருக்கும்
உன்னால் அலுவலகம்
புறநகர் மைதானமாகிறது.
உனது கனவில் என்னைத் தீண்டும்
உடம்பு உன்னுடையதுதானா
எனது பேனாக் கூட்டிலிருந்து ஏழு வர்ணங்கள்
வானில் வளையும் போது
நீ நிற்பது யார் கனவில்
ஸ்பரிசம் உனது கனவிலென்றால்
பேசு பகுதியில் எனது கேள்விக்குப் பதிலில்லை
யார் அழைத்தது
ஸ்பரிசமா ஒலியா
அதிகாலை மைதானத்தில் எதிர்பார்த்து
நின்று கொண்டிருக்கிறது
எனது கனவு.
- பா.தேவேந்திர பூபதி.
காட்சி
கன்னியொருத்திக் கருத்தரிக்க
கருத்திசைந்து முன்வரக்
கையினைக் கைகௌவும்
அவ்வமயம்
தீ எரிய மத்தளம் அதிர
ஒரு மதயானை நின்று தளரும்.
உனது நெற்றிக் குங்குமம்
நீண்ட கூந்தல்
எளிய ஆடை
உன் முறுவல்
பிரகாசமான கண்கள்
நீண்ட விரல்கள்
உன் நிதானமான போக்கு
உன் தேர்போன்ற அல்குல்
எல்லாம்தான்
என்
மம்மரறுக்கும் மருந்து
-நகுலன்
முள் வாங்கும் உன் நினைவு
எங்கிருந்து வருகிறாய்
எங்கே போகிறாய்
என்றறிந்திருக்கவில்லை நான்
காற்றைப் போல் இருந்தாய் நீ.
உப்பரிகைகளும்
மாடங்களும் நிறைந்த
வீடுகளிலிருந்து வருகிறாய் என
பின்பு தெரிந்துகொண்டேன்
உனக்கு நினைவிருக்கலாம்
பூவரச மரங்களின்
நிழல் ராட்டினத்தில்
நாம் ஆடியது
மரங்களின் நிழல்மடியில்
தஞ்சம் புகும் நாடோடிகளின்
பிள்ளைகள்போலிருந்தோம்
அம்மரங்களின் நிழல்கோலத்தில் நின்று
நாம் கடித்துத் தின்ற
குச்சி ஐசின் சில்லிப்பில்
இன்னும் உள்ளங்கையாய் மனம்
தவிக்கிறது
குச்சி மிட்டாய் ஊறிய உன்
எச்சிலால் எனக்கு நீ
உள்ளெண்ணெய் வைத்தாய் மறுபடியும்
வகுப்புகள் ஏறஏற
பூவரசுகளை வெட்டினார்கள்
இப்போது அங்கே ஒரே மரம்தான்
மஞ்சள் குருதியை
இலைகளில் வழியவிட்டு
தனிமையில் நிற்கிறது
வெட்டப்பட்ட மரங்களில் இருந்த
பறவைகளைப் போல் பிரிந்தோம் நாம்
நெடுநாட்களுக்குப்பின்
வசந்தத்தின் யௌவனத்தில்
உன்னைச் சந்தித்தேன்
எனக்காக உன் முகத்தில்
ஒரு பூவரசம்பூ பூக்கும்
என்றிருந்தேன்
உன் உதடுகளின் குறுக்கே
நம் குடியிருப்புகளைக்
கீறிவைத்திருக்கும்
எல்லைக் கோடு
விரலாய்ப் பதிந்திருந்தது
என் மனத்தில்
தனித்திருந்த ஒரு பூவரசும்
பட்டுப்போனது
-அழகிய பெரியவன்
அவள் எனக்குப் பசி தீர்த்தவள்
நீ காமம் தீர்த்தவள்
எருமை போல வளர்ந்தநான்
அவளுக்குக் குழந்தை
எனக்கு என்னைப் போலல்லாத
ஒரு பிள்ளை வேண்டும்
பற்றியெரிகிற தீயை
புணர்ந்து அணைக்கிற அன்புமனைவியே
ஓங்கிய கையை நிறுத்திவிடு
மூச்சுத் திணறுகிறது
சூசகமாய் ஒரு வார்த்தை சொல்
சோற்றில் விஷம் வைத்து
என் அம்மாவைக் கொன்றுவிடுகிறேன்.
-என்.டி.ராஜ்குமார்
கதவு
திறக்கப்படாத கதவின்முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வப்போது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதவிடாது பார்த்துக்கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பச்செல்ல
எத்தனிக்கும் கணந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன்காத்திருப்பின்எல்லைகளைநீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின்முன்
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்.
-இளங்கோ கிருஷ்ணன்
தனிமொழி
நேற்றுப் பாலையாய் விரிந்திருந்து
இன்று குறுகிப்போன நாள்களில்
நீ எண்ணியிருக்க முடியாது
நான் உன் வழித்துணையாய்
வருவேனென்று
உன் ஸ்நேகத்துக்கு முன்
புற்றென வளர்ந்திருந்தது.
நடுமனதில் தனிமை
விழிகள் அழுந்த மூடிக்
காதுகள் வைகறைக் காக்கைகளுக்காகக்
காத்திருந்த இரவுகளில்
தேய்ந்து மறையும்
புகை வண்டியொலியில் கலந்தன
உன் நினைவுகள்
இருந்தும்
விழிக்கும் இரவின் நீளத்தைக் குறைக்கும்
புத்தகங்களைப் போல
இதமிருந்தது அவற்றில்
விழித்தெழுந்து அழுதது குழந்தை
தான் மறந்த முலைகளுக்காய் வேண்டி
இன்றென்
ஈரம் படர்ந்த விழிகளில்
நீ கலைந்த வெளிச்சம்.
-பிரம்மராஜன்
பூக்காத செடிகள்
ஏதாவது பேசு ,
துவைக்காத சட்டை , சுவைக்காத குழம்பு
இவற்றோடு இன்னும்
இலக்கியம் , சினிமா என்றில்லாவிடினும்
இன்று கண்ட புதிய முகம் , எதிர்பாராத
சம்பவம் , வாகன நகர்தலில்
வடிவழகு கெடாத கோலம்,
வந்து போன வியாபாரத் தந்திரம்,
பூக்காத செடியின் யோசனை,
புதிரான புத்தக வாசனை என்று
சொல்லேன் எதையாவது.
தினங்களின் கனத்தில்
நசுங்கிய ஞாபகங்களுக்கு
மூச்சுத் தா.
ஜன்னல் வெயிலின் பொன் தூசியையும்
நீர்க்கிண்ணத்திலாடும் நிலுவையும்
அள்ள முனையும் எனை நோக்கி
முறுவல் செய்;
அல்லது முட்டாளென்று சொல்.
அடிவயிற்றுக் கருவின் அசைவை
அறிவிக்க உன்கை பற்றிப் பதித்தபோது
அவசரமாய் உதறிப் போனாயே ,
அதற்கு வருத்தம் தெரிவி உடனடியாக .
அவிழ்த்து எறியுமுன்,
புடவையடுக்குள் புதைந்த பூக்களையாவது
ரசித்துக் கவனி .
அடுத்தமுறை எனை நீ
அழுத்தும் இரவுகளில்
வெளியிலசையும் தென்னையை
வெறிப்பதையாவது
விசாரி ஏன் என்று எப்போதாவது.
-உமா மகேஸ்வரி
நீ இல்லையென்னும் வெறுமை
நீ இல்லாத என் உலகத்தில் எதுவும் மாறப் போவதில்லை.
உனக்கான என் துக்கம்
ஏதாவது ஒரு நிலத்தில் அழலாம்
உனக்கான என் பிரியம்
என் விரல்களைப் பற்றிப் புலம்பலாம்
உன் பதிலுக்கான என் கேள்விகள்
செல்வதற்கான இடம் தெரியாமல் திணறலாம்.
உன்னோடு பேசாத தினம் அழிந்துவிடப் போவதில்லை.
என்றாலும்
நீ இல்லையென்ற வெறுமையை என்ன செய்வதென்று
யோசிக்கிறேன்.
-வா.மணிகண்டன்
பயங்கள்
இன்று மறுபடியும்
ஒருமுறை
என்னைக் கண்ணாடியில் பார்க்கிறேன்
பிறர் பயப்படும்படியாகக்
குறிப்பாக நீ பயம் கொள்ளும்படியாக இல்லை
என் தோற்றம்
என்னைத் தொலைபேசியில் அழைத்த
என் சிநேகிதியின் குரலில்
உன்னை இவ்வளவு கலவரப்படுத்தும்படி
ஒன்றுமேயில்லை
என்னிடம்
ஆயுதங்களில்லையெனினும்
நிச்சயங்களுடனில்லை நீ
நான் தூங்கும்போதும்
அதைரியத்துடன் விழித்திருக்கிறாய்
என் சிறு அசைவுகளில் பதறி
உருகி விடுகின்றன
உன் எக்குப் பிம்பங்கள்
இன்றும்
என்னை வீழ்த்திக் கொண்டிருப்பது
உன் வலிமையில்லை
உன்பயங்கள்.
- சல்மா
காதல் என்பது
காதல் என்பது ஒரு சந்திப்பு.
காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்.
காதல் என்பது இறையனுபவம்.
காதல் என்பது ஒரு குதூகலம்.
காதலுக்குக் காலம் கிடையாது.
எந்தச் சொற்களாலும்
உணர்த்திவிட முடியாதது அது.
காதல் மட்டுமே காதலை அறியும்.
காதல் கொண்ட இதயத்தில்
காதல் மட்டுமே இருக்கிறது.
காதலின் தனிச்சிறப்பு
அது மரணமறியாதது.
அது அதீதப் பேதமையின்
பொங்கும் இன்பம்.
பவுர்ணமிப் புன்னகை.
வாழ்வு தன்னைத் தானே கண்டுகொண்டுவிட்ட
திகைப்புக் கொண்டாட்டம்.
ஆனந்தக் கிறக்கம் தணிந்த
ஆழ்ந்த நிதானம்.
பேரமைதி.
-தேவதேவன்
நீர் விளையாட்டு
மலர்களின் கொடித்தண்டுகள்
காலில் சிக்கி மூழ்கடிக்கப் பார்க்கின்றன
படர்ந்த நீர்த்தாவரங்களை
விலக்கி விலக்கி - உன்னைத்
தேடிக்கொண்டே நீந்துகிறேன்
நீயோ
தோன்றும் இடத்தை
மாற்றியபடியிருக்கிறாய்
நம் கவனத்திற்கும் அப்பால்
கரைகளில் உலர்த்தியிருந்த
வண்ணத் துணிகளை - துவைத்தவர்கள்
எடுத்துப் போய் விட்டார்கள்
புல் மேய்ந்த பசுக்களும்
ஊருக்குள் திரும்பின
நான் தோற்றேன்
வெளியே வா
உன்னை இக்கணமே
தொட வேண்டும் போலிருக்கிறது
நீருக்குள் பதுங்கிப் பதுங்கி
நீயும்
களைத்திருப்பாய் தானே .
- யூமா வாசுகி
மூடிய இமை
என்னைக் கண்டதும்
கவிழும் உன் இமைகள்
கொசுவலையா?
மீன் வலையா?
மூடிய கதவின் மேல்
வரவேற்பு வாசகம் போல்
உன் இமைப்பீலிகள்
இந்தப் பூவன வேலிகள்
என்னையல்லவா மேய்கின்றன
இந்தத் திரைகளால் இருளும்
துயிற் பட அரங்கில்
என் கனவுகள் ஓடுமோ?
சில நேரங்களில்
இமைச் சிறகுகளை
விட்டுவிட்டு
உன் பார்வைகள்
பறந்து வருவது
என் கிளைகளில்
இரை தேடவோ?
கூடு கட்டவோ?
-அப்துல் ரகுமான்
காதலைக் காதலென்றும் சொல்லலாம்
மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்த ருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துக்கிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்ரியில் கொட்டினதேள் என்று சொல்
ரயில் ஏறி செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த சேதமில்லா மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்
காதலைக் காதலென்றும் சொல்லலாம்.
-பூமா ஈஸ்வரமூர்த்தி
மாயம்
நீ
தெரிந்து கொள்ள வேண்டாம்
உனக்காக
நான்
எனக்குப் பிடித்த
காபியிலிருந்து தேநீருக்கு மாறியது.
தெரிந்து விட்டால்
காபி
எனக்குப் பிடிக்காத
தேநீராகவும்
இருக்கும்
மாயம் எனக்கு
மறைந்து போகும்.
-தேவதச்சன்
டென்த் ஏ காயத்ரிக்கு
நீ குடியிருந்த வீடு..
கைமாறி கைமாறி
கக்கடைசியில்
காயலான் கடையாகி
ஒட்டடை படிந்தது.
நீ தட்டச்சிய பயிலகம்
ஒரு மழைக்கால இரவில்
மகள் ஓடிப்போன துக்கத்தில்
மத்தியில்
உரிமையாளர் தூக்கில் தொங்க
நொடிந்தது.
நீ தரிசனம் தந்த கோயில்..
வௌவால் சந்ததி பெருகி
புராதன வாசத்தில்.
உன்னைக் காதலித்த
எங்கள் கவிதைகள்
பரணேறிய டைரித் தாளில்
கன்னி கழியாமல்.
தெரியும்,
மிலிட்டரிக்காரனுக்கு மணமாகி
நீ டெல்லியில் இருப்பது.
சப்தர்ஜங்கோ சர்தாஜி பேட்டையோ
சப்பாத்தியும்,சால்னாவுமாய்
தேய்ந்து,துரும்பாகி
தூர்ந்திருக்கும் உன் வாழ்வு.
பேருந்தில்,
டீக்கடையில் என
பொருள்வாயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
‘காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?’
என் பதில்:
’பத்து வருடத்திற்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல’
-நா.முத்துக்குமார்
என்னதான் பின்?
காதலென்றால் கேலி செய்கிறாயே- எதற்காக/
கவிதையைக் கள்ளச்சொல் என்கிறாயே-
வேண்டுமென்றுதானே?
நான் துதிக்கிறேன் என்றுதானே
இருக்கட்டும்-
நமது இன்பத்து ஏகாந்த இரவின் இறுதியில்
பிறைவெளுத்த பின்மாலையில்
இருள்வெள்ளம் வடிந்த வைகறையில்
ஓவியமூட்டும் உன் ஒளிக்கரங்களை விட்டு
நான் பிரிவினை கொள்ளும் போர்வேளையில்
உன் கண்களைக் கலக்குவதென்ன- காதலல்லாமல்?
அந்தக் கனவழியும் பொழுதில்,
உன் வாயின் வார்த்தை வனப்புத் தானென்ன-
கவிதையல்லாமல்?
-கு.ப.ராஜகோபாலன்
கையறுநிலை
அடுத்த வீட்டுக் கதவென்று அறிந்திருந்தும்
என் வீட்டுக் கதவுதான்
தட்டப்படுகிறதாக நம்பி
ஓடி ஓடித் திறக்கிறேன்.
வரப்போவதில்லை
இனி அவள் வரப்போவதேயில்லை.
மேசை முதலான வீட்டுச்
சாமான்கள்
தூசு கனத்துத் துக்கத்தில் ஆழ்ந்தன.
குப்புற விழுந்து குமுறலாம்
கூரையை வெறித்துப் பெருமூச்சு விடலாம்
வரப்போவதிலை
இனி அவள் வரப்போவதேயில்லை.
முடுக்க மறந்த கடிகாரம்.
கிழிக்க மறந்த நாள்காட்டி
வீட்டுக்கு வெளியாகி எனக்கென்ன என்று
இரவாகிப் பகலாகி இயல்கிறது காலம்.
-ராஜ சுந்தரராஜன்
நடுக்கம்
நாம் சந்தித்துக் கொண்ட வேளை
நடுக்கம் உன்னைப் பற்றிக் கொள்ள
தெரிந்தும் தெரியாதது போல் நீ
அலுவலகம் பற்றி......
தாமதமாய் வரும்
பஸ் குறித்து
நாம் பேசிக் கொண்ட வேளை
நீண்டு அழைக்கும்
உன் விரல் பற்ற நினைத்து
பற்றாமல் நானும்
பேச்சு நின்று தடைபட்ட கணத்தில்
கண்களில் வழியும் ஜூவாலையில்
கருகி விலகும் மனதுடன் நீயும்
வரும் பகல் அறியாது
பிரிந்து விலகினோம்.
-அப்பாஸ்
வெசாக் பூரணை தினம்
நினைவின் அதிமென்மை படியும்
பனியின் அணைப்பு ஒளியில் எரிகின்றது
பளபளப்பான வெள்ளி வார்ப்புகள் கொண்டசையும்
சூரியகாந்தி வயல்களில் சஞ்சரிக்கின்றது
நம்முடைய பௌர்ணமி
ஒரு பாவமும் அறியாத
உன் கை விரல்களின் குளிர் தூவல்களில்
காதலை உணர்ந்தவாறு கூடவருகிறேன்
விகாரையின் முகப்பில்
கண்ணீர் துளிர்த்த இமைகளை மூடிய புத்தனின் சிலை
மேலே ஆண்மையின் திளைப்பைப் பாடுகின்ற
அரசிலைகள்
காதலாகிக் கசிந்து வழிகின்ற பூரணை ஒளி
ஒளித்தாரைகளை அள்ளும் காற்று
சிறு சுடர்களின் உயிருடன் விளையாடுகின்றது
வாவிக்கரையில்
மூன்று சிவப்புநிற வெசாக் தாமரைகள் பூத்துநிற்கின்றன
அனைத்தையும் தாண்டி எங்கு செல்கின்றோம் ?
நிலவின் மங்கலான அழுகை ஒலியுடன்
சறுக்கலும் அபாயமுமான பயணத்தில்
வந்துகொண்டேயிருக்கிறது
விம்மும் தாரகைகளும்
ஆறத்தழுவுகின்ற உன் கைகளும்
-அனார்
தீர்ந்துபோயிருந்தது காதல்
திடீரென்று உன் நினைப்பு
பற்றிக்கொண்ட நெருப்பாய்
ஈரமாய்
உலர்வாய்
இன்னும் என்னென்னவெல்லாமோ
அலுவலகம் உமிழ்ந்த
மாலை மிச்சங்களை
அவசரமாய் அள்ளியபடி
டிராஃபிக்கின் காத்திருப்புகளில்
உன்னை ஒத்திகை பார்த்துக் கொண்டே
இரைச்சலில் ஏனோ இன்று
எதற்கோ கட்டுப்பட்டதுபோல்
விரல்கள் தாளமிட்டிருந்தன
வியர்வைக் காசுகள்
பிசுபிசுத்த காய்கறி பழங்கள்
பேரம் தோற்ற பெருமூச்சுகள்
பார்க்கிங் சண்டைகள்
தினமும் திரும்பும்
அறைகளில் அடர்ந்த மௌனம்
‘இதோ வந்துகொண்டே இருக்கிறேன்’
உன் தொலைபேசிக்குரல்
திரும்ப திரும்ப ஒலித்ததில்
இன்னும் எஞ்சியிருக்கிறது
என் தாபம்
சமைத்ததில் எல்லாம்
நேரம் எரித்த நெடி
தொலைக்காட்சி பிம்பங்கள்
உதிர்ந்து படர்ந்த தூசி
வீட்டின் சுவரெங்கும்
களைப்பின் கேவல்கள்
இறுதியில் வந்தாய்
நீ அணைத்துக் கொண்டது
கசப்பாய் இருந்தது
தீர்ந்துபோயிருந்தது காதல்.
-லீனா மணிமேகலை
இருபத்தாறு ஆண்டுகள் ஆயின.
நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது
கொழும்புக்கு மேற்கே ஒரு கடற்கரை வீட்டில்
அதன் வேலிகளுக்கு அப்பால்
தாழை. அடம்பன் கொடி.
அச்சமும் நாணமும் சூழ்ந்தாலும்
மோகக் கிறக்கத்தில் நடுங்கும் காதலர்கள்.
அலைகளின் ஓயாத முறையீடு.
உயிர் தப்பி நிலம் விட்டுப் பறக்கிற
அவசரமும் அவலமும் இருவருக்கும்
நமது அறச்சீற்றத்தின் தீப்பொறி
கடலில் வரைந்த நேர்கோட்டில் நடந்து
திசை பிறழாது தப்பித்து
ஹேக் பட்டினத்துக்கு வந்தபோது
காலைச் சூரியனும் மாலைச் சூரியனும்
ஒன்றென ஒளிர்ந்த காலம்
“கொளுஹதவத்தின் துன்வெனியாமட்ட” என
இசையே என் தாலாட்டு
உனக்கு சுபா பிறந்தபோது
அவளது அழுகையைக் கேட்டேன்
உனது கண்ணீரைப் பார்த்தேன்
நிலத்தையும் காலத்தையும் வென்ற
ஆகாயத் தாமரைகள் போல அலைந்தாலும்
சிறகுகள் வலிமை பெற்றன.
அன்பைப் பிழிந்தெடுத்த உயிர் உனக்கு
கடலும் காடும் வெளியும் எம்மைப்
பிரித்திருந்தாலும்
இணைக்க என எப்போதும் இருந்தன
கனவுகள்.
“மகன், என்ன ஆளையே காணோம்;
குரல் கேட்க முடியவில்லை
படமாவது அனுப்பு” என
நீ அவ்வப்போது அனுப்பும் ஒரு மின்னஞ்சல்;
விடுப்பார்வம் கொப்பளிக்கும் தொலைபேசி
வரிச்செய்தி.
வாழ்வோ குறுகியது
எதை அறிந்தோம்?
-நாம் தவறி வீழ்ந்த நீர்ச்சுனைகள்
காதலின் பளிங்குகள் அல்ல
கவிதையும் இசையும் சுதந்திரமும்
பிரிக்கப்பட முடியாதவை
தீயை மிதிக்கலாம்
காற்றை எதிர்க்கலாம்
வாழ்க்கையை இழக்க முடியாது -
இந்த ஆண்டு மறுபடியும்
ஹேக் நகரில் சந்தித்தபோது
நான் சொல்லாமல் சொன்னது பிரியாவிடை
உன்னிடமோ
புன்முறுவலும் ஒரு கண்ணீர்த்துளியும்.
(For Sunila Sundari Janet Abeysekera)
-சேரன்
என்னுடைய இரண்டு ரோஜாப் பதியன்களை
இன்று மாலை சந்திக்கப் போகிறேன்
நான் வருவது அதற்குத் தெரியும்
மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்
பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது
எனக்குப் புரிகிறது
நான் மெல்லப் படியேறி வருகிறேன்
தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன
புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்
செருப்பைக் கழற்றி முகம் கழுவி
பூத்துவாலையால் துடைத்துக் கொண்டு
கண்ணாடியால் எனைப் பார்த்து
வெளி வருகிறேன்
ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி
என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்
நான் ஊற்றும் நீரைவிட
நான்தான் முக்கியமதற்கு
மெல்ல என்னைக் கேட்கின்றன
என்ன செய்தாய் இன்று என
உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன் என
பொய் சொல்ல மனமின்றி
செய்த காரியங்களைச் சொன்னேன்
அதனை நினைத்துக் கொண்ட கணத்தைச் சொன்னேன்
சிரித்தபடி காலை பார்ப்போம்
போய்த் தூங்கு என்றன
மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்தேன்
கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்
காலை வருவதை எண்ணியபடி
-ஆத்மாநாம்
சரிந்த
இடுப்பில்
நிமிர்ந்தமர்ந்த
நிறைகுடத்தோடு
ஒருத்தி
ஏறிட்டும் பாராது
தெருத்திரும்பி
மறைந்தாள்
அவள்
பாதம் பட்ட
வாசல் புழுதி
தவித்தெழுந்து
விமோசனத்திற்கழுகிறது!
-க.மோகனரங்கன்
எதேச்சையாக பட்டுவிட்டது
உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன
இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா
முனிகள் பிறழ்ந்தனரா
இதற்காகத்தான் இப்படி
தேம்பி தேம்பி அழுகிறார்களா
இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா
இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா
செங்குருதியில் மடலிடுகிறார்களா
இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டை போட்டு மூடுகிறார்களா
இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்து பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா
இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா
கைவளை நெகிழ்கிறதா
இந்த நைஸிற்காகத்தான் ‘வைகறை வாளாகிறதா‘
இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா
இதற்காகத்தான் தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா
இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா
அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம்,அதே நைஸ்தான் வேண்டுமோ.
-இசை
காட்டுப்பூக்களின் மணம்
கொட்டிக்கிடந்த கரிசலில்
கிடை ஆட்டுக் கூடையொன்றின் மேல்
சாய்ந்திருந்தாய்.
பேனா மை படிந்த உன் கையில்
கரம்பை மணம் தேடி
நுகரும் ஆடுகளின் பசி தீரக்
கம்மந் தட்டைகளை நீ ஆய்ந்து தரும்
சலசலப்பை மென்றபடி
கடக்கிறது காற்று.
தாபத்தின் உக்கிரம் ததும்பும் என்
ஒரு சொல்லைச் சுமந்த தட்டான்
உன்னைச் சுற்ற-
திரும்புகின்றாய்.
ஒரு கணம்தான் -
என் கையிலிருக்கும் சீனிப்பணியாரம்
உனக்கு மாறுகிறது
அந்தியில் அடைபட நடக்கின்றன மயில்கள்.
வாலிபத்தின் கனவொன்றைத் துய்த்த ரகசியமுடன்
பிரிந்தோம் நாம்.
அசை போடுகின்றன கிடை ஆடுகள்
அங்கே இப்போதும்
-தமிழச்சி தங்கபாண்டியன்
சூரியன் சுருட்டப்பட்டும்
நட்சத்திரங்கள் ஒளியிழந்து உதிர்ந்துவிடுவதும்
என் முன்னே நிகழ்கிறது
வானம் வெடித்து என் தலையில் வீழ்ந்து
மேகங்கள் தீப்பந்தங்களாகி என்னை எரிப்பதும்
கடல்கள் பொங்கி திரைகளைக் கிழித்துக் கொண்டு
ஒன்றாகி விட ஒன்றையொன்று துரத்துவதும்
பூமி வாயைப் பிளந்துகொண்டு
வாவென கைநீட்டி அழைப்பதுமாய்
பைத்தியம் முற்றிய இரவின் தாண்டவம்
கருமை இருளையும் என் காதுகளையும் கிழிக்கிறது
பழக்கமற்ற பயங்கர ஒலிகள்
நேற்று நாமிருவரும் சுவைத்த ஈச்சங் கனிகளின் மரம்
அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கிறது
வெடித்துச் சிதறிய
நிறைமாதக் கர்ப்பிணி ஒட்டகத்தினுடையதைப்
போன்றிருந்தது எனது விம்பம்
நீ இல்லாத இரவு என் கழுத்தை நெரிக்கிறது
-ஸர்மிளா செய்யித்
தோழி
காலமாய் நுரைகள் உடைகிற மணலில்
சுவடுகள் கரைய
சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?
கடலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்
நம்மிலும் ஏதோ படர்கிறதென்றேன்
மீன் கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்
உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.
ஆண்டு பலவாகினும்
நரையிலா மனசெடா உனக்கென்றாய்.
தோழி
இளமை என்பது வாழும் ஆசை.
இளமை என்பது கற்றிடும் வேட்கை.
இளமை என்பது முடிவிலா தேடல்.
இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.
இளமை என்பது வற்றாத ரசனை.
இளமை என்பது நித்தியக் காதல்.
இளமை என்பது
அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.
தோழா உனக்கு எத்தனை வயசு?
தோழி எனக்கு
சாகிறவரைக்கும் வாழ்கிற வயசு.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
நம்மை எதிரெதிர் ஆசனங்களில் அமர்த்தி
வேடிக்கை பார்க்கும்
மிக்சரும் காபியும்
நீங்கள் எங்கு படித்தீர்கள்
பஸ் ஸ்டாண்ட் பக்கமா உங்கள் வீடு
77-ல் சென்னையிலா இருந்தீர்கள்
குவைத் வெயில் எப்படி
டிரைவிங் கஷ்டமா அங்கே
அடடே கல்யாணத்துக்கு வந்திருக்கலாமே
மழையா வரும்போதும்
மோகன் உங்கள் ப்ரண்டா, அப்படியா’
எல்லாம் பேசிக்கொண்டோம்
அந்த ஒரேயொரு விஷயம் மட்டும்
தொடப்பட முடியாமல்
நம்மைச் சுற்றிச் சுற்றி
புதைந்து எழுந்து புதைந்து
நழுவிக் கொண்டிருந்தது.
கேசட் முடிந்து அறையில்
மௌனம் விழுந்த அரைநிமிஷம்
நமது இருதயங்களுக்கடியில் எலும்புகள் நழுவின
மொத்தச் சூழலையும் நொறுக்கி
நம் முழு இருப்பையும் அசைத்துவிடும்
ஒரு கனத்த கேள்வியின்
விசுவரூபத்தின் முன்
தடுமாறி நின்றோம்.
கேசட் மீண்டும் தொடர
நம் இருதயங்களின் நல்லோரத்தை மட்டும்
விரிவுபடுத்தி விரிவுபடுத்தி
நாம் சிரிக்கத் தொடங்கினோம்.
-சமயவேல்
உதட்டு மருவுக்கு
ஒரு கோடி கொடுக்கலாம்
நெளிவுக் கூந்தலுக்கு
நான் அடிமை
தெத்துப்பல் வரிசைக்கு
திருடனாகவும் சம்மதம்
வெள்ளிக்கொலுசில்லாத பாதமாக
விடமாட்டேன்
ஒட்டியாணம் பூட்டிய
உன் அழகெல்லாம் எனக்கு
சிரி மனம்விட்டுச் சிரி
சிரிப்பில் வரும்
சொற்சீரடிக் கவிதைகள்
அங்கயற்கண்ணி
போல நீ
சோமசுந்தரேஸ்வரனுக்கு
என்ன வேலை.
-விக்ரமாதித்யன்
புதிய நிறங்கள்
புதிய புரட்சிகள்
கேஎப்சியில் கோழி வறுபடும் நறுமணம்
காற்றில்
எண்ணெய்க்கான யுத்தங்கள்
சொல்கிறார்கள்
வனங்கள் அருகிவிட்டன
தண்ணீர் விஷமாகிவிட்டது
புலிகள், குட்டிகள்
தலைகுனிந்து
கடவுளிடம் திரும்பிக்கொண்டிருக்கின்றன
என்று சொல்கிறார்கள்
போக்குவரத்து சிக்னல்களில்
அலை அலையாக யாசிக்கும் பசி
எமது காமத்தைவிட வன்மைகொண்ட
ஆனால்
மென்மையானதும்
நுட்பமானதுமான
ஆடைகள்
உள்ளாடைகள்
நட்பும் காதலும்
சிக்கலும், புதிருமாக மாறிய
அந்தத் திருப்பத்தில்
நாகலிங்க மரநிழலில்
அவன் அவளுக்காகக் காத்திருந்தான்
இன்னும் சில நொடிகளில்
முழுவதும் இருட்டப் போகிறது
அவனை நோக்கி தெற்கிலிருந்து வந்தாள்
அவளின் முகம் தெரியவில்லை
எல்லாம் கோடுகளாகி விட்டன
தூத்துக்குடி
சிங்காநல்லூர்
பிரம்மபுத்ராவின் கரையோரம்
சியரோ லியான்
எந்த முகமாகவும் இருக்கலாம்
புறங்கழுத்திலிருந்து உயரும் காலர்கொண்ட
ஸ்வெட்டர் அணிந்திருந்தாள்
அவள் அவனை நோக்கி வரும்போதே
தோள்களை உயர்த்திவிட்டாள்
அவனும் உற்சாகத்தில்
முன் நகர்ந்தான்
நான் பரவசம் கொண்டேன்
ழாக் ப்ரெவரைப் போல
ஒரு தருணத்துக்குத் தயாரானேன்
அன்றைய மாலையில்
எனக்கு இரண்டாவது நற்செய்தி
அவர்கள் அந்த நாகலிங்க மரத்தின் அடியில்
வள்ளுவர் கோட்டத்திற்கும்
மகாத்மா காந்தி சாலைக்கும் நடுவில்
குதிகாலை உயர்த்தி
ஆரத்தழுவிக் கொண்டார்கள்
இந்தக் கவிதையை நான் இப்படி
இங்கிருந்து எழுத
எனக்கு இத்தனை நூற்றாண்டுகள்
தேவைப்பட்டன
- ஷங்கர்ராமசுப்ரமணியன்
காதலித்துப் பார்
உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்
காதலித்துப் பார்
தலையணையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருளக் காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலைக் கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்துப் பார்
இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்துப் பார்
பூக்களில் மோதி மோதியே உடைந்து போக உன்னால் முடியுமா?
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?
அத்வைதம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்துப் பார்
சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்காகவேணும்
புலன்களை வருத்தி புதுப்பிக்க முடியுமே அதற்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே ,
அதற்காகவேணும்
காதலித்துப் பார்
சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய்
இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சிக்கனச்
சிலுவையில்அறையப்பட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க
மறந்தாலும் காதலித்துப் பார்
சொர்க்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்துப் பார்.
-வைரமுத்து
மணல்துகளாய் காலம் மேவிய
கடற்கரையில்
நாம் ஒருவரையொருவர் சார்ந்திருந்தோம்
எதிர்வானில்
என் அழுகையின் சாயல்கொண்டிருந்த மேகம்
வலப்புறமிருந்து இடப்புறம் நகரும்வரை
கைகளாய்ப் படர்ந்திருந்தது நம் காதல்
கரையேறிய படகுகள்
உலர்ந்த மீன்களைப்போல் சுவாசமிழந்திருந்தன
நம்மைக் குழந்தைகளெனப் பாவித்து
மாலையும் அந்தியும் இறுக அணைத்துக்கொள்கையில்
வெடித்துச் சிரிக்கவும்
குமுறி அழவும் பக்கபலமாயிருந்தது நம் காதல்
மௌனம்
உனக்கு மிகவும் பழக்கப்பட்ட பறவை
எனக்கோ இரைதேடலில் கூட எட்டிப் பார்க்காதது
இன்னும் உன் மௌனம் ஆகாயத்தில்
கடலில் துள்ளிய மீனைக் கொத்தி மீண்ட லாவகத்தோடு
நீந்திக் கொண்டிருக்கிறது
மௌனம் அடர்ந்த அகாலவெளியால்
காணாத தூரத்தில் பாய்ந்து கிளறிய அம்பின் நோவென
வீறிட்டு அலறுகிறது நம் காதல்.
-குட்டி ரேவதி
வெடித்த பலாவின் வாசனையாக
பரவுகிறது நிலா
நீ என் மீது
நட்சத்திரங்களை எறிந்து
விளையாடத் தொடங்குகிறாய்
தனிமை குளிக்கும் படித்துறையில்
முத்தமிடுவதைப் போல் சுவாசிக்கும் மீன்களை
வேடிக்கை காட்டுகிறாய்
கர்ப்பமான மொட்டின்
அடிவயிற்றுத் துடிப்பை
என் விரல் பற்றி
தொட்டுணர வைக்கிறாய்
குழந்தைபோல வளரும்
இந்த இரவுக்கு
ஒரு பெயர் சூட்ட நினைத்து
அதன் காதில்
மூன்றுமுறை சொல்கிறேன்
உன் பெயரை
-பழநிபாரதி
ஆண்டவன் துணை
அன்புள்ள பானுவுக்கு மாமா எழுதிக் கொள்வது
பணம் அனுப்பியது கிடைத்ததா
ஊதாரித்தனமாக செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறிசேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
சினிமா கடைத் தெருன்னு சுத்தாதே
கீழ்வீட்டு அக்கா துணையுடன் வெளியே போவனும்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்து போத்திக்கனும்
உடம்பைக் கொற நீ கேட்ட வளையலை
அடுத்த மாதம் கொடுத்து அனுப்புகிறேன்
என் மகள் மகாலஷ்மி அமெரிக்கா போவதற்கு
ஏற்பாடும் பணமும் தயார் செஞ்சிக்கிட்டு
கூடவே கொஞ்சம்கூலி விசா பொறுக்கினு வரேன்
அவள் ஊருக்குப் போயிட்டால்
இங்கேயே செட்டில் ஆகிடலாம்
எனக்கும் 55 ஆவப்போகிறது
இது வரைக்கும் உன் அக்காவுக்கு
துரோகம் செஞ்சது கெடையாது
ஒரு கொறையும் உனக்கு வைக்க மாட்டேன்
வீட்டுவேலைக்கு விசாகேட்டு
என் வாசல் மெதிச்ச ராத்திரி
நான் தூங்கவேயில்லை
யோசிச்சிதான் முடிவு பண்ணினேன்
ஐயோ பச்ச குழந்தை
அங்கபோய் எத்தனை கைமாறுதோ
நம்ம கையோடயே இருந்துட்டு
போகட்டுமேன்னு பிச்சைபோட்டுருக்கேன்
வரமா நெனச்சு காப்பாத்திக்கோ
எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன்
ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கன்னு
ஏதாவது துரோகம் பண்ண நெனச்ச
தேவடியா நாயே
ஆள்வச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை
பதில் எழுதவும்
அன்புடன்
மாமா
-மாலதி மைத்ரி
முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து
வெட்கத்தில் புன்னகைத்து
கடற்கரையில் காற்று வாங்கி
கைபிடித்து பரவசமாய் நடந்து
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி
கண்களால் பேசிச் சிரித்து
கால் கடுக்க காத்திருந்து
காது பிடித்து மெல்லத்திருகி
கண்ணீரோடு கட்டியணைத்து
கண்பொத்தி விளையாடி
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து
செல்லமாய் நெஞ்சில் குத்தி
பேசாமல் இருந்து தவிக்கவிட்டு
கோயில் சுற்றி,குளம் சுற்றி
மழை ரசித்து நனைகையில்
துப்பட்டாவில் குடை விரித்து
புத்தகத்தில் கடிதம் மறைத்து
மணிக்கணக்கில் தொலைபேசி
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி,
‘அவர் ரொம்ப நல்லவர்மா’ என
அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி
ஒரு வழியாய் வெற்றி கொள்கிற
காதல் திருமணங்கள் போல
இனிப்பதில்லை
இண்டர் நெட்டில் தேடியலைந்து
பத்துக்குப் பத்து பொருத்தம் பார்த்து
பண்ணுகின்ற திருமணங்கள்.
-கமல்ஹாசன்.
பிப்ரவரி, 2014.