இந்தக் கட்டுரையை நான் எழுத ஆரம்பிக்கின்ற இதே நாளில் ( 17-ஜூலை 2015), நூறு வருடங்களுக்கு முன்பு தரிசி செஞ்சய்யா என்பவர் பாங்காக் நகரத்தில் ஆயுதம் தாங்கிய கப்பலை எதிர்பார்த்து நின்றார். இந்திய விடுதலைப்போரில் அது ஒரு வீரம் செறிந்த வரலாறு.
ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஆரம்பித்த பிறகு பஞ்சம் தொடர்கதையாக வந்தது. எனவே பிழைப்பதற்காக எண் திசைகளிலும் இந்தியர்கள் சென்றனர். பஞ்சாப்பிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் சென்றனர். கடினமாக உழைத்தனர். இவர்களை அமெரிக்கர்கள் மிகவும் கேவலமாக நடத்தினர். “இந்தியர்களும் நாய்களும் வரக்கூடாது” என உணவகங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன. இந்தியா விடுதலை பெற்றால்தான் வெளிநாட்டில் உள்ள நமக்கும் மதிப்பு வரும் என்று அன்று இந்தியர் எண்ணினர்.
இதற்காக அமெரிக்காவில் இருந்த இந்தியர்களும் அயர்லாந்து போராளிகளும், ரஷ்ய தீவிரவாதிகளும் ஒன்று சேர்ந்தனர். முற்போக்கு கருத்துடைய அமெரிக்கர்கள் இந்தியருக்கு ஆதரவாக செயல்பட்டனர்,‘இந்து, இந்துஸ்தானி கழகம்’ என்ற சங்கம் போர்ட்லேண்டில் ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப்போராளியான லாலா ஹர்தயாளை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
1911ஆம் அண்டு ஜனவரி மாதத்தில் லாலா ஹர்தயாள் அமெரிக்கா வந்தார். இந்திய விடுதலைப் போரில் ஒரு புது வரலாறு எழுதப்பட்டது. இந்தியர்களை லாலா ஒன்று சேர்த்தார், போராட அழைத்தார். லாலாவின் விருப்பத்திற்கேற்ப 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ல் இந்தியர்கள் ஒரு சங்கம் அமைத்தனர் .
ஆயுதப்புரட்சி மூலம் இந்தியாவிற்கு விடுதலை வாங்கித்தருவதுதான் அதன் குறிக்கோள். இதற்காக இதன் உறுப்பினர்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மகிழ்வுடன் தரவேண்டும். மதம் என்பது ஒவ்வொருடைய தனிப்பட்ட விருப்பம். எனவே மதத்தைப் பற்றி இச்சங்கத்தில் பேசக்கூடாது.
இச்சங்கத்தின் சார்பாக‘கத்தார்’(புரட்சி) என்ற வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு இக்கட்சியே கத்தார் கட்சி என்று அழைக்கப்பட்டது.
கத்தார் கட்சி சில இந்திய மாணவர்கள் படிப்பதற்கு பண உதவி தந்தது. அவ்வாறு நிதி உதவி பெற்றவர்கள் P.H.E.பாண்டியன், தரிசி செஞ்சய்யா, ஷர்மா ஆவர். இவர்கள் அமெரிக்காவிற்கு சென்றனர். உட்டா மாநில விவசாயக் கல்லூரியில் செஞ்சய்யா சேர்ந்து கொரில்லா போர்முறை பயின்றார். சீனாவை உலுக்கிய சன்யாட்சன் மகன் இவருடைய நண்பர் ஆவார்.
கத்தார் கட்சியின் வளர்ச்சியைக் கண்டு ஆங்கிலேயர்கள் பயப்பட ஆரம்பித்தனர். எப்படியாவது லாலாவை அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற முயன்றனர்.
அப்பொழுது ஹாக்கின்ஸன் என்பவன் கனடா நாட்டு குடியேற்ற அதிகாரியாக இருந்தான். இதற்கு முன்பு கல்கத்தாவிலிருந்தபோது இந்தியப் போராளிகளை சித்திரவதை செய்தவன் கனடாவில் ஆங்கிலேய அரசு சார்பாக இந்தியப் போராளிகளை ஒற்று அறிந்தவன். லாலா ஒரு பயங்கரமான போராளி என்று யாராவது ஓர் இந்தியர் புகார் கூறினால், லாலாவை கைது செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்தது. ஹாக்கின்ஸனிடமிருந்து P.H.E.பாண்டியன் பணத்தைப்பெற்றுக் கொண்டு கத்தார் கட்சி பற்றி தகவல் சொல்லிக்கொண்டு இருந்தான். லாலா வன்முறையைத் தூண்டுவதாக பாண்டியன் அமெரிக்க அதிகாரிகளிடம் வாக்குமூலம் தந்தான். இதன் அடிப்படையில் அமெரிக்க அரசு லாலாவை கைது செய்தது. பிறகு ஆயிரம் டாலர் ஜாமினில் லாலாவை விடுதலை செய்தது. ஹாக்கின்ஸனை மேவா சிங் என்பவர் சுட்டுக் கொன்று பழிதீர்த்தார்.
ஹர்தயாளுக்கு ஆபத்து ஏற்படும் என்று எதிர்பார்த்த இந்தியர்கள், அயர்லாந்து நாட்டினர் விடுதலை உணர்வு கொண்ட அமெரிக்கர்கள் அவருக்கு உதவினார்கள். அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச்சுக்கு சென்றார். சூரிச் நகரத்தில் செண்பகராமன் பிள்ளை இந்திய ஆதரவு கழகம் என்பதனை நடத்திக்கொண்டிருந்தார். இவர்தான் வெள்ளையரை பயமுறுத்த எம்டன் கப்பலில் வந்து சென்னை மீது குண்டு போட்டவர்.
லாலாவின் விருப்பப்படி கத்தார் கட்சிக்கு உதவ ஜெர்மனி அரசை செண்பகராமன் பிள்ளை கேட்டார். ஜெர்மனிக்குச் சென்று பெர்லின் குழு அமைத்தார். இதில் திருவல்லிக்கேணியை சேர்ந்த மண்டயம் பிரதிவாதி திருமலாச்சாரியா ஓர் உறுப்பினர். இக்குழுவின் விருப்பப்படி கத்தார் போராளிகளுக்கு ஆயுதங்கள் வாங்கித் தர ஜெர்மானிய அரசு அமெரிக்காவில் உள்ள தன் தூதருக்கு ரகசியமாக உத்தரவு இட்டது.
அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை எடுத்துச் சென்று இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்துப் போராட வேண்டும். எனவே அமெரிக்காவிலிருந்து போராளிகள் இந்தியா செல்லவேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இனிய வாழ்வை விட்டு பல கப்பல்களில் ஏறி இந்தியா வந்தனர்.
ஜெர்மனிய பண உதவியோடு ஆனிலார்சன் என்ற கப்பல் வாங்கப்பட்டது. பத்தாயிரம் துப்பாக்கிகள், பத்தாயிரம் கத்திகள், நாற்பது லட்சம் தோட்டாக்கள் ஏற்றப்பட்டன. ஆனால் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தியாவிற்கு வரும் ஒரு நீண்ட பயணத்திற்கு இந்த கப்பல் ஏற்றதல்ல. எனவே ‘மாவெரிக்’ என்ற வேறு ஒரு கப்பலும் வாங்கப்பட்டது.
முதலில் ஆனி லார்சன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஜாவா அருகில் உள்ள சொகோரோ தீவுகட்கு செல்லும். அங்கு ஆயுதங்கள் மாவெரிக் கப்பலுக்கு மாற்றப்படும். இக்கப்பல் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சயாம் நாட்டில்(தாய்லாந்து) உள்ள பாங்காக்கை அடையும். சயாம் காடுகளில் ஜெர்மானிய ராணுவ அதிகாரிகளின் உதவியோடு அங்கு ரயில்பாதைக் கட்டிக் கொண்டிருந்த இந்தியர்களுக்கு ஆயுதப் பயிற்சித் தரப்படும். இவர்கள் பர்மாவிலிருந்த ஏராளமான பஞ்சாபி போலீஸ்காரர்களோடு சேர்ந்து இந்தியாவிற்குள் நுழைந்து வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் போர் நடத்துவர். அந்தமான் தீவுகளைக் கைப்பற்றி வீரசாவர்கார் போன்ற போராளிகளை விடுதலை செய்வர். இதுதான் திட்டம்.
சயாம் நாட்டில் கப்பலில் வரும் ஆயுதங்களைப் பெற்று அங்குள்ள காடுகளில் ராணுவப்பயிற்சி தரும் இடங்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு செஞ்செய்யாவிற்குத் தரப்பட்டது. எனவே அவர் அமெரிக்காவிலிருந்து 1915ஆம் ஆண்டு மே 22ல் ‘டென்யோமாரு’ என்ற கப்பலில் மணிலா வந்தார். அங்கிருந்து தாய்சான் என்ற கப்பலில் ஜூலை 17ல் பாங்காக் வந்து அடைந்தார். அவரும் மற்ற கத்தார் போராளிகளும் ‘மாவெரிக்’ கப்பலை எதிர்பார்த்து நின்றனர்.
ஆனிலார்சன் கப்பல் மெக்ஸிகோ போராளிகளுக்கு ஆயுதங்கள் எடுத்துச் செல்வதாக கூறி புறப்பட்டது . இதிலிருந்த ஐந்து இந்தியர்கள் தங்களைப் பாரசீகர்கள் என்று கூறிக்கொண்டனர், கப்பலின் கேப்டன் சுட்லர் ஒரு சுகபோகி. நேராக ஜாவா செல்லாமல் மெக்ஸிகோ சென்று தன் காமக் கிழத்தியுடன் கும்மாளம் போட்டான். இதனால் கால அட்டவணையில் தேக்கம் ஏற்பட்டது.
மாவெரிக் கப்பல் இருபத்தொன்பது நாட்கள் கடலில் ஆனிலார்சனை எதிர்பார்த்து நின்றது. ஆனால் சந்திக்க முடியவில்லை. ஹவாய் தீவு அருகே அது சென்றதாக கேள்விப்பட்டு ஹவாய்க்கு சென்றது. அங்கே மாவெரிக் கப்பலை உடனே அமெரிக்கா திரும்பி வரும்படி ஆணை கிடைத் தது. காரணம் அமெரிக்க நாளிதழ்களில் இந்த ஆயுதம் தாங்கிச் செல்லும் கப்பல் பற்றிய ரகசியங்கள் அதற்குள் வெளியாகிவிட்டன. மாவெரிக் கப்பல் விற்கப்பட்டது, ஆனிலார்சன் அமெரிக்க கடற்படையால் மடக்கப்பட்டது.
சயாம் அரசு தரிசி செஞ்சய்யாவையும் அவர் நண்பர்களையும் கைது செய்தது. இவர்கள் சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்கில அரசு ஒரு சிலரைப் பிடித்து தூக்கில் இட்டது. ஒரு சில போராளிகளுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டு அந்தமான் சிறையில் 20 ஆண்டுகள் இருந்தனர். அவ்வாறு இருந்தவர்களில் ஒருவரான அமர்சிங் என்பவர்தான் பிற்காலத்தில் இந்திய தேசிய ராணுவம் உருவாகக் காரணமாக இருந்தவர். நேதாஜிக்கு வழிகாட்டியவர்.
கத்தார் கட்சியின் கருத்துக்கள் சிங்கப்பூரையும் தாக்கின. அங்கு சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட இந்திய ராணுவம் இருந்தது. 1915 ஆம் வருடம் பிப்ரவரி 15 அன்று இந்திய ராணுவ வீரர்கள், புரட்சியில் ஈடுபட்டு இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளை கொன்றனர். இதன் விளைவாக 47 இந்திய ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை தரப்பட்டது.
(கத்தார் புரட்சியின் முடிவில் 150 போராளிகள் தூக்கிலிடப்பட்டனர், 400க்கும் மேற்பட்டவர்கள் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்தனர்)
ஆகஸ்ட், 2015.