கட்சிகள் செயல்படுவதற்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? கட்சிக்கு ஏன் பணம்தேவை? அதன் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சம்பளம் இல்லை. அலுவலக நிர்வாகம், தேர்தல் செலவு போன்றவற்றுக்காக கட்சிகள் நிதி திரட்டுவதாக சொல்கின்றன. கட்சி நிதி தாரீர் என முன்பெல்லாம் தொண்டர்களிடம் கேட்கப்படும். சிறிதும் பெரிதும் நிதி திரளும். நாடகம் போட்டும் உரைகளுக்குக் கட்டணம் வைத்தும் திராவிடக் கட்சிகள் நிதி திரட்டியது வரலாறு.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஆளும்கட்சி என்பதால் தொழில் நிறுவனங்கள், பெருந்தனக்காரர்கள் நிதி தாராளமாகக் கிடைத்துவந்தது. அப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் பயணம் செய்ய வாகனங்களை தொழில் நிறுவனங்களே கொடுத்துவந்தன.
சொந்தமாக வாகனங்கள் இல்லாத நிலையில்தான் பெரும்பாலான தலைவர்கள் இருந்தார்கள். இது மெல்ல மாறியது. ஆட்சியைப் பிடித்ததும் கட்சிகளின் சொத்துகள் பெருகின. கட்சிகளுக்கு நிதி வேண்டும் என்பதை ஆட்சியை இழந்து பரிதவித்த காலங்களில் தலைவர்கள் புரிந்துகொண்டனர். ஜனநாயக முறையில் செயலபடும் கட்சிகளுக்கு நிதி அளிக்க முன்வரும் பெரு நிறுவனங்கள் பதிலுக்கு அரசின் கொள்கைகளில் செயல்பாடுகளில் தங்களுக்கு சலுகைகள் எதிர்பார்க்கும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கப்போவதில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மட்டுமல்ல உலகெங்கும் ‘பார்ட்டி பண்ட்' இவ்வளவு கொடுத்துவிடுங்கள் என்று கட்சிப் பிரதிநிதிகள் நேரடியாக பெருநிறுவனங்களையும் கேட்பது வழக்கம். அவை இதற்கும் ஒருபகுதியை வரிபோல் நினைத்து செயல்பாட்டில் வைத்துள்ளன என்பது வெளியே சொல்லப்படாத யதார்த்தம். இந்த கொடுக்கல் வாங்கலில் பெருநிறுவனங்களுக்கும் கட்சிகளுக்குமான நெருக்கம் மிக அதிகமாகிறது. சில நிறுவனங்கள் ஒரு கட்சியுடன் மட்டும் அதிக நெருக்கமாக இருக்கும். அக்கட்சி ஆட்சியில் இருக்கும்போது வேகமாக வளர்ச்சிடையும் என்பதெல்லாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
கட்சிகள் பெறும் நிதியை வெளிப்படையாக மாற்றவேண்டும் முறைப்படுத்தவேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்துவந்த நிலையில் இதைச் சரிசெய்வதற்காகக் கொண்டுவருகிறோம் என பாஜக 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியதுதான் தேர்தல் பத்திரங்கள் என்ற முறை. 1000 ரூபாயில் இருந்து ஒரு கோடி வரைக்கும் பத்திரங்களை ரிசர்வ் வங்கி அச்சடித்து குறிப்பிட்ட காலங்களில் வங்கிகளில் விற்கும். யார் வேண்டுமானாலும் வாங்கி கட்சிகளுக்குக் கொடுக்கலாம். யார் கொடுத்தார்கள் என்ற தகவலை கட்சிகள் சொல்லவேண்டிய தேவை இல்லை.
இது வெளிப்படைத் தன்மைக்குப் பதிலாக தவறுகள் நிகழவே வழி வகுக்கிறது. தவறான நிதியை சட்டபூர்வமாக்குகிறது. நிழல் நிறுவனங்களின் மூலமாக தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பைத் தருகிறது. யார் கொடுத்தார்கள் என்று சொல்லவேண்டாம் என்பது தவறாகப் பயன்படுத்தவே வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்ல, ஆளும் கட்சிக்கே எப்போதும் நிதி அதிகம் குவியும். இந்த தேர்தல் பத்திரங்கள் வந்தும் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையே நீடிக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இவற்றை ரத்து செய்யவேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
மார்ச் 2018 இல் இருந்து ஜூலை 2023 வரை இந்த தேர்தல் பத்திரங்கள் மூலமாக 13000 கோடி ரூபாய் கட்சிகளுக்குச் சென்றிருப்பதாக பதிவுகள் கூறுகின்றன. இதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேல் பெற்றிருப்பது பாஜக என்று கூறப்படுகிறது. பாஜக, திருணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதன் மூலம் நிதி பெற்றிருப்பதில் முன்னிலை வகிக்கின்றன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி ஏழு தேசிய கட்சிகள் தங்கள் வருமானத்தில் 66 சதவீதத்தை தேர்தல் பத்திரங்கள், பெயர் தெரியாத ஆட்கள்/நிறுவனங்களிடம் (Unknown source) இருந்து பெற்றிருப்பதாகத்தெரிகிறது.
அனாமதேய வரவு (Unknown source) என்றால் கட்சிகளின் தணிக்கை ஆண்டறிக்கையில் யார் கொடுத்தார்கள் என்று தெரிவிக்காமல் வெளியிடப்படும் வருவாய் விவரமாகும்.
சரி... இதில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக நிலவரம் எப்படி?
2021 - 22 நிலவரப்படி மாநிலக் கட்சிகளில் திமுகதான் நிதி பெற்றதில் முன்னணியில் உள்ளது. 318.745 கோடி ரூபாய் அது தேர்தல் பத்திரங்கள்மூலம் மட்டுமே பெற்றுள்ளது. ஆளும் கட்சிக்குத்தான் அதிகம் நிதி கிடைக்கும் என்பது உண்மையே.
தேர்தல் செலவு, பிரச்சாரங்கள், நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றுக்காக தாம் பெறும் நன்கொடைகளைப் பயன்படுத்துவதாக கட்சிகள் சொல்கின்றன.
இவை அனைத்தும் கணக்கு காட்டப்படும் செலவீனங்களைப் பற்றியதே.
‘கட்சிகளில் பதவிகள் பெறுவதற்காக அளிக்கப்படும் பணம், தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்படு-வதாகச் சொல்லப்படும் லஞ்சப்பணம் இதையெல்லாம் கணக்கில் காட்டினால் நாட்டில் அரசியலே செய்ய-முடியாமல் போய்விடும். ஆகவே கட்சிகள் பொதுவாக இந்த விஷயத்தில் மட்டும் ஒன்றுக்கொன்று பாதகம் வராமல் அட்ஜஸ்ட் பண்ணி சட்டங்களை வடிவமைத்துக்கொள்கின்றன,' என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.
அப்படியெனில் கட்சிகள் கம்பெனிகள் ஆகி நெடுங்காலம் ஆகிவிட்டதா?