கருணாகர பல்லவன்

கருணாகர பல்லவன்
Published on

பாலூர் துறைமுகத்தில் கோதாவரி முகத்துவாரத்தில் கலிங்க மன்னனுக்கு வீரராஜேந்திரரின் சமாதான ஓலையுடன் வந்திறங்கும் கருணாகரப் பல்லவன் என் பதின்வயது நாயகர்களில் ஒருவன். சாண்டில்யன் என்ற பெயரைக் கேட்டாலே சிலிர்ப்புடன் திரிந்தகாலம். தொடர்கதையாக கடல்புறா வெளியான போது அதை வாசித்திருக்கும் அளவுக்கு எனக்கு வயது இல்லை. கடல்புறாவின் மூன்று பாகங்களையும் வாசித்த காலத்தில் கருணாகரனுடன் கடல்புறாவில் ஏறி மாநக்காவரம், கடாரம், அட்சயமுனை, மலையூர், ஸ்ரீவிஜயம் என்று சஞ்சாரம் செய்யும் வாய்ப்பை சாண்டில்யன் எனக்களித்தார். பிற்காலத்தில் முதலாம் குலோத்துங்கன் என்று புகழ்பெற்ற அநபாயனும் கருணாகரனும் இணைபிரியாத தோழர்கள். இருவரும் கலிங்கத்தில் நிகழ்த்தும் சாகசங்கள் முதல் பாகத்திலும் அதன்பின்னர் கருணாகரன் கடலில் நிகழ்த்தும் சாகசங்கள் அடுத்த இரண்டு பாகங்களிலும் இடம்பெறும். நிலப்போரில் வல்லவனான கருணாகரன் சீனக்கடலோடியான அகூதாவிடம் கடல்போர் பற்றி அறிந்து, பல போர்களில் வெற்றிபெற்று சோழ வாணிபத்துக்கு இடையூறாக இருக்கும் கலிங்க கப்பல்களை அழிக்கிறான. ராசேந்திர சோழன் வென்ற ஸ்ரீவிஜயத்தை மீண்டும் கைப்பற்றுகிறான். இவையனைத்தும் அவனது உடல்பலத்தை விட தந்திரங்களால்தான் நிறைவேறுகின்றன.

வாட்போரில் நிகரற்ற கருணாகரன் அட்சயமுனையில் வில்வலன் என்கிற பூர்வகுடித்தலைவனுடனும், கடல்மோகினி எனப்படும் நக்காவரத்தில் கங்கதேவனுடனும் செய்யும் வாட்போர் மிக சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கும்.

பின்னாளில் கலிங்கத்துப் பரணியில் வருகிற கருணாகரத் தொண்டைமான் கலிங்க நாட்டை கொளுத்திவிடுவான். ஆனால் கடல்புறாவில் வரும் கருணாகரன் நிதானமானவன். அனாவசிய உயிர்ப்பலியை விரும்பாதவன். நீண்டகுழல்கள், கழுத்தில் ரத்தின ஆரம் ஆகியவற்றுடனான கம்பீரத் தோற்றத்துடன் ஆணழ கனாகத் திகழக்கூடியவன். வஞ்சகனுக்கு வஞ்சகனாக நண்பனுக்கு நண்பனாக, வழக்கமான சாண்டில்யனின் நாயகர்களைப் போல பெரும் காதலனாக வருவான்.

கடல்புறா என்கிற அவனுடைய கப்பலும் இதில் முக்கியமான பாத்திரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் மரக்கலம் கட்டும் ஆற்றலையும் தொழில்நுட்பத்தையும் உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் கடல்புறா கட்டப்பட்டிருக்கும். அட்சயமுனையில் கட்டப்பட்டு அங்கிருந்து கிளம்பும் கடல்புறா தன் முதல்போரிலேயே இரண்டு கலிங்க மரக்கலங்களைக் கைப்பற்றிவிடும் சாகசம் நினைவில் நிற்கிறது. நள்ளிரவில் மரக்கலத்தின் விளக்குகளை அணைத்து விட்டு நடக்கும் போர் அது.

இளையபல்லவன் ஒற்றை ஆளாக கப்பலில் இருந்து இறங்கி படகில் சென்று கோட்டைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி அவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவான். பல்வேறு இனங்களைச் சேர்ந்த கடல்கொள்ளையர்கள், மாலுமிகள் நூற்றுக்கணக்கான பேர் இவனது தோற்றத்தையும் பேச்சையும் பார்த்து அவன் பின்னால் அணிவகுப்பர். பொதுவாக சாண்டில்யனின் சரித்திரக் கதைகளில் நாம் அறிந்த வரலாற்றுப் பாத்திரங்களை விட துணைப்பாத்திரங்களையே கதை மாந்தர்களாக ஆக்கி உலவவிட்டிருப்பார். சில சமயங்களில் கற்பனைப் பாத்திரங்களே நாயகர்களாக இருக்கும்(மன்னன் மகளில் கரிகாலன், கன்னிமாடத்தின் அபராஜிதன்).

அசல் சோழ சரித்திரத்தில் கருணாகரப் பல்லவன் ஒரு துணைப்பாத்திரமே. அநபாய சோழன் தான் முக்கியப் பாத்திரம். ஆனால் கடல்புறாவில் கருணாகரன் அநபாயனின் உத்தரவையே மீறிச் சென்று மிகப்பெரிய நாயகனாக உருவெடுக்கிறான். கடல்புறாவை இன்று வாசிக்கும்போது சாண்டில்யன் கதையை ஜவ்வாக இழுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அதை மீறி மிகப்பெரிய சாகச உலகை அவர் அளிக்கிறார்.

பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் படத்தைப் பார்க்கும் கடல்புறாவின் எந்தவொரு தீவிர வாசகனுக்கும் கடல்புறாவும் ஏன் இன்னும் திரைவடிவம் பெறவில்லை என்று தோன்றும். ஏற்கனவே தமிழ்த் திரை உலகில் இதற்குத் திரைக்கதை எழுதும் முயற்சிகள் நடந்திருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். கொஞ்சம் இருங்கள். இவ்வளவு எழுதிவிட்டு கடாரத்துக் கட்டழகி காஞ்சனா தேவி, அட்சயமுனை கோட்டைத் தலைவன் பலவர்மனின் மகள் மஞ்சளழகி ஆகியோர் பற்றிக் குறிப்பிடாவிட்டால் எப்படி? ஒருத்தி கோதாவரியில் குளிக்க, இன்னொருத்தி கடலில் குளிக்க,  இளைய பல்லவன்  ரசமான காதல் உணர்வுகளில் மூழ்குகிறான். இருவருடனும் இணைவதுடன் மூன்றாம் பாகத்தில் முற்றுப்புள்ளி.

(அசோகன், நிர்வாக ஆசிரியர், அந்திமழை)

நவம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com