கனவுகள்: ஆன்மீகம், தத்துவம், உளவியல், அறிவியல்

கனவுகள்: ஆன்மீகம், தத்துவம், உளவியல், அறிவியல்
Published on

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், கனவுகள் உளவியல் ரீதியாக பகுப் பாய்வு செய்யப்பட்டன.

அதில் முக்கியமானவர் உளவியல் மருத்துவரான சிக்மண்ட் ஃபிராய்ட். அவர் தான் பார்த்த நோயாளிகளின் கனவுகளை தொடர்ந்து பகுப்பாய்வு செய்து அவற்றை மருத்துவ நாளிதழ்களில் வெளியிட்டார். அவரது ‘கனவுகளின் பகுப்பாய்வு' (Interpretation of Dreams) உளவியல் துறையில் மிக முக்கியமான பகுப்பாய்வு. மனதை பற்றிய சிந்தனைகளையும், சிகிச்சை முறைகளையும் பெருமளவு மாற்றியது ஃபிராய்டின் அந்த படைப்பு.அதன் அடிப்படையில் தான் உளபகுப்பாய்வு (Psychoanalysis) சிந்தனைகள் தோன்றின. ஃபிராய்ட் கனவுகளை ‘நனவிலி மனதின் வெளிப்பாடுகள்‘ (Manifiestation of Unconscious mind) என்றார். அதென்ன நனவிலி மனம்? ஃபிராய்டின் கனவுகளை பற்றிய விளக்கங்களை புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் மனம் பற்றிய அவரது கோட்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

மனதின் பரிணாமங்கள்:

ஃபிராய்ட் மனதை மூன்று பகுதியாக பிரிக்கிறார். ஒன்று, நினைவிலி மனம் (conscious mind) அதாவது வெளிப்புற மனம். நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் வெளிப்புற மனதில் சேகரிக்கப்படுகின்றன, இரண்டாவது preconscious mind எனும் அடுத்த நிலையில் உள்ள மனம், இதில் உள்ள தகவல்கள் நினைவில் இருக்காது ஆனால் சிறிது நேரம் முயற்சி செய்து இதில் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல்களை நினைவிற்கு எடுத்து வரலாம். மூன்றாவது இருப்பது தான் நனவிலி மனம் (Unconscious mind) இதில் பொதிந்திருக்கும் தகவல்கள் ஒருபோதும் நினைவுப் பரப்பை அடையாது.

மனிதனை பொருத்தவரை அவன் தனது ஆழத்தில் ஒரு விலங்கிற்குண்டான சிந்தனைகளையே பெற்றிருக்கிறான் ஆனால் சமூக விலங்காக பரிணமித்துவிட்ட காரணத்தினால் இந்த மூர்க்கமான சிந்தனைகளையெல்லாம் அவன் தனது ஆழ்மனம் என்ற இந்த நனவிலி மனதிலேயே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். ஃபிராய்டின் கோட்பாட்டின் படி ஒரு ஆண்குழந்தை தனது தாயின் மீது பாலியல் ஈர்ப்பை கொண்டிருக்கும், அந்த குழந்தை வளரும்போது தாயின் மீதான இந்த பாலியல் ஈர்ப்பை ஒட்டி எழக்கூடிய குற்றவுணர்ச்சி வலி நிறைந்ததாக இருக்கும் அதனால் அந்த எண்ணத்தை நினைவு பரப்பை அடைய விடாமல் தனது நனவிலி மனதில் பூட்டி வைத்துக்கொள்ளும். அதே போலவே மனதில் எழக்கூடிய இந்த சமூகத்திற்கு ஒவ்வாத பாலியல் எண்ணங்களை எல்லாம் நனவிலி மனதிலேயே வைத்து பூட்டப்படுகின்றன.

நனவிலி மனதில் இருக்கும் தகவல்களை ஒருபோதும் வெளிப்புற மனதால் உணரமுடியாது. ஏனென்றால் இரண்டிற்கும் இடையேயான உறுதியான சுவரை மனம் கொண்டிருக்கிறது. இந்த சுவர் பலவீனமாகும் போது இப்படி புதைக்கப்பட்ட பாலியல் எண்ணங்கள் வெளிப்புற மனதை அடைகின்றன, அது அந்த மனிதனை மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்குகின்றன, அதன் விளைவாகவே அவனுக்கு நரம்பியல் நோய் என்னும் ஹிஸ்டீரியா வருகிறது என்பது தான் ஃபிராய்டின் கோட்பாடு. இந்த கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு ஃபிராய்ட் தனது சிகிச்சை முறைகளை தொடங்கினார். நனவிலி மனதிலிருந்து வெளிப்படும் அந்த குறிப்பிட்ட பாலியல் எண்ணத்தை கண்டறிந்து அதை சரி செய்து திரும்பவும் நனவிலி மனதில் வைத்து பூட்டுவதன் வழியாக ஹிஸ்டீரியாவை குணப்படுத்தலாம் என ஃபிராய்ட் நம்பினார். அப்படி குணப்படுத்திய நோயாளிகளின் தனிபட்ட நோய் விவரங்களைத் தொகுத்து வெளியிட்டார்.

சரி. இதில் ஒரு சந்தேகம் வருகிறது. ஃபிராய்ட் எப்படி ஒருவருடைய நனவிலி மனதை அடைந்தார்? ஏனென்றால் இயல்பாக ஒருவருடைய நனவிலி மனதின் தகவல்களை அந்த குறிப்பிட்ட நபரே தெரிந்து கொள்ள முடியாது என்னும் போது ஃபிராய்ட் மட்டுமே அதை எப்படி கண்டுகொண்டார்?

ஃபிராய்டை பொருத்த வரை மூன்று வகையில் ஒருவருடைய நனவிலி மனதை அடைய முடியும் என்கிறார். ஒன்று, ஃபிராய்டியன் ஸ்லிப் என்னும் வார்த்தை நழுவல். அதாவது நாம் இயல்பாக பேசிக்கொண்டிருக்கும் போது நம்மையும் அறியாமல் சில வார்த்தைகளை சொல்லிவிடுவோம் இல்லையா? அந்த வார்த்தைகள் நனவிலி மனதிலிருந்து வருகின்றன என்கிறார் ஃபிராய்ட். அதே போல, ஆழ்மயக்க நிலையில் ஒருவருடன் தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபடும்போது அதாவது ஒருவரை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மனதில் தோன்றுவதையெல்லாம் பேச சொல்லும்போது அவரையும் அறியாமல் நனவிலி மனதின் தகவல்களை பெறலாம் என்கிறார். மூன்றாவது, கனவுகள்! ஆமாம், கனவுகளின் வழியாக ஒருவரின் ஆழ்மனதில் புதைக்கப்பட்ட எண்ணங்களை அடைய முடியும் என்கிறார் ஃபிராய்ட். அதற்காகவே அவர் கனவுகளை பகுப்பாய்வு செய்தார். ஃபிராய்டை பொருத்தவரை ஆழ்மனதை அடையும் பிரத்தியேக சாலையே (Royal road of Unconsciousness) கனவுகள்.

நூற்றுக்கணக்கான தனது நோயாளிகளின் கனவுகளை பகுப்பாய்வு செய்ததற்கு பிறகே ஃபிராய்ட் கனவுகள் தொடர்பான தனது கோட்பாடுகளை முன்வைக்கிறார். ஒருவர் தன் ஆழ்மனதில் வைத்திருக்கும் நிறைவேறாத அல்லது நிறைவேற சாத்தியமற்ற எண்ணங்களே கனவுகள் என்பது ஃபிராய்டின் அடிப்படை கோட்பாடு. இதில் சிக்கல் என்னவென்றால் ஃபிராய்ட் இந்த எண்ணங்களை இன்னும் குறிப்பாக நிறைவேறாத பாலியல் எண்ணங்களே என்கிறார். அனைத்திற்கும் பாலியல் எண்ணங்களே காரணம் என்ற கருத்து விமர்சிக்கப்பட்ட போது ஃபிராய்ட் இப்படி சொல்கிறார் ‘கனவுகளை பகுப்பாய்வு செய்தபோது எனக்கு கிடைத்ததெல்லாம் மிகவும் அதிர்ச்சியான உண்மைகளே! அவையெல்லாம் தெரிந்து கொண்டால் நாம் எவ்வளவு போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்துவிடும், வெளிப்புறத்தில் நாம் பார்ப்பது போல மனிதன் அத்தனை கண்ணியமானவன் இல்லை, கனவுகளில் நான் பெறப்பட்ட இந்த அதிர்ச்சிகரமான உண்மைகளை எல்லாம் அந்த கனவிலேயே விட்டுவிட்டு வர நினைக்கிறேன், ஆனால் அது அத்தனை எளிதானதல்ல' என்கிறார்.

ஒரு கனவில் நீங்கள் காணும் காட்சிக்கு பின்னால் இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன, ஒன்று, நேரடியான அர்த்தம் (Manifested dream), மற்றது மறைமுகமானது (Latent dream). உதாரணத்திற்கு நீங்கள் ஆகாயத்தில் பறப்பது போல ஒரு கனவு என்று வைத்துக்கொள்வோம் நேரடியான அர்த்தம் பறவையின் முதுகில் நீங்கள் பறப்பது அதாவது நேரடியாக தெரிவது, மறைமுகமான அர்த்தம் அந்த பறவை என்பது சுதந்திரத்தின் குறியீடு, ஆகாயம் என்பது ஒரு முடிவிலி, பறப்பது என்பது பாலுறவு கொள்வது. எந்தவித கட்டுபாடுமில்லாமல், எல்லையும் இல்லாமல் பாலுறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆழ்மன ஆசையே அந்த கனவாக வெளிப்படுகிறது என்கிறார் ஃபிராய்ட். இதே போல கனவில் நாம் காணும் காட்சிகளுக்கு பின்னாலுள்ள அர்த்தங்களுக்கென தனி ஆவணத்தையும் ஃபிராய்ட் தொகுத்தார். அவர் அத்தனையும் பாலியல் நடவடிக்கை சார்ந்த எண்ணங்கள். கனவில் வரும்

நீண்ட வடிவமுடைய பொருட்களெல்லாம் ஆண் பிறப்புறப்பையும், வெற்றிடம் கொண்ட பொருட்களெல்லாம் பெண்ணின் பிறப்புறுப்பையும் குறிக்கின்றன என்றார். அவரைப் பொருத்தவரை நனவிலி மனம் என்பது இப்படிப்பட்ட பாலியல் எண்ணங்களின் தொகுப்பே, கனவுகள் என்பவை அவற்றின் வெளிப்பாடே!

ஃபிராய்டிற்கு பின்னால் வந்த தத்துவவியலாளர்கள் இவரது  ‘அத்தனைக்கும் பின்னும் நிறைவேறாத பாலியல் எண்ணங்களே இருக்கின்றன' என்ற கருத்தை மட்டும் நிராகரித்து மற்ற கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டனர், அதாவது ‘கனவுகள் என்பவை ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடே‘ என்ற கருத்து ஃபிராய்டிற்கு பின்னரும் கூட உளப்பகுப்பாய்வின் அடிப்படையாக இருந்தது. கனவுகளின் நேரடி மற்றும் மறைமுக அர்த்தங்களுக்கான விளக்கங்கள் பற்றி ஏராளமான விமர்சனங்கள் இருந்தன ஆனால் கனவுகளுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன என்பதில் அனைவரும் ஃபிராய்டுடன் உடன்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டு வரை உளவியல் சிகிச்சை அனைத்தும் ஃபிராய்டின் இந்த கோட்பாட்டையே அடிப்படையாக கொண்டிருந்தன.

கனவுகள்- அறிவியல்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மருத்துவ துறையில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி என்பது பிரமாண்டமானது. அதுவும் நரம்பியல் துறையில் ஏற்பட்ட கிடைத்த பல புதிய உண்மைகள், மூளை தொடர்பாக அதுவரை இருந்த கோட்பாடுகளையெல்லாம் உடைத்தெறிந்தன. மூளையின் இயக்கமே மர்மமான ஒன்றாக இருந்த சூழ்நிலையில் நுண்ணியக்கங்களை கூட கண்டுபிடிக்கும் பரிசோதனை முறைகளின் வரவிற்கு பிறகு அது துல்லியமாக புரிந்து கொள்ளப்பட்டது. அதுவும் குறிப்பாக தூக்கம்.

தூக்கத்தை பற்றி அதுவரை நிலவிய கருத்து ‘தூக்கம் என்பது ஓர்  ஓய்வு‘ அவ்வளவுதான். உடலியக்கத்திற்கு கிடைக்கும் தற்காலிக ஓய்வு என்பது அதன் ஆற்றலை சேமித்துக்கொள்வதற்கான ஒரு வழி என்பது தான் தூக்கத்தை பற்றிய புரிதலாக இருந்தது. ஆனால் நரம்பியல் துறையின் புதிய பரிசோதனைகளின் வழியாக தூக்கத்தில் நடக்கும் மூளையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தபோது ‘தூக்கம் என்பது ஓய்வு‘ என்ற கருத்து எத்தனை அபத்தமானது என்று புரிந்தது. ஏனென்றால் நாம் விழித்திருப்பதை விட மிக அதிகமான வேகத்தில் உடலின் செயல்பாடு தூக்கத்தின் போதே இருக்கிறது.

தூக்கம் என்பது ஓய்வல்ல, அது ஒரு தேவை. நாம் விழித்திருக்கும் போது செய்ய முடியாத செயல்களையெல்லாம் மூளை நம் தூக்கத்தின் போதே செய்கிறது. உதாரணத்திற்கு மூளையின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற அது வழக்கமான வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆனால் விழித்திருக்கும் போது அவ்வளவு வேகத்தில் மூளை இயங்குவது ஆபத்து, அதனால் தான் தூக்கத்தின் போது அந்த செயல் நடக்கிறது. அதே போலவே சில அதிமுக்கியமான மூளையின் பணிகளெல்லாம் தூக்கத்திலேயே நடக்கின்றன. தூக்கத்தில் நடக்கும் இந்த பணிகளை புரிந்து கொள்ளும்போதும் அப்போது மூளையின் இயக்கத்தில் நடக்கும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் போது கனவுகளை பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.

தூக்கத்தின் முக்கியமான பணிகள் நினைவுகளை சேமித்தல்:

விழித்திருக்கும் நாம் பல சம்பவங்களை கடந்து வருகிறோம், அதில் நாம் முக்கியமானவை என கருதுபவைகளையெல்லாம் அப்போதைக்கும் தாற்காலிக நினைவுப் பரப்பில் சேமித்துக்கொள்கிறோம். இப்படி சேமிக்கப்பட்ட தகவல்கள் எல்லாம் தூக்கத்தின் போது மூளையின் நீண்ட நாள் நினைவு சேமிப்பிற்கான பிரத்தியேக இடத்தில் சேமிக்கப்படுகின்றன. சரியாக தூக்கமில்லையென்றால் தற்காலிக நினைவுப்பரப்பில் இருப்பவையெல்லாம் அப்படியே அங்கிருந்து மறைந்துவிடுகின்றன. அதனால் தான் தேர்விற்கு முன்பு உறக்கம் என்பது அவசியமானது என்று சொல்லப்படுகிறது.

நச்சுகளையும், கழிவுகளையும் அகற்றுதல்:

ஒரு நாள் முழுமைக்கான மூளையின் இயக்கத்தினால் உருவாகக்கூடிய கழிவுப்பொருட்களும், நச்சுப் பொருட்களும் அன்றே வெளியேற்றிவிட வேண்டும் இல்லையென்றால் அவை மூளையின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும், அதை வெளியேற்றுவதற்காக மூளை சில நேரங்களில் மிக அதிகமான வேகத்தில் இயங்க வேண்டியிருக்கும்.

உணர்வுகளைச் செழுமைப்படுத்துதல்:

விழித்திருக்கும் நம்மால் முழுமையாக வெளிப்படுத்த முடியாத உணர்வுகள் அப்படியே தங்கியிருக்கும், அது தொடர்ந்து சீரான மனவோட்டத்தை பாதித்துக்கொண்டேயிருக்கும், அப்படிப்பட்ட வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையெல்லாம் சில குறிப்பிட்ட பகுதிகளை தூண்டுவதன் வழியாக தூக்கத்திலேயே வெளிப்படுத்தி அதன் பாரத்தை தூக்கம் குறைக்கிறது.

தூக்கத்திற்கென்று பல பணிகள் இருந்தாலும், இவை மூன்றும் மிக பிரதானமாக பணிகள். அதே போலவே தூக்கத்தில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று ரெம் நிலை (Rem Sleep) மற்றொன்று நான்-ரெம் நிலை (NREM Sleep). ரெம் நிலையில் மூளையின் இயக்கம் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த உடலின் இயக்கமும் அதிவேகமாக இருக்கும், நான்-ரெம் நிலையில் மிக சீரான இயக்கம் இருக்கும். இரண்டு நிலையும் மாறி மாறி தூங்கும் நேரம் முழுவதும் வந்து கொண்டேயிருக்கும்.

கனவுகள்:

மேலே சொன்ன தூக்கத்தின் செயல்பாட்டில் கனவுகள் என்பவை காட்சிகள். மூளையின் இயக்கம் எந்த பகுதியில் அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதி தூண்டப்பட்டு காட்சியாக விரிவடையும். மூளையின் இயக்கம் என்பது ஒரு மின் கதிர் செயல்பாடு. மின் கதிர்களினால் தூண்டப்படும் மூளையின் பகுதியில் உள்ள நினைவுகள் வெளிப்பட்டு காட்சியாக விரிவடையும் நிலையே கனவுகள். அதே போல மூளையின் செயலான நினைவுகளை சேகரித்தலில் நீண்ட நாள் நினைவு சேகரிக்கும் பகுதி தூண்டப்படுவதன் விளைவாக எப்போதோ நடந்த சம்பவங்கள் எல்லாம் காட்சியாக தோன்றுகின்றன. உணர்வுகளை செழுமைப்படுத்தும் வேலையின் போது, அன்று விழித்திருக்கும் போது நடந்த சில சம்பவங்களினால் உண்டான வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் முறையாக கனவுகளை தூக்கம் உபயோகப்படுத்திக் கொள்கிறது. உதாரணத்திற்கு அன்று அலுவலகத்தில் உயரதிகாரி நம்மை அவமானப்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம் அது பெரும் உணர்வலையை மனதினுள் ஏற்படுத்துகிறது. ஆனால் நம்மால் அந்த உணர்வை அவரிடம் வெளிப்படுத்த முடியாது, வெளிப்படுத்த முடியாத அந்த உணர்வு நம் மனதின் சமநிலையை பாதித்துக்கொண்டேயிருக்கும், இதனால் அன்றைய தூக்கத்தில் அப்படி வெளிப்படுத்த முடியாத உணர்வை வேறு ஒரு காட்சியை உருவாக்குவதன் மூலம் வெளிப்படுத்துவதற்கான வெளி உண்டாகிறது, அது அந்த உணர்விலிருந்து மனதைப் பாதுகாக்கிறது. சில நேரங்களில் பயந்து தூக்கத்தில் விழித்துக்கொள்வதெல்லாம் இப்படிப்பட்ட அதிதீவிர உணர்வெழுச்சிகள் வெளிப்படுவதாலே என்கிறது அறிவியல்.

தூக்கத்தின் இரண்டு நிலைகளில் ரெம் நிலையில் வரும் கனவுகள் நம் நினைவுகளில் பெரும்பாலும் இருக்கின்றன, அதுவே நான் ரெம் நிலையில் வரும் கனவுகள் நினைவில் இருப்பதில்லை. அதே போல ரெம் நிலையில் உடலியக்கம் மிக அதிகமான வேகத்தில் இருப்பதனால் அதில் வரும் கனவுகளும் உணர்ச்சி பூர்வமானதாகவும் இருக்கும். அந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தூக்கம் கலைந்துவிடுவது ஆபத்து ஏனென்றால் உடலியக்கம் மிக அதிகமாக இருக்கும் அதனால் தான் அப்படிப்பட்ட நிலையில் உடலின் தசைகள் அனைத்தும் செயலிழக்கப்பட்டு இருக்கும், தூக்கம் கலைந்தால் கூட நம்மால் உடலை அந்த நேரத்தில் அசைக்க முடியாது, சில நேரங்களில் மோசமான கனவுகளுக்கிடையே நாம் எழுந்த பிறகு உடலை அசைக்க முடியாமல் இருந்திருப்போம் அல்லவா அவையெல்லாம் ரெம் நிலையில் வரக்கூடிய மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கனவுகளே!

அறிவியலைப் பொருத்தவரை, எட்டு மணி நேரத் தூக்கத்தில் இரண்டு மணி நேரம் அதிகபட்சமாக ஒருவர் கனவு காண்கிறார். கனவுகளில் காட்சிகள் மட்டுமே இருக்கின்றன, எந்த ஓசையும், வண்ணங்களும் கூட கனவுகளில் இருப்பதில்லை. ஒருவர் காணும் கனவு என்பது பெரும்பாலும் அன்றைய நாளில் நடந்த சில சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருக்கலாம் அவ்வளவே! ஒரு நாளில் நம்மை மிகவும் பாதித்த ஒன்றும், நாம் மிகவும் சிந்திக்கும் ஒன்றும் நமது கனவுகளில் வெளிப்படுகின்றன, பெரும்பாலும் கனவுகளுக்கு எந்த தர்க்கமும் இருப்பதில்லை, காட்சிகளும் கோர்வையாக இருப்பதில்லை ஏனென்றால் தர்க்கத்திற்கான மூளையின் பகுதி தூக்கத்தின் போது முற்றிலும் செயலிழந்த நிலையில் இருப்பதால் கனவுகளில் வரும் காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் விரிவடைகின்றன. அதன் பிறகு நாம் தான் புள்ளிகளை இணைத்து அவற்றை கோர்வையாக்கிக்கொள்கிறோம்.

ஆன்மீக ரீதியான, தத்துவ ரீதியான, உளவியல் ரீதியான விளக்கங்களை போல கனவுகள் தொடர்பான அறிவியல் விளக்கங்களில் எந்த சுவாரசியம் இல்லை, கனவுகளுக்கு என்று அந்த பிரத்தியோக அர்த்தங்களும் இல்லை, தூண்டப்படும் பகுதியின் இயல்பை பொறுத்து கனவுகள் வேறுபடுகின்றன அவ்வளவே! கனவுகளை பகுப்பாய்வதன் வழியாக நாம் பெறுவதற்கென்று எந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளும் இல்லை என்பதே கனவுகள் தொடர்பாக நவீன அறிவியலின் கோட்பாடு. ஆம் உண்மை எப்போதும் தட்டையாகத்தானே இருக்கிறது, பொய்களை போல அவை ஒன்றும் சுவாரசியமானவை இல்லையே!

(சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், சென்னை)

அக்டோபர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com