கருஞ்சீரகத்தின் அற்புதம்!

கருஞ்சீரகத்தின்  அற்புதம்!
Published on

ம னித உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன் புற்றுநோய், கருப்பை பிரச்னைகளுக்கு கருஞ்சீரகம் நல்லது என்று  மருத்துவர்கள் பல காலமாகச் சொல்லிவருகிறார்கள். மதுரையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவரான ஜெபசிங், கருஞ்சீரகத்தின் பலன்களை உரக்கச் சொல்கிறார். அவரிடம் பேசினோம்.

''இருபது ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் மருத்துவராக இருக்கிறேன். கல்லூரியிலும் மருத்துவமனையிலும் தினமும் குறைந்தது 200 நோயாளிகளையாவது பார்க்கிறேன். சிகிச்சைகளைச் செய்கிறேன்.

கருஞ்சீரகத்தில் உள்ள தைமோக்யுனொன் பல்வேறுவிதமான புற்றுநோய்களை உருவாக்கும் காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. COX2 என்ற என்சைமை இது குறைப்பதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்கிறது. மூட்டுவலிக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அதேபோல் ஐஜிஎப் 2 என்கிற புரதத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதன்மூலமும் சினைப்பை கட்டி போன்ற பிரச்னைகளுக்கு உதவியாக உள்ளது. இதற்கு நேரடியாக சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும் திறனும் உள்ளது.

புற்றுநோயைப் பொறுத்தவரை அது வராமல் தடுக்கவேண்டும். அத்துடன் மீண்டும் வராமல் தடுக்கவேண்டும். குப்பை உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்தல், ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். வீட்டில் சும்மா உட்கார்ந்து சீரியல் பார்த்தால் மன அழுத்தம்தான் அதிகமாகும். இதற்கும் புற்றுநோய், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளது.

சர்க்கரை நோய் மருத்துவர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டுக்குப் போயிருந்தேன். அங்கிருந்த ஒரு மருத்துவர் தன் அனுபவத்தைத் தெரிவித்தார். ஒரு நோயாளிக்கு என்ன மருந்துகொடுத்தும் சர்க்கரை அளவு குறையவே இல்லை! வெறுத்தே போய்விட்டார். அந்த நோயாளி பிறகு வரவில்லை. சில மாதங்கள் கழித்து அவரைப் பார்த்தபோது,
சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாகக் கூறி உள்ளார். இவருக்கு ஆச்சர்யம். எப்படி எனக் கேட்டபோது அந்த நோயாளி கருஞ்சீரகம் சாப்பிடுவதாகக் கூறியதாக அந்த மருத்துவர் என்னிடம் கூறினார். ஆக, இது எல்லோருக்கும் பயனளிக்குமோ இல்லையோ, ஓரளவுக்கு சிலருக்காவது பயனளிக்கும் என்று கருதலாம்.

நீரிழிவுக்கும் புற்றுநோய்க்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. பொதுவாக டைப்2 வகை நீரிழிவு நோய் வந்தால் நம் உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் நாம் சாப்பிடும் சாப்பாட்டை சக்தியாக எரிக்கப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே அதிகமாக இன்சுலினை உற்பத்தி செய்ய உடல் போராடுகிறது. அப்போது ஐஜிஎப் புரதம் உருவாகிறது. இது இன்சுலினை அதிகரிப்பதுடன் புற்றுநோயையும் கொண்டுவந்துவிடுகிறது. மார்பக, குடல், நுரையீரல் உள்ளிட்ட புற்றுநோய்கள் வருகின்றன. நீரிழிவு நோய் வராமல் பார்த்துக்கொண்டால் அதன்மூலம் புற்றுநோய் வராமலும் பார்த்துக்கொள்ளலாம்.

கருஞ்சீரகத்தின் பயன்களைப் பற்றி ஆய்வதற்காக விரைவில் அதனுடன் சேர்த்து வேறு சில பொருட்களையும் சேர்த்து நோயாளிகளுக்குக் கொடுத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இது நிச்சயமாக அறிவியல்பூர்வமான ஆதாரமாக அமையும்.

ஏற்கெனவே  கழுத்து, தலை போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு கீமோ தெரப்பியுடன் மஞ்சளையும் சேர்த்து மருந்துகொடுக்கும் ஆய்வையும் 2006 - ல் செய்துள்ளேன். அந்த ஆய்வுக்கட்டுரையும் பிரசுரமாகி உள்ளது'' என்கிறார் அவர்.

டிசம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com