அப்போதெல்லாம் பெரும்பாலும் பிரசவமெல்லாம் வீட்டிலதான் நடக்கும். ரொம்ப ஆத்திர அவசரம்னாத்தான் ஆஸ்பத்திரிக்குப் போவாங்க. கைராசியான நர்ஸம்மாவோ மருத்துவச்சிங்களோ வீட்டுக்கே வந்து பிரசவம் பாப்பாங்க. அந்தந்த வீடுகளிலும் ஆறு ஏழு குழந்தைகள் பெத்த அனுபவமுள்ள அம்மாக்கள் பேறுகால மருந்து பட்டியலைப் பத்திரமா ஒரு நோட்டில எழுதி வச்சிருப்பாங்க. அது, தாய்மார்களிடையே தலைமுறை தலைமுறையாக் கை மாறியும் வரும்.
எனக்கு முந்திய தலைமுறை ஆச்சிகளுக்கெல்லாம் மனப்பாடமாகவே பேறுகால மருந்துகள் என்று ஒரு பட்டியலைத் தெரியும். அடுத்த தலைமுறைத் தாய்மார்கள் அந்த ஆச்சிகளிடம் போய், ”ஏளா ஒம் பேத்தி நிறை சூலியா இருக்கா, பேறுகாலம் இப்பவோ அப்பவோன்னு இருக்கு, எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை, நல்லபடியா பெத்துப் பொழைக்கணுமே தாயும் புள்ளையுமுன்னு மனசு கெடந்து அடிச்சிக்கிடுது கேட்டுக்கோ, நீ அதுக்குள்ள மருந்து மாயமெல்லாம் தெரிஞ்சவ அதான் உன்னையத் தேடி வந்திருக்கேன், நீ அந்த மருந்துகளையெல்லாம் என்னன்னு சொல்லி அந்த மாயத்தை எப்படி இடிக்கணும் பொடிக்கணும்ன்னு பக்குவம் சொன்னா குறிச்சிக்குவேன்,” என்று கேட்பது எழுபது, எண்பதுகளில்க் கூடச் சாதாரணம்.
பிரசவம் நெருங்க நெருங்க, லிஸ்டைப் பார்த்து மருந்துகள் வாங்கவும், கிண்டி, பாலாடை, தொட்டில் கம்பு போன்ற பொருட்களைத் தேடி எடுக்கவும், பழைய வேட்டி சேலைகளையெல்லாம் சேகரிக்கவும் ஆரம்பிச்சிருவாங்க. ``பட்டு கிடைச்சாலும் கிடைக்கும் பழசு கிடைக்குமாள்ளா” என்று சமாதானம் சொல்லி பக்கத்து வீடுகளில் கூடக் கேட்டு வாங்கிடுவாங்க. பழைய துணிகளை சிறுசு சிறுசா கிழிச்சு வச்சிக்கிட்டா பிறந்த குழந்தைக்கு உறுத்தாம விரிக்கவும், வலிக்காம பீ மூத்திரம் துடைக்கவும் அதுதான் அம்புட்டு உபயோகமாயிருக்கும். நல்ல திடமான துணிகளைத் தொட்டில் கட்ட வச்சிக்கிடுவாங்க. தாய் மாமன் வேட்டிக்கு ரொம்பப் பிரிசாலம். அது கிடைக்கவே கிடைக்காது. அதில குழந்தையைத் தூங்கப் போட்டா புள்ளைகளுக்கு ‘ஒறம்’ விழாது (வாய்வுப் பிடிப்பு)ன்னு ஒரு நம்பிக்கை. ‘ஒறம்’ விழுந்த புள்ளைய தாய் மாமன் வேட்டியில் போட்டு ஆளுக்கொரு பக்கம் புடிச்சிக்கிட்டு வேட்டியை மெதுவா உருட்டினா அந்த வாய்வுப் பிடிப்பு விட்ரும்ன்னு ஒரு பக்குவம்.
குழந்தை பிறந்ததும் தயாராக வைத்திருக்கும் கோரோசனை மாத்திரையை வெற்றிலையில் மடிச்சு பெத்தவளுக்குக் கொடுப்பாங்க. அது ரத்தப் போக்கினால் குளிரோ ஜன்னியோ வராமக் காப்பாத்தும். அதுக்காகவே நயம் கோரோசனை (பசுவின் உடலிலிருந்து எடுப்பது), மலைத்தேன் போன்றவற்றை அததுக்கான ஆட்களிடம் சொல்லி சேகரித்து வைப்பார்கள். கோரோசனை, மாத்திரையாகவும் அப்போதெல்லாம் கடைகளில் கிடைக்கும். மருந்துச் சாமான்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதையெல்லாம் பக்குவமாகப் பொடி செய்து தயாராக வைத்துக் கொள்ளுவார்கள். குழந்தை பிறந்த மறு நாளிலிருந்து இஞ்சிச்சாற்றில் கலந்து சூடு பண்ணி, தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வருவார்கள். அந்தக் காலத்தில் பிள்ளை பெற்றவளுக்கு, வயிறு பழுத்து விடும் என்று சொல்லி தண்ணீரே கொடுக்க மாட்டர்கள். தாகத்தைத் தீர்க்க வெற்றிலையும் பாக்கும்தான் மெல்லக் கொடுப்பார்கள். அதை மென்று திங்கற போது ஊறும் எச்சில்தான் தாகம் தீர்க்குமென்றோ என்னவோ.
இந்த விவரங்களெல்லாம் எங்களுக்கு முதல் குழந்தை பிறக்கும் சமயம் தெரிந்து கொண்டவை. எல்லாப் பக்குவங்களும் என் மனைவிக்கும் நடந்தன. என் மனைவியின் அம்மாவுக்கு எல்லா விவரங்களும் தெரிந்தாலும் எதிர்ப்படுகிற அவரை விடப் பெரிய அக்காமார்களிடமும் ஆச்சிமார்களிடமும் கேட்டுக் கொண்டிருப்பார். நான் வைத்திருந்த எங்கள் வீட்டுப் பாரம்பரிய மருந்துப் பட்டியலைக் கூடக் கொடுத்தேன். அதையும் வாங்கிக் கொண்டு மேலும் மேலும் விசாரித்துக் கொண்டுதான் இருந்தார்கள் அம்மாவும் பெண்ணும். நாள் நெருங்க நெருங்க அவர்கள் பதற்றம் என்னையும் தொற்றிக் கொண்டது. அலுவலகம் செல்லவும் முடியவில்லை. பொறக்கற நேரம் வந்தாத் தானே பொறக்கும் நீங்க காவலுக்கு உக்காந்திருந்தா பொறந்திருமா என்று என்னை அலுவலகம் போகச் சொல்லிக் கட்டாயப்படுத்தி விட்டார்கள்.
அன்று கந்தர் சஷ்டி. அன்றுதான் குழந்தைப் பேறுக்கான நாள் என்று சொல்லியிருந்தார்கள். மனைவி அவரது அம்மா வீடான குற்றாலத்தில் இருந்தார். அருகில் இருந்த பிரபல மகப்பேறு மருத்துவ மனைகளில் சேர்க்கலாம் என்ற யோசனைக்கு, ``அதெல்லாம் ஒரு நாளைக்கு எத்தனை பிள்ளைக பஞ்சாயத்து ஆஸ்பத்திரியில் பிறக்குது. இங்கேயிருக்கிற நர்ஸ் அவ்வளவு கெட்டிக்காரங்க, நல்ல கைராசியானவங்க, அவங்களால முடியாதுன்னா உடனேயே சொல்லிருவாங்க, நீங்க ஆபீஸ் போங்க,” என்று சொல்லவும் நான் அலுவலகம் சென்று விட்டேன்.
மாலையில் அவசரம் அவசரமாகத் திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் கோயில் ரதவீதியில் சஷ்டிக்கு சூர சம்ஹாரத் திருவிழா. கூட்டமாய் வழியடைத்து நெருக்கடியான நெருக்கடி. பஸ்ஸை ஓரமாக நிறுத்தி விட்டார்கள். இறங்கி நடக்கக் கூட முடியாத அளவு சனக்கூட்டம்.
இரண்டு மணி நேரம் தவிப்பான தவிப்பு. அப்போது என்ன அலை பேசிக் காலமா. அலைபேசியில் யாரையாவது அழைத்து, ``இப்போ எப்படி இருக்காங்க,” என்று ரன்னிங் கமெண்டரி கேட்க. தென்காசியிலிருந்து குற்றாலத்துக்கு தொலைபேசியில் பேசக் கூட ட்ரங்க் ’கால்’ புக் பண்ணி விட்டுக் காத்திருக்க வேண்டும். பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு கால் பண்ணவாவது கையப் பிடிக்கவாவது. சாமியே எதிரே நின்று காட்சி தருவதால் மனதுக்கு ஒரு தெம்பு வந்தது என்றாலும் பயத்தின் அசுரத் தலையை நம்மால் அரிந்து விட முடிகிறதா என்ன. வெட்ட வெட்ட முளைத்துக் கொண்டிருந்தது பயம். ஒருவழியாய் வீட்டுக்குப் போய்ச் சேரும்போது மனைவி டவுன்ஷிப் மருத்துவ மனையில் இருப்பதாகவும் நான் வந்ததும் சாப்பாடு தருவதற்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார்கள். ஏதோ பழைய சோறு இருந்தால் தாருங்கள் போதும் என்று சொன்னதற்குத் தயக்கத்துடன் சம்மதித்தார்கள். வீட்டு மருமகன் நாளைப் பின்னயும் சடைத்துக் கொண்டால் என்ன ஆவது என்ற தயக்கமோ என்னவோ.
நல்லவேளையாக ஒரு நண்பர் துணைக்கு இருந்தார். இரண்டு பேரும் ஆஸ்பத்திரி வெராண்டாவின் அடைத்த கதவுக்கு முன்னால் தவமிருந்தோம். சஷ்டிக்கு மழை பெய்யும் என்னும் வாக்குக்கேற்ப தூறல் வேறு துவங்கி விட்டது. அடைத்த அறையிலிருந்து நர்ஸம்மா வெளிப்படும் போதெல்லாம், பயமும் கேள்வியும் தொக்கி நிற்கும் முகத்தை ஆறுதலாகப் பார்த்து விட்டுச் சென்றார்கள். இதுவே பெரிய ஆஸ்பத்திரி என்றால் ஆளைப் பார்த்தும் பார்க்காத மாதிரி, பிரசவ அறைக்குள் போவதும் வருவதுமாக இருப்பார்கள். அதற்கே அவர்களுக்குப் பயிற்சி தந்திருப்பார்களோ என்று தோன்றியது.
அப்படி நினைத்துக் கொண்டிருக்கையில் உதவிக்கு வந்திருந்த பக்கத்து வீட்டு மன்னி ஒருவர் அவசரமாக வெளியே வந்து விட்டு ஒன்றும் சொல்லாமல் மறுபடி உள்ளே போனார். ஆனால் அவரது உடல் மொழி ஏதோ சொல்லாமல் சொல்லிற்று. அதுவரை கேட்டுக் கொண்டிருந்த மனைவியின் வலி முனகல்களும் சுத்தமாகக் கேட்கவில்லை. சட்டென்று என் வயிற்றுக்குள் ஒரு பயப்பந்து உருண்டது. நேரம் ஆக நேரம் ஆக அது சற்றுப் பெரிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிற்று. நண்பர் ஒரு சிகரெட்டை நீட்டினார். இருக்கிற பயத்தை அது இன்னும் கூட்டி விடுமென்று ஆர்வமில்லாமல் மறுத்தேன். உண்மையில் அவரிடம் சற்று நேரம் முன்பு சிகரெட் இருக்கிறதா என்று கேட்டு. இல்லை என்று சொன்னவர் யாரையோ அனுப்பி வாங்கி வரச் சொல்லியிருந்தார்.
நேரம் நடு நிசியைத் தாண்டியிருந்தது. ஊர் அமைதியாகி, தூரத்து அருவிச் சத்தம் நன்றாகக் கேட்டது. மலையில் உள்மழை பெய்து தண்ணீர் அதிகரித்திருக்கலாம் என்றார் நண்பர். அவர் குற்றாலத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அவரது அந்த சகஜமும் நிதானமும் எரிச்சலாய் இருந்தது. ஆனால் அவரும் இல்லையென்றால் இன்னும் பதற்றமாக இருக்கும் என்பதும் உண்மைதான். அதனால் எரிச்சலைக் காண்பிக்கவில்லை.
நல்ல வேளையாக அந்த அடுத்தாத்து மன்னி கையில் குழந்தையுடன் வெளியே வந்தார். ``இந்தாங்க நீங்க கேட்ட மாதிரியே பொண்ணு பொறந்திருக்கா” என்றவர் ``உக்காருங்கோ மடியில் வைக்கிறேன்,” என்றார். அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். மடியில் வைத்தார். மெதுவாகத் தொட்டேன். `` வலிக்காமத் தொடறீங்களே, அவ நல்ல அடி வாங்கிட்டுத்தான் சுவாசிக்கவே ஆரமிச்சிருக்கா, பொறந்ததும் அழவே இல்லை எல்லாரையும் கொஞ்சநேரம் பயமுறுத்திட்டா… நர்ஸம்மா தலை குப்புறப் பிடிச்சு புட்டத்தில நல்லா அடிச்சப்புறம்தான் மூச்சே வந்து அழ ஆரம்பிச்சிருக்கா…கொஞ்சம் இருங்க.. அம்மாக்காரிய வெண்ணீர் வச்சுத் தொடச்சிக்கிட்டு இருக்காங்க நர்ஸம்மா, அப்புறமா ரெண்டு பேரையும் பார்க்கலாம்…” உள்ளே கொண்டு போனார்.
பார்க்கிறவர்களெல்லாம், ``வெள்ளிக்கிழமை லெச்சுமி பொறந்திருக்கா..” என்று வாய் நிறைய வாழ்த்துகள் சொன்னார்கள். வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக உணர்ந்தேன். பணம் கொட்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம். நினைத்தது போலவே, நெல்லை மாகாளி புட்டார்த்தியே வந்து விட்டாள் என்று நினைத்தேன். ஆர்த்தி என்று பெயர் வைத்தேன். பெயரை ஆங்கிலத்தில் எழுதுகையில் இரண்டு ‘A’ வரும். பள்ளி வருகைப் பதிவேட்டில் எல்லாம் பெயர் முதலாவதாக வரும். எந்த நேர்முகத் தேர்விலும் முதலாவதாக அழைக்கப்பட்டு விடுவாள், காத்திருக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆம். முதலாவதாக, எல்லோருக்கும் முன்னதாக அழைத்துக் கொண்டு விட்டாள். கொடுத்தது போலவே எடுத்துக் கொண்டாள்.. ``எல்லாருக்கும் தலைப்பிள்ளை தங்குமா..” என்று நாட்டுப் புறங்களில் சொல்லுகிற மாதிரி ஆறு மாதமே இருந்து விட்டுக் கனவு மகளாகிக் கரைந்து போனாள் முதல் குழந்தை.