கணக்கு கேட்டார் கட்சி தொடங்கினார் - அதிமுக உதயம்

கணக்கு கேட்டார் கட்சி தொடங்கினார் - அதிமுக உதயம்
Published on

“பொதுக்குழுவில் பேச வேண்டியதை பொதுக்கூட்டத்தில் பேசி குழப்பம் விளைவித்ததால் தூக்கி எறிந்து விட்டோம்” கடற்கரைக் கூட்டத்தில் கருணாநிதி பேச்சு.  “தற்காலிக நீக்கம் செய்திருப்பதாக செயற்குழுவில் அறிவித்து விட்டு, தன்னிச்சையாக ‘தூக்கி எறிந்து’ விட்டதாகப் பொதுக் கூட்டத்தில் கலைஞர்  மட்டும் பேசலாமா..” இது எம்.ஜி.ஆரின் கேள்வி.... திருச்சி சென்னையில் மாணவர்கள் போராட்டம், விருத்தாச்சலத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி, 32 பேர் காயம் என்றெல்லாம் தினசரிப் பத்திரிகைகளுக்கு ‘குவியல் குவியலாக’ நல்ல தீனி கிடைத்து வந்தது. ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரான எம்.ஜி.ஆர் முதன் முதலாகக் கணக்குக் கேட்டார். பொருளாளரே அவர்தானே, அவரிடம் தானே கணக்கு இருக்கும் என்று எதிர்க் கேள்விகள். அன்றிலிருந்து காலையிலும் மாலையிலும் பத்திரிகைகள் சுடச் சுட விற்பனையாகின. தென் மாவட்டங்களில் பிரபலமாக மலரும் பத்திரிகையின் விற்பனை எகிறிக் கொண்டு போயிற்று. ஆச்சரியகரமான வகையில் இம் மணியான செய்திகளை ஒரு பத்திரிகை முதல் பக்கத்தில் போட்டது. அதிகம் விற்கும் பத்திரிகை ‘நடுநிலை’ வகித்தது’. 15.10.1972 அன்று தி.மு.க பொதுக்குழு எம்.ஜி.ஆரை நீக்கியதை அங்கீகரித்தது.  மொத்தப் பொதுக்குழுவையும்  சில மாவட்டச் செயலாளர்களே தங்கள் கைக்குள் வைத்திருந்ததாகச் செய்திகள் கிண்டலும் உண்மையுமாகச் சுற்றி வந்தன.

பொதுவாக 1967 வரை தி.மு.க உட்கிளைகளாக இயங்கிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் மன்றங்கள், தேர்தலுக்குப் பின் கட்சியினரால் அநேகமாகக் கைவிடப்பட்டு விட்டன. ஆனால் எங்க வீட்டுப் பிள்ளையின் இமாலய வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள், பல தரப்பிலும் அதிகரிக்க ஆரம்பித்தனர். 

67’ல் அவர் குண்டடி  பட்டதும் அவரின் தனிப்பட்ட புகழ், எல்லோரிடமும், குறிப்பாகப் பெண்களிடம் பெரிதும் அதிகரித்தது. இது பல தி.மு.க தலைவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக இருந்தது. 1967-ல் இரண்டு சுயேச்சைகள் உள்ளிட்டு 139 இடங்களை தி.மு.க பிடித்து ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் அவரது ரசிகர்களின் பணிகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. திமுக கூட்டணி 179 இடங்களை வென்றது. ஆனால் 1971-ல் சூழலே வேறு. ஸ்தாபன காங்கிரஸ் காமராஜர், ராஜாஜி, கூட்டணிக்கு ‘சோ’ போன்றவர்கள், மேல்தட்டு மக்களிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தனர். இந்திரா காங்கிரஸுக்கு தலைமை ஏற்கக் கூட ஆளில்லை. மூப்பனார்தான் அந்தக் கட்சியை முழு மூச்சாகக் காப்பாற்றி வந்தார். கலைஞர் இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்திருந்தார்.   எம்.ஜி.ஆர் முழு மூச்சாகப் பிரச்சாரம் செய்த அந்த 1971 தேர்தலில், தி.மு.க, 184 இடங்களைப் பிடித்தது. மத்தியிலும் 23 இடங்களைப் பிடித்தது. இந்த ராட்சதப் பெரும்பான்மைதான் தமிழ்நாட்டின் பல அரசியல் தடம் புரளுதல்களுக்குக் காரணம். அதுவரை 10 (அண்ணா அமைச்சரவையில்-10) அல்லது 12 அமைச்சர் களே இருந்த அமைச்சரவையில் 14 அமைச்சர் கள் சேர்க்கப்பட்டனர். பலரையும் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயம் தலைமைக்கு இருந்தது. அதுவரை காலியாகவே விடப்பட்டிருந்த திமுக தலைமைப் பொறுப்பைக் கலைஞர் ஏற்றுக் கொண்டு நெடுஞ்செழியனைப் பொதுச் செயலாளராக்கினார். 183 இடங்களை வென்றதற்கு எம்.ஜி.ஆர் செய்த பிரசா ரம் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் எம்.ஜி.ஆர் ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பிற்காக காட்மாண்டு சென்று விட்டார். அங்கே நிறைய அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்ததாகச் சொல்வார்கள். அங்கிருந்து, இந்த வெற்றிக்காக எம்.ஜி.ஆர் ஒரு அமைச்சர் பதவி கேட்டதாகவும் சொல்வார்கள். பத்தோடு பதினைந்தாக அதைக் கொடுத்திருந்தால் தமிழ்நாட்டு அரசியலே வேறு மாதிரி இருந்திருக்கும். அதை மற்ற மூத்த தலைவர்கள் விரும்பவில்லை என்றும் சொல்லப் பட்டது. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பின்னாளில் எம்.ஜி.ஆர் பின்னால் அணி  சேர்ந்தது அவருக்குக் கீழே பணியாற்றியதுதான்  பெரிய நகை முரண். இதனாலும் அதைத் தொடர்ந்து வந்த உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.கவின் பலத்த வெற்றியும் தமிழகமெங்கும் பல அதிகார மையங்களை உருவாக்கின. அண்ணா குறிப்பாக சிலருக்கு அமைச்சர் பதவி தாராமல் இருந்தார். அவர்களுக்கு இப்போது வழங்கப்பட்டது. அதனால் அவர்களின் ஆளுகை அந்தந்த மாவட்டங்களில் தலைமையை மீறி அதிகரித்தது.

எது எப்படியோ, மக்களுக்கும் ஆளுங்கட்சி மேல் வருகிற வெறுப்பு தி.மு.க மேல் வந்தது. எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் வந்தது. அரசியல் சார்பில்லாமல் நிறைய ‘ரசிகர் மன்றங்கள்’ உருவாகின. ஒவ்வொரு பட வெளியீட்டிற்கும் அந்தந்தப் பெயரை வைத்து மன்றங்கள் உருவாகின.

என் அண்ணன், எங்கள் தங்கம், ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள், என்று அங்கங்கே உருவாகின. எம்.ஜி.ஆர் ஆனந்த விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதற்கு விகடனில் சினிமாப் போஸ்டர் போல விளம்பரங்கள் அச்சாக்கியது. அப்போது முசிறிப்புத்தன் தலைமையில் அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டு எல்லா ரசிகர் மன்றங்களும் அதில் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சார்பில் அறிக்கைகள் வந்தன. எம்.ஜி.ஆர் செய்திகளுக்காக ‘சமநீதி’ - ஆசிரியர் முரசொலி சொர்ணம்- ஜி.கே.துரைராஜின் ‘திரைஉலகம்’ போன்ற பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களில் பதிவு பெற்ற அனைத்து உறுப்பு மன்றங்களுக்கும் விகடன் போஸ்டர்களை அனுப்பச் செய்தார் விகடன் மணியன். அவை ஆர்வமாக ஒட்டப்பட்டன.

1972 அக்டோபர் 10 நல்ல மழை. அரசு வட்டத்தில் செல்வாக்குடைய எனது மூத்த இலக்கிய நண்பர் ஒருவருடன் அவர் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ‘மோகமுள்’ நாவல் தருவதாகச் சொல்லி இருந்தார். அவரது சக ஊழியர்கள், ‘மாலைமுரசு’  சிறப்புப் பிரதியாக ஒரே ஒரு பக்கத் தில் வெளியிட்ட நாளிதழை அவசர அவசரமாகக் கொண்டு வந்தார்கள். ‘எம்.ஜி.ஆர் தி மு.க விலிருந்து விலக்கப்பட்டார். 12 மாவட்டச் செயலாளர்கள் கையெழுத்திட்ட அறிக்கையின் மீது நடவடிக்கை’, என்று வந்திருந்தது. அவர் என்னிடம் உடனே அதிர்ச்சியுடன் கேட்டார், “இதனால் என்ன விளைவுகள் நடக்கும்... போராட்டம் நடக்குமா...” என்று. எனக்கு அப்படித் தோன்றவில்லை. “அதெல்லாம் ஒன்றுமிருக்காது, கொஞ்ச நாட்களுக்கு லேசான சலசலப்பு இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாகி விடும்,” என்றேன். அவருக்கு திருப்தியில்லை. “அப்படியா சொல்றீங்க...” என்றார். அவர், அவரது மதுரை நண்பர்களுக்கு டிரங்க் கால் போட்டார். ‘கால்’ எதுவும் கிடைக்க வில்லை.  மழை விட்டதும் கிளம்பினேன். “பெரிய பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டால் எனக்குச் சொல்லுங்க...”என்றார். நான் சரியென்று கிளம்பினேன். ஜங்ஷனில் பதற்றமாக இருந்தது. மேம்பாலம் கட்டிக் கொண்டிருந்ததால் மீனாட்சிபுரம் வழியாகவே போக வேண்டும். அங்கே பெரிய ரசிகர் கூட்டமொன்று உண்டு. ‘க்ளிமாக்ஸ்’ என்று ஒரு டெயிலர், கேரளாவைச் சேர்ந்தவர், அவர் கடையில்தான் எல்லோரும் நிற்பார்கள். கடை அடைத்துக் கிடந்தது. கொஞ்சம் தள்ளி  நிறையப்பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் மறுநாள் நடக்கும் எம்.ஜி.ஆர் மன்றக் கூட்டத்திற்கு  இரவில் சென்னை செல்ல இருப்பதாக என்னைக் கையைக் காட்டி அழைத்துச் சொன்னார்கள். “என்ன இப்படி செஞ்சுட்டாங்க...” என்றும் என்னிடம் கேட்டார்கள். தச்சநல்லூரில் கலாட்டா என்றார்கள். டவுனில் ஒன்றுமில்லையாம், என்றார்கள்.

யாரோ, ‘டவுனில் இவன் போய்த்தான் ஆரம்பிக்கணும்’ என்றார்கள், அப்போதும் சற்றுக் கேலியாக. இன்னொருவர், ‘அவன் மன்றம், அரசியலை எல்லாம் விட்டு விலகி ஒழுங்காப் படிக்கான் அது புடிக்கலையா’ என்றார். உண்மையும் அதுதான். நான் ரசிகர் மன்ற விவகாரங்களிலிருந்து ஒதுங்கி விட்டேன். இலக்கியப் பத்திரிகைகளில் கவிதைகள் வரத் தொடங்கி விட்டன. உள்ளூர் அரசியல் மிக மோசமாக இருந்ததால், தி.மு.கவின் செயல்பாடுகளிலும் பிடித்தமில்லை. மறு நாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். சைக்கிளில் லைட் அவ்வளவு சரி கிடையாது. நான் வேகமாக வந்துவிட்டேன். டவுனிலும் கொஞ்சம் பேர் சில இடங்களில் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்கே பார்த்தாலும் மஃப்டி போலீஸ் என்று சொன்னார்கள்.

சேர்மன், வீட்டு முன்னால் கொஞ்சம் போலீஸும் கூட்டமும் ஆக இருந்தது. நான் சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பினேன். வழக்கமாக மௌனம் காக்கும் அப்பா சத்தம் போட்டார், ‘எங்கடா போறே, என்னமாவது பண்ணி கெடுத்துக்கிடாதே...’என்று. நான் கோயிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். பஜாரில் ஒரு கள்ள மௌனம் இருந்தது. உண்மையிலேயே கோயிலுக்குப் போய் விட்டுத் திரும்பினேன்.

மறுநாள் பத்திரிகைகள் பூராவிலும்  எம்.ஜி.ஆர் செய்‘தீ’தான். மாவட்டச் செயலாளர்கள் தவிர்த்து எட்டு அமைச்சர்கள் இன்னும் ஆறு பேர் போட்டிருந்தது. இதில் பல அமைச்சர்கள் பின்னால் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து விட்டார்கள். காமராசர் போன்ற தலைவர்கள் இதை ஒரு ஸ்டண்ட் என்றும் இந்திரா காங்கிரஸுக்குப் போக எம்.ஜி.ஆர் செய்யும் தந்திரம் என்றும் சொல்லியிருந்தார்கள். கலைஞரும் பின்னால் இப்படிப் பேசினார்.  அன்றோ மறு நாளோ மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.கல்யாண சுந்தரம், தோழர் பாலன் ஆகியோர் டெல்லியிலிருந்து சென்னைக்கு விரைந்தனர் என்று செய்தி வந்த நினைவு. சென்னை, கோவை, வேலூர் ஆரணி, உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் கலவரம், தீவைப்பு, போலீஸ் தடை உத்தரவு,கருணாநிதி கண்டிப்பு என்று வந்திருந்தது. சென்னையில் நடைபெற இருந்த எம்.ஜி.ஆர் மன்றக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, போலீஸ் தடை உத்தரவு என்று போட்டிருந்தது. அன்று கல்லூரிக்குப் போகவில்லை. பஸ் சரியாக ஓடவில்லை. அப்பொழுது தனியார் டவுன் பஸ்களே அதிகம். மதுரையைப் போலவே, ஜங்ஷன் க்ளிமாக்ஸ் கடையில் தாமரைக் கொடி ஏற்றி இருப்பதாகச் சொன்னார்கள்.

சைக்கிளில் அங்கே போனோம்.

சின்னக் கம்பம் ஒன்றில் கருப்புத் துணியில் சிகப்பு நாடாவை தாமரை போல் தைத்து ஒரு கொடி ஏற்றி இருந்தது. நான்கைந்து போலீஸ், சைக்கிளில் வரவும் மக்கள் கூட்டத்தோடு நாங்கள் தள்ளி நின்று கொண்டோம். கடையை அடைத்து விட்டு போலீஸ் சிலரை அழைத்துப் போனார்கள். எங்களை நோக்கி எச்சரித்து, போகச்சொன்னார்கள். மரியாதையாக நகர்ந்தோம். கொடியை ஒன்றும் செய்யவில்லை.

மாலையில் அந்த நண்பரைப் பார்த்து இதைச் சொல்ல லாம் என்று போனேன் அவர் இல்லை..சென்னை சென்று விட்டதாகச் சொன்னார்கள். அவர் நான்கைந்து நாட்கள் கழித்தே வந்தார். அதற்குள் பொதுக்குழு 15ம்தேதி ஒப்புதல் வழங்கி விட்டது. அதை எம்.ஜி.ஆர், கலைஞர் இருவருமே எதிர் பார்க்கவில்லையாம் என்று அந்த நண்பர் சொன்னார். எப்படியாவது கடைசி வினாடியில் சமரசமாகி விடலாம் என்றே இருவரும் நம்பினார்களாம்.

நாஞ்சில் மனோகரன், சத்தியவாணி முத்து ஆகியோர் இரண்டு தலைவர்களிடமும் சமாதானத் தூது போனதாக நாளிதழில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. மனோகரன் அதை இல்லையென்று மறுத்திருந்தார்.. நண்பர் சொன்னார்,

“கலைஞருக்கு நாட்டில் நடக்கும் கலவரங்கள் பற்றிய செய்திகள் முழுமையாகச் சேர வில்லையாம், ஒரு தென் மாவட்ட எம்.எல்.ஏவும் தஞ்சைப் பகுதி எம்.எல்.ஏ ஒருவரும்தான் பொதுக் குழுவுக்கு கிளம்பிக் கொண்டிருந்த கலைஞரிடம் முதன் முதலாகச் சொன்னார்களாம். எந்தக் கை திமு.க கொடியை கட்டியதோ அதே கைதான் வெட்டுகிறது, யார் வாழ்க என்றார்களோ அவர்களே ஒழிக என்கிறார்கள், எங்களால் உங்களை நெருங்க முடியவில்லை என்று. கலைஞர் முகத்தில் பலத்த அதிர்ச்சி ரேகைகள் தோன்றியதாம். அப்போது அங்கே வந்த சமாதானத் தூதுவர் கலைஞரைத் தனியே அழைத்துப் போய் நான் அவரை அழைத்து வருகிறேன், நீங்கள் இருவரும் தனியே அமர்ந்து பேசுங்கள்.. விஷயம் தீர்ந்து விடும்..என்றாராம். ஆனால் அறிக்கையில் கையெழுத்திட்ட அனைவரும் அது கூடாது என்று தடுத்து விட்டார்களாம். (அதில் முக்கியமானவர் பின்னாளில் எம்.ஜி.ஆருடன் இணைந்து, அவருக்காக ஒரு நகரை மீட்டுக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.) நண்பருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்த போது ஒரு பத்திரிகையின் போஸ்டர் நகரமெங்கும் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்தது. “புதிய கட்சி, ‘அண்ணா தி.மு.க’, எம்.ஜி.ஆர் தொடங்கினார்.

கட்சிக் கொடியையும் அறிவித்தார்,” என்று. ஆனால் எம்.ஜி.ஆர் கட்சியை ஆரம்பிக்கத் தயக்கம் காட்டியதாகவும், கே.ஏ.கே, முசிறிப்புத்தன், போன்ற சிலரின் வற்புறுத்தலும் பாலதண்டாயுதம்,கல்யாணசுந்தரம் போன்றோரின் தைரியமூட்டலுமே அந்த முடிவுக்குக் காரணமென்றும் எம்.ஜி.ஆர் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தும் போது அருகில் இருந்த ஒரு ரசிக நண்பர் சொன்னார். அவர் முசிறிப் புத்தனையும் திருச்சி சௌந்தரராஜனையும் நன்றாக அறிந்தவர்.

இந்தச் செய்திகளெல்லம் உண்மையா பொய்யா என்பதை விட அப்படி ஏதாவது நடந்து இருந்திருக்கலாமே என்பதே இரண்டு பேரையும் விரும்புகிற எங்களைப் போன்ற அடி மட்டத் தொண்டர்களின் அங்கலாய்ப்பாக இருந்தது. இது நடக்காமலே இருந்திருக்கலாமே,  கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததால் கொடியசைந்ததா என்று கண்ணதாசன் பாடியது போல, இதற்கு யார் காரணம், எது காரணம், யாரைக் குற்றம் சொல்வது.

 ஆனால் நல்லகாலம், ஒன்று நிகழவில்லை, கண்ணதாசன், சம்பத் போல காங்கிரஸில் சேர்ந்து காணாமல் போகவில்லை. தனது ரசிகர்களை  ஒரு பெரிய அரசியல் சக்தியாகத் திரட்டினார் எம்.ஜி.ஆர். அவரை உச்சத்தில் வைத்தார்கள் அவரது ரசிகர்கள்.

செப்டெம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com