திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சைவசமயத்தைப் பரப்புவதற்கும், தமிழ்மொழி இலக்கியமூலநூல்களை பாடநூல்களாக உரையுடன் அச்சியிட்டு வெளியிடுவதற்கும் 1920 இல் நெல்லையில் வ. திருவரங்கபிள்ளை, திரவியம்பிள்ளையால் தொடங்கப்பட்டது. தற்போது அதன் மேலாண்மை இயக்குநர் சுப்பையா தங்களது பதிப்பகத்துறை கடந்து வந்த பாதை குறித்து அந்திமழைக்காக பேசினார்.
" சைவம் மற்றும் தமிழ் இரண்டையும் இரு கண்களாக நினைத்து நாங்கள் பணி செய்து வருகிறோம். அன்றைக்கு கழக வெளியீடுகள் வெளியிட்ட பாடபுத்தகங்கள் மூன்று மாதத்தில் விற்பனை ஆகிவிடும். அதற்கான தொகையும் வந்துவிடும். பாடநூல் நிறுவனம் வெளியிடும் வரைக்கும் கழகத்தின் பணி பெரிய அளவில் இருந்தது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தொடங்கிய பிறகு கழகம் தேர்ந்தெடுத்து நூல்களை வெளியிடும் சூழல் உருவானது.
திருவரங்கபிள்ளை காலத்திற்குப் பிறகு வ. சுப்பையாபிள்ளை பொறுப்பேற்றார். சுப்பையாபிள்ளை ஒரு சிவனடியார். பார்ப்பதற்கு மிக மெலிந்தவராக இருப்பார். இவரா இவ்வளவு பெரிய வேலையைச் செய்கிறார் என்று ஆச்சரியப்படுவோம். சிவனடியாராக இருந்தாலும் தமிழ் தழைத்தோங்க உழைத்தவர். பழந்தமிழ் இலக்கியங்களையெல்லாம் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கும், கல்லூரியில் பாடம் கற்பிப்பதற்கும் மூல நூலை மட்டுமல்லாமல் அதற்கு உரைவிளக்கமும் தந்த பெருமைக்குரியவர். முத்தொள்ளாயிரத்திற்கு
சேது உலகநாதன்தான் சரியாக உரையெழுதுவார் என்பதை அறிந்து அவரிடம் ஒப்படைக்கிறார். நாராயணன் அப்புசாமி அறிவியல் அறிஞர் அவரிடம் அறிவியல் நூல்களை எழுதச்
சொல்லி வெளியிட்டார். தேவநேயபாவாணரை செந்தமிழ்ச்செல்வியில் அறிமுகம் செய்து ஒவ்வொரு
சொல்லுக்கும் வேர்ச்சொல் விளக்கம் தொடர் எழுத வைத்தார். அந்த தொடர்களை நூலாக பதிப்பித்தும் வெளியிட்டார். தமிழ்த் துறைக்கு மட்டுமல்லாமல் என்னென்ன துறைகளுக்கெல்லாம் நூல்கள் வேண்டுமோ அத்தனை துறைகளுக்கும் தகுந்த ஆசிரியர்களைக்கொண்டு நூல் வெளியிட்டார். அவர் தமிழ் இலக்கிய நூல்களை அச்சிடவில்லையென்றால் தமிழாசிரியர்களுக்கு பாடம் நடத்த நூல்கள் கிடைத்திருக்காது.
பெரியார் ஈ.வே.ராமசாமி சென்னையில் திருக்குறளுக்காக மூன்று மாநாடுகள் நடத்தியுள்ளார். அந்த மாநாட்டில் "திருக்குறளை எல்லோரும் படிக்கணும். நாலணாவுக்கு அச்சடித்துக் கொடுக் கணும்.. எளிய உரை வேண்டும்‘ என்றார். அந்த நேரத்தில்தான் டாக்டர் மு.வரதராசனார் எழுதிய எளிமையான உரையை அச்சிட்டு சுப்பையாபிள்ளை வெளியிடுகிறார். அட்டை வடிவமைப்பும் செம்மையாக செய்து செம்பதிப்பில் திருக்குறளை வெளியிட்டார்கள். முதன்முதலில் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். பதிப்பகத்துறையில் செய்த பணிக்காக 1967&ல் இவருக்குப் பத்ம‘ஸ்ரீ விருது வழங்கினார்கள். இதுவரை பதிப்புத்துறைக்குகென்று பத்மஸ்ரீ விருது யாருக்குமே வழங்கப்படவில்லை. அதுவும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. அரசு கிட்டத்தட்ட 25 கழக நூலாசிரியர்களின் நூல்களை நாட்டுடமையாக்கி யிருக்கிறார்கள். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. 700 அரங்குகள் இருந்தாலும் புத்தகக்கண்காட்சியில் பொதுமக்கள் நம்ம அரங்கை கேட்டு தேடிவந்து நூல்கள் வாங்கிவிட்டுதான் செல்லுகிறார்கள். நாங்கள் 3500க்கு மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் வெளியிட்டுள்ளோம். பலமுறை மறுஅச்சு கண்ட தலைப்புகள் 200க்கு மேல் இருக்கும். எமது முன்னோர்கள் என்ன
எண்ணத்தில் ஆரம்பித்தார்களோ அந்த எண்ணங்கள் அடுத்தடுத்து வந்தவர்களிடம் தொடர்ந்தன. அந்த நிலை மாறாததால்தான் நாங்கள் இன்றும் மக்கள் மத்தியில் வரவேற்புடன் இருக்கிறோம்," என்று நிதானமாகக் கூறினார் சுப்பையா.
(சந்திப்பு:மா.கண்ணன்)
ஜுன், 2019.