காதலெனும் தேர்வெழுதி

காதலெனும் தேர்வெழுதி
Published on

என் உடல் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் உள்ளம் முதுமை அடையாமல் என்னால் வைத்துக்கொள்ளமுடியும்” என்று ஒரு நேர்காணலில் வாலி சொன்னது நிஜம்தான். அவரினும் அறுபது ஆண்டுகள் இளையவர்களாய் இருந்த கலைஞர்கள் செல்லும் வழியில் கைகோக்கவும், சொல்லும் வழியில் மை வார்க்கவும் அவரால் மட்டுமே முடிந்தது அதனால்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கதாநாயகர்களை சுற்றி நாட்டுக்குள் உலவுகிற பிம்பங்களையும் பாட்டுக்குள் கொண்டு வருகிற பாணியைக் கையாண்டவர் வாலி. எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு வந்தபோது கவியரசன் கண்ணதாசனிடமிருந்து தன்னை வித்தியாசப் படுத்திக்கொள்ள தான் கையாண்ட உத்தி அது என்று வாலியே ஒருமுறை சொன்னார். ஆனால் தனது முதல் காதல் பாடலிலேயே, குறிப்பாக கண்ணதாசனைபோல பரபரப்பாக இயங்குவதற்கு முன்பே அந்தப் பாணியை வாலி கையிலெடுத்தார் என்பதே உண்மை.

‘நல்லவன் வாழ்வான்’ படத்திலுள்ள ‘சிரிக்கின்றாள்’ பாடலில் இப்படி அமைகின்றன வரிகள்

“உதயசூரியன் எதிரில் இருக்கையிலே

உள்ளத் தாமரை மலராதோ

அதையும் தாங்கும் இதயமிருந்தால்

இருண்ட பொழுதும் புலராதோ”

இப்படியெல்லாம் கூட டூயட்டில் எழுத முடியுமா? என்று அண்ணாவை வியக்க வைத்த வரிகள் இவை.

பொன்மனச் செம்மலை

புண்படச் செய்தது யாரோ (சிரித்து வாழவேண்டும்)..

பொன்னின் நிறம் பிள்ளை மனம்

வள்ளல் குணம் யாரோ ( உலகம் சுற்றும் வாலிபன் )

என்று ஆங்காங்கே காதல் பாடல்களில் அதைக் கையாண்டார் வாலி( கொள்கை பாடல்களில் - அரசியல் என்பது தனி )

பூவா தலையா படத்தில் வரும்

“மதுரையில் பறந்த மீன் கொடியை - உன்

கண்களில் கண்டேனே”

என்ற காதல் ரசம் சொட்டும் பாடலில் காஞ்சி சிலை, காவிரி அலையென்று காதலியின் அங்கங்களுக்கு உவமையாக்கிக் கொண்டே வருகிறவர்

“புதுவை நகரில் புரட்சிக்கவிஞன்

குயிலோசை உன் வாய் மொழியோ”

என்று மெதுவாக பாரதிதாசனையும், பத்திரிகை குயிலையும் பாட்டுத்தோளில் உட்காரவைத்துவிடுவார். இப்படி காதலையும் சமூகத்தையும் கலந்தெழுதியதாலும் கவனத்திற்குள்ளானவர் வாலி.

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவனொரு நிலவோ? என்று சரோஜா தேவி பாடுவதுபோல் ஒரு பாட்டு எழுதியிருந்தார். நிலவை அவர் ஆண்பாலாகத்தான் பார்ப்பார். இது குறித்து கண்ணதாசனுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதுண்டு. இப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை. வேறொரு காதல் பாட்டு வேண்டும் என்று கேட்டதால் “குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் ”- இந்த பாடலை எழுதினார். இந்த பாடலைக் கேட்டபின் ஒரு பெண் அவருக்கு கடிதம் எழுதினார். அது ரமண திலகம். அவருக்கு காதல் மனைவியாய் அமைந்தவர். “ஒரு கதவு சாத்தினால் இன்னொரு கதவு திறக்கும். நான் எழுதிய அந்தப்பாட்டு நிராகரிக்கப்பட்டு இந்த பாட்டு வந்தது. இதுதான் என் வாழ்க்கைக் கதவையும் திறந்து எனக்கு மனைவியையும் பெற்றுத் தந்தது” என்று அவர் குறிப்பிடுவார்.

படகோட்டியில் இடம்பெற்ற தொட்டால் பூ மலரும் என்ற பாடல் மிகப்பிரசித்தம். நான் ஒரு முறை அவரிடம் கேட்டேன். “எப்படிங்க தொட்டால் பூ மலரும்? தப்பா இருக்கே..?” என்று.

வாலி சிரித்தார். “ யாருமே இப்படிக் கேட்கலய்யா.. நான் நீ தொட்டா பூ மலரும்னா எழுதினேன். காற்று தொட்டால், நிலவு தொட்டால், சூரியன் தொட்டால் பூ மலரும்யா’ என்றார்.

அந்த காலத்தில் அவர் கடிதம் போல எழுதிய பாடல்கள் காதலர்களிடம் பெரும் புகழ் அடைந்திருந்தன. குழந்தையும் தெய்வமும் படத்தில்

 “அன்புள்ள மான் விழியே.. ஆசையில் ஓர் கடிதம்.. நான் எழுதுவதென்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை” ஆகட்டும்;

“நான் அனுப்புவது கடிதம் அல்ல; உள்ளம் அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல; எண்ணம்” போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

இவற்றின் நீட்சியாகத்தான் குணாவில் “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்..” பாடலைப் பார்க்கவேண்டும். விஜய் நடித்த தேவா படத்தில் வரும் “ஒரு  கடிதம் எழுதினேன்; என் உயிரை அனுப்பினேன்” என்ற பாடலும் ஞாபகம் வருகிறது. காலம் கடந்த கவிஞர் அல்லவா?

சில்லென்று ஒரு காதல் படத்தில் ரஹ்மானின் இசையில் அன்பே வா.. முன்பே வா என்று எழுதி அனுப்பியிருந்தார். ரஹ்மான்  அழைத்து,“ நாம் இருவரும் இணைந்த பாடல்கள் ‘ம’ வரிசை எழுத்தில் தொடங்கினால்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த பாடல் ‘அ’ வில் தொடங்குகிறதே? ஏதாவது மாறுதல் செய்யமுடியுமா?” என்றாராம்.

“அப்படியா... முன்பே வா என்று தொடங்கி அன்பே வா- வை பின்னால் போட்டுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டார்.  அது ஓர் இனிமையான காதல் பாடல்!

சமீபத்தில் வந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ‘ஒனக்காகப் பிறந்தேனோ பேரழகா? பிரியாமல் இருப்பேனே பகலிரவா? ’ என்று தொடங்கும் மிக அழகான பாடல் ஒன்றுள்ளது. கார் வைத்திருக்கும் ஒரு  பண்ணையார் பற்றிய திரைக்கதை அது. வாலியும் ஒரு கார் வைத்திருந்தார். அவருக்கு ஓட்டத் தெரியாது. ஒருநாள் ஓட்டுநர் வரவில்லை. வாலியால் காரை எடுக்க முடியவில்லை என்பதால் துணைவியார் இடித்துரைத்தார். வாலி ஒரே வாரத்தில் கார் ஓட்டக் கற்று பெங்களூருக்கு மனைவியை வைத்து ஓட்டிச் சென்றாராம். இந்த பாட்டை எழுதுகையில் இசையமைப்பாளர் ஜஸ்டினிடம் இந்த சொந்த வாழ்க்கை அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

தேன் சிந்துதே வானம் படத்தில் வரும் ‘ உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற பாடலை முழுக்க முழுக்க இசை வார்த்தைகளால் எழுதியிருப்பார். அதிலே மிகப்பெரிய ஆச்சரியம், இசை மாதம் என்பதால் மார்கழி மாதத்தையும் மெட்டுக்குள் கொண்டுவந்திருப்பார். இசையையும் காதலையும் இப்படி இணைத்தெழுத முடியுமா என்கிற வியப்பு இன்னும் அடங்கவிலை எனக்குள். காதலைக் கொண்டாடிய காதல் தேசம், காதலர் தினம்  இருபடங்களுக்குமே வாலிதான் பாட்டு எழுதினார். ‘என்னவிலை அழகே’ என்ற காதலர் தினப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று ரசிக்கப் பட்டது. கவிஞர் அறிவுமதி இதற்காக வாலியின் வீட்டுக்குச் சென்று பாராட்டிவிட்டு வந்தது நினைவுக்கு வருகிறது.

ஏற்ற உவமைகளை கையாளுவது, இரண்டு வரிகளுக்கிடையிலான இணைச்சொற்களைக் கூட கவனமாய் தேர்ந்தெடுப்பது (சீனத்துப் பட்டுமேனி -

செஞ்சீனத்துபட்டுமேனி), சிக்கன் குன்யா, மின்வெட்டு இப்படி பரபரப்பான செய்திகளை கூட பாட்டுக்குள் கொண்டுவருவது என்பதெல்லாம் கவிஞர் வாலியின் காதல் பாடல்களில் காணக்கிடைக்கும் உத்திகள். அதனால் தான் இறுதிநாள் வரை அவரை “இளமைக் கவிஞர்” என்று கொண்டாடியது கோடம்பாக்கம்.

பிப்ரவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com