கலையும் கை கொடுக்கும்!

கலையும் கை கொடுக்கும்!
Published on

மாநிலக்கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்து முடித்துவிட்டு ஊருக்கு போக வேண்டும் என்று நினைக்காமல் நான் ஒரு பத்திரிகையில் சேர்ந்தேன் .

வலம்புரி ஜான் வெள்ளந்தி வீரனான என்னை சேர்த்துக் கொண்டார்கள் .

தொடர்ந்து ஐந்தாண்டு காலம் சென்றது.

என் வாழ்க்கை கொஞ்சம் வணக்கம், கொஞ்சம் வீராப்பு,கொஞ்சம் வீரியம் என்று கழிந்தது.

அரசாங்க உத்தியோகத்தில் இல்லை என்றாலும் ஏதோ ஒரு வேலையில் இருந்தால் தான் பெண் கொடுப்பார்கள் என்கிற யதார்த்தம் எனக்கு புரிந்தது.

எனவே ஒரு முடிவு செய்தேன். திருமணம் செய்து கொள்ளும் வரை இந்த பத்திரிகையில் இருப்பது, திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் வேலையை விட்டு விடுவது என்று முடிவு எடுத்து அவ்வாறு இயங்கினேன்.

திருமணம் நடந்தது .

தாலி கட்டி முடித்தவுடன் உடனே வேலையை விட்டு விட்டேன்.

என் மனைவி என்னை கேட்டாள் முதல் இரவில் ..

‘இப்படி ஒரு பைத்தியக்காரன் எவனாவது இருப்பானா? தாலி கட்டி முடித்தவுடன் எனக்கு சோறு போட வேண்டிய நீ வேலையை விட்டு இருக்கிறாயே நான் உன்னை காப்பாற்றுவதா? என்று கேட்டாள்? நான் ஆமாம் என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

இன்று வரை அவள்தான் என்னை விழுந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

அதனால் நான் ஒன்றுமே செய்யவில்லையா? சினிமா மட்டும் பேசிக்கொண்டு திரிந்து கொண்டு இருக்கிறேன் என்று நீங்கள் எண்ணிவிடாதீர்கள்.

நான் சம்பாதிக்கவும் செய்கிறேன். ஒன்றாம் தேதி சம்பளம் கிடைக்காதே ஒழிய என் எழுத்தும் , பேச்சும், என்னுடைய திரைப்பட பயணமும் நிச்சயமாக ஏதோ ஒரு பண உதவியை செய்து கொண்டுதான் இன்று வரை இருக்கின்றது.

கமலஹாசன் அவர்களிடம் திரைப்பட வாழ்க்கை துவங்குகிறபோது எல்லோரும்  அவர் அதிகமாக பணம் கொடுத்து என்னை காப்பாற்றி விடுவார் என்று நினைத்தார்கள் . நான் அவ்வாறு நினைக்கவில்லை .

கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்று தான் நான் உதவி இயக்குநர் என்ற வாழ்க்கையை ஆரம்பித்தேன்.

அதற்கு முன்பு பத்திரிகையில் மாதம் 3500 பெற்றுக் கொண்டிருந்தேன். ஆனால்  அபூர்வ சகோதரர்கள் படத்தில் நான் பெற்ற சம்பளம் மூன்றில் ஒரு பகுதி கூட இருக்காது என்பது தான் உண்மை.

கமலஹாசன் அவர்கள் எனக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் நான் சொல்லிவிட முடியாது .

ஆரம்பகட்டத்தில் ஒரு உதவி இயக்குநருக்கான சம்பளம் அவ்வளவாக தான் திரைப்படத்தில் இருந்தது.

எனவே அதை எனக்கு தந்தார்.

நான் அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாமல் மீதி வருமானத்திற்கு எழுதுவதும் பேசுவதுமாக வாழ்க்கையை நகர்த்தினேன். அது எனக்கு கை கொடுத்தது.

ஆச்சரியப்படுவீர்கள். எனக்கு முதலில் இயக்கக் கிடைத்த வாய்ப்பு நடிகர் ஜெயராம் ரஞ்சிதா நடித்த ‘மிஸ்டர் தேவராஜ்'.

படம் முடிந்து அது வெளியிடப்படாமல் போய்விட்டது. அது தயாரிப்பாளர் என்ற இடத்தில் ஒருவர் செய்த சூழ்ச்சி. கிட்டத்தட்ட படம் முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது .மொத்த சம்பளம் 28 ஆயிரம் ரூபாய் எனக்கு கிடைத்தது.

இது ஒரு வகையில் ஏமாற்றம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.இன்னொரு வகையில் அதை ஈடு கட்டும் விதமாக ‘தேவர் மகன்‘ படம் முடிந்ததும் இயக்குனர் பரதன் அவர்கள் அடுத்த படத்திற்கு என்னை அழைத்தார் .

அதில் ஜெயராம் குஷ்பூ நடித்தார்கள்.

அது 'அக்னிப் பிரதேசம்' என்ற பெயரில்  ஆரம்பிக்கப்பட்டது. பின்னால் 'கோலங்கள்' என்று வெளிவந்தது.

‘நீங்கள் இப்படத்தில் அசோசியேட் டைரக்டர் முதலில் ஒரு டோக்கன் அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள். சம்பளம் பிறகு சொல்கிறேன்' என்றார் பரதன்

 தயாரிப்பாளர் ஹென்றி, தி.நகரிலிருந்து விமான நிலையம் வரைக்கும் காரில்

பேசிக் கொண்டே வந்து, அவர் விமானத்தில் ஏறும்முன்பு ஒரு தொகை கொடுத்தார். இது முன் தொகையாக வைத்துக் கொள்ளுங்கள், சம்பளம் பின்னால் பேசிக் கொள்வோம் என்றார்.

 வீட்டில் வந்து பார்த்தேன்.

ஆச்சரியமாக இருந்தது 30 ஆயிரம் ரூபாய்! என் மனைவி கேட்டாள் ‘யாரிடம் கடன் வாங்கிக் கொண்டு வந்தாய்' என்று. அந்தப் பணத்தை வைத்துத்தான் நான் ஓரிடத்தை வாங்கினேன். அது தான் இன்று வாழும் வீடு.

திரைப்படம், கலை, எழுத்து எதுவாக இருந்தாலும் தேவைப்படுகிற இடத்தில் தேவைப்படும் நேரத்தில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் அது ஒரேயடியாக கைவிட்டு விடாது.

சோர்ந்து போன ஒரு தருணம். அப்போது வசனம் எழுத அழைப்பு. அர்ஜுன் நடித்த அக்னி பார்வை என்ற ஒரு படம். ஒரு மாத உழைப்பு எதிர்பாராத வருமானம் கிடைத்தது.

மலேசியாவில் ஒருவர் பட வாய்ப்பு தருகிறேன் 3 கோடி ரூபாய்க்கு தயாரிப்பு என்று சொன்னார்.

என் சொந்த பணத்தில் மலேசியாவுக்கு விமானத்தில் சென்று இறங்கிய பின் நான்கு மணி நேரம் போன் செய்தும் எடுக்காமல் நான் ஏமாந்த கதைகளும் உண்டு.

ஆடம்பர வாழ்க்கைக்கு வேறுவிதமான இடங்களும் புத்திசாலித்தனமும் இருந்தால் போதும்.

ஆனால் நாம் கற்ற கல்வி நுணுக்கம் எழுத்துகளாகவும் பேச்சுகளாகவும் மாறுகிறபோது நம்மை கலை வாழவைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம்.

கவிப்பேரரசு வைரமுத்து ஒரு முறை என்னிடம் சொன்னார். அப்போது நான் சிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக எழுதிக் கொண்டிருந்தேன் . அழைத்தார் ‘ராசி நீ மிகவும் சிறப்பாகத்தான் உழைக்கிறாய். ஆனால் நீ முதலாளிகளை சரியாக தேர்ந்தெடுக்கத் தவறி விடுகிறாய்.அதனால் தான் உன்னால் முன்னேற முடியவில்லை' என்றார். அவர் பார்வையில் அது சரியாக இருந்தாலும் கூட எனக்கு என்னவோ இயற்கை எனக்கு கொடுத்த இடத்தில் நான் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கருதுகிறேன்.

நான் எனது எழுத்தை நம்பி ‘வண்ணத்துப்பூச்சி ‘என்ற சிறார் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வெற்றிதான் பெற்றிருக்கிறேன். தோல்வி என்றெல்லாம் இல்லை.

சிறுவயதில் எனக்கும் அப்பாவுக்குமான சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கிற பிரச்னையை ‘சைக்கிள்' கதை எழுதினேன் .அதுதான் இன்று கோவா சர்வதேச திரைப்பட போட்டியில் கலந்து புகழைத் தேடித் தந்திருக்கிறது.

வாழ்க்கை என்பது நாம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம் என்பது குறித்து தான்  எனவே நமக்கான வாழ்க்கைக்கு எப்போதும் கலையும் எழுத்தும் கை கொடுக்குமே ஒழிய கீழே தள்ளி விடாது.

பிப்ரவரி, 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com