கத்திகிட்டே இருக்கணும்!

புதிய அரசு என்ன செய்யவேண்டும்? 
கத்திகிட்டே இருக்கணும்!
Published on

நாட்டின் பொருளாதாரமோ தனி நபர் பொருளாதாரமோ மோசமாகத்தான் இருக்கிறது. என்னுடைய பொருளாதாரம் சிக்கல் இல்லாமல் இருக்கிறது என்பதற்காக, நாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? எல்லாருக்கும் ஒரே சூழ்நிலை இல்லையே? குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது என்றால் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு பொருளாதாரம் திடமாக இருக்கிறது எனலாம். இதில் மாநில அரசின் செயல்பாடுகள் வந்து எதையும் பெரிதாக மாற்றிவிடும் எனச்

சொல்வது, அபத்தம். ஏனென்றால் அப்படி ஒன்று சாத்தியமே இல்லை. மாநில அரசாங்கம் நினைத்தால் சோறு போடலாம்; மருத்துவ வசதி தரமுடியும்; மின்சாரத்தைத் தரலாம். வேறு சிறு அளவிலான மானியங்களைத் தரமுடியும். பெரிய அளவில் மாநில அரசால் எதையும் செய்யமுடியாது. அதிகாரம் முழுவதும் இந்திய ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளது. அரசியல்சாசனம் உருவாக்கப்பட்டபோதே அப்படியொரு அதிகாரக் குவிப்பைச் செய்துவிட்டுப் போய்விட்டார்கள். அரசியல்சாசனம் உருவாக்கப்பட்டபோது நடைபெற்ற விவாதங்களைப் படித்துப்பாருங்கள்.. பெரிய பெரிய ஆள்கள் எல்லாரும் பேசியிருக்கிறார்கள்.

விலைவாசி உயர்விலும் மாநில அரசு என்ன செய்துவிடமுடியும்? அதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? நிதிக்கொள்கை தொடர்பான எந்த முடிவையும் ஒன்றிய அரசுதான் எடுக்க முடியும். பணப்புழக்கம் போன்ற நாணயவியல் தொடர்பாக ரிசர்வ் வங்கிதான் தீர்மானிக்கமுடியும். இப்படிதான் அரசியலமைப்பு சொல்கிறது. மாநில அரசால் செய்யமுடிவது, தமிழ்நாட்டின் சமூகநீதித் திட்டமான இலவச அரிசிபோல சிலவற்றை - மக்களுக்கு தந்து கொஞ்சம் ஆறுதலை அளிக்கலாம்.

தமிழ்நாடு அரசாங்கத்துக்கு இருக்கும் கடன் இருக்கிறதே; இதைக் குறைக்கவேண்டாமா... நிச்சயம் வேண்டும்தான். அதில் எந்த மாற்றுப் பார்வையும் இல்லை. ஆனால் அரசுக்கு முன்னால் இருக்கும் வழிவகை என்ன? அது முக்கியம் அல்லவா?

முன்னராவது விற்பனை வரி என்பது நம்மிடம் இருந்தது. அதை அப்படியே பிடுங்கி ஜி.எஸ்.டி.யாக ஆக்கி, ஒன்றிய அரசுப் பக்கம் எடுத்துக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் மதுவிலக்கு ஆயத்தீர்வை, பத்திரப்பதிவு போன்ற சொற்பமானவற்றில் மட்டும் மாநில அரசு தானே முடிவை எடுக்கலாம்.

மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. தொகையைத் தரவில்லை என என்னதான் வாய்கிழியக் கத்தினாலும், ஏதாவது தேறுகிறதா... உரிய தொகை வந்துசேர்வதற்கான அறிகுறி தெரிகிறதா? இதில் புதிய அரசாங்கம் மட்டும் வந்து என்ன செய்துவிடமுடியும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காக ஒன்றிய அரசிடம் நம் பங்கைக் கேட்காமலே இருந்துவிடலாமா? அப்படி செய்தால் அவர்களே மனமுவந்து தந்துவிடுவார்களா? தரவேண்டும்; தராமல் இழுத்தடிக்கிறார்கள்; நாமும் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இதுதான் இந்த ஒன்றிய அரசு - மாநில அரசு கட்டமைப்பில் சாத்தியம். இதைச் செய்துதான் ஆகவேண்டும்.

ஒருவன் அடிக்கிறான்.. வலிக்கிறது.. கத்துகிறோம். அப்போதும் அவன் அடிப்பதை நிறுத்துவதாக இல்லை. என்னதான்

கத்தினாலும் நிறுத்தாமல் அடித்துக்கொண்டே இருக்கிறானே என்று கத்தாமல் இருந்துவிடுகிறோமா? அப்படித்தான் இதுவும். மாநிலத்துக்கு உரிய பங்கை ஒன்றிய அரசு தரவில்லை எனும்போது, திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேதான் இருக்கவேண்டும். வலிக்கும்வரை கத்திக்கொண்டே இருப்பது, உலக யதார்த்தம்.

இந்தத் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களைப் பற்றிக் கேட்கிறீர்கள்.. குறிப்பாக குடும்பத் தலைவராக இருக்கும் பெண்களுக்கு உரிமைத்தொகை அல்லது சம்பளம் பற்றி அதிகமாக பிரஸ்தாபிக்கப்படுகிறது. பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்பட்டாலும், அதை வீட்டு ஆண்கள் வாங்கி, குடி போன்ற செலவுகளில் வீணடித்துவிடுவார்கள் என்று ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அந்தப் பணத்தைக் கரைத்துவிடுவார்கள் என்கிறார்கள். எத்தனை பேர் இப்படி செய்கிறார்கள்? ஏதாவது கணக்கு இருக்கிறதா? அப்படி இல்லவே இல்லை என நானும் சொல்லவில்லை. அவர்களின் உழைப்புக்கான அங்கீகாரத்தை சமூகமயப்படுத்துவது, அதற்கான குறைந்த அளவு ஈட்டுத்தொகையை வழங்குவது வெறும் பணம் என்கிற மட்டிலானது அல்ல. இது ஒரு சமூகநீதி சார்ந்த பயன்திட்டம். இதன் விளைவுகளை நீண்டகால நோக்கில் நாம் பார்க்கவேண்டும். இதைப் போன்ற அரசின் எந்த ஒரு நலத் திட்டமும் அதன் இலக்கில் 70 &80 சதவீதத்தை அடைந்துவிட்டால் அதுவே பெரிய வெற்றிதான். 

பெண்களுக்கு இலவசப் பயணம், சலுகைப் பயணம் பற்றிய அறிவிப்பும் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. இப்போது வேலைக்குப் போகும் பெண்களுக்கு இது பெரிய ஊக்கமாக இருக்கும். இன்னும் ஏராளமான பெண்கள் வேலைக்குச்

செல்வதற்கு பெரிய தூண்டுதலாக இது இருக்கும். பெண்கள் வேலைக்குச் செல்வதால் சமூக முன்னேற்றம், மேம்பாடு, பண்பாட்டு  வளர்ச்சி என்பது ஒரு பக்கம்

இருக்கட்டும். இதனால் வீட்டுக்கு நல்லதா இல்லை கெடுதல் ஏதும் இருக்கிறதா? அவர் வேலைக்குப் போவதால் அந்தக் குடும்பத்தில் முன்னேற்றம் காணமுடியுமா முடியாதா? இதையெல்லாம் மொட்டையாகப் பார்ப்பவர்களுக்கும் அவர்களிடமிருந்து ரொம்பவும் தொலைவில் இருப்பவர்களுக்கும் தேவையில்லாமல் இருக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட எல்லாருக்கும் அவரவர் தேவை அவசியமாகத்தானே இருக்கும். உங்களுக்கும் எனக்கும் சில வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் எல்லாருக்கும் அந்த வாய்ப்புகள்

கிடைக்காமலே இருப்பதைப் பற்றி அக்கறை இல்லை என நினைப்பது சரியானதாக இருக்குமா? பெண்களுக்கான பயணச் சலுகை நிச்சயம் தமிழ்நாட்டில் பெரிய சமுதாய வளர்ச்சியை, பொருளாதார முன்னேற்றத்தை, பண்பாட்டு மேம்பாட்டை உருவாக்கும். கோடிக் கணக்கிலான குடும்பங்களில் மலர்ச்சி ஏற்படும்.

இலவசமே தவறு; இது மனிதர்களை சோம்பேறியாக்கிவிடுகிறது என்பதைப் பற்றிக் கேட்கிறீர்கள். இப்படிச்

சொல்வது படு அயோக்கியத்தனம் என்றுதான் சொல்வேன். அவ்வளவு மோசடித்தனமான வாதம், இது. பதிலுக்குப் பதில் என்றெல்லாம் இதை நான் பேசவில்லை. உலக நாடுகளில் இதுவரை இந்த நலத்திட்டங்கள், இலவசங்கள் தொடர்பாக முதன்மையாக 165 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில்கூட இப்படியான ஒரு கருத்தே இல்லை. தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்வோம்.. பள்ளிக்கல்வியில் பரவலாக தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதிகம் பேர் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள். அதற்கு கட்டணம் செலுத்தித்தானே ஆகவேண்டும். வருவாயை ஈட்ட வேலைசெய்துதானே ஆகவேண்டும். இப்படி இருக்க, திரும்பத் திரும்ப சோம்பேறியாகிவிடுவான் என்பதெல்லாம் அப்பட்டமான தவறு.

இந்த மாதிரியான நலத்திட்டங்கள் செயல் படுத்தப்படும் நாடுகளில், முன்னர் இருந்ததை விட, 1. தனிநபர் வருமானம் ஓரளவுக்கு நிலைப்புத்தன்மைக்கு வந்திருக்கிறது. 2. பணவீக்கம் குறைந்திருக்கிறது. 3. முக்கியமாக, குடும்ப வன்முறை குறைந்திருக்கிறது. 4. சமூகத்தில் கல்வியும் சுகாதாரமும் பெருகியிருக்கிறது.

இவற்றையெல்லாம் வேண்டாம் என தூக்கிப்போட்டுவிடலாமா? இவர்கள் என்ன  சொல்ல வருகிறார்கள்?

சலவை எந்திரம் தருவதைப் பற்றியும் இதைத்தான் சொல்லமுடியும். தமிழ்நாட்டு வீடுகளில் பெரும்பாலும் துணிதுவைப்பது யார், பெண்களா ஆண்களா? எத்தனை பேர் வீட்டில் சலவை எந்திரம் இருக்கிறது? தகவல் உண்டா? அதைப் பற்றி இவர்கள் குறிப்பாகச் சொல்லமுடியுமா? பெரும்பாலான குறைந்த வருவாய்ப் பிரிவினரிடம் சலவை எந்திரம் இல்லை. அந்தப் பெண்களுக்கு அதனால் பெரிய வேலை மிச்சமாகும். எனக்கு வாழ்க்கையில் ஒரு சௌகர்யம் கிடைத்துவிட்டது; அதை என்னால் எளிதாகப் பெறமுடிகிறது என்பதற்காக, இன்னொருவருக்கு அது கிடைக்கக்  கூடாது என நினைப்பது என்ன வகையான சிந்தனை? சமூகத்தில் தேவையுள்ளவர்கள் அதை பெற்றுக்கொண்டு போகட்டும்; இவர்களுக்கு என்ன வந்தது?

அரசு மதுக்கடைகளை நடத்துவது பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் குடிநோயாளிகள் இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு மோசமில்லை.   குடிப்பதால் தனி நபரின் வருமானம் பறிபோகிறதா என்றால், ஆமாம், தினக்கூலி ஒருவர் 150 ரூபாய்க்கு குடித்தார் என்றால் நிச்சயமாக அந்தக் குடும்பத்துக்கு பெரிய இழப்புதான், பாதிப்புதான். இங்கு 48 சதவீதம் பேர் குடிக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். மீதமுள்ளவர்கள் குடிக்காமல் இருக்கிறார்கள் எனும்போது, இதை தட்டையாக ஒரே கோணத்தில் அணுகமுடியாது. தனி மனிதரின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை, இது. அறிவியல்ரீதியாக, குடியின் அபாயம் குறித்து சமூகரீதியிலும் கல்வித்திட்டத்திலும் உணர்த்தவேண்டும். அப்படிச் செய்யும்போது ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர முடியும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பைப் பொறுத்தவரை, சரியான நிர்வாகத் தேவை ஒரு பக்கம். அரசாங்கத்தின் கொள்கையாகவே, அதை லாபமீட்டும் ஒரு நிறுவனமாகப் பார்க்கக்கூடாது. சமூகத்துக்கு அத்தியாவசியமான ஒன்றை, மக்கள் நலத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே

சேர்க்கவேண்டும். அப்படி வைக்கும்போது இழப்பு என்பது இல்லாமல் போகும். இது முதன்மையானது.

இப்படியான நலத்திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற, அரசாங்கத்திடம் நாளைக்கே பணம் வந்துவிடுமா எனக் கேட்பவர்களும் இருக்கிறார்கள். தனி நபர்கள்தான் கையில் பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்யவேண்டும். அரசுக்கு இது பொருந்தாது. கணக்குப்பிள்ளை கணக்கு அரசாங்கத் துக்கு ஒத்துவராது. வரவு எட்டணா செலவு பத்தணா என சினிமா பாட்டு பாடுவதைப் போல அரசாங்கம் நினைக்கமுடியாது. எதை நோக்கி போகவேண்டும் என்ற அடிப்படையில் திட்டமிடவேண்டியது  அரசாங்கம். அதைப் பொறுத்தவரை மக்களுக்கு என்ன தேவையோ அதற்கான திட்டத்தை வகுக்கவேண்டும்; திட்டத்துக்கு வேண்டிய நிதியாதாரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

இன்னொன்று, ஓர் உதாரணம். கடந்த பத்து ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஓடும் பைக், கார்களில் 92 சதவீதம் தவணைக்கடனில் வாங்கப்பட்டவைதான் என புள்ளிவிவரம் காட்டுகிறது. இதைப்போலத்தான் வீடு கட்டுவதும் வாங்குவதும்..! அரசு நினைத்தால் அது மனதுவைத்தால் ஒரு திட்டத்தைக் கொண்டுவரமுடியும். இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய பொருளாதாரம் நம்முடையது. கடன்வாங்கி செயல்படுத்தக்கூடிய திட்டங்களில் பலனைக் கொடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமானது. இதன் காரணமாகவே உலக வங்கி உள்பட பன்னாட்டு நிதியங்கள், நம் அரசுக்கு கடனுதவி அளிக்க எப்போதும் தயாராக இருக்கின்றன. சுற்றுச்சூழல் தடை போன்ற காரணங்களைத் தவிர்த்து பெரும்பாலான திட்டங்களுக்கு நிதியுதவி கிடைப்பதில் எந்த சிரமமும் இல்லை. எந்தக் கட்சி வந்தாலும் இங்கு ஆட்சி நிர்வாகம் என்பது சமூக நீதி இயக்கப் பின்னணியில் தூண்டப்பட்ட ஒருசீரான தன்மையில் நடந்துகொண்டிருப்பதால், மற்ற மாநிலங்களை ஒப்பிட ஒரு வள நிலைமை இருக்கிறது. தனிநபர் வருமானம் பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைப்போல 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.

ஒன்றிய அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தை வலுவாக்கி, மாநிலங்களின் உரிமையை எடுத்துக் கொள்வது உதாரணமாக ஜி.எஸ்.டி. போன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வழி இல்லையா என்கிறீர்கள். அதைத் தடுத்துநிறுத்துவதும் இருக்கிற உரிமைகளை விடாமல் காபந்துபண்ணுவதும் ஓர் அரசியல் போராட்டம். ஒரு கட்சியோ ஆளோ செய்துவிடக்கூடிய விசயம் அல்ல. பல தரப்பையும் அணிதிரட்டி செய்ய வேண்டி இருக்கலாம்;

காலம் கனிவதற்கு காத்திருக்க வேண்டியிருக்கலாம். சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம். பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கலாம். அரசியலே உரையாடல்தானே! பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏதோ ஓர் இடத்தில் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்துவதாக இருக்கலாம். ஒரு போர் என்றால்  என்ன செய்வீர்கள், முன்னே போவீர்கள், பின்னால் வருவீர்கள், பதுங்குவீர்கள், எழுந்துகொள்வீர்கள்,  கத்துவீர்கள், அடித்துக்கொள்வீர்கள்.. இதையெல்லாம் செய்வதுதான் போர்.

ஜிஎஸ்டியில் அரசியல் சாசனத்தை உங்களால் உடனே திருத்தமுடியுமா? இட ஒதுக்கீட்டுப் பிரச்னையைத் தீர்த்துவிட்டோமா? நியாயத்தைச்  சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நாளைக்கு மம்தா வரலாம்; கர்நாடகத்திலிருந்தோ ஆந்திரத்திலிருந்தோ வரலாம். 10 பேர் சேரலாம். அரசியலில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.   

வலு எவர் பக்கம் சேர்கிறதோ அவர் அதை நகர்த்துவார். வலுகுறையும்போது நாம் நகர்த்தவேண்டும். இந்த கட்டமைப்பில் மாநில அரசுகளின் அதிகாரத்தை சுருங்கும்படி செய்வதற்கான வாய்ப்பை, அரசியல்சாசனத்தை உருவாக்கியவர்கள் செய்துவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். 1950 ஆம் ஆண்டிலேயே பொதுப்பட்டியல் என்பதையே வைக்கவேண்டாம்; அப்படி வைத்தால் மாநிலங்களின் கொல்லைப்புறத்தை ஒன்றிய அரசுக்காக திறந்துவைப்பதைப்போல; அதன் வழியாக ஒட்டகம்போல நுழைந்துவிடும் என பேசியிருக்கிறார்கள். அப்போது, இல்லையில்லை ஒரு சிலவற்றுக்காக அது தேவை என ஒரு பாட்டுப்பாடி கொண்டுவந்துவிட்டார்கள். இப்போது அந்த சந்தைப் பயன்படுத்தித்தான் வேளாண் சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள்.

வேளாண் விளைபொருள்கள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் போவது என்பது ஒன்றியத்தின் பட்டியலில் இருக்கிறது. அதுக்காக  சட்டம் போடுவதாகச் சொல்கிறார்கள். ஒரு பக்கம் வலுவான ஒன்றிய அரசு வேண்டும் எனும் பேராசை; இந்த அடையாளத்தைக் காப்பாற்றவேண்டும் என மாநில அரசாங்கங்கள் இன்னொரு புறம்.

 பேராசைக்கும் அபிலாசைக்கும் இடையிலான தொடர் போராட்டம்தான், இது.

உரிமைகளை விடாமல் பிரக்ஞையோடு இருக்கிறோமா இல்லை மொட்டையடிக்கத் தலையைக் காட்டுகிறோமா என்பதுதான். ஜிஎஸ்டியில் எதுவும் செய்யவில்லை என்பதற்காக, இங்கிருந்து டெல்லிக்குப் போகிறவர்கள் பேசாமல் இருக்கமுடியுமா? நாடாளுமன்றத்தில் போய் அண்ணா, தமிழ்நாட்டிலிருந்து, திராவிடத்திலிருந்து நான் வந்திருக்கிறேன் என்று பேசியபோது பலரும் சிரித்திருக்கக்கூடும். அதற்காக அதை அவர் பேசாமல் விட்டுவிட்டாரா? அதுதான் தொலைநோக்கு!

அடுத்து வரும் அரசாங்கம் ஒன்றும் செய்யமுடியாது என்பதற்காக, சும்மா விட்டுவிடமுடியாது. முதலில் பேசிக்கொண்டே இருங்கள்.. அதைச் செய்தாலே போதும். ‘அய்யோ வலிக்குதே‘ என கத்துவதால் அவன் அடிப்பதை நிறுத்தப்போவதில்லை என்பதற்காக, கத்தாமல் இருக்கமுடியாது.

(எழுத்துவடிவம்: இர.இரா.தமிழ்க்கனல்)

ஏப்ரல், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com