கம்யூனிஸ்ட்டுகளின் நேர்மை, எளிமை, கொள்கை உறுதி, சமரசமற்ற போராட்டம், தியாகம்... இவற்றை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனாலும் மக்களிடையே கம்யூனிஸ்ட் இயக்கம் செல்வாக்குப் பெறவில்லையே, ஏன்?”
விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் இயக்கத்திற்கு சமமான சக்தியாக அடையாளம் பெற்றிருந்த, விடுதலைக்குப் பிறகு நாடாளு மன்றத்திலும் சட்டமன்றத்திலும் தலையாய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இன்றைய இடம் குறித்த கவலையோடு இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது.
நாடு தழுவிய கம்யூனிஸ்ட்டுகளின் அடையாளத்திற்கு கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்கள் வலுவான தளங்களாக இருக்க, ஆந்திரத்திலும் தமிழகத்திலும் ஒரு முக்கிய சக்தி என்ற அளவில் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். இதர மாநிலங்களில் சிறிய அமைப்புகளாகவே இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றி மேலேற வேண்டுமானால் அதற்கு முதல் படியாக இந்த உண்மை நிலையை ஒப்புக்கொள்வதில் மார்க்சியர்களுக்குத் தயக்கமில்லை.
மிகப் பிற்காலத்தில் உருவான கட்சிகள் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு வலுப்பெற்றிருக்கிறபோது கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னுக்கு வரவில்லையே? முதலாளித்துவக் கட்சிகளின் திசை திருப்பல்கள் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லிக்கொண்டு போய்விடலாம். அல்லது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உள் குறைபாடுகளைப் பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல வெளிக்காரணம், உள் காரணம் இரண்டையும் பேசுவதே நாணயம்.
மிக மையமான காரணம், அரசமைப்பில் அடிப்படை மாற்றங்களைச் செய்கிற குறிக்கோள் மற்ற அரசியல் கட்சிகளுக்கு இல்லாத நிலையில் கம்யூனிஸ்ட்டுகள் அந்த அடிப்படை மாற்றங்களை முன் வைக்கிறார்கள்; அந்த மாற்றங்களின் தேவையை ஆகப் பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளவில்லை. தனியுடைமைக் கட்டமைப்பை மாற்றி, சமத்துவத்தைக் கட்டமைக்க வேண்டுமென்ற எண்ணம் மக்களிடையே வேர் பிடிக்கவில்லை. தனியுடைமை அமைப்பே இறுதியானது, அதில் எப்படியாவது தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்கிற முனைப்பு கூர் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த “‘எப்படியாவது” என்பதில், மத்திய ஆட்சியாளர்களின் பொருளாதாரத் தனியார் மயமாக்கல், கல்வி - சுகாதாரம் வணிகமயமாக்கல், மொழித் திணிப்பு உள்ளிட்ட வஞ்சகங்களை அறச் சீற்றத்தோடு எதிர்ப்பதற்கு மாறாக, அதற்கெல்லாம் ஏற்றவர்களாகத் தங்களை வைத்துக் கொள்வதும் அடங்கியிருக்கிறது.
இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய நாட்களில் என்னை மிகவும் ஈர்த்த, கழுத்து நரம்புகள் புடைக்க நானும் சேர்ந்தெழுப்பிய ஒரு முழக்கம், “‘போராடும் தொழிலாளிக்கு சாதியில்லை மதமில்லை”. ஆனால், சமூக அனுபவங்கள் முகத்தில் அறைந்து ஒலிக்கிற எதிர் முழக்கம்: “‘போராட வேண்டிய தொழிலாளிக்கு சாதி இருக்கிறது, மதம் இருக்கிறது”.
அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்துகிற கட்சிகளின் பட்டியல் நீளமானது. பாஜக இதில் மாறுபட்டது. அது மதத்திற்காக அரசியலைப் பயன்படுத்துகிற கட்சி. “இந்து நாடு இந்தியா’ என்ற ஆர்எஸ்எஸ் நெடுந்திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு அரசியல் முகம்தான் பாஜக. பெருமுதலாளித்துவ ஆளுமைக் கொள்கையும் இணைந்த கட்சி அது. காங்கிரஸ் கொள்கைகளால் ஏமாற்றமடைந்த மக்களில் கணிசமானோரை எளிதாக மதவாதம் பேசிக் கவர்ந்து ஆட்சியதிகாரப் படியில் கால்வைத்தது பாஜக. சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த கட்சிகளும் தங்களைச் சார்ந்த மக்களைப் பொதுப் போராட்டங்களில் இணைய விடாமல் தடுத்துள்ளன.
பெரும்பாலான கட்சிகள், அப்பட்டமான சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறபோது கூட கண்டுகொள்வதில்லை, அல்லது ஒப்புக்கு ஒரு அறிக்கை விடுவதோடு ஒதுங்கிக்கொள்கின்றன. சாதிய ஆணவக் கொலைச் செய்திகள் வருகிறபோது இக்கட்சிகள் மவுனம் காப்பதில் சாதியத்துடனான அரசியல் ஆதாய சமரச நோக்கம் பதுங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் வாக்குப்பதிவு எந்திர விரல்களைத் தங்கள் பக்கம் நீட்ட வைக்கிற கள்ளத் தனம் அது. இப்படிப்பட்ட உத்திகளை ஒருபோதும் கடைப்பிடிப்பதில்லை என்பது இடதுசாரிகளின் பெருமை. அதே வேளையில் மக்களைச் சென்றடைவதில் மிகப்பெரிய இடைவெளியும் இருக்கிறது. அந்த இடைவெளியை ஏற்படுத்தியதில் ஊடக நிறுவனங்களின் கைங்கர்யம் கொஞ்சமும் குறைந்ததல்ல.
எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமான கம்யூனிஸ்ட்டுகளின் கருத்துகள் மக்களிடையே விரிவாகச் செல்லாததில், கருத்துருவாக்கத்தில் முக்கியப்பங்காற்றும் ஊடகங்களின் கைங்கர்யமும் இருக்கிறது. எளிய மக்களோடு பேருந்தில் பயணிப்பது, தெருவோரக் கடையில் தேநீர் பருகுவது என கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற செய்திகளை வியந்து வெளியிடுகிற ஊடகங்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வெளியிடுவதில்லை.
அரசின் ஒரு நடவடிக்கையை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது என்றால், “‘இடதுசாரிகள் கண்டனம்” என்ற அளவில் மட்டுமே செய்தி வெளியிடப்படும். எதற்காக எதிர்ப்பு, மாற்று என்ன என்றெல்லாம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்கள் அறிக்கைகளில் கூறியிருப்பது ‘எடிட்’ செய்யப்பட்டுவிடும். உலகமய, தனியார்மய, தாராளமய யுகத்தில் மக்களின் மன நிலை அரசியலற்றதாக வார்க்கப்படுகிறது. உலகளாவிய சுரண்டல் கோட்டைகளுக்கு இப்படி எதையும் கேள்வி கேட்காத தலைமுறைகள்தான் நவீன அடிமைகளாகத் தேவைப்படுகிறார்கள். இத்தகைய வார்ப்புகளுக்கிடையே, சுட்டிக்காட்டுவதும் தட்டிக்கேட்பதுமான அரசியலை வளர்த்தெடுப்பது இடதுசாரிகளுக்குக் கடுமையானதொரு சவால்.
அகக்காரணிகளும் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சனைகளில் உடனடி எதிர்வினையாற்றுகிற அளவுக்கு, சமூகப் பண்பாட்டுத்தளப் பிரச்சனை களில் எதிர்வினையாற்றத் தவறியது முக்கியமான குறைபாடு. இதற்குக் காரணம், கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலைமைப் பொறுப்புகளுக்கு வந்தவர்களின் மேல்சாதிப் பின்னணிதான் என்று சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால், இந்தியச் சமுதாயக் கட்டமைப்பு பற்றிய சரியான புரிதலுக்கு வருவதில் குறைபாடு இருந்திருக்கிறது. வர்க்கப் புரட்சி நடந்துவிட்டால் மற்றவை தானாக மாறிவிடும் என்ற வளரிளம் பருவப் புரிதல் குறைபாடு அது. சாதிப் பின்னணிதான் காரணம் என்று வம்படியாகக் கூறுவது, கம்யூனிஸ்ட்டுகள் முன்மொழிகிற சமத்துவ சமூகத்தை நோக்கிய அணிவகுப்பை முடக்க விரும்புகிற கும்பல்களுக்கே சேவகம் செய்யும்.
தவிர்க்க முடியாத தேர்தல் அரசியலாலும் உறவுகளாலும் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றனவா, மக்களோடு கலந்து நிற்பதில், எளிமையாக எடுத்துரைப்பதில் குறைபாடுகள் என்ன என்பது பற்றியும் திறந்த மனதுடன் கம்யூனிஸ்ட்டுகள் விவாதிக்கிறார்கள், புதிய அணுகுமுறைகளை வகுகிறார்கள். விமர்சனம்-சுய விமர்சனம் இரண்டும் கம்யூனிஸ்ட் பண்பு. அதிகாரம், பணபலம் வலிமைகளோடு கட்டப்பட்டுள்ள எதிர் அரசியலை உடைத்துக்கொண்டு பாய்கிற புரட்சிப் பயணத்தில், இந்தப் பண்போடு கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி பெறுவார்கள். ஏனெனில் அவர்கள் மற்றுமொரு கட்சி அல்ல, சமுதாய மாற்றத்தின் சக்தி.
(கட்டுரையாளர், தீக்கதிர் நாளிதழ் பொறுப்பாசிரியர்)
டிசம்பர், 2016.