கதைகளில் மாற்றம் வரணும் : நடிகை கௌசல்யா

கௌசல்யா
கௌசல்யா
Published on

இளைய தளபதி விஜய், கார்த்திக், பிரபு, பிரபுதேவா, பிரசாந்த என பல முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியவர். இருபது வருடங்களைக் கடந்தும் வெள்ளித் திரை, சின்னத் திரை இரண்டின் ரசிகர்கள் மத்தியிலும் கௌசல்யாவுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. இன்றைய சினிமா, சீனியர் ஹீரோயின்களுக்கான சினிமா வாய்ப்பு என பல கேள்விகளுக்கும் பளிச்சென பதிலளிக்கிறார் கௌசல்யா..

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் தொடர்ந்து ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி நடிக்க வருவதில்லை. ஏன்?

சொசைட்டி எப்படி எதிர்பார்க்குதோ அதுக்கு ஏத்த  மாதிரிதான் இப்படி நடக்குதுனு நினைக்கிறேன். மும்பையில பாத்தீங்கனா திருமணத்துக்குப் பிறகும் ஹீரோயினா நடிக்கிறவங்க இருக்கிறாங்க. ஆனா தமிழ் சினிமாவுல அந்த மாதிரியான வாய்ப்புகள் மிகக் குறைவு. காரணம் தமிழ்ச் சூழல் அப்படி இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரிதான் நாமும் இருந்தாகணும்.

ஹாலிவுட் படங்களில் 40 வயதுக்கு மேல் ஹீரோயினாக நடிக்கிறார்களே. ஏன் தமிழ் சினிமாவில் சாத்தியமில்லாமல் இருக்கிறது?

இதுக்குக் காரணம் மைண்ட் செட் அப்படி இருக்கு. 

எல்லாமே ஒரு காலகட்டத்தில் மாறும்போது இதுவும் ஒரு கட்டத்தில் மாறித்தானே ஆக வேண்டும்?

நீங்க சொல்றது சரிதான். அதுக்கு கதைகள்ல நிறைய மாற்றம் வரணும். அந்த மாதிரி பெண்களைச் சுத்தி இருக்கிற மாதிரியான வலிமையான கதைகளை இயக்க இயக்குநர்களும் முன்வரணும். இதுக்கு தனியா  மார்க்கெட்டிங், பப்ளிசிட்டி எல்லாம் செய்யணும். அப்படி கொஞ்சம் கொஞ்சமா மாறினால்தான் முடியும்.

ஹீரோயின்களை மையமாக வைத்து வரக்கூடிய படங்களோட எண்ணிக்கை மிக மிகக் குறைவா இருக்குதானே.. அதுக்கு என்ன காரணம்?

இந்தியாவில பாத்தீங்கனா ஹீரோவை மையமா வைச்சு வர்ற படங்கள்தான் ஓடும். இன்னமுமே பாத்தீங்கனா ஹீரோக்கள் அந்த படத்துல என்ன பண்றாங்க அப்டிங்றத மனசுல வைச்சுக்கிட்டுதான் ரசிகர்கள் படம் பாக்கவே வர்றாங்க. அதுதான் முக்கியமான காரணம். ரசிகர்கள் எதிர்பார்ப்பே அப்படித்தான் இருக்குதுங்ற போது அதைப் பூர்த்தி பண்றதுலதான் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முயற்சி செய்றாங்க. அதுதான் உண்மையும் கூட.

பாகுபலி பாத்தீங்களா? ரம்யா கிருஷ்ணன் ரோல் பத்தி சொல்லுங்க.

ம்ம்.. பாகுபலி ரொம்ப க்ராண்டா இருந்தது. ரம்யா கிருஷ்ணன் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்டா இருந்தும் கூட இவ்ளோ பெரிய ரோல் கொடுக்குறாங்களேனு ஆச்சர்யமா இருந்தது. ஆனா தெலுங்கு படங்களைப் பொறுத்தவரை சீனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. நானும் இப்போ ஒரு தெலுங்கு படம் பண்ணிட்டிருக்கேன். அதுல எனக்கு முக்கியமான ரோல்தான் கொடுத்திருக்காங்க. தமிழ்லயும் இந்த மாதிரி சீனியர் ஹீரோயின்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பாங்க. ஆனாலும் கூட ஹீரோ ஆதிக்கம்தான் இருக்கும்.

கதாநாயகியா நடிச்சதுக்குப் பிறகு ஒரு  கட்டத்துக்கு மேல சீரியலுக்கு வந்துடுறாங்க. நீங்களும் கூட ஒரு சீரியல் பண்ணீங்களே..

மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது. எனக்கு நல்ல கேரக்டர்னு சொன்னாங்க. அது எனக்கு பிடிச்சிருந்துச்சு. அதனால பண்ணேன். எனக்கு இதுதான் பண்ணனும்னு இல்ல. இயக்குநரும், தயாரிப்பாளரும் முக்கியத்துவம் கொடுத்து எந்த ரோல் பண்ணச் சொன்னாலும் பண்ணுவேன்.

நீங்க விஜய்க்கு ஜோடியா நடிச்சிருக்கீங்க. விஜய் ஹீரோவா நடிச்ச திருமலை படத்துல ரகுவரனுக்கு ஜோடியா நடிச்சிருக்கீங்க. இதை எப்படி பாக்குறீங்க?

அந்த படத்துல எனக்கு கதை பிடிச்சிருந்துது. என்னோட கதாபாத்திரம் நல்லா இருந்தது. அதனால அதை பண்ணினேன். படமும் நல்லா ஓடுச்சு. எனக்கு எல்லா கேரக்டரும் பண்ணப் பிடிக்கும்

சீனியர் ஹீரோயின்ஸ் அம்மாவா நடிக்கும்போது அவங்களுக்கு பையனா நடிக்கிறவங்களுக்கும் அவங்களுக்கும் அஞ்சாறு வயசு வித்தியாசம்தான் இருக்குது. அதை எப்படி எடுத்துக்கிறீங்க?

அதை ஆடியன்ஸ்தான் சொல்லணும். அவங்க எப்படி ஏத்துக்கிறாங்க அப்டிங்றதுதான் முக்கியம்.

சினிமா அப்படி ஆகிப்போச்சு.

ரஜினிக்கு ஜோடியா நடிக்கிற ஹீரோயின் அவர் மருமகன் தனுஷுக்கும் அதே நேரத்துல ஜோடியா நடிக்கிறாங்க. இதை எப்படி பாக்குறீங்க?

படம் சூப்பரா இருந்தாதான் வயசுல மூத்தவங்க தியேட்டருக்கு வருவாங்க. மத்தபடி சின்ன பசங்கதான் தியேட்டருக்கு அதிகம் வராங்க. அவங்களுக்கு பிடிக்கிற மாதிரியான ஹீரோயின் போடணும். அதனால வயசான ஹீரோயின்ஸ் போட முடியறதில்லைன்னு நினைக்கிறேன்.

தமிழ்ல ஜோதிகா நடிச்சு வந்த 36 வயதினிலே கூட மலையாளத்தில மஞ்சுவாரியார் நடிச்ச படத்தோட ரீமேக்தான். இன்னும் கூட தமிழ்ல திருமணமான ஹீரோயின்களை வைச்சு படம் எடுக்கத் தயக்கம் இருக்கே..

இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாதான் மாறும். அடுத்து ஆண்களைப் பொறுத்தவரை அவங்களுக்கு பேறுகாலப் பிரச்னைகள் கிடையாது. அதனால அவங்களுக்கு உடம்பு அப்படியே இருக்குது. பெண்களுக்கு வயசு சீக்கிரம் தெரிஞ்சுடும். அதுவும் கூட ஒரு காரணம்.

இப்போ என்ன படம் பண்ணிட்டு இருக்கீங்க?

ஒரு தமிழ் படம் பண்ணிட்டு இருக்கேன். ஒரு பத்து வயசுப் பையனுக்கு அம்மாவா நடிக்கிறேன்.

ஜூன், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com