காதலில் கழித்த கடந்த காலம்!

காதலில் கழித்த கடந்த காலம்!
Published on

எவர் தலைக்கு காதல் ஏறி விட்டதோ, அவர் காலடியில் உலகம் கிடக்கும்' -  'தில் சே' படத்துக்காக குல்ஸார் எழுதிய பாடல் வரி. இந்திய சினிமா உருவான காலம் முதலாக அதிகபட்ச திரைப்படங்களின் மையக் கரு காதலாகவே இருந்திருக்கிறது, இன்னும் தொடர்கிறது, இனிமேலும் தொடரும்.

இயக்குநர் கே. பாலச்சந்தர் தன்னுடைய தெலுங்கு திரைப்படமான ‘மரோ சரித்ரா' (1978)வை இந்தியில் ‘ஏக் துஜே கேலியே' என்று இயக்கினார். லக்ஷ்மிகாந்த் &பியாரேலால் இசையில் ஆனந்த் பக்ஷியின் பாடல் வரிகளில் இந்தியா முழுவதும் காதல் காற்றில் கலந்தது. இந்தத் திரைப்படத்தினைத் தொடர்ந்து மும்பையில் எண்ணற்ற கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. குறிப்பாக வெவ்வேறு மொழியினரிடையே காதல் திருமணங்கள் நடந்துள்ளன. இன்றும் அத்திரைப்படம் பார்த்து திருமணம் செய்து கொண்டதாகச் சொன்னவர்களைத் தெரியும்.

'ஏக் துஜே கேலியே' திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் இறுதியாக தங்கள் காதலுக்கு உண்டான எதிர்ப்பால் தற்கொலை செய்து கொள்வதாக முடியும், அதைத் தொடர்ந்து கோவா மற்றும் மும்பைக் கடற்கரைகளில் காதல் ஜோடிகளின் பிணங்கள் கண்டெடுக்கப் படவே படத்திற்கு தடை கூட விதிக்கப் பட்டிருக்கிறது. இன்றும் ‘நாம் இருவரும் என்று ஒன்றாகச் சேருகிறோமோ, அப்பொழுது ஒரு வரலாற்றை உருவாக்குவோம், ஒருவேளை ஒன்றாகச் சேர முடியவில்லை என்றாலும் ஒரு வரலாற்றை உருவாக்குவோம்' என்ற அர்த்தத்தில் பாடல்கள் காற்றில் காதலைப் பரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன.

1931ல் வெளியான ‘ஆலம் ஆரா' இந்தியாவின் முதல் பேசும் படமாகும். ஒரு ராஜகுமாரனுக்கும் ஒரு நாடோடிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் தான் இப்படத்தின் கதை. இந்திய சினிமா முதலில் பேசியது காதலைத்தான் ‘‘இஷ்க்'' என்ற வார்த்தைதான் முதன் முதலாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலாம் ஆரா திரைப்படத்தில் காதலித்த நாயகன் பிரித்விராஜ் கபூர் பின்னர் சலீம் அனார்கலி போன்ற அமர காதலர்களை சேரவிடாமல் செய்த வில்லனாகவும் மாறினார். அதற்குப் பிராயச்சித்தமாக அவரது மகன் நடிகர்/இயக்குநர் ராஜ்கபூர் காதலை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்.

இவர் இயக்கிய அத்தனைப் படங்களும் காதலை மையமாகக் கொண்டவையே. காதலின் பல்லாயிரம் துருவங்களின் நுனிகளையும் தொட்டவர். திரையில் அவர் காதலிப்பதைக் காணும் ரசிகர்கள் தாங்களும் காதலின் ஆழங்களை அளந்து பார்த்துவிட கண்டிப்பாக நினைப்பார்கள். ஒருதலைக் காதலில் துவங்கி முக்கோணக்காதலையும் தாண்டி பலப்பல வகையான காதல்களை படமாக்கியவர்.

1970ல் இவர் நடித்து, இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்' திரைப்படத்தை இயக்கி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்தப் படத்தில் பள்ளிப் பருவத்தின் பதின் வயதில் இளம் ஆசிரியை மீது காதல் வயப்படுவதில் துவங்கி, அக்காதல் நிறைவேறாமல் வாழ்வில் அடுத்தடுத்த கட்டங்களில் ஐந்தாறு காதல்களின் தோல்வியையும் கண்டு, தன்னுடைய தீராக் காதலான சர்க்கஸில் ஜோக்கராகும் இலட்சியம் நிறைவேறி தன் இறுதி காட்சியன்று முன்னாள் காதலிகளை அவர்களின் கணவர்களுடன் அழைத்துப் பார்த்து மகிழ்ந்து அவர்கள் முன் உயிர் துறப்பதாக அமைந்த படம்.

ஆட்டோகிராப்கள், பிரேமம்கள் மற்றும் இன்னும் பலத் திரைப்படங்களுக்கெல்லாம் ஆதாரப் படம் இதுவெனலாம்.

ராஜ்கபூர் நடிப்பதை நிறுத்திக் கொண்டு இயக்குநராக பல வெள்ளி விழாப்படங்களை கொடுத்துள்ளார். 1973ல் ‘பாபி' என்ற திரைப்படம் இந்தியா முழுவதும் மொழிப் பாகுபாடின்றி மிகச் சிறந்த காதல் திரைப்படமாக வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘சத்யம் சிவம் சுந்தரம்' மற்றும் ‘பிரேம் ரோக்' ஆகியன இந்தியத் திரையுலகில் இன்றும் ஆகச் சிறந்த திரைப்படமாக பட்டியலில் இருக்கின்றன.

1985ல் இவர் இயக்கிய ‘‘ராம் தேரி கங்கா மைலி' திரைப்படம் கடைசிப் படமாகும். கங்கை நதி பிறக்கும் கங்கோத்ரி பகுதியில் வாழும் கங்கா என்ற இளம் பெண் காதலுக்கு இரையாகி எப்படி அழுக்காகி ஓடும் கங்கைக் கரையில் அமைந்த காசி வரைக்கும் வந்து களங்கப்படுகிறாள் என்ற சமூகத்தின் அப்பட்டமாக முகத்தை ஒரு அழகான ஆழமாக காதலின் வழியாக காட்சிப்படுத்தியிருப்பார்.

காதலை மையமாகக் கொண்ட திரைப்படங்களை மட்டுமல்ல, காதலுக்காக தனது 39வது வயதில் விஸ்கியில் தூக்க மாத்திரைகளைக் கலந்து குடித்து தற்கொலையும் செய்து கொண்ட இந்திய சினிமாவின் மகா கலைஞன் குருதத். காதலையும் தத்துவத்தையும் கலந்து கவிதை பாட, கைஃபி ஆஜ்மிக்கு மது ஊற்றிக் கொடுத்து விட்டு திரைப்படச் சட்டகம் முழுவதும் காதல் ஒளியை வி.கே. மூர்த்தியைக் கொண்டு பதிவு செய்து கொடுத்த காதல் பித்தன்.

இவர் நடித்தப் படங்களை விட இயக்கிய திரைப்படங்களில் காதலுக்கு தனித்துவமிருக்கும். ‘பியாஸா' மற்றும் ‘காகஜ் கே ஃபூல்' ஆகியத் திரைப்படங்கள் நம்மை காதல் செய்யத் தூண்டுவதோடு அந்தக் காதலுக்காய் எதையும் செய்யலாம் என்று மனமாற்றம் செய்யக் கூடிய வசியத்தை கொண்டவை. ஏமாற்றங்களும், துரோகங்களும் ஒரு மெல்லிய காதல் உணர்வுடைய மனிதனை எப்படி அலைக்கழிக்கும் என்பதற்கு இந்த இரண்டு திரைப்படங்களும் உதாரணம்.

‘‘சாஹேப் பிவி அவுர் குலாம்' என்ற திரைப்படம் குருதத் இயக்கவில்லை என்றாலும் அது வெளி வந்த காலகட்டத்திற்கு அப்படம் பேசிய முற்போக்குத்தனமும் காதலும் சலிக்காத ஒன்று.

தான் இயக்கிய அத்தனைத் திரைப்படங்களிலும் பனிமழைப் பெய்யும் ஸ்விட்சர்லாந்தில் படம் பிடிக்க தவறாத யஷ் சோப்ரா இந்திய நவீன சினிமாவில் காதல் திரைப்படங்களுக்கு காட்ஃபாதர்.

அமிதாப் பச்சன் என்ற 'ஆங்கிரி யங் மேனை' 'கபி கபி'(1976) என்ற திரைப்படத்தில் காதலில் உருக வைத்தவர். மீண்டும் ‘சில்சிலா' (1981) என்ற திரைப்படமும் இப்படியான ஆழமான காதலை மையமாகக் கொண்ட திரைப்படம் தான். காதலில் பல நிலைகளை கண்டும் உணர்ந்து அவற்றை திரைப்படமாக்குவதில் தேர்ந்தவர் யஷ் சோப்ரா.

ஸ்ரீதேவியை கனவுக்கன்னியாக்கியத் திரைப்படம் '

'சாந்தினி'' (1989) மீண்டும் ஒரு முக்கோணக் காதல் மற்றும் குளுகுளு ஸ்விட்சர்லாந்து ஆகியன கொண்டது. 1991ல் வெளியான ‘லம்ஹே' (1991) திரைப்படம் இந்திய காதல் கதைகளின் புரட்சி. நம்ம ஊர் 'மயிலு' ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில்  காதலி இன்னொருவருடன் திருமணம் செய்துகொள்கிறாள். ஒரு விபத்தில் அவள் கணவனுடன் ஒரு பெண் குழந்தையை விட்டு செத்துப் போகிறாள். அந்தப் பெண் குழந்தை வளர்ந்து அம்மாவைப் போல் தோற்றத்தில் இருப்பதோடு அல்லாமல் அம்மாவின் முன்னாள் காதலனையே காதலிப்பதாக கதை.

இறுதியாக பாலிவுட்டின் காதல் மன்னனான ஷாருக் கான் நடிப்பில் ‘டர்'(1993) என்ற ஒரு பித்து நிலைக் காதல் கதையையும், பாகிஸ்தான் பிரிவினையில் பிரிந்த காதலர்களின் கதையான ‘வீர் - ஜாரா'வையும் இயக்கியவர் யஷ் சோப்ராதான்.

இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘தில் தோ பாகல் ஹை'' (1997) என்ற திரைப்படம் இந்திய சினிமாவின் இளமை பொங்கும் காதல் கதைகளில் உச்சத்தில் இருக்கிறது. இன்னமும் நடிகர் நடிகையர் தேர்வுக்கான ஆடிஷன்களில் இப்படத்தின் வசனங்களையே பேசியும் நடித்தும் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தயாரிப்பாளர் யஷ் சோப்ராவின் யஷ்ராஜ் தயாரிப்பு நிறுவனம் இன்றளவும் காதலை மையமாகக் கொண்ட திரைப்படங்களை தயாரிப்பதை நிறுத்தவில்லை. ‘லிவ் இன்' உறவை மையமாகக் கொண்ட ‘‘ ஷுத்த தேசி ரொமான்ஸ்' என்ற வெற்றிப்படமும் நவீன காதலை கையாண்ட சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகும்.

ரமேஷ் சிப்பியும் மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்டு சினிமா இயக்கியவர். சாகார்' போன்ற மெகாஹிட் திரைப்படங்களை இயக்கிய இவரும் காதலை விட்டு வைக்கவில்லை. ‘கமல்ஹாசன், ரிஷி கபூர் மற்றும் டிம்பிள் கப்பாடியாவை வைத்து இயக்கிய சாகர் முக்கோண காதல் திரைப்படம் சிரிக்கவும் அழவும் வைக்கும் சிறப்பான படம்.

மகேஷ் பட் இயக்கிய ‘அர்த்' திரைப்படம் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றது மட்டுமல்ல இந்திய சினிமா வரலாற்றில் முக்கியத் திரைப்படமாகும். இது அவரது சொந்த வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட திரைப்படமாகும். தமிழில்  பாலுமகேந்திரா ‘மறுபடியும்' என்று ரீமேக் செய்திருந்தார்.

ஒரு விபச்சார விடுதியில் திருநங்கை ஒருத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் மீதும் கொள்ளும் காதலுக்காய் ஒரு டாக்ஸி டிரைவர் படும் பாட்டை ‘‘சடக்' என்ற திரைப்படத்தில் பதிவு செய்திருப்பார். இன்றளவும் இப்படத்தின் பாடல்கள் ஆட்டோக்களிலும் டாக்ஸிகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அறிமுக நடிகர்களை வைத்து இவர் இயக்கிய 'ஆஷிகி' திரைப்படமும் காதல் திரைப்பட வரிசையில் தனி இடம் பிடித்துள்ளது. இப்படத்தின் பாடல்களும் ஆகச் சிறந்த காதல் பாடல்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளன.

டைட்டானிக் போன்ற கப்பல் உடைந்தாலும் அதை ஒரு காதல் கதையின் பின்னணியின் காட்டுவதே

சினிமா தர்மமாக சர்வதேசிய கமர்சியல் சினிமாவின் நிலை இருக்கையில் இந்திய பேரரசுகளின், மகாபுருஷர்களின் வாழ்க்கையில் நடந்த காதல் எபிசோட்களை திரைப்படமாக்குவதில் பாலிவுட் முனைந்தது.

அதில் சஞ்ஜய் லீலா பன்சாலி போன்ற இயக்குநர்கள் ‘தேவதாஸ்' என்ற இந்தியா கொண்டாடிய முக்கோண காதல் கதையை திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் ஒளிரும்படியாகவும் காதலும் சோகமும் சொட்ட சொட்ட உருவாக்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து பிரமாண்டமான காதல் கதைகளை மட்டுமே இன்றளவும் அவர் இயக்கி வருகிறார். ‘‘ஹம் தில் தே சுகே சனம்', ‘சாவரியா' போன்ற திரைப்படங்களை அதன் கலைநயமிக்க காட்சிப் படுத்தலுக்காகவே பார்க்கலாம்.

காதல் கதைகளை திரைப்படமாக்க நினைக்கும் யாரும் நாடக மேதை ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்'டை விடுவார்களா? பான்சாலி அதை  ‘ ராம்-லீலா' என்று மாபெரும் வெற்றிப் படமாகக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அந்த வெற்றிக் கூட்டணி நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடியைக் கொண்டு சர்ச்சைக்குரிய இதிகாச காதல் கதைகளான ‘பாஜிராவ்-மஸ்தானி' மற்றும் ‘பத்மாவத்' ஆகிய காதல் காவியங்களையும் இயக்கியுள்ளார்.

'ரோமன் ஹாலிடே' ஆங்கிலப் படக்கதையை தழுவி இம்தியாஸ் அலி இயக்கிய ‘ஜப் வீ மெட்' (தமிழில்: கண்டேன் காதலை) திரைப்படம் மட்டுமல்லாமல் ‘ லவ் ஆஜ் கல்' என்று அன்றைக்கும் இன்றைக்கும் காதல் எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அனுபவித்து சேர்த்து வைத்திருக்கும் காதல் நினைவுகளின் பலூனை குத்தி விட்டு வேடிக்கைப் பார்க்கிறார் இயக்குநர் இம்தியாஜ் அலி.

கொஞ்சம் உச்சத்துக்குப் போய் 'லைலா மஜ்னு' என்று சொல்லும் வகை காதலையும் ‘ராக் ஸ்டார்' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை பைத்தியமாக்கினார். இதே வகையில் தமிழில் வந்த சேது, ‘தேரே நாம்'  என்ற பெயரில் அப்பழுக்கில்லா இளமைக் காதல் படங்களில் அறிமுகமான சல்மான் கான் நடிப்பில் வெளியானது.

சல்மான் கான் ‘மை நே பியார் கியா' படத்தின் மூலம் உலக அளவில் பிரசித்தம் பெற்றதுக்கு காரணம் குடும்பப் பாங்கான திரைப்படத்தில் வலி மிகுந்த ஒரு காதலைக் காட்டி அது திருமணத்தில் சுபமாய் முடியும்படியான கதையாடலை நிகழ்த்தியதுமே. இந்த ஃபார்முலாப்படித்தான் ‘ஹம் ஆப்கே ஹை கோன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'ப்ரேம் ரத்ன் தன் பாயோ' வரைக்கும் வெளியாகின்றன.

காதலில் எத்தனை வகையிருக்கிறதோ அத்தனை வகையையும் திரைப்படமாக்கி விட்டனர் பாலிவுட்காரர்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் தான் உணர்ந்த காதலை ஏதேனும் ஒரு திரைப்படத்தில் பார்த்து விடலாம்.

அறுவது வயதுகளைத் தாண்டியப் பின் உண்டாகும் காதலும் ‘சீனி கம்' என்ற திரைப்படத்தில் பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றிப் படமாக அமைந்தது.

அறுபது வயதுகளில் உண்டாகும் காதலை கட்டுப்படுத்த முடியவில்லையே காரணம் இந்த இதயம் இன்னும் குழந்தையாக இருக்கிறதே என்ன சொன்னாலும் கேட்காமல், தோல்வி அடைவாய் என்று அதைரியப்படுத்தினாலும் படியாமல் மீண்டும் மீண்டும் காதலில் வீழ்கிறதே, பற்களால் பட்டு நூலை அறுத்திட முடியுமா என்று ‘தில் தோ பச்சா ஹை ஜி' என்று பாடல் எழுதுகிறார் எழுபது வயதுகளில் இருக்கும் கவிஞர் குல்ஜார்.

மும்பையில் மையப்பகுதி தாதரில் உள்ள ‘மராத்தா மந்திர்' திரையரங்கில் ரிலீசான தேதியிலிருந்து இருபது ஆண்டுகளைத் தாண்டி இன்றைக்கும் மேட்னி ஷோ காட்சியாக ஒரு படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. காதலர்கள் ராஜ் மற்றும் சிம்ரன் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கின்றனர். அது யஷ் சோப்ராவின் மகன் ஆதித்ய சோப்ரா இயக்கத்தில் வெளிவந்த ‘தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'.

ஆதித்யாவிடம் உதவி இயக்குநராக இருந்த யஷ் சோப்ராவின் மருமகன் முறை உறவுப்பையன் கரன் ஜோகர் பின் இந்த காதல் படங்களை இயக்கும் ரிலே ரேஸில் பொறுப்பை கையில் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

‘குச் குச் ஹோத்தா ஹை', ‘கபி குஷி கபி கம்', ‘சலாம் நமஸ்த்தே' ‘கல் ஹோனா ஹோ' போன்ற திரைப்படங்களை எழுதி இயக்கி காதல் படங்களின் இன்னொரு முகவரியாக மாறி இருக்கிறார்.

பாலிவுட் இன்னமும் அதிகம் விரும்புவது காதல் கதைகளைத்தான். மும்பை மாநகரத்தின் ஒவ்வொரு ஆணும்  பெண்ணும் தேவதைத் தன்மை கொண்ட எதிர்பாலரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் தாங்களுக்கு கிடைக்காத காதலை நிழலாகப் பார்க்க நினைக்கிறார்கள் எனலாமா?

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com