களப்பணியாளர்கள்

களப்பணியாளர்கள்
Published on

களப்பணியில் தீவிரமாகச் செயல்படும் இளைஞர்கள் அவர்கள் செயல்படும் பகுதிகளில் மாற்றங்களை உருவாக்குகிறார்கள். சின்ன மாற்றங்களாக இருந்தாலும் அவர்களின் சமூகப் பங்களிப்பு முக்கியமானது. அத்துடன் ஜனநாயகத்தில் எதிர்ப்பு அரசியலும் முக்கியமானதே. நம்பிக்கையூட்டும்  இளம் சமூகக் களப்பணியாளர்களில் சிலரை இங்கே பார்க்கலாம்.

நாகராஜ் , 42

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில்  வாழும் இருளர் பழங்குடி இனத்தவரின் உரிமைகளுக்காக போராடும் நாகராஜ் எட்டாவது வரை மட்டுமே படித்தவர்.

சாதாரண வாகன ஓட்டுநராக இருந்தவர் பேராசிரியர் கல்யாணியின் வழிகாட்டுதலால் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தில் சேர்ந்து இருளர் முகாம்களை உருவாக்கி வருகிறார். சுமார் 150க்கும் மேற்பட்ட இருளர் குடியிருப்புகளை இந்த மாவட்டங்களில் கட்டமைத்து அவர்களுக்கான சங்கச் செயல்பாடுகள், குழந்தைகளின் கல்வி ஆகிவற்றுக்காகப் பணிபுரிகிறார். சங்கச் செயல்பாடு இல்லாத நேரத்தில் கூலி வேலைக்குச் செல்கிறார். செங்கல் சூளைகளில் அவதிப்படும் பழங்குடி மக்களின் வலிகளை உணர்ந்த அவர்களில் ஒருவரான களப்போராளி நாகராஜ் பேசும் தமிழும் பழங்குடியினர் பேசும் தமிழாகவே இருக்கிறது.

அருள்தாஸ், 29

சிவகங்கையைச்  சேர்ந்த இளைஞரான அருள்தாஸ் சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும்போது மேதா பட்கரால் ஈர்க்கப்பட்டு சென்னை நகரில் களப்பணியையே முழுநேர வாழ்க்கையாய் நேர்ந்துகொண்டிருப்பவர். கூடவே இயற்கை விவசாயமும் செய்கிறார். மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதன் இளைஞரணியின் செயலாளர்.  நகர்ப்புற குடிசைவாசிகள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலில் இருந்து விரட்டப்படும்போதும் விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளுக்காகப் பிடுங்கப்படும் போதும் முன்னணியில் போய் எதிர்ப்போராட்டங்களில் கலந்துகொள்கிறார். கயல்வேங்கை, மக்கள்மேடை ஆகிய இரு பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றுகிறார்.

அணுசக்தி எதிர்ப்பு, கொத்தடிமைகள் ஒழிப்பு ஆகிய விஷயங்களிலும் பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் அருள்தாஸ் படிப்பு முடித்தவுடன் கிடைத்த நல்லவேலையை சராசரி வாழ்க்கை வாழ விரும்பாமல் புறக்கணித்தவர். “எல்லாரும் தங்கள் வாழ்க்கையைக் கவனிக்க வேலைக்குப் போய்விட்டால் சமூகப் பிரச்னைகளை யார் கவனிப்பது?” என்கிறார்.

மனுவேல், 28

மனுவேல், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியல் படித்து அதை முடிக்காமல் மதுரை சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்தவர். அங்கே பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடிவந்தவர். தமிழகம் முழுவதும் நடந்த அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது தீவிரமாக இயங்கினார். பின்னர் சத்தியமங்கலம் சென்று அங்கிருந்தவாறே மேற்குத் தொடர்ச்சி மலை மக்கள் இயக்கம் உருவாக்கி புலிகள் காப்பக எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அவரை அரசுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் என்று சிறையில் அடைத்துள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. முதல் வழக்கில் பிணை கிடைத்தது. தே.பா. சட்டத்தில் இருந்து விடுபட வழக்கு நடக்கிறது. மனுவேலையும் அகராதியையும் அவர்களின் போராட்டக் குணமே இணைக்க இருவரும் வாழ்விலும் இணைந்த இளம் தம்பதிகள்.

---

அகராதி, 26

மதுரை வழக்குரைஞர் அகராதியின் குடும்பப் பின்னணி பெரியார் திராவிடர் கழகப் பின்னணி. பெரியாரியமும் அம்பேத்கரியமும் படித்து வளர்ந்தவர் அரசியல் நாட்டத்துடன் மதுரை

சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். அங்குதான் மார்க்சிய அறிமுகம் கிடைக்கிறது. மாணவர்கள் பிரச்னை முதல் சமூகப் பிரச்னை வரை அனைத்திலும் தீவிரமாக மாணவியாகவே இயங்க ஆரம்பிக்கிறார். இயக்கங்களைக் கட்டமைக்கிறார். ஈழத்தமிழர் போராட்டங்களில் தெருவுக்கு வந்து போராடுகிறார். அகராதி தன் வாழ்வை மக்கள் போராட்டங்களில் கழிக்கவே விரும்புகிறார். பெண்கள் எழுச்சி இயக்கம் என்ற இயக்கத்தைக் கல்லூரியில் கட்டி எழுப்பி அதன் மூலம் போராட்டக் களத்தில் காலூன்றி நிற்கிறார்.

பியூஷ் மனுஷ், 36

சேலத்தில் செயல்படும் சூழலியலாளர். வெறும் பேச்சோடு நில்லாமல் நிஜமாகவே களத்தில் இறங்கி செயல்படுகிறார். மூக்கனேரி, அம்மாபேட்டை ஏரி, இஸ்மைல்கான் ஏரி, குண்டுக்கல் ஏரி ஆகியவற்றை மீட்டவர். மூக்கனேரியைப் பார்த்தவர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு மாற்றத்தைக் கொண்டுவந்தவர். தருமபுரியில் கூட்டுப்பண்ணை வைத்து விவசாயம் செய்துவருகிறார். சேலமே குரல்கொடு, சேலம் மக்கள் குழு என பல குழுக்களை அமைத்து இயற்கைப் பாதுகாப்புக்காகச் செயல்பட்டுவருகிறார். 97-ல் இருந்து பொதுவெளியில் இயங்கிவரும் பியூஷ்,“ மண்ணிலும் தண்ணீரிலும்தான் சந்தோஷம் இருக்கிறது” என்கிறார். இந்த சமூக சேவை அல்லது நியாயத்துக்காகப் போராடுவது என்பது தன் மனதில் எழும் கேள்விகளுக்கானப் பதிலைப் பெறுவதே என்றும் சொல்கிறார்.

அக்டோபர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com