வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட...
அப்படியே தலைகீழாக மாற்றிவிட்ட நூல் என்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்தன என்று வேண்டுமானால் சொல்லலாம்.
பள்ளி கல்லூரிப் பருவங்களில் புஷ்பா தங்கதுரை... ராஜேஷ்குமார்...
சுஜாதா... பாலகுமாரன் போன்றோரின் கதை படித்து வளர்ந்த ஜாதிதான் என்றாலும் அதில் கொஞ்சம் க் கூக்கீN போட வைத்தவர் ஜெயகாந்தன் என்றும் சொல்லலாம். ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் அறிமுகமான ஈழத்து இலக்கியம் ரத்தமும் சதையுமான மனிதர்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
செ.யோகநாதன், கணேசலிங்கன், அருளர் என எண்ணற்றோரது படைப்புகள் என்னை மேலும் செப்பனிடச் செய்தன. அதே கால கட்டத்தில் அறிமுகமானதுதான் இடதுசாரி இலக்கியமும்.
கையில் நூறு ரூபாயோடு என்.சி.பி.எச். போனால் ஒரு லாரி நிறைய புத்தகங்களை வாங்கி வரலாம் அன்றைக்கு. அப்படி வாசிக்கத் தொடங்கியதுதான் நிரஞ்சனாவின் ‘‘ நினைவுகள் அழிவதில்லை'', ராகுல்ஜியின் ‘‘பொதுவுடைமை என்றால் என்ன?'', ஜூலியஸ் பூசிக்கின் ‘‘தூக்குமேடை குறிப்புகள்'' போன்றவை.
ஆனால் இவற்றிலெல்லாம் தலையாயதும் எனது தனிப்பட்ட குணநலன்களை ஓரளவுக்கு வடிவமைத்ததும் ஆன புத்தகம் என்று சொன்னால் அது மார்க்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்‘ நாவல்தான்.
மனிதர்களைச் சக்கையாகப் பிழிந்து வெளியில் தள்ளும் அந்தத் தொழிற் சாலை... அந்த ஆலையின் அடித்தளமே தாங்கள்தான் என்பதை உணராது குடியும் சச்சரவுமாய்க் கழியும் தொழிலாளர்களின் குடியிருப்புகள்... மனைவிகளையும் தாய்களையும் உதைத்து துவம்சம் செய்யும் கணவன்கள்... பிள்ளைகள். இவற்றுக்கு நடுவே தகாத ஒரு வார்த்தை கூட பேசாது மென்மையாக நடந்து கொள்ளும் மகன் பாவெல்.... அவனது கண்ணியமிகு நண்பர்கள்.... அவர்கள் கூடிக்கூடி வாசிக்கும் நல்ல நல்ல நூல்கள்... இதுதான் அந்தத் தாயை ஆச்சர்யம் கொள்ளவும் வைக்கிறது சில வேளைகளில் அச்சம் கொள்ளவும் வைக்கிறது.
இந்நாவலை வாசித்த காலகட்டங்களில் அந்தப் பாவெல்லாகவே நாமும் மாற மாட்டோமா என்கிற ஏக்கமும் நம்முள்ளே எழும்.
அதைவிடவும் இத்தகைய இடதுசாரி இலக்கியங்களை வாசிக்கும்போது வரும் ஒரு Side effect ஒன்றும் உண்டு. அதுதான் இத்தகைய நூல்களையும் வாசித்துவிட்டு இங்குள்ள மரபான ‘கம்யூனிஸ்டுகளை'க் கண்டு குழம்பிப் போவது. ஆனால் ஆரம்பத்திலேயே எனக்கு அந்தச் சிக்கல் எழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கம்யூனிசம் என்கிற அந்த உன்னதத் தத்துவம் வேறு..
உள்ளூர் எதார்த்தம் வேறு என்கிற புரிதல்தான் அது.
மார்க்சிம் கார்க்கி போன்றோரது இத்தகைய படைப்புகள்தான் வர்க்க உணர்வோடு இம் மண்ணையும் இம்மக்களையும் பார்க்கக் கற்றுக் கொடுத்தது.
அதுதான் : கம்யூனிச மனநிலையில் வாழ்வதென்பது வேறு... கட்சி மெம்பராக வாழ்தல் வேறு என்கிற உண்மையையும் சொல்லித் தந்தது.
ஆக... பாவெல்லின் தாயே என்னுள் இன்றும் தாயாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
ஜூலை, 2018.