கனாத் திறமுரைத்த கானங்கள்

கனாத் திறமுரைத்த கானங்கள்
Published on

எட்டமுடியாத கற்பனையென்றும், எப்போதோ ஆழ் மனதில் படிந்த நிறைவேறாத ஆசையென்றும் கனவிற்கு விளக்கம் தருகிறார்கள். ஆனால், உண்மையில் கனவென்றால் நம்மில் ஒருவருக்குக்கூட அதன் அடிப்படை என்னவென தெரிந்துகொள்ள வழியில்லை. எண்ணியது ஈடேறாமல் போவதும் ஒரு வெற்றியையோ செயலையோ ஈடேற்றுவதற்கான எண்ணங்களை உண்டுபண்ணுவதும் கனவென்றே நம்புவோம். 

உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை இதழ்விரித்து லேசாகச் சிரித்தால் உடனே, அக்குழந்தை கனவில் கடவுளைப் பார்ப்பதாகவும், அவருடன் பேசுவதாகவும் மக்களிடையே ஒரு கற்பிதம் உண்டு. அது, கற்பிதம்தான். குழந்தையோ கடவுளோ அதன் உண்மைத்தன்மையை விரிக்காதவரை. என்றாலும், அக்கற்பிதம் புரியாத இரண்டு விஷயங்களை ஒன்றிணைத்து பார்க்கவைக்கிறது. இந்த இடத்தில் ஆத்மாநாமின் கனவு பற்றிய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது. கனவு பற்றிய மிகச் சிக்கலான மனநிலையை வெளிப்படுத்தும் அக்கவிதையில் ‘தினந்தோறும் ஒரு கனவு / அக்கனவுக்குள் ஒரு கனவு / உங்களைத் தேடுவது சிரமமென்று நான் ஒரு கனவு காணத் தொடங்கினேன் என்று குழம்பியிருப்பார். குழப்பியுமிருப்பார். அதைவிட, அக்கவிதையின் முத்தாய்ப்பாக எனப்படுவது, ‘என்னுடைய கனவுகளை உடனே அங்கீகரித்துவிடுங்கள் / வாழ்ந்துவிட்டுப் போனேன் என்ற நிம்மதியாவது இருக்கும்'என்ற வரிகள்தாம்.

காணப்படும் கனவுகள், பிறரால் அங்கீகரிக்கப்பட்டுவிடாதா என்கிற கனவுகளைச் சுமந்துத்தான் ஒவ்வொருவரும் வாழ்ந்துவருகிறோம். அங்கீகரிப்பட்டால் ஆனந்தமும், அவமதிக்கப்பட்டால் சோகமும் விரவுவதுதான் வாழ்க்கையோ என்னவோ? 1993இல் வெளிவந்த வள்ளி திரைப்படத்தில் ‘என்ன என்ன கனவு கண்டாயோ சாமி / வாழ்க்கை ஒரு கனவுதானய்யா என்றொரு பாடலை வாலி எழுதியிருக்கிறார். இளையராஜாவின் குரலில் வந்துள்ள அப்பாடலைக் கேட்கும்தோறும், கனவுகளுக்கும் நினைவுகளுக்கும் இடையேயான ஊசலாட்டத்தை ஓரளவு உணர்ந்துகொள்வேன். உண்மையில், எனக்கு எப்போதெல்லாம் சோர்வும் சுணக்கமும் ஏற்படுகின்றனவே அப்போதெல்லாம் கேட்கக்கூடிய பாடல்களில் அதுவும் ஒன்று.

காதலின் சோகத்தை வெளிப்படுத்துபவையே அப்பாடல் வரிகள். என்றாலும், அவற்றை எல்லாச் சூழலுக்கும் பொருத்திக்கொள்ளமுடியும். ‘ஓடைக்குளிர் ஓடையென மான்கள் நம்பி ஓடும் / வேளை அது கோடை எழும் கானல்' என்று மாறும் என்னும் வரிகள், ஏமாற்றத்தின் வலி இயல்பாகக் கடத்துபவை. கண்ட கனவு காலாவதியாகும்போது அதை நெஞ்சிலே தாங்கியிருந்தவன் நிலை என்ன என்பதை இதைவிட அழகாக ஒரு திரைப்பாடலில் சொல்லிவிடமுடியுமா எனத் தோன்றும். சொன்னவற்றுக்கு அடிக்கோடாக ‘கண்ணொடு காணுகின்ற கோலம்யாவும்/ கண்ணீரில் போட்டுவைத்த கோடாகும்' என்றும் எழுதியிருப்பார்.

அவரே அக்னிசாட்சி திரைப்படத்தில் ‘கனாக் காணும் கண்கள் மெல்ல / உறங்காதோ பாடல் சொல்ல' என்று கேட்டிருக்கிறார். எம்.எஸ்.வி.யின் இசையில், எஸ்.பி.பி.யின் குரலில் வெளிவந்த மிக மிருதுவான பாடல் அது. வரிகள், இசை, குரல் என ஒன்றை ஒன்று விஞ்சிநிற்கும். துவண்டுவிழுந்த உள்ளத்தைத் தூக்கி மடியிலே கிடத்தி, அன்பாகவும் ஆறுதலாகவும் ஓர் ஆண் தாயாகி மாறி வருடிவிடும்போல அத்தனை அமைதியை அப்பாடல் நல்கும். அப்பாடலின் ஒருவரி நினைவின் அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன? என்று வந்திருக்கும். அது ஒரு சிக்கலான கேள்வி. ஆனால், அக்கேள்வியைக் கேட்ட வாலியே ‘கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் / விடியும்நாள் பார்த்து இருப்பேனே நானும்' என்று நேர்மறையான பதிலை முடித்திருப்பார். நம்பிக்கையை விதைக்கும் அம்மாதிரியான பாடல்கள், இக்காலத்தைய கனவாக ஆகிவிட்டதற்கு நாமென்ன பாவம் செய்தோமோ?

இருக்கின்ற சோகத்திலிருந்து வெளியேற எப்படியாவது உறங்கிவிடு என்பது ஒருவகை. உறக்கத்திலாவது சந்தோசத்தை கொஞ்சத்திலும் கொஞ்சமாகவேணும் பார்த்துவிடு என்பது இன்னொருவகை. இரண்டையும் ஒரே பாட்டில் வாலி கொடுத்திருக்கிறார். எனக்கு அப்பாடலின் பல்லவியே எல்லாவற்றையும் சொல்லிவிடுவதாகத் தோன்றும். வள்ளுவர்

சொல்லுவாரே ‘கனவு நிலை உரைத்தல்‘ என்று அப்படியானதுதான் இதுவும்.

கண்கள் திறந்திருக்கும்போது வரவே வராத கனவுகள், கண்களை மூடியபிறகே ஏன் வருகின்றன என்பதற்கு விசேஷ காரணங்கள் இல்லாமல் இல்லை. ஏனெனில், கண்களுக்கும் கனவுகளுக்கும் சம்பந்தமே இல்லை. கனவுகள் என்பவை கண்களால் காணப்படுபவையே அல்ல. அவை, இதயத்தால் உணரப்படுபவை. மனத்துக்கண் மாசு இலன் என்று வள்ளுவர் எழுதுவார். மனத்திற்கு ஏது கண் என்று யோசிப்பதற்குள் அறத்துக்கான அர்த்தத்தை அதில்வைத்து சொல்விடுவார்.

அவர் ஏன் மனத்தைக் கண்ணுடன் இணைத்திருக்கிறார் என ஆழ்ந்துபோனால் ஒருபதில் கிடைக்கிறது. விழுகின்ற தூசியைத் தானே வெளியேற்றும் இயல்புடையவைக் கண்கள் மட்டுமே. கால்களுக்கோ கைகைகளுக்கோ அத்தகைய இயல்பு இல்லை. அதாவது, தனக்கு நேர்ந்த சங்கடத்தை தானே நிவர்த்தி செய்துகொள்ளும் ஆற்றலைக் கண்கள் பெற்றுள்ளன. எனவேதான் அவர் மனத்தைக் கண்களுடன் இணைத்திருக்கிறார். வெளியே தெரியவில்லை என்றாலும், கண்போல மனத்திற்கும் தன்னுள்ளே படியும் அழுக்குகளை, அறத்திற்கு மாறான செயல்களை ஒதுக்கித்தள்ளும் சக்தியுண்டு. கண்ணைக் கொண்டுபோய் முடிந்தாரே அங்கேதான் அவர் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாக மாறுகிறார்.

கனவுநிலை உரைத்தல் குறட்பாக்களில் என்னை அதிகமும் ஈர்த்தது ‘கயலுண்கண் யான் இரப்பத்துஞ்சின்' என்பதே. பத்துக்குறளுமே நினைவிலிருத்தத் தக்கவை. காதலியின் கூற்றாக வரக்கூடிய அக்குறள்கள், ஒரு பெண்ணின் காதல் நினைவுகளை கனவுகளுடன் இணைத்துப் பேசுபவை. கவிதையை மொழியின் கனவாகவோ புத்தசாலித்தனமாகவோ கருதினால் அவை இரண்டையும் இந்தக் குறள்களில் தரிசிக்கலாம். எத்தனைவிதமான நளினங்கள்? எத்தனைவிதமான நாடகங்கள்?   எனினும், கயலுண்கண் யான் இரப்பத் துஞ்சின் குறளை ஒருபடிமேலே எனலாம்.

கயல்மீன்களைப் போல் மைதீட்டப்பட்ட என் கண்கள், நான் வேண்டுவதற்கு இணங்க துயில் கொள்ளுமானால் அப்போது என் கனவில் வரும் காதலனுக்கு நான் உயிருடன் பிழைத்திருக்கிறேன் என்னும் உண்மையைச் சொல்லிவிடுவேன் என்கிறது அக்குறள். நேரில் பார்க்கவேண்டிய அவசியம்கூட இல்லையாம். கனவிலேயே தன்னுடைய உயிரையும் காதலையும் காட்டிவிடுவாளாம். கனவின் துணையிருந்தால் உயிரோடு இருக்கலாம்போல.  காதலர் தூதொடு வந்த கனவினுக்கு என்னும் குறளையும் இத்துடன் இணைத்துக்கொள்ளலாம்.

திரைப்பாடல்களில் கனவும், அதன் காட்சிகளும் என்று சொன்னதுமே ‘பொன்மகள் வந்தாள்' பாடலும், ‘மதன மாளிகை மந்திர மாலைகளாம்' பாடலும் சட்டென்று நினைவிற்கு வராமல் இருக்காது. பொன்மகள் வந்தாளை எடுத்துக்கொண்டால் அது அந்தக் காலத்தில் மிரட்சியை ஏற்படுத்திய காட்சிகளைக் கொண்ட பாடல். ஆலங்குடி சோமுவின் அழகிய கற்பனைகள் நிறைந்த அப்பாடல்,1970இல் வெளிவந்த சொர்க்கம் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அந்த அபாரமான பாடலில் ‘இன்பத்தில் மணத்தில் குளிப்பேன்' என்றொரு வரி உண்டு. இன்பத்தில் குளிப்பேன் என்றிருக்கலாம். அப்படிச் சொல்லாமல் இன்பத்தின் மணத்தில் குளிப்பேன் என்றிருக்கிறார். இன்பத்தின் மணத்தை எப்படி உருவகப்படுத்துவது? ஒரு நல்ல பாடல் வரியெனில் அது, காட்சிப்படுத்தமுடியாத தன்மையுடன் அமையவேண்டுமென நான் நினைப்பேன். அப்படித்தான் அந்தவரியை ஆலங்குடி சோமு எழுதியிருக்கிறார்.

செல்வத்தின் அணைப்பில் கிடப்பதையும் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பதையும் காட்சிப்படுத்திவிடலாம். ஆனால், இன்பத்தின் மணத்தில் குளிப்பதை எத்தனைபெரிய நடன இயக்குநராலும் காட்சியே படுத்தமுடியாது. ஸ்டைலான நடையிலேயே சிவாஜி, அப்பாடலைக் கவனிக்க வைத்திருக்கிறார். மனதிலே நிம்மதி / மலர்வதோ புன்னகை என்பதற்கு அவர் மேற்கொண்டிருக்கும் பாவனை, கொஞ்சம் கூடுதல் என்றாலும், அந்த இடத்தில் ஆத்மாநாமின் கனவையும் கவிதையையும் நினைத்துக்கொள்வேன். வாழ்ந்துவிட்டுப் போனேன் என்கிற நிம்மதியைக் கோருகிற புன்னகை. அதைவிட, ஆளாக்கினாள் அன்பிலே' என்கிற பதம் அப்பாடலின் உச்சம்.

பொன்மகளே ஆனாலும் அவள் அன்புடன் இருக்கவேண்டுமென்பது ஆகப்பெரும் கனவுதானே? பணம் வந்தால் அன்பு போய்விடும் என்பதற்கு மாற்றாக பணமும் அன்புடன் வருவதாக யோசித் திருக்கிறார். ஒரு மரம்முழுக்க பணமாகக் காய்த்துத் தொங்குவதுபோலவும், அதை உலுக்கி அவர் தலைமேலே கொட்டுவதுபோலவும் அமைந்த காட்சியை இப்பவும் ரசிக்கலாம். இன்பத்தின் மணத்தில் குளிப்பேன் என்ற வரியை எப்போது கேட்டாலும் கூடவே பரணர் எழுதிய ‘குணகடல் திரையது பறைதபு நாரை' பாடல் நினைவிற்கு வந்துவிடும்.

சுவையென்பது நாக்கில் அல்ல, அது நம்முடைய பன்னெடுங்கால நினைவிலும் கனவிலும் இருக்கிறது. இன்பம் என்பதுவும் அப்படித்தான். அதை மகிழ்வாகவும் மணவாகவும் உணரலாம். இழந்ததைத் தேடுவது ஒருபுறம் இருந்தாலும் இருப்பதையும் எஞ்சுவதையுமாவது தக்கவைக்க கனவுகளும் நினைவுகளும் தேவைப்படுகின்றன. முன்னெப்போதோ உண்ட மீனின் சுவையை நினைவில் இருந்திக்கொண்ட நாரை, அதேபோன்ற ஒரு சுவைக்காக வயதான பிறகும் கரையோரத்தில் காத்திருக்கிறது என்றுதான் பரணர் சொல்கிறார். இன்பமும் மணமும்கூட நினைவிலோ கனவிலோ இருந்திக்கொண்ட சுவைதான். அதை விவரிக்கவோ விளக்கவோ வழியில்லை.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வெளிவந்த மதன மாளிகையில் மந்திரமாலைகளாம் பாடல், வரிக்குவரி அசாத்திய கனவையும் காதலையும் பிரதிபலிப்பவை. நெருக்கமான சந்தத்திற்கு நெருக்கடியில்லாத வார்த்தைகளை வகைபிரித்து, அசைபிரித்து எழுதியிருக்கும் விதத்திற்காகவே அப்பாடலை பலமுறைக் கேட்கலாம். ‘மோகம் முன்னாக / ராகம் பின்னாக / முழங்கும் சங்கீதக் குயில்கள் / மேகம் மின்னாமல் / இடியும் இல்லாமல் / மழையில் நனைகின்ற கிளிகள்' என்கிற வரிகள்,  செவ்வியல் தன்மைக்கு ஒத்தவை.

மோகம் முன்னாவதும் ராகம் பின்னாவதும் ஏனெனத் தெரிந்தவர்க்கே நான்  சொல்வதிலுள்ள  சிருங்காரம் பிடிபடும். யாப்பிலக்கணமும் மரபுக்கவிதைகளில் ஓரளவு பரிச்சயமும் இல்லாதவர்கள், இப்பாடலை ரசனையுடன் உள்வாங்கமுடியுமா எனத் தெரியவில்லை. சந்தத்திற்கு வார்த்தைகளை வெறுமனே இட்டுநிரப்பித்தான் பாடல்கள் எழுதப்படுகின்றன என்பவர்கள், இப்பாடலின் ஓசை ஒழுங்கையும் கற்பனைகளின் விஸ்தீரணத்தையும் கவனிக்கலாம். வரிக்குவரி எழுதவேண்டியதில்லை. அப்பாடலின் தலை, இடை, கடை அனைத்துமே அழகுகளால் நிரம்பியவை.

சொல்லவேண்டிய இன்னொருபாடல் ‘வீரபாண்டிய கண்டபொம்மன்‘ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது ‘போகாதே போகாதே என் கணவா' என்னும் பல்லவியைத் தாங்கிய அப்பாடல் நாட்டார் பாடலின் சாயலை உடையது.

நா.வானமாமலை தொகுத்த ‘கட்டபொம்மு கதைப்பாடல்‘ நூலிலும் அப்படி ஒரு பாடல் உண்டு. அதை உள்வாங்கிய கு.மா.பாலசுப்ரமணியம் தன் பங்கிற்கு துர்க்கனவுகளை அப்பாடலில் பட்டியிலிட்டிருக்கிறார்.  காணக்கூடாதக் கனவுகளை கண்டுவிட்டேன். எனவே நீ உன் பயணத்தை ரத்துசெய்துவிடு என்பதுதான் சூழல். அதற்கு அவர் கூந்தல் அவிழ்ந்துவிழவும் கண்டேன் / ஐயோ கொண்டையில் பூவும் கருகக் கண்டேன் என்று சொல்ல ஆரம்பித்தவர் ஆந்தை அலறக்கண்டேன் / பட்டத்து யானையும் சரியக்கண்டேன் என்றிருப்பார். அவற்றைவிட, குளிக்க மஞ்சள் அரைத்தேன் அத்தான் / அது பொம்மங் கரிபோல் போச்சு அத்தான்‘ என்றதைக் கேட்டு பயந்துவிட்டேன்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி தான் கண்ட கனவைப் பற்றி தன்னுடைய தோழி தேவந்தியிடம் சொல்வதுபோல ஓர் இடம் உண்டு. ஏதோ கெட்டது நடக்கப்போகிறதுபோல் தோன்றிற்று என்பாள். இடுதேள் இட்டதுபோல் என வரக்கூடிய அவ்வரிகள் முழுவதும் எனக்கு நினைவில்லை. ஆனால், சாராம்சம் அதுதான். பின்னே நடக்கப்போவதை முன்கூட்டியே கண்ணகி கனவில் கண்டதாக இளங்கோவடிகள் கூறியிருப்பார். கனாத்திறம் உரைத்த காதை என்றே அதற்குத் தலைப்பும் தந்திருப்பார். பாத்திரங்களும் காலமும் வேறுபட்டாலும் கனவும் அதன் திறனும் ஒன்றுதான். கு.மா.பா.வின் போகாதே போகாதே பாடலில் தீக்கனாக்களின் திரட்சியைக் காணலாம்.

கனவுகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். குறிப்பாக பாரதியும் ஆண்டாளும் கண்ட கனவுகளைவிடவா? ஓர் இந்தியனின் கனவுகளை வரையறுத்துச் சொல்ல பாரதியின் சிந்துநதியின் மிசை நிலவினிலே என்கிற ஒரு பாடல் போதாதா? ஆண்டாள், தன்னுடைய கனவுகளில் காணாததே இல்லை. உறங்கும்போது குழந்தை சிரித்தால் கடவுளைப் பார்த்ததாகச் சொல்வது கற்பிதம் என்றோமே அதை ஆண்டாள் விஷயத்தில் தலைகீழே புரிந்துகொள்ளலாம். ஏனெனில், அவள் கடவுளான கண்ணனையே கனவிலும் நினைவிலும் காண விரும்பியவள். எங்கும் எதிலும் அவள் அவனை மட்டுமே பார்க்கிறாள். அவனுக்காக அவள் கனவுகள் பூக்கின்றன. அவன் பூப்பதனாலே அக்கனவுகளை திரும்பத் திரும்ப அவள் வேண்டுகிறாள். முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் என்பாள். அது, வெறும் கனவுமட்டுமா என்ன? ஆண்டாளின் பாசுரங்களை கிரகித்து நான் எழுதிய ‘கனாக் கண்டேனடி தோழி‘ பாடல், ‘பார்த்திபன் கனவு‘ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

கனவுகள், இதயத்தின் சாவியைப் போன்றவை. அந்தச் சாவியால் வெளியே உள்ள கதவுகளை மட்டுமல்ல, நம்முடைய உள்ளத்தின் மூடிய, இருளடைந்த கதவுகளையும் திறந்துவிடலாம். அது, நமக்கே நம்மைத் திறந்து காட்டுபவை. திரைப்படத்தில் மிகையாக ஓர் உணர்வையோ உற்சாகத்தையோ காட்டவேண்டுமென்றால் அதைக் கனவுக் காட்சியாக அமைத்துக்கொள்வார்கள். அதுதான் சௌர்கர்யம். அதன்மூலமே எட்டமுடியாத கற்பனைகளையும், எப்போதோ ஆழ் மனதில் படிந்த நிறைவேறாத ஆசைகளையும் காண்பிக்கமுடியும்.   வாழ்வைப் பொய்யாகவும் கனவாகவும் பார்த்த சித்தர்கள், அக்கனவுகளை தாங்கியிருக்கும் உடம்பைக் காயமென்றார்கள். அதையே ‘கனவுகாணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் ஓடங்கள்' என்று திரைப்பாடல் சொல்கிறது. நீங்கள் கேட்டவை திரைப்படத்தில் இடம்பெற்ற அப்பாடலை எழுதிய வைரமுத்து  உடம்பு என்பது உண்மையில் என்ன / கனவுகள் வாய்க்கும் பைதானே? என்று கேட்டிருப்பார். காற்றடைத்த அந்தப் பைநிறைய கனவுகளால் நிரப்புவதுதான் கலைகளின் வேலை. இறுதியாக எனக்குத் தோன்றுவது, கனவுகளை அனுபவிக்கவேண்டும். ஆராயக்கூடாது. ஆராயும் எண்ணமுடையவர்களுக்கு வருவது கனவுகளல்ல, அவை வெறும் கணக்குகளே என்பது வேறுவிஷயம்.

அக்டோபர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com