என்னுடைய இயல்பான கனவு, நன்றாகவும் அதிகமாகவும் படிக்க வேண்டும் என்பது. அப்பா மாணிக்கம் &அம்மா சீதாலட்சுமி இருவரும் விவசாயத்தைப் பின்புலமாகக் கொண்டவர்கள். தொடக்கக் கல்வி மட்டுமே பயின்றவர்கள். அதனால் தானோ என்னவோ படிப்பின் அவசியத்தை உணர்ந்திருந்தனர்.
என்னை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். நீதிமன்றம் வரை சென்று வாதிட்டு வெற்றி பெறக் கூடிய அளவிற்கு அப்பா வெளியுலகை அறிந்தவர். நேர்த்தியுடனும் ஒழுங்குடனும் வளர வேண்டும் என நினைப்பவர் அம்மா. இவர்கள் இருவரின் பண்பும், குணாதிசயமும் என்னை கல்வியில் உயர்ந்தவனாகக் கொண்டு வருவதற்கு உதவியது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி வேதியியல் படிப்பு, எம்.ஐ.டி அண்ணா யூனிவர்சிட்டியில் பி.டெக் படிப்பு, இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவனமான கொல்கத்தாவில் உள்ள ஐ.ஐ.எம்-மில் எம்.பி.ஏ படிப்பு எல்லாம் சாத்தியமானது, பெற்றோரின் உதவியால்.
கிராமத்தில் இருந்திருந்தால் இந்தளவிற்கு வளர்ந்திருக்க மாட்டேன். பள்ளிக் கல்விக்குப் பிறகு, மேற்படிப்பு படிக்க சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கு வந்ததும் பெற்றோரின் உதவியைத் தாண்டி வழிகாட்டுவதற்கும், பொருளாதார உதவியும் தேவைப்பட்டது. அதை செய்தவர் என்னுடைய அண்ணன் ராமசாமி. என்னுடைய கல்வி கனவைத் தாண்டி, என்னுடைய எதிர்காலத்தையும் பூர்த்தி செய்தவர்.
என்னுடைய தொழில்சார்ந்த வாழ்க்கைக்கு வரும்போது, பத்திரிகை உலகம் முக்கியமானது. பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்ரமணியன் அவர்கள். என்னுடைய பத்திரிகையாளர் கனவை நிறைவேற்றியவர். சென்னையை சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரும் பத்திரிகை உலகிற்கு வர முடியாத காலகட்டத்தில் மாணவர் நிருபர் திட்டத்தை உருவாக்கி என்னைப் போன்றவர்களைப் பத்திரிகை உலகிற்குக் கொண்டு வந்தார்.
பத்திரிகைத் துறையில் எப்படி பாலசுப்ரமணியன் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினாரோ அதேபோல், தொலைக்காட்சி துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் கலாநிதி மாறன். அனைவரும் தொலைக்காட்சியில் பங்கேற்பதற்கான, வேலை பார்ப்பதற்கான சூழலை ஏற்படுத்தினார். அவர் தொடங்கிய சன் தொலைக்காட்சியின் முதல் நாள், முதல் நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக நான் அறிமுகமானேன். அதிலிருந்து என்னை வளர்த்தெடுத்து அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர் கலாநிதி மாறன் அவர்கள்.
அதன் பிறகு, என்னுடைய கனவை நனவாக்கியவர் கலைஞர். கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றுவதற்கு வாய்ப்புக் கொடுத்தார். தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமையான அவரோடு தினசரி இரண்டு முறை சந்தித்துப் பேசுவதற்கும், அவரது ஆளுகையின் கீழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததையும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.
அக்டோபர், 2022