கனவுகள் மெய்ப்பட வேண்டும், இலக்கு, லட்சியம், தொலைநோக்குப் பார்வை என்பதெல்லாம் அடிப்படையிலேயே எனக்கு கிடையாது. நான் ஒரு யதார்த்தவாதி. சிந்தனை தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என நம்புகிறவன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது வழியில் பயணிக்கின்றவன்.
மருத்துவராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்பட்ட என்னை சட்டமன்ற உறுப்பினராக்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதுவும் அவருடைய ஆயிரம் விளக்கு தொகுதியில். என்னுடைய தொகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது? மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி உயர்த்துவது? கல்வி, சுகாதாரம், நகர்ப்புற வாழ்வியல் போன்றவற்றை எப்படி உயர்த்துவது? போன்ற சிந்தனைகள் தான் எனக்குள் இருக்கிறதே தவிர கனவு, லட்சியம் என்பதெல்லாம் இல்லை.
வாழும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படிப்பினையையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறேன். மானுட வாழ்விற்கே உரியப் பகுத்தறிவு சிந்தனையுடன் நாம் வாழும் போது, நம்முடைய பார்வையே வித்தியாசமானதாக இருக்கும். கடந்த காலம் என்பது வரலாறு, எதிர்காலம் என்பது புதிர், நிகழ்காலம் என்பது தான் நிஜம். அது தான் நமக்குக் கிடைத்த பரிசு. எதிர்காலம் குறித்த பயம் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். நிகழ்காலத்தில் வாழ்வதுதான் புத்தரின் தத்துவம். அதன்படி தான் வாழ்கிறேன். நம் வாழ்க்கையில் ஏற்படும் நல்லது கெட்டதுக்கெல்லாம் நம்முடைய செயல்பாடுகளே காரணம் என்பதை நாம் உணர்ந்தாலே போதும்.
அக்டோபர், 2022