வாளோர் ஆடும் அமலை என்ற என் நூல் வெளியான சமயம், அதன் பிரதியை அப்போது முதல்வர் ஆக இருந்த கலைஞர் அவர்களிடம் அளிக்கச் சென்றிருந்தேன். என்னை திட்டக்குழுத் தலைவராக இருந்த நாகநாதன் அழைத்துச் சென்றிருந்தார். அது 2011 ஆம் ஆண்டு. சட்டமன்றத் தேர்தல் முடிந்து முடிவுகளுக்காகக் காத்திருந்த நேரம் அது. திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை குறைவாக இருந்த நேரம். எனக்கு அழைப்பு வந்து உள்ளே போனபோது பல முக்கிய திமுக தலைவர்கள் உள்ளே இருந்தனர். அவர்கள் முகங்களைக் கவனித்தேன். அங்கே மிகுந்த உற்சாகமாக பளிச்சென்று இருந்த ஒரே முகம் கலைஞருடையது மட்டுமே.
புத்தகத்தை வாங்கி ஒவ்வொரு பக்கமாக அதில் இருந்த ஓவியங்களைப் பார்த்தார். அது தமிழ் மன்னர்களை அதுவரையில் மராட்டிய சினிமா உருவாக்கிவைத்திருந்த ‘பைஜமா' போர் வீரர் தோற்றத்தில் இருந்து மாற்றிக் காண்பித்து வரையப்பட்ட ஓவியத்தொகுப்பு.
‘மக்கள் மனதில் இருக்கும் சித்திரத்தை மாத்தணுமா?' என்றார்.
‘மக்களுக்கு இதுவரை தப்பாகவே சொல்லப்பட்டிருக்கு. இதைக் காண்பிச்ச சினிமாக்காரங்களையும் தப்பா சொல்ல முடியாது. அந்த காலகட்டத்தில் அவங்களுக்குக் கிடைச்ச தரவுகளை வெச்சி அவங்க காண்பித்தாங்க. இப்பதான் நமக்கு கடந்த இருநூறு முந்நூறு ஆண்டுகால ஆவணங்களை ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை வெச்சி இதை வரைந்திருக்கேன்' என்றேன்.
அவர் புன்னகை புரிந்தார்.
‘ஓய்வாக இருக்கும்போது வாங்களேன், பேசுவோம்' என்றார். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள அந்த வயதிலும் அவர் தயாராக இருந்தார்; அதுபற்றிப் பேச அவர் முன் வந்தார் என்பதே ஆச்சர்யத்தை உருவாக்கியது.
கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபோது மாநாட்டு ஊர்வல அணிவகுப்பில் கலந்துகொண்ட அலங்கார வண்டிகளை வடிவமைக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. அதை பிற ஓவியர்களுக்குபிரித்துக் கொடுத்து பொறுப்பளித்தேன். அவற்றில் தென்னாட்டு புரட்சி வீரர்கள் என்றொரு வண்டியை நானே தயார் செய்தேன். அரசு அதிகாரிகள் சொல்லாமலேயே செய்யப்பட்ட வண்டி அது. அதில் கான்சாகிபு, பூலித்தேவன், மருது சகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை, தீரன்சின்னமலை போன்றவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் இடம்பெற்ற அனைத்து வாகனங்களிலும் இந்த குறிப்பிட்ட வாகனமும் அதன் ஓவியங்களும் அவரை மிகவும் கவர்ந்துவிட்டதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர். அவரை நேரில் கண்டபோது,'எனக்கு பிரஞ்சு புரட்சி ஓவியங்கள் ஞாபகத்துக்கு வந்துவிட்டன' என பாராட்டாகச் சொன்னார். அந்த சொற்களில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்க பத்திரிகையாளராக செயல்பட்டுக்கொண்டிருந்த அவரது இன்னொரு முகத்தின் அனுபவம் பிரதிபலித்ததாக நான் உணர்ந்தேன்.
புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது சட்டமன்றத்துக்குள் வைக்கப்படும் படங்களை டிஜிட்டல் முறையில் மறு சீரமைப்பு செய்து புதுப்பிக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. தலைவர்கள் படங்களை எல்லாம் சீர் செய்து உயர்வான முறையில் ப்ரிண்ட் செய்து தயார் செய்திருந்தோம். சட்டமன்றம் தொடங்கும் முன்பாக இவற்றைப் பொருத்திவிட்டோம். இரவெல்லாம் வேலை நடந்துகொண்டிருந்தது. அன்று அதிகாலை மூன்று மணி அளவில் அவர் இந்த பணிகளைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த படங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றைப் பற்றி விசாரித்தார். சக்கரநாற்காலியில் இருந்த அவருடன் சென்று விளக்கம் அளித்தேன். சபாநாயகர் தலைக்கு மேல் மாட்டப்படும் காந்தியின் படத்தில் இருந்த கறைகளை நீக்கியது பற்றிக் குறிப்பிட்டபோது ‘காந்தியின் கையிலேயே கறைபடிந்துவிட்டதா? என்றார் நகைச்சுவையாக. அங்கே கலைஞருடைய படத்தையும் மாட்டி இருந்தோம். அதைக் கண்டவர் நான் சற்றுகுள்ளமாகத் தெரிகிறேனே என்றார். அந்தப் படத்தைப் பொருத்தவரை அது சாதாரணமாகக்கண்டு பிடித்துவிடமுடியாத விஷயம். அதையும் நுணுக்கமாகப் பார்த்தது ஆச்சர்யப்படுத்தியது. பிறகு மெல்ல நிமிர்ந்து பார்த்தவர், இவ்வளவு படங்களைப் பொருத்தி இருக்கிறீர்களே... 'இவற்றில் யாருடைய படம் உங்களுக்குப் பிடித்தது?' என்றார்.
நான் என்ன சொல்வது? இதை சாதுர்யமாகக் கையாள்வதாக நினைத்துக்கொண்டு காமராஜர், அண்ணா போன்றோர் படங்களின் பின்னணி நிறம் போன்ற டெக்னிக்கலான விஷயங்களை விளக்க முற்பட்டேன்.
‘பெரியார்தான் சிங்கம் மாதிரி இருக்கார்... தைரியமாகச் சொல்லுங்கள்! நீங்கள் எல்லாம் சொல்லவில்லை என்றால் யார் சொல்வது?' என்றவாறு என்னை நிமிர்ந்து பார்த்தார் அதில்தான் ஆயிரம் அர்த்தங்கள்..
அதே சட்டமன்ற கட்டடப் பணிகளின்போது முகப்பில் செய்யப்பட்டிருந்த புடைப்புச் சிற்பம் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவர் தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் சிற்பம் ஒன்று அமையவேண்டும் என விரும்பி, ஒரு நாள் இரவிலே அதன் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்த நூல் ஒன்றின் அட்டையைப் பிரித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் அளித்து, காலையில் மருது வருவார் அவரிடம் காட்டுங்கள் எனச் சொல்லிவிட்டார்.
என்னை காலை பத்துமணிக்கு கட்டட வேலை நடக்கும் இடத்துக்கு வரச் சொல்லி முதல்வரின் செயலர்கள் அழைத்திருந்தனர்.
நான் சென்றபோது தொலைவில் கலைஞர் வந்துகொண்டிருந்தார். நான் காத்திருந்தேன்.
உங்களிடம் ஒரு படத்தைக் காட்டச் சொல்லி இருந்தார். இந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதை எங்கே வைத்தனர் என்று தெரியவில்லையே என அதிகாரிகள் சங்கடப்பட்டனர்.
கலைஞர் பின்னால் விசிக தலைவர் திருமாவளவனும் வந்தார். என்னைக் கண்டு திருமா கையசைக்க, கலைஞர் பார்வையில் நானும் பட்டேன்.
தொலைவில் இருந்தே அவர் ‘அதைப் பாத்தாச்சா?' என்று கேட்கிறார். நான் என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைக்கும் நேரம் என் முகத்துக்குப் முன்னால் அந்த பெரியகோவில் படத்தை யாரோ காட்டுகின்றனர். அதைப் பார்த்ததும் எனக்கு அதன் கோணம் பிடிக்கவில்லை என்பதால் முகம் தன்னிச்சையாக மாற, அதை அவர் கவனித்துவிடுகிறார்.
‘என்ன உங்களுக்குப் பிடிக்கலையா?'
அதற்குள் பிடிக்கவில்லை எனச் சொல்லாதே என உடனிருந்தவர்கள் கண்ஜாடை கை ஜாடை காட்டுகின்றனர்.
‘நாம் ஒரு தேர்ந்த புகைப்படக்காரரை அனுப்பி பல கோணங்களில் அந்த கோபுரத்தை படம் எடுத்து வரச் செய்து அதில் சிறந்ததை தேர்வு செய்யலாமே' என்று சொன்னேன். உடனே ஏற்றுக்கொண்டவர், அந்த இடத்திலேயே அதற்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவு போட்டார். பல காரணங்களால் அந்த புடைப்புச் சிற்பம் செய்யப்படவில்லை, என்றாலும் ஒரு கலைப்படைப்பின் நிறைவின் மீது அவர் காட்டிய அக்கறை முக்கியமானது.