பலர் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று அவரைச் சொல்லுவார்கள். இன்னும் பேராசிரிய பெருமக்கள் சிலர் ‘வட்டார வழக்கு படைப்பாளி' என்று சொல்லுவார்கள். அவரை ஒரு கட்டுக்குள், ஒரு சிமிழுக்குள் ஏன் அடைக்கவேண்டும்? நீண்ட காலமாக என் மனதுக்குள் இது பற்றிய எண்ணம் உண்டு.
அதுபோல இந்த வட்டார வழக்கு எழுத்தாளர் என்று சொல்வதும். வட்டார வழக்கு இல்லாமல் மண்ணின் மைந்தனுடைய மொழியை பேசாமல் எழுதவேண்டுமென்றால் மறைமலையடிகள் மாதிரி எழுதணும் அல்லது நா.பார்த்தசாரதி அல்லது அகிலன் அல்லது மு.வரதராசன் மாதிரித் தான் எழுத வேண்டும்.
மக்கள் மொழி என்பது ஒரு மொழிக்கிடங்கு; பண்டாரம். பண்டாரம் என்றால் பண்டாரம், பரதேசி என்ற பொருளில் பயன்படுத்தவில்லை. பொக்கிஷம் என்ற பொருளில் நான் பயன்படுத்துகிறேன்.
ஒரு இடத்தில் கி.ரா. நிறப்பிழை என்ற சொல்லை கையாளுகிறார். பாரதி காட்சிப்பிழை என்ற சொல்லை கையாளுவான். நிறப்பிழை என்றால் என்ன? காட்சிப்பிழை என்றால் என்ன? இல்யூஷன் என்று சொல்லலாம். நிறத்தினுடைய மாறுபாடு தெரிவது நிறப்பிழை.
வில்லிப்புத்தூரார் வான்பிழை என்கிறார். இமாலயத் தவறு என்கிறார்.
இந்தச் சொற்களை கையாளக் கூடிய ஒரு இலக்கியவாதியை நாம் வட்டாரவழக்கு எழுத்தாளர் என்று வகைப்படுத்துகிறோம்.
மானங்கெட்ட என்பது நாம் வட்டாரவழக்கு இது நாம் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிற ஒரு சொல். மானங்கெட்ட பையன் மானங்கெட்டுபோய் நான் எதற்கு இத செய்யணும்... என்பார்கள். கி.ரா. இங்கே ஞானங்கெட்ட என்ற சொல்லை தருகிறார். எனக்கு அது மிகச்சரியாகத் தெரிகிறது ஞானங்கெட்ட அறிவில்லாத என்ற பொருள்.
அதுபோல பல சொற்கள். இப்போ நாங்க சொலவம் என்று சொல்லுவோம். பொதுத்தமிழில் பழமொழி என்று சொல்லுவார்கள். கி.ரா. சொலவடை என்று சொல்லுவார். இந்த சொலவம் என்பதே சொல்லிலே இருந்து பிறந்தது தான். சொலவு என்கிற சொல்லை நீங்கள் அகராதியில் தேடிப்பார்த்தீர்கள் என்றால் சொலவு என்ற சொல்லுக்கு சொல் என்று பொருள் எழுதுறாங்க.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முதுமொழிக்காஞ்சி சொலவு என்ற சொல்லை பயன்படுத்துகிறது. சொலவு ஆகவே சொலவம்... சொலவடை.
காளமேகம் சொல்லுவான் வாரிய தென்னை வறுகுரும்பை வாய்த்தனபோல்... என. முலைகளை பேசும்போது காளமேகம் பயன்படுத்துகிற சொல் குரும்பை.
குரும்பை என்கிற சொல் நுங்கு அல்லது இளநீருக்கான சொல். எனக்கு இளநீர் என்கிற சொல் தெரியும். நான் எதற்கு உன் சௌகரியத்திற்கு இளநீர் என்று பயன்படுத்தவேண்டும். குரும்பை என்னுடைய சொல்.
இரும்பனையினும் குரும்பை நீரும்... புறநானூறு பேசுகிறது. அப்படின்னா என்ன அர்த்தம்? குரும்பை கி.ரா பயன்படுத்துகிறார். இவற்றை எழுத்தாளன் எழுதுகிற போது, அந்த சொல்லின் பொருள் எனக்கு தெரியாத போது, அதனை ஒரு வட்டார வழக்கு மொழி என்று சொல்லுவது, கி.ரா.வை சிறுமைப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன்.
கி.ரா.வோடு கெட்டவார்த்தை குறித்து பேசிக் கொண்டிருந்தோம், குழந்தைகளுடைய ஆண்குறியை சக்கரை என்று சொல்லுவோம், இதில் என்ன கெட்டவார்த்தை இருக்கிறது? எல்லா நவீன தமிழ் எழுத்தாளர்களும் ஆண், பெண் உறவை சொல்லுகிறபோது ஒரே ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அவன் அவள் மீது இயங்கினான். எனக்கு புரியாதா? அது என்னத்துக்கு இந்த இயக்கம்? நேரடியாக சொல்ல முடியாதா உனக்கு?
உடலுறவு என்ற சொல் ஆண், பெண் உறவை குறிப்பதான சொல். 1922க்கு முன்னாடி எந்த அகராதியிலும் இல்லை. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழகராதியில் தேடிப்பாருங்கள், முத்துசாமி பிள்ளையுடைய அகர முதலியில் தேடுங்கள், சண்முக செட்டியாரின் அகர முதலியை தேடுங்கள்; யாழ்ப்பாணத்து கதிரேசன் அவருடைய அகராதியில் தேடுங்கள். நிகண்டுகளில் தேடுங்கள், இந்த உடலுறவு என்ற சொல்லை நமக்கு படைத்து அளித்த பேராசிரியன் யார்?
உடலுறவு என்பது உண்மையிலேயே ஆண், பெண் உறவுக்கான தகுதியான சொல்லா? இதை கி.ரா. கேள்வி கேட்கிறார்? எதுய்யா கெட்டவார்த்தை?.தூமை என்கிற சொல் இருக்கு. நான் சின்னவயதில் கேட்ட சொல். அது எப்படி கெட்டவார்த்தை ஆச்சு?
மாதவிடாய் குருதி என்றால் நல்ல சொல்லாம். ஆனால் தூமை என்றால் கெட்ட சொல்லாம். ஆனால் தமிழ் சினிமாவில் வடிவேலு தூமையைக் குடிக்கி என்று வசனம் பேசும்போது சென்சார் அனுமதிக்குது, நம்ம உட்கார்ந்து கையை தட்டறோம்.
இந்த செயற்கையான, போலியான, அறிஞரென்று பெயர் சூட்டியவர்களுடைய கட்டுப்பாட்டுகளுக்கு இணங்கி ஒரு படைப்பிலக்கியவாதி எழுதமுடியாது. கி.ரா. ஒரு போதும் அப்படி எழுதியதில்லை; எழுதவும் மாட்டார்.
கொங்கு நாட்டில் அடிக்கடி ஒரு சொல்லை நான் கேள்விப்படுகிறேன். என்னுடைய நண்பரெல்லாம் பயன்படுத்துவார்கள் அவர் என்ன பெரிய புடுங்காளி. இது கெட்ட வார்த்தையா? எங்க ஊரில் சேக்காளின்னு சொல்லுவோம். சேக்காளி என்றால் தோஸ்த் நண்பேன்டா என்று சொல்லுறாங்கல்ல அதான் சேக்காளி.
கி.ரா. போக்காளி என்று ஒரு சொல்லை பயன்படுத்துகிறார். அவன் போக்குப்பா.. அவன் மீண்டு வரமாட்டான் என்ற அர்த்தத்துல போக்காளி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
நான் நாஞ்சில்நாட்டை சார்ந்தவன். எங்களுக்கு பஞ்சமென்றால், நெல் இல்லையென்றால், நாங்கள் மரச்சீனிக்கிழங்கை சாப்பிடுவோம்.
மார்த்தாண்டவர்மா காலத்துல மக்களுடைய பஞ்சம் போக்குவதற்காக அவர் ஈழத்திலிருந்து கொண்டுவந்து பயிர்செய்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாடி எங்களுக்கு அந்த கிழங்குகளை அறிமுகப்படுத்தினார்.
நீங்க மரவள்ளிக்கிழங்கு என்று சொல்லுவீங்க, ஏழிலைகிழங்கு என்று சொல்லுவாங்க, குச்சிக் கிழங்கு என்று சொல்லுவாங்க. கப்பக்கிழங்கு என்று சொல்லுவாங்க, எங்களுக்கு மரச்சீனிக்கிழங்கு.
கிரா சொல்லுகிறார், ‘‘பெரும்பஞ்ச காலத்தில் சில பிரதேசங்களில் மண்ணுக்குள்ள ஒரு கிழங்கிருக்கும், தேங்காய் அளவில் இருக்கும் அந்த கிழங்கு, பிடுங்கி பார்த்தீர்கள் என்றால் பூண்டு நிறத்திலிருக்கும். அதை அப்படியே சாப்பிட்டோமென்றால் தொண்டை அப்படியே கரகரவென்று இருக்கும். நாங்க அதை அரைச்சு தண்ணீரில் கலக்கி தண்ணீரை இறுத்து அப்புறம் கஞ்சி போல் காய்ச்சிக் குடிப்போம்''. இதை கி.ரா. மூலமாக அறிகிறேன்.
அவர் சொல்லுகிற தகவல் தமிழ் இலக்கியத்தில் இதற்கு முன்பாக எங்கேயாவது பதிவாகி யிருக்கிறதா? கம்பன் கொட்டிக்கிழங்கு பேசுகிறான்.
‘‘இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய கொட்டிக் கிழங்கோ, கிழங்கென்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம்பெறும்''
என்று கம்பன் தனிப்பாடலில் இருக்கிற பாடல் அது. கொட்டிக்கிழங்கு தெரியும்; கோரைக்கிழங்கு தெரியும்.
வேலாயுதம் அண்ணாச்சி முயற்சியால் கி.ரா. பெயரில் ஒரு விருது கொடுக்கணும் என்று தீர்மானித்து, அவர் மூன்று வருடம் யோசித்து, அவர் இந்த வருடம் ஒரு ஸ்பான்ஸர் பிடித்து, விருது தீர்மானிக்கும்போது, நான் போய் கி.ரா.விடம் இது தொடர்பாக பேசினேன். விருது தொகை எவ்வளவு என்றார்.
ஒருலட்சம் என்றேன். மூணு லட்சமா கொடுங்கன்னு சொல்லுறாரு... நான் அதற்கு அவங்க அனுமதிக்க வேண்டுமில்லையா என்றேன். மிச்சம் ரெண்டு லட்சம் நான் தரேன் என்றார்.
யாருக்கு கொடுக்கப்போறீங்க?
கண்மணி குணசேகரனுக்கு கொடுக்கலாமென்று இருக்கோம்.
எதற்காக கண்மணி குணசேகரனை தேர்ந்தெடுக்கிறீங்க? என்று கேட்கிறார்.
தமிழில் முதன்முதலில் வட்டார வழக்கு சொல் அகராதி செய்தது நீங்க தான். அந்த பணியை மேற்கொண்டு எடுத்துப் போகிறார் என்பதற்காக... கதை எழுதுகிறார்; கட்டுரை எழுதுகிறார்; கவிதை எழுதுகிறார். அது வேற சமாசாரம்; அந்த ஒரு அகராதியை பண்ணுன காரியத்திற்காக அவருக்கு கொடுக்கலாம்னு சொன்னேன்.
கண்மணி குணசேகரன் பேசிக்கிட்டு இருந்த முறையை பாத்து அங்கு இருந்த ஸ்பான்ஸரே விழா நடந்துட்டிருக்கும்போது விருதுத்தொகையை ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சமாக கொடுக்கிறார். இன்னொருவர் ஒரு இலட்சம் தருகிறார். அவர் நினைத்த தொகையை விட அதிகமாக கண்மணி குணசேகரனுக்கு போய்சேருகிறது.
கி.ராவிடம் இன்னும் சொல்வதற்கு 15 வருடம் 20 வருடம் கதைகள் இருக்கிறது!
(கோவையில் கடந்த பிப்ரவரியில் நடந்த கி.ராவின் மிச்சக்கதைகள் நூல் வெளியீட்டு விழாவில் நாஞ்சில் நாடன் ஆற்றிய உரையில் ஒரு பகுதி. தொகுப்பு: புனிதா கஜேந்திரன்)
ஜூன், 2021