கருணையும் தண்டனையும்

கருணையும் தண்டனையும்
Published on

இந்தக் கேள்வி காலங்காலமாக கேட்கப்பட்டு வழக்கொழிந்துவிட்டது. பெண்ணைப் புனிதமாக்கி ஒடுக்குவதற்கு இணையானது பெண் என்பவள் புரிந்து கொள்ள முடியாதவள் என்று சொல்லுவதும். இந்தவுலகில் பெண்களை புரிந்துகொள்ளாமல் ஒருவன் வாழ்ந்துமுடித்தான் எனில், அவன் வாழவே இல்லையென்று அர்த்தம். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த பெண்கள் ஏதோவொரு வகையில் முக்கியமானவர்கள். எனது பலவீனங்களையும், அன்பையும் புரிந்து கொண்டவர்கள். என்னுடைய கீழ்மைகளை சகித்தவர்கள். நான் ஆராதிப்பதை கொண்டாட்டமாக ஆக்கியவர்கள். புரிந்து கொள்ள முடியாதவள் பெண் என்பதெல்லாம் அபத்தம். இவ்வுலகின் ஒவ்வொரு நொடியின் மகத்துவத்தையும் அவர்களே பிரசவிக்கிறார்கள்.

என்னுடைய பதின்பருவத்தில் நிகழ்ந்த கதையிது. இரவு வேலைக்குச் சென்றுவிட்டு அடுத்தநாள் பகல்வேளையில் வீட்டிலிருந்தேன். முறுக்கு விற்கும் பெண்ணொருத்தி வீட்டின் முன்னால் வந்து நின்று கூவி அழைத்தாள். இளம்பருவத்தின் அனைத்து ஆசைகளும் கொதித்துக் கொண்டிருந்த உடலைச் சுமந்தபடி அவளை வீட்டிற்குள் அழைத்தேன். முறுக்கு என்ன விலை? சீடை எவ்வளவு என்றெல்லாம் கேட்டபடிக்கு, அவள் எதிர்பாராத நொடியில் அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டேன். அவள் என்னிடமிருந்து விடுபட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.

அந்தக் கணத்தில் எனக்கொரு பயம் கிளம்பிற்று. இந்தப் பெண் வெளியே போய் நடந்தவற்றைச் சொல்லிவிடுவாளோ என்று அஞ்சி, பகல் வேளைகளில் வீட்டில் இருப்பதை தவிர்த்தேன். நாளாந்தமாக நான் வேலைக்குச் செல்லும் பாதைகளை மாற்றினேன். இப்படியாக மாதங்கள் கடந்தன. முறுக்கு விற்கும் அந்தப் பெண்ணை எதிர்கொள்ள அஞ்சினேன். உள்ளே வெட்கித்தேன். ஒருநாள் பேருந்து நிலையத்தில் வைத்து அவரை நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டியதாய் இருந்தது.

அந்த அக்கா எனது கைகளை பிடித்து, எதற்காக என்னைக் கண்டு பயந்து ஓடுகிறாய் எனக் கேட்டபோது, திக்கித் தடுமாறி நான் முந்தைய சந்திப்பில் செய்த செயலுக்காக மன்னிப்புக் கேட்டேன். புன்னகைத்தவர், நீ செஞ்சது தப்புன்னு உணர்ந்துட்டல்ல, இத்தோட அத மறந்துடு...உன் வயசு அப்பிடி செய்ய வெச்சிருக்கு... அதான் யாரு என்னன்னு யோசிக் காம எம்மேல பாஞ்சிருக்க... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம எப்பவும் அவளத் தொடக்கூடாது தம்பி. சரியா..' என்று அன்பாகச் சொன்னார்.

அன்று அந்த நிமிடம் நான் என்னைத் திருத்திக் கொண்டதாகத்தான் நினைத்தேன். ஆனால் இன்றுவரை என்னைத் திருத்திக் கொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன் என்பதுதான் யதார்த்தம். பெண்களின் மன்னிப்பு ஒருவிதத்தில் கருணையென்றால், இன்னொரு விதத்தில் தண்டனை. ஆண்கள் எத்தனை பலவீனமானவர்கள் என்பதை எத்தனை பெண்களால் மன்னிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்துதான் அறிந்துகொள்ள முடியும்.

நானும் என்னைச் சுற்றியிருக்கும் ஆண்களைப் போலவே பலவீனமானவன் தான். பெண்கள் தங்களின் பதின் பருவத்திலேயே ஆண்களைப் புரிந்துகொண்டுவிடுகிறார்கள். ஆண்கள் தங்கள் வாழ்க்கை முழுக்க பெண்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். பெண்களைப் புரிந்துகொண்டவர்கள்தான் தங்கள் வாழ்வையும் புரிந்துகொள்கிறார்கள்.

நவம்பர், 2021.

logo
Andhimazhai
www.andhimazhai.com